மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் பிசினஸ் கதை - 4: இரண்டு மணிநேர தூக்கம்... 30 லாரிகள்... ₹ ஏழு கோடி டர்ன் ஓவர்!

 சத்யப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
News
சத்யப்ரியா

பூர்வீகம், செய்யாறு அருகேயுள்ள பாராசூர். நடுத்தரக் குடும்பம். பட்டதாரிகளான பெற்றோர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்றாங்க.

பெண்கள் அதிகம் பயணப்படாத பிசினஸ் பாதையிலும் தடம்பதித்த வெற்றி முகங்களின் அனுபவ அணிவகுப்பு தொடர் இது. இந்த இதழில், சென்னை `பவானிஸ் இன்ஜினீயரிங்’ நிறுவனத்தின் உரிமையாளர், சத்யப்ரியா.

வறுமையால் கல்வி கற்க முடியாமல் வருந்தியவர்... பணிச்சூழல் கற்றுத்தந்தப் பாடங்களால் முதலாளியாக வேண்டும் என்று தைரியமாக நடைபோடத் தொடங்கினார். பல தடைகளைக் கடந்தவருக்கு, புதிய தொழில் பாதைகளும் வசமாகியுள்ளன. இரண்டு தொழில்களைச் சிறப்பாக நடத்திவருகிறவர், மற்றுமொரு தொழிலிலும் தடம் பதிக்கவுள்ளார். தன்னம்பிக்கை தொழில்முனைவோரான சத்யப்ரியா, தன் வெற்றிக் கதையைப் பகிர்கிறார்.

பிசினஸ் என்ட்ரி

``பூர்வீகம், செய்யாறு அருகேயுள்ள பாராசூர். நடுத்தரக் குடும்பம். பட்டதாரிகளான பெற்றோர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்றாங்க. அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். குடும்பப் பொருளாதாரச் சூழல் சரியில்லாததால், ஆசிரியர் ஆகணும் என்கிற என் ஆசை நிறைவேறலை. ரெகுலரா கல்லூரிக்குப் போகவும் முடியலை. தன் குழந்தையின் பிறந்த நாளுக்குக் கிடைச்ச 3,000 ரூபாய் பரிசுப் பணத்தை அக்கா எனக்குக் கொடுத்து உதவினாங்க. அதைக்கொண்டுதான் கரஸ்ல பி.காம் சேர்ந்தேன். இதுக்கிடையே எங்க ஊர்லயே விவசாய வேலை உட்பட பல்வேறு வேலைகளைச் செய்தேன். 2002-ம் ஆண்டு, இங்கிலீஷ் கத்துக்கறதுக்காகவே சென்னை வந்தேன். பயிற்சிக் கட்டணம் 1,500 ரூபாய். அந்தத் தொகையையே சம்பளமா பேசி, கோச்சிங் சென்டர்லயே முழு நேரமா ஒரு வருஷம் வேலை செய்தேன்.

 சத்யப்ரியா
சத்யப்ரியா

அடுத்து தனியார் நிறுவனத்துல, 4,500 ரூபாய் சம்பளத்துல அக்கவுன்ட்ஸ் வேலை. கடுமையா உழைச்சேன். மூணே வருஷத்துல 45,000 ரூபாய் சம்பளத்துல, 400 பேருக்கு நிர்வாகியா உயர்ந்தேன். நிறைய அனுபவங்கள் பெற்றிருந்த நிலையில, அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடிவு செஞ்சேன். சிரமப்பட்டு ஓரளவுக்குப் பணம் சேர்த்தேன். சில லட்சங்கள் முதலீடு செய்து, 2010-ம் ஆண்டு, `பவானிஸ் இன்ஜினீயரிங்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன். ஹைவா இண்டியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் டீலர் கம் சர்வீஸ் சென்டர் வேலைகளைச் செய்துகொடுக்க ஆரம்பிச்சேன்.

சூப்பர் பிளான்!

முதல் மூணு வருஷம் ரொம்பவே போராட்டமா இருந்துச்சு. கஸ்டமர்களை ஈர்க்க ரொம்ப சிரமப்பட்டேன். 2015-ம் ஆண்டு, லூகாஸ் நிறுவனத்தின் ஆட்டோ எலெக்ட்ரிகல் டிவிஷன்ல சேல்ஸ் அண்டு சர்வீஸ் பணிகளைச் செய்துகொடுக்க ஆரம்பிச்சேன். லோக்கல் ஆர்டர்ஸும் எடுத்தேன். ஹைவா நிறுவனத்துல கனரக வாகனங்களும், லூகாஸ் நிறுவனத்துல கமர்ஷியல் மற்றும் கனரக வாகனங்களும் வரும். அவற்றுக்கான உதிரிப் பாகங்களை விற்பனை செய்வது, சர்வீஸ் செய்து கொடுப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்துகொடுக்கிறோம்.

எல்லா வேலைகளுக்கும் அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகள் இருக்காங்க. கண்காணிக்கிறதுதான் என் பொறுப்பு. தொழில்நுட்ப வளர்ச்சியால், வாகனங் களில் ஏற்படும் பழுது உள்ளிட்ட பிரச்னைகள் குறைய ஆரம்பிச்சுடுச்சு. இப்போதெல்லாம் உதிரிப் பாகங்களை அடிக்கடி பழுது பார்ப்பதைவிடவும், பழுதான பாகங்களை மாற்றவே பலரும் விரும்புறாங்க. அதனால, சர்வீஸ் வேலைக்கு வரவேற்பு குறைஞ்சுகிட்டே வருது. அதனால, ரெண்டு வருஷ முன்திட்டமிடலுடன், 30 லாரிகளை சொந்தமா வாங்கினேன். உணவுப் பொருள்கள், வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பொருள்களை டெலிவரி செய்ய லாரிகளை வாடகைக்கு விடறேன். இந்த பிளான் நல்ல பலன் கொடுத்துச்சு.

எதையும் தாங்கும் இதயம்!

குடும்பப் பொருளாதார நிலையை மேம்படுத்த நேரம் காலம் பார்க்காம உழைச்சேன். ரெண்டு தொழிலும் நல்லாதான் போயிட்டிருந்துச்சு. இந்த நிலையில பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் நாலரை கோடி ரூபாய் நஷ்டம். அதுவரை வாழ்நாள்ல சேமிச்ச மொத்தப் பணத்தையும் இழந்தேன். 2018-ம் ஆண்டு தொடக்கத்துல பொருளாதார ரீதியா பெரிய இழப்பினால் பள்ளத்துல கிடக்கிற நிலை. இந்த இடைப்பட்ட காலங்களில் ஒவ்வொரு நாளும் பெரிய வேதனையா இருந்துச்சு. மீள முடியும் என்கிற நம்பிக்கையுடன் கஷ்டப்பட்டு உழைச்சேன். அப்போ, குடும்ப நண்பர்கள் இருவர் பெரிதும் உதவினாங்க. இன்னிக்குக் கரையைத் தொடுற அளவுக்கு நெருங்கிட்டேன். இன்னும் ஒரு வருஷத்துல லாரிகளுக்கான இ.எம்.ஐ எல்லாத்தையும் கட்டி முடிச்சுடுவேன். பிறகு வருமானம் அதிகமாகிடும்.

ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உட்பட நாலு மொழிகள் எனக்கு நல்லா தெரியும். சினிமா பார்ப்பது உள்ளிட்ட எந்தப் பொழுதுபோக்கு விஷயத்துக்கும் இடம் கொடுக்க மாட்டேன். அதற்கெல்லாம் நேரமும் இருக்காது. என் கவனமெல்லாம் பிசினஸில்தான். அலுவலக வேலை முடிஞ்சு இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்துட்டாலும், தொடர்ந்து லாரி டிரைவர்கள்கிட்ட இருந்து போன் வந்துட்டே இருக்கும். அதனால தொடர்ச்சியா ரெண்டு மணி நேரத்துக்கு மேல தூங்க முடியாது. அதுக்குப் பிறகு கோழித்தூக்கம்தான். தொடர்ச்சியா பல மணிநேரம் தூங்கி ஒன்றரை வருஷமாகிடுச்சு. ஜெயிக்கணும்கிற வெறி மனசுல இருக்கிறதால எல்லாப் பிரச்னைகளையும் தாங்கிக்க முடியுது.

சவால்களை எதிர்கொள்!

ஒரு லாரி ஒருநாள் வாடகைக்குப் போகாம இருந்தா, 7,000 ரூபாய் நஷ்டமாகும். ஒருசில லாரிகள் வாடகைக்குப் போகாம இருந்தாலும், இ.எம்.ஐ கட்டுவது சிரமமாகிடும். அதனால, எல்லா லாரிகளும் தினமும் மூவிங்ல இருக்கணும். ஆனா, எப்போதும் டெலிவரி ஆர்டர் இருக்கிற மாதிரியே பார்த்துக்கிறது பெரிய சவால்தான். தங்கத்தின் விலை அதிகரிப்பால் பெண்கள் வருத்தப்படுவாங்க. ஆனா, டீசல் விலையேற்றத்தால் நான் வருந்துவேன். நீண்டதூரப் பயணத்துக்கு ரெண்டு டிரைவர்கள் வீதம், 30 லாரிகளுக்குச் சராசரியா 40 டிரைவர்கள் இருக்காங்க.

 சத்யப்ரியா
சத்யப்ரியா

தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்குத்தான் என்னுடைய லாரிகள் அதிகளவில் வாடகைக்குப் போகும். அங்கெல்லாம் என் நிறுவனத்துடன் புரிந்துணர்வில் இருக்கிற பங்க்லதான் டிரைவர்கள் டீசல் நிரப்புவாங்க. அந்த பில் உடனே எனக்கு வந்திடும். தவிர, ஜி.பி.எஸ் கருவி மூலமாகவும் லாரி இருக்கும் இடத்தை செல்போன்லயே எல்லா நேரமும் கண்காணிக்க முடியும். இதனால 24 மணிநேரமும் என் எண்ணமெல்லாம் தொழிலில்தான் இருக்கும். என் நிறுவனத்துக்குத் தொழில்நுட்ப உதவிகளை என் அண்ணன் ரமேஷ், தம்பி ஸ்ரீநிவாசன் இருவரும் செய்துகொடுக்கிறாங்க.

பிறர் கனவும் நிறைவேறட்டும்!

ஆண்கள் சூழ்ந்த இந்தத் துறையில இயங்கறது பெரிய சவால்தான். நாம தைரியமா செயல்பட்டா, எல்லா வேலையும் சரியா நடக்கும். கனரக வாகனங்களை ஓட்ட மாட்டேன். ஆனா, அந்த வாகனங்களைப் பத்தின எல்லா விஷயங்களும் எனக்குத் தெரியும்!

தொழிலில் ஒரு முடிவை எடுக்கிறதுக்கு முன்பு பலமுறை யோசிக்கலாம். ஆனா, முடிவெடுத்த பிறகு பிரச்னை ஏதாவது ஏற்பட்டால், அதற்காக நெகட்டிவா யோசிக்கக் கூடாது. நஷ்டம் வந்தாலும் பயப்படக் கூடாது. அந்த அனுபவம் எனக்கு நிறையவே இருப்பதால், நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் தொழிலை நடத்திட்டு இருக்கேன்.

விவசாயக் குடும்பம் என்பதால, ஆரோக்கியமான உணவுகளின் அருமை அறிந்து அவற்றைத்தான் சேர்த்துக்கிறேன். அதை முடிஞ்சவரை பிறருக்கும் கொடுக்க ஆசை. அந்த வகையில், முதல்கட்டமா மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் தொடங்குறது அப்பாவின் கனவு. அதற்கான பணிகள் வேகமா நடந்துட்டிருக்கு. அந்த வேலையையும் சேர்த்து, இனி ஒரே நேரத்துல மூணு தொழிலிலும் கவனம் செலுத்தணும்.

உதவின்னு தேடி வந்தவங்களுக்கு இல்லைன்னு சொல்லக்கூடாதுன்னு, பொருளாதாரத் தேவையில் தன்னிறைவு அடைவதற்காகக் கடுமையா உழைக்கிறேன். ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்கிறது என் கனவு. அதற்காகத்தான் கல்யாணம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். பிறர் கனவுகளை நிறைவேற்ற, என்னாலான பங்களிப்பைக் கொடுத்து மகிழ்வேன்!”

 சத்யப்ரியா
சத்யப்ரியா

என் அனுபவத்திலிருந்து...

  • ஒரு பிசினஸைத் தொடங்கி அது நல்லா போயிட்டிருந்தாலும், காலமாற்றத்துக்கேற்ப தொழிலில் புதுமைகளைப் புகுத்தி விரிவு படுத்திட்டே இருந்தால்தான் நீண்டகால வளர்ச்சியைப் பெற முடியும். அதற்கு ஒவ்வொரு நாளும் திட்டமிட்டுக்கிட்டே இருக்கணும்.

  • ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டாலும், `நம்மாள மீள முடியாது’ன்னு தப்பா நினைச்சு வருத்தப்படத் தேவையில்லை. நம்ம ஆரம்ப காலத்தை நினைச்சுப் பார்க்கணும். இவ்வளவு தூரம் கடந்துவந்த நம்மால், நிச்சயம் லாபப் பாதையில இயங்க முடியும்னு நம்பிக்கையோடு நடைபோடணும்.

  • தொழில் கடன் வாங்கறது சுலபம். ஆனா, அதை முறையா கட்டத் தெரிஞ்சாதான், தொழிலை படிப்படியா விரிவுபடுத்தி வெற்றிகாண முடியும்.

60 பேருக்கு முதலாளி... ஏழு கோடி டர்ன் ஓவர்!

சென்னையில் கனரக வாகனங்கள் மற்றும் கார்களுக்கு சர்வீஸ் பணிகளைச் செய்கிறார். தவிர, ஹைவா நிறுவன வாகன சர்வீஸ் அழைப்புகள் வந்தால், தமிழகத்தில் எல்லாப் பகுதிகளுக்கும் ஊழியர்களை நேரில் அனுப்பி சர்வீஸ் பணிகளைச் செய்துகொடுக்கிறார். சர்வீஸ் பணிகளில் ஈடுபடும் 20 ஊழியர்களுக்குத் தங்குமிட வசதியை இலவசமாக ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார். ஊழியர்களின் உணவுத் தேவைக்கும் சலுகைகளை வழங்குகிறார். பிறருக்கு உதவுவதற்காகவும் பல லட்சம் ரூபாய் செலவிடுகிறார். 60 பேருக்கு முதலாளியான சத்யப்ரியா, ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் டர்ன் ஓவர் ஈட்டுகிறார்.

பிசினஸ் இன்ஸ்பிரேஷன்!

``முன்பு நான் பணியாற்றிய இன்டீரியர் நிறுவனத்தின் உரிமையாளர், அமர் ரஜ்ஜானி. நீண்டகால தொழில் அனுபவத்துல எவ்வித பணப் பிரச்னையும் வராத வகையில, அவருடைய நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுபோனார். அவருடைய நேர்த்தியான திட்டமிடலைக் கண்டு வியந்திருக்கேன். அவர்கிட்ட இருந்து கத்துகிட்ட அனுபவங்களைக் கொண்டுதான் நான் பிசினஸ் பண்றேன். ஒவ்வொரு நாளும் வரவு செலவு விவரங்களைப் பட்டியலிட்டு, அதற்கு ஏற்றாற்போலவே என் தொழிலை நடத்துறேன். எனவேதான், பெரிய சரிவுப் பாதையையும் என்னால் எளிதில் கடந்துவர முடிஞ்சது. அமர் சார்தான் என் பிசினஸ் இன்ஸ்பிரேஷன்!''

இதுதான் பிராசஸ்
இதுதான் பிராசஸ்

இதுதான் பிராசஸ்!

ர்வீஸ் காரணத்துக்கு எங்களிடம் வரும் எந்த வாகனங்களாக இருந்தாலும், முதலில் ஜாப் கார்டு (பதிவேடு) தயார் செய்வோம். பிற நிறுவனங்களின் வாகனங்களாக இருந்தால் மெயில் வாயிலாகவும், தனிப்பட்ட கஸ்டமர் வாகனம் என்றால் போன் வாயிலாகவும் சர்வீஸ் கட்டணம் பற்றித் தெரிவிப்போம்.

கனரக வாகனங்கள் மற்றும் கார்களிலுள்ள பவர் ஸ்டியரிங், ஏர் பிரேக், ஹைட்ராலிக் சிஸ்டம், ஆட்டோ எலெக்ட்ரிக்கல் கருவிகள், டர்போ, ஃபியூயல் இன்ஜக்‌ஷன் ஆகியவற்றில் பழுது ஏற்பட்டால் ஹைவா மற்றும் லூகாஸ் நிறுவன வாகனங்கள் மற்றும் தனிப்பட்ட கஸ்டமர்களும் என் நிறுவனத்தை நாடி வருவார்கள்.

கஸ்டமர் நிறுவனம் / கஸ்டமரிடமிருந்து சாதகமான பதில் கிடைத்ததும், உடனே பழுதான உதிரிப்பாகத்துக்குப் பதிலாகப் புதிய பாகத்தை மாற்றிக் கொடுத்து சர்வீஸ் செய்துகொடுப்போம்.

ஒரு நாளைக்கு ஏராளமான வாகனங்கள் சர்வீஸுக்கு வந்தாலும், முன்னுரிமை அடிப்படையில் வேலை செய்து கொடுப்போம்.