
பெண்கள் அதிகம் பயணப்படாத பிசினஸ் பாதையில் தடம்பதித்த வெற்றி முகங்களின் அனுபவ அணிவகுப்பு தொடர் இது.
இந்த இதழில், சென்னை `அங்கிள் சாம்'ஸ் கிச்சன்’ நிறுவனத்தின் உரிமையாளர், குனித் சிங்லா!
வேலை தேடி சென்னைக்கு வந்தவர், மாற்றி யோசித்து முதலாளியாக வெற்றி பெற்றிருக்கிறார். குடும்பப் பின்புலத்தைப் பயன்படுத்தாமல், சுய அடையாளத்துடன் கடின உழைப்பால் பிசினஸில் வளர்ந்துள்ளார். உணவுத்துறையில் நம்பிக்கை அடையாளமாக ஜொலிக்கும் பெண் குனித், தன் வெற்றிக் கதையைப் பகிர்கிறார்.
மிகப்பெரிய இழப்பு...
உத்தரப்பிரதேசத்திலுள்ள கான்பூர் என் பூர்வீகம். அப்பா, பிசினஸ் மேன். ஃபேன் பெல்ட், இயந்திர உதிரிப் பாகங்கள் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடத்திட்டிருந்தார்.
1984-ம் ஆண்டு, அரசியல் கலவரத்தில் எங்க வீடு மற்றும் அப்பாவின் நிறுவனங்களைக் கொளுத்திட்டாங்க. மிகப்பெரிய இழப்பிலிருந்து மீண்டு, பிசினஸில் தனக்கான இடத்தை அப்பா தக்கவெச்சுக்கிட்டார். பிசினஸ் சூழலில் வளர்ந்ததால, சின்ன வயசுலயே என் மனசுலயும் பிசினஸ் ஆர்வம்தான்.

பெரிய கூட்டுக்குடும்பம் எங்களுடையது. வீட்டுக்கு எத்தனை பேர் வந்தாலும், அம்மா சூப்பரா, க்விக்கா சமையல் செஞ்சு அசத்திடுவாங்க. அதையெல்லாம் பார்த்து, எனக்கும் சமையலில் ஆர்வம் ஏற்பட்டுச்சு. எம்.பி.ஏ முடிச்சுட்டு, பிரபலமான விளம்பர நிறுவனத்துல வேலை செய்தேன். இதுக்கிடையே நானும் என் கணவரும் நண்பர்களாகி, காதலர்களானோம். ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ் படிச்சுட்டு, என் கணவர் அப்போ செஃப்பா வேலை செய்திட்டிருந்தார். பெரிய எதிர்ப்பை மீறி, இரண்டு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் செய்துகிட்டோம்.
சென்னை குடியேற்றம்
அப்போதைய சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டல்ல கணவருக்கு வேலை கிடைக்க, 1994-ம் ஆண்டு, கல்யாணமானதுமே சென்னைக்கு வந்தோம். அப்போ சென்னையில எங்களுக்கு ஒருத்தரைக்கூடத் தெரியாது. ஒரு மாதம் ஹோட்டல்ல தங்கிய நிலையில், வாடகை வீட்டில் குடியேறினோம். இந்துஸ்தான் தாம்சன் விளம்பர நிறுவனத்துல எனக்கு வேலை கிடைச்சது. தனிப்பட்ட ஈடுபாட்டால், தினமும் 20 மணிநேரத்துக்கு மேல நிறுவனத்துல வேலை செய்வேன். என் கணவரும் அவர் வேலையில ரொம்ப பிஸி. காதலிச்சு கல்யாணம் செய்துகிட்டாலும், நாங்க சந்திச்சுக்கிறதே அபூர்வமாகிடுச்சு. வேலையில் சேர்ந்த ரெண்டே வருஷத்துல எனக்கு புரொமோஷன் கொடுத்தாங்க. அதை மறுத்ததுடன், பிசினஸ் தொடங்கும் முடிவில், என் வேலையிலிருந்து விலகினேன்.

என் சொந்த ஆர்வமும் கணவரின் ஆதரவும் இருக்கும் என்பதால் கேட்டரிங் துறையைத் தேர்வு செஞ்சேன். அப்போ மேற்கத்திய உணவுகள் பிரபலமாகிட்டு வந்தாலும், அவை பெரிய ஹோட்டல்களில்தாம் கிடைக்கும். நடுத்தர மக்களுக்கு அவை பரிட்சயமாகல. அதனால், மேற்கத்திய உணவுகளை மட்டும் தயாரிச்சு, வீட்டில் இருந்தபடி விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். முதலீடு 10,000 ரூபாய்தான். மார்கெட்டிங் அனுபவத்துல, நிறுவனத்துக்கு வித்தியாசமான `அங்கிள் சாம்'ஸ் கிச்சன்’னு பெயர் வெச்சேன். புதுமையா நோட்டீஸ் அடிச்சு, பல்வேறு நிறுவனங்களுக்குக் கொண்டுபோய் கொடுத்தேன்.
கணவருக்கு முதலாளி!
அப்போ என் வீட்டில் போன் இல்லை. வீட்டுக்குப் பக்கத்துல இருந்த ஒரு ரூபாய் காயின் போன்லதான் ஆர்டர் பிடிப்பேன். காய்கறிகள் வாங்கறது, உணவு சமைக்கறது, மார்க்கெட்டிங் பண்றது உட்பட எல்லா வேலைகளையும் தனியாளா செய்தேன். சமையல் உதவிக்கு ஓர் ஊழியர் மட்டுமே. பிரெஞ்சு, இத்தாலியன், மெக்ஸிகன், கான்டினென்டல் உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய உணவுகளையும் தயாரிச்சு விற்பனை செய்தேன். தூக்கமில்லாம, ஓய்வில்லாம கடுமையா உழைச்சேன். டெலிவரிக்கு நானும் கூடவே போவேன். என் உணவுகளைச் சாப்பிடுறவங்ககிட்ட கருத்து கேட்பேன். மற்ற இடங்களைவிடக் குறைவான விலையிலும், தரமாகவும் உணவுகளை விற்பனை செய்தேன். அடுத்த ரெண்டு வருஷத்துல பிசினஸ் வேகமா வளர்ந்து, நிறைய ஆர்டர்ஸ் வந்துச்சு. `நீங்க வாங்குற சம்பளத்தைவிட ரெண்டு மடங்கு அதிக சம்பளம் தர்றேன்’னு சொல்லி கணவரை என் பிசினஸ்லயே சேர்த்துக்கிட்டேன்.

நிறைய பயணம் செய்தும் புத்தகங்கள் மூலமாகவும் புதுப்புது உணவுகளைத் தெரிஞ்சுக் கிட்டு செய்து பார்ப்பேன். பிறகு, என் நிறுவன சமையற்கலைஞர்களுக்குச் சொல்லிக் கொடுப்பேன். பரிமாறும் தட்டு முதல் உணவு அலங்காரம் வரை எல்லாவற்றிலும் புதுமைகளைப் புகுத்தினேன். வடஇந்திய, தென்னிந்திய உணவுகளையும் தயாரிக்க ஆரம்பிச்சேன். கஸ்டமர் வீட்டு நிகழ்ச்சியை என் வீட்டு நிகழ்ச்சிபோல நினைச்சு, உபசரிப்பு முதல் அன்பாகப் பேசி வழியனுப்புறது வரை நானும் ஆர்வத்துடன் பல வேலைகள் செய்வேன். இதனால, கஸ்டமர்கள் பலரும் என் நண்பர்களானாங்க.
எனக்கும் அப்பாவின் நிலை...
1998-ம் ஆண்டு முதல் நிறுவனத்தைப் படிப்படியா விரிவுபடுத்தினேன். 2000-வது ஆண்டுல, சென்னை டி.டி.கே சாலையில ரெஸ்டாரன்ட் ஒன்றைத் தொடங்கினேன். மிகப்பெரிய வரவேற்பு கிடைச்சுது.
சென்னையில தனக்குப் பிடிச்ச உணவகம்னு ஒரு பேட்டியில் என்னுடைய ரெஸ்டாரன்ட்டை சொல்லியிருந்தார் நடிகர் அமீர்கான். இடப் பிரச்னையால், அந்த உணவகத்தை 2003-ம் ஆண்டு மூடிட்டேன். 2004-ம் ஆண்டு `கார்ப்பரேட் கிச்சன்ஸ்’னு புதிய நிறுவனத்தை ஆரம்பிச்சேன். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, டயட் ஃபுட், வீக் எண்டு ஃபுட், ஆர்கானிக் ஃபுட், விழாக்கால ஃபுட்னு தினமும் புதுப்புது வெரைட்டி உணவுகளைக் கொடுத்திட்டிருக்கேன்.
இதுக்கிடையில, 2010-ம் ஆண்டு, கிண்டியில வாடகைக் கட்டடத்துல என் நிறுவனம் செயல்பட்டுச்சு. இடப் பிரச்னை ஏற்பட, உடனடியா அந்தக் கட்டடத்திலிருந்து வெளியேறச் சொன்ன அதன் உரிமையாளர், எல்லாப் பொருள்களையும் சாலையில அள்ளிப்போட்டுட்டார். என் அப்பாவுக்கு ஏற்பட்ட நிலைபோல, எனக்கும் பெரிய இழப்பு. என்ன பண்றதுன்னு தெரியாம நடுத்தெருவுல நின்னேன்.
அப்போ, ஒரு கஸ்டமர் போன் பண்ணி, `நாளைக்குத் தரவேண்டிய 400 பேருக்கான உணவு ஆர்டர்ல, கூடுதலா 300 பேரைச் சேர்த்துக்கோங்க’ன்னு சொன்னார். தன் ஒரே மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஆசையோடு ஆர்டர் கொடுத்திருந்தார். என் பிரச்னையால், கஸ்டமருக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். பள்ளிக்கரணையில வாங்கிப்போட்டிருந்த காலி இடத்துக்கு, என் ஊழியர்களுடன் விரைந்தேன். சாமியானா பந்தல் போட்டு, உணவுகளைத் தயாரிச்சோம். அடுத்தநாள் சரியான நேரத்துல உணவுகளை டெலிவரி பண்ணினோம். அந்த இடத்துல படிப்படியா கட்டடங்கள் கட்டி, இப்போது என் ஐந்து நிறுவனங்களும் அங்கேதான் இயங்குது.
சுய அடையாளத்துடன் வெற்றி!
அதன்பிறகு, எந்தச் சிக்கல்களும் வராம பார்த்துக்கிறேன். போட்டியாளர்கள் அதிகமா கிட்டாலும், என் கஸ்டமர்களைத் தொடர்ந்து தக்கவெச்சுக்கிறேன். பிசினஸில் புதுமைகளைப் புகுத்திட்டே இருப்பேன். சிறியது முதல் பல ஆயிரம் பேர் கலந்துக்கிற நிகழ்ச்சிகள்வரை, ஒரே தரத்தில் நேர்த்தியா கேட்டரிங் சர்வீஸ் பண்றோம். தரத்துக்கும் அன்புக்கும் மட்டுமே எப்போதும் முக்கியத்துவம்.

நெகட்டிவா பேசினா எனக்குச் சுத்தமா பிடிக்காது. தொழில் தொடங்கிய காலங்களில், ஒருமுறை உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் என் அம்மா போன் பண்ணினார். அப்போ நான் 100 கிலோ கேரட்டை நறுக்கிட்டிருந்தேன். அதைக் கேட்டதும், ‘நீ எதுக்கு இப்படிக் கஷ்டப்படுறே’ன்னு வருத்தமா கேட்டாங்க. நான் கோபப்பட்டு, `பிசினஸில் சாதிக்கணும்னு வைராக்கியத்துடன் இருக்கேன். ஒருபோதும் நெகட்டிவா பேசாதீங்க’ன்னு அம்மாகிட்ட சத்தம்போட்டேன். நம்பிக்கையும், எதையும் பாசிட்டிவா ஏத்துக்கிற பக்குவமும் இருந்தாலே போதும். பிசினஸில், எத்தகைய தடைகளையும் கடந்து வெற்றி பெறலாம். அப்படித்தான் என் சுய அடையாளத்துடன் வெற்றி பெற்றிருக்கேன்!
என் அனுபவத்திலிருந்து...
பிசினஸ்ல சென்டிமென்ட்டுக்கு இடம் கொடுக்கக் கூடாது. எதற்கும் கலங்கக் கூடாது. அதனாலதான் வெற்றி தோல்விகளை ஒரே கண்ணோட்டத்தில் எதிர்கொண்டு, நிறுவனத்தை என்னால வளர்ச்சிப் பாதையில் கொண்டுபோக முடியுது.
என்னை நம்பி வந்த எந்த ஒரு கஸ்டமரையும் இழக்க விரும்ப மாட்டேன். அவங்க எதிர்பார்ப்பு எப்படியிருந்தாலும், அதை நிறைவேற்றி அவங்க திருப்தியடையும் வரைக்கும் தொடர்ந்து கனிவோடு நடந்துக்குவேன்.
தடைகள் கடந்து... பல கோடி டர்ன் ஓவர்!
அசைவம் மற்றும் மேற்கத்திய உணவுகள், சைவ உணவுகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான உணவுகள், பிற உணவகங்களுக்கான உணவு சப்ளை, ஸ்நாக்ஸ் மற்றும் சாட்ஸ் வகை துரித உணவுகளுக்குத் தனித்தனியே ஐந்து நிறுவனங்களை நடத்திவருகிறார் குனித்.
80 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் 40 பேருக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார். பகுதிநேரமாகப் பலநூறு ஊழியர்களுக்கு வேலை கொடுக்கிறார். தமிழகம் உட்பட இந்தியா முழுக்க பல்வேறு பகுதி களிலும் ஆர்டர் எடுத்து, அங்கு தன் ஊழியர்களை அனுப்பி உணவு சமைத்துக் கொடுக்கிறார். தனிப்பட்ட குடும்பத் தேவைக்கும் உணவு சமைத்துக்கொடுக்கிறார். இந்த வகையில் ரஜினி, விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான வி.வி.ஐ.பிக்கள் இவர் நிறுவன கஸ்டமர்கள். பல்வேறு தடைகளைத் தாண்டி பிசினஸில் சாதித்திருக்கும் குனித், ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்கிறார்.
பிசினஸ் இன்ஸ்பிரேஷன்!
பத்து ஆண்டுகளுக்கு முன்னாடி, என் கஸ்டமர் பெண் ஒருவர் இறக்கும் முன்பு தன் ஆசை ஒன்றை எழுதிவெச்சிருந்தார். அதுல, `தன் இறப்புக்குப் பிறகு சாமி கும்பிடும்போது, குனித் நிறுவனத்துல உணவு ஆர்டர் வாங்கணும்’னு எழுதியிருந்தார். அவருடைய பிள்ளை எங்களைத்தேடி வந்து ஆர்டர் கொடுக்க, நெகிழ்ந்துபோயிட்டோம்.
ஒரு நிகழ்ச்சியில் விருந்தினரா கலந்துகிட்ட ரஜினி சார், `எல்லா உணவுகளும் சூப்பர்! கேட்டரிங் பணியாளர்களுடன் நான் போட்டோ எடுத்துக்கணு’ம் சொல்லி, என் ஊழியர்களுடன் போட்டோ எடுத்துகிட்டார். அந்த அளவுக்கு என் ஊழியர்கள் நேர்த்தியா சமைப்பாங்க. வருமானம் என்பதைத் தாண்டி, வாடிக்கையாளர்களோட உடல்நலம் சார்ந்த சர்வீஸ் தொழில் என்பதை உணர்ந்து வேலை செய்ற என் ஊழியர்கள்தாம் எனக்கு இன்ஸ்பிரேஷன்!