மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் பிசினஸ் கதை - 5: உழைப்பும் நம்பிக்கையும் கொடுத்த வெற்றி இது! - கீதா நாகு

கீதா நாகு
பிரீமியம் ஸ்டோரி
News
கீதா நாகு

எல்லோருக்குமே தனித்துவமான அடையாளம் உண்டு. அதைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

பெண்கள் அதிகம் பயணப்படாத பிசினஸ் பாதையிலும் தடம்பதித்த வெற்றி முகங்களின் அனுபவ அணிவகுப்பு தொடர் இது. இந்த இதழில், சென்னை `St. Angelo’s VNCT Ventures' நிறுவன நிர்வாக இயக்குநர் கீதா நாகு.

பிறந்த வீடும் புகுந்த வீடும் பிசினஸ் குடும்பம்தான். தனக்கென தனி அடையாளம் வேண்டும் என்ற கொள்கையுடன் பல தொழில்களில் கவனம் செலுத்தியிருக்கிறார் கீதா. பல தோல்விகளை எதிர்கொண்டும் தளராது, தனி அடையாளத்துடன் மிகப் பெரிய வெற்றியை வசப்படுத்தியிருக்கும் கீதா, தன் வெற்றிக் கதையைப் பகிர்கிறார்.

சுய அடையாளம்

பூர்வீகம் மதுரை. அப்பா முதல் தலைமுறை பட்டதாரி. ஒரு லேத் வெச்சு சிறிய அளவில் சுயதொழில் தொடங்கி, பின்னர் தொழிலதிபராக வளர்ந்தார். சமையல், வீட்டுவேலைன்னு இல்லாம, வீட்டில் என்னை சுதந்திரமா வளர்த்தாங்க. அப்பா, தன் தொழிலுக்கான ஒவ்வொரு நாள் வரவு செலவுக் கணக்கையும் என்னை எழுதச் சொல்வார். அதனால, என்னை அறியாமலேயே பிசினஸ் பத்தின புரிதலும் ஆர்வமும் சின்ன வயசுலேயே எனக்கு ஏற்பட்டுடுச்சு. நாகு சிதம்பரமும் நானும் மதுரையில் ஒரே ஸ்கூல்ல படிச்சோம். அந்தப் பால்ய கால நட்பு, காதலாகி இருவரும் டிகிரி முடிச்சதும் கல்யாணம் செய்துகிட்டோம். பிறகு, சென்னையில் புதிய வாழ்க்கைப் பயணம் தொடங்கியது. சென்னை `கமலா சினிமாஸ்’ தியேட்டர் நிறுவனர் வி.என்.சிதம்பரம், என் மாமனார்.

கீதா நாகு
கீதா நாகு

என் அப்பாவும் கணவர் அப்பாவும் பிரபலமான தொழிலதிபர்கள்தாம். `வசதி வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், சுய அடையாளத்துடன் நாமும் புது பிசினஸில் வெற்றி பெறணும்’னு என் கணவரிடம் வலியுறுத்தினேன். நம்பிக்கையுடன் கைகொடுத்தார். `குடும்பத் தொழிலையே கவனிக்கலாமே. எதுக்குச் சிரமப்படறீங்க?’ன்னு இரு வீட்டில் சொல்லியும், எங்க முடிவில் உறுதியா இருந்தோம். எங்க சேமிப்புப் பணம் ஐந்து லட்சம் ரூபாய் முதலீட்டில், பேக்கரி தொழிலைத் தொடங்கினோம். கணவர், தியேட்டர் நிர்வாக வேலைகளைப் பார்த்துகிட்டே எனக்கும் உதவினார். விசாலமான கடை, ஸ்டார் ஹோட்டல் செஃப்னு அதிக செலவு செய்துட்டோம். எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கலை. நாலு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், அந்தத் தொழிலைக் கைவிட்டோம்.

வெற்றிப் பாதை

`நீங்க செய்தது தேவையில்லாத வேலை’ன்னு பலரும் பலவிதமாப் பேசினாங்க. `பணம் சம்பாதிக்கிறது மட்டுமே நோக்கமில்லை. எங்களுக்கான சுய அடையாளத்தை ஏற்படுத்திக்கவே பிசினஸ் ஃபீல்டுக்கு வந்தோம்’னு பிறருக்குப் புரியவைக்க முடியலை. அதேநேரம் எங்க பிசினஸ் ஆர்வமும் குறையலை. அடுத்து, இரும்பு ரா மெட்டீரியலை டிரேடிங் செய்ததுடன், ஸ்டாக் மார்க்கெட்டிங்லயும் கவனம் செலுத்தினோம். அதிலும் தோல்விதான்! இந்த நிலையில என் அப்பாவின் வழிகாட்டுதலுடன், சென்னை போரூர்ல வாகன உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தைச் சிறிய அளவில் தொடங்கினோம். அனுபவமில்லாத துறைதான் என்றாலும், கணவரும் நானும் ஒரு வருஷத்துலேயே எல்லா விஷயங்களையும் கத்துக்கிட்டோம். வைராக்கியத்துடன் கடுமையா உழைச்சோம்.

கீதா நாகு
கீதா நாகு

ஏழு ஊழியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம், அடுத்த அஞ்சு வருஷத்துல 200 ஊழியர்களுடன் லாபப் பாதையில் இயங்கிச்சு. எங்க வருமானத்தில், தனி வீடு கட்டினோம். வணிகக் கட்டடங்களைக் கட்டி, ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட்டுடன் பிறர் பயன்பாட்டுக்கு (lease) விடுற பிராப்பர்ட்டி டெவலப்பராகவும் செயல்பட்டோம். வாழ்க்கை சிறப்பா போயிட்டிருந்துச்சு. ஆனாலும், எனக்குள் ஒரு வெறுமை. `இனி நான் இல்லாமலும் நிறுவனம் இயங்கும். அதனால, எனக்கான தனி அடையாளத்தைப் பெற வேறு பிசினஸ் பண்றேன்’னு கணவரிடம் சொன்னேன். அந்த 1999-ம் ஆண்டு, ஐ.டி தொழில்துறை பெரிய அளவில் வளர்ந்திருந்துச்சு. அமெரிக்காவில் இருந்த என் தோழியை பார்ட்னராகச் சேர்த்துக்கிட்டேன். சென்னை மற்றும் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் நிறுவனத்தை நடத்தினேன்.

கைகொடுத்த புத்தக வாசிப்பு

அடுத்த சில மாதத்துலயே, ஐ.டி தொழில் பெரிய வீழ்ச்சியடைந்தது. கணவரிடம் தொழில் கடனாக வாங்கிய ஒரு கோடி ரூபாயும் நஷ்டமாகிடுச்சு. அந்த மிகப்பெரிய வீழ்ச்சியிலிருந்து மீண்டுவர ரொம்பவே போராடினேன். `சிரமப்பட வேண்டாம். நம்ம இண்டஸ்ட்ரியல் தொழிலுக்கே வந்திடு’ன்னு என் கணவர் சொன்னார். அதற்கு நான் ஒப்புக்கொண்டிருந்தால், `தனியா பிசினஸ் பண் றேன்னு அம்மா ரிஸ்க் எடுத்து தோல்வியடைஞ்சுட்டாங்க’ன்னு என் பிள்ளைகளுக்கு நானே உதா ரணமாகியிருப்பேன். அதற்கு இடம்கொடுக்காம, வாங்கிய கடனை அடைக்கணும்னு உறுதியா இருந்தேன். பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்தேன். தினமும் 10 மணிநேரத்துக்கு மேல் ஒதுக்கி, பிசினஸ் மேனேஜ்மென்ட் புத்தகங்களை மட்டுமே படிச்சேன்.

எனக்கு நானே பயிற்சியாளராகி, திறமையை வளர்த்துக் கிட்டேன். கைவசம் பல கம்யூட்டர்கள் மட்டுமே இருந்துச்சு. அந்த ஆறு மாத கால தொழில் அனுபவத்தில், ஐ.டி தொழில்நுட்ப வல்லுநர்கள் பலரின் நட்பு கிடைச்சுது. அவர்களைப் பயிற்சியாளர்களாகப் பயன்படுத்திக்க நினைச்சேன். மாணவர்களுக்குத் தகவல் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியுடன் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுக்க முடிவெடுத்தேன். நானே கோர்ஸ் மெட்டீரியல்களைத் தயாரிச்சேன். பெரிசா முதலீடு செய்யலை. சென்னை தி.நகர்ல ஒரு சிறிய வாடகை ரூம்ல பயிற்சி மையத்தைத் தொடங்கினேன். மூணு மாத கால பயிற்சிக்கு, ஒரு லட்சம் ரூபாய் கட்டணம். தொடக்கத்திலேயே 14 பேர் வந்தாங்க.

மக்களின் கனவு

மார்க்கெட்டிங் வேலையையும் நானே பார்த்தேன். நிறைய சிரமங்களை எதிர்கொண்டேன். படிப்படியா நிறைய பேர் பயிற்சி எடுத்துக்க வந்தாங்க. நிறுவனம் லாபகரமா வளர்ந்துச்சு. எல்காட் உள்ளிட்ட தமிழகத்திலுள்ள பல அரசு நிறுவனங்களில், தகவல் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளைக் கொடுத்தேன். மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட பல நகரங்கள்ல பயிற்சி மையத்தின் கிளைகளைத் தொடங்கினேன். அடுத்த மூணு வருஷத்துல, ஒரு கோடி ரூபாய் கடனையும் வட்டியுடன் அடைச்சேன். நூறு ஊழியர்களுடன், என்னுடைய `சன் ஐடெக்’ நிறுவனம் பெரிசா வளர்ந்துச்சு. பல ஆயிரம் பேருக்குப் பயிற்சி கொடுத்திருந்த நிலையில், இதுக்கு மேல நிறுவனத்தை வளர்ச்சியடைய வைக்க முடியாதுங்கிற நிலை. அதனால, 2012-ம் ஆண்டு, அந்த நிறுவனத்தை மூடிட்டேன்.

இதுதான் பிராசஸ்!
இதுதான் பிராசஸ்!

கணவரின் நிர்வாகத்தில், `சன் இண்டஸ்ட்ரீஸ்’ இயந்திர உதிரிப்பாகங்கள் தயாரிக்கிற நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்திருந்துச்சு. `நாம இருவரும் புதுசா ஒரு நிறுவனத்தைத் தொடங்கலாம்’னு கணவரிடம் கேட்க, சம்மதிச்சார். முன்பு ரியல் எஸ்டேட் துறையில் அனுபவம் பெற்றிருந்ததால, `St. Angelo’s VNCT Ventures’ நிறுவனத்தைத் தொடங்கினோம். மும்பையிலுள்ள எங்க பார்ட்னருடன் இணைந்து, வணிக நிறுவனங்களுக்கான கட்டுமானப் பணிகள், நிலம் மற்றும் வீடு விற்பனையில் ஈடுபட்டோம். நிலத்துடன் கூடிய சொந்த வீடு வாங்குவது பெருவாரியான மக்களின் கனவு. அதை நிறைவேற்ற, குறைந்த விலையில் தரமான வில்லாக்களை விற்பனை செய்ய ஆரம்பிச்சோம்.

பிசினஸ் குடும்பம்

நீண்ட கால தொழில் அனுபவத்துல, பொருளாதாரக் கோட்பாடுகளுக்கு உட்பட்டு, முறைப்படி தொழிலை நடத்துறோம். அதனால, எங்க நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் போயிட்டிருக்கு. தோல்வி மற்றும் சோதனையான காலகட்டங்கள்ல, `நம்மால் மீண்டு வரமுடியும்’னு உறுதியா நம்பினேன். பல மடங்கு கூடுதல் உழைப்பையும் கொடுத்தேன். அதனால, நான் எதிர்பார்த்த வெற்றியும் எளிதில் கிடைச்சுது.

தம்பதியா பிசினஸ்ல சாதிச்சவங்க குறைவுதான். அந்த வரிசையில் என் கணவரும் நானும் இடம்பிடிச்சிருக்கோம். தனித்துவமான சுய அடையாளத்தையும் பெற்றிருக்கோம். நாங்க காதலிக்க ஆரம்பிச்ச காலத்துல இருந்து, இப்போவரை எதற்குமே ஒருத்தர் இன்னொருத்தரை குற்றம் சொன்னதில்லை. வெற்றி தோல்வி இரண்டுக்கும் இருவருமே சரிசமமாகப் பொறுப்பேத்துப்போம். பிசினஸ்ல கவனம் செலுத்தினாலும், தினமும் எங்க குழந்தைகளுக்கும் நேரம் செலவிட்டிருக்கோம். மகனும் மருமகளும் எங்க இண்டஸ்ட்ரியல் நிறுவன நிர்வாகப் பணிகளைக் கவனிச்சுக்கிறாங்க. மகள் லண்டன்ல பிசினஸ் ஸ்டடிஸ் கோர்ஸ் படிக்கிறாங்க. நம்ம திறமையை முழுசா நிரூபிக்கும்வரை தொடர்ந்து பயணிக்கலாம்னு மொத்தக் குடும்பமும் அவரவர் துறையில நம்பிக்கையுடன் வேலை செய்துட்டிருக்கோம். வெற்றிகளைத் தொடர்ந்து வசப்படுத்துவோம்!

என் அனுபவத்திலிருந்து...

எல்லோருக்குமே தனித்துவமான அடையாளம் உண்டு. அதைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அதற்காகத்தான் பல தோல்விகளை எதிர்கொண்ட பிறகும்கூட தளராம ஓடினேன். எனக்கான அடையாளத்தையும் பெற்றேன்.

நம்முடைய திறமையையும் தன்னம்பிக்கையையும் யாராலும் எதுவும் செய்ய முடியாது. இவ்விரண்டையும் ஒவ்வொரு நாளும் வளர்த்துக்கிட்டால், நிச்சயம் வெற்றியை வசமாக்கலாம்.

எப்போதும் பாசிட்டிவாகவே இருக்கணும். பிசினஸில் தடைகள் நிறைய வந்துட்டே இருக்கும். அவற்றைப் பார்க்காமல் இலக்கை நோக்கி விடாமுயற்சியுடன் ஓடிக்கிட்டே இருந்தால் நிச்சயம் ஜெயிச்சுடுவோம்!

பிசினஸ் இன்ஸ்பிரேஷன்!

வேணு ஸ்ரீநிவாசன் (டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர்), மல்லிகா ஸ்ரீநிவாசன் (TAFE டிராக்டர் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர்) தம்பதி, காதலிச்சு கல்யாணம் செய்துகிட்டவங்க. அவரவர் பிசினஸ்ல பெரிய வெற்றி பெற்றிருப்பதுடன், குடும்பத்துக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கிறவங்க. பல நேரங்கள்ல அவங்களைச் சந்திச்சுப் பேசியிருக்கேன். அப்போதெல்லாம் என் தொழில் பயணத்துக்குக் கூடுதல் உற்சாகம் கிடைக்கும். இந்தத் தம்பதி என் பிசினஸ் பயணத்துக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன்.

80 வயதாகும் என் அப்பா சுப்பையா செட்டியார் இன்றும் மதுரையில் தன்னுடைய இண்டஸ்ட்ரியல் தொழிலை நடத்திக்கிட்டிருக்கார். அவரும் எனக்கு இன்ஸ்பிரேஷன்தான்!

600 ஊழியர்கள்...` 250 கோடி டர்ன் ஓவர்!

டந்த ஐந்து ஆண்டு களில் இந்தியா முழுக்க 1000-க்கும் மேற்பட்ட வில்லாக்களை விற்பனை செய்திருக்கிறார், கீதா. ஆண்டுக்குப் பலநூறு வில்லாக்களை விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறார். துபாய், சிங்கப்பூர் மற்றும் லண்டன் ஆகிய வெளிநாடு களிலும் மும்பை, கோயம் புத்தூர், மதுரை ஆகிய இந்திய நகரங்களிலும் கிளை நிறுவனங்கள் செயல்படுகின்றன. அலுவலகத்தில் 100 ஊழியர்களும் பகுதி நேரமாக 500 ஊழியர்களும் வேலை செய்கிறார்கள். இந்த பிசினஸில் மட்டும் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய்க்கு மேல் டர்ன் ஓவர் ஈட்டுகிறார் கீதா. கணவர் நிர்வகித்துவரும் `சன் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் இயக்குநராகவும் இருக் கிறார். கீதாவின் குடும்ப நிறுவனங்கள் அனைத்தின் மொத்த டர்ன் ஓவர் 500 கோடி ரூபாய்க்கும் மேல்!