உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தவருக்கு காப்பீடு பணத்தைத் தராததால் எல்.ஐ.சி நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம் விதித்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மல்லிகா என்பவர் 2011-ல் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் எல்.ஐ.சி கிளையில் 2 லட்சத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துள்ளார். சில ஆண்டுகள் பிரீமியம் செலுத்திவந்தவர் இடையில் பிரீமியம் செலுத்தாமல் விட்டதால் அந்தப் பாலிசி காலாவதி ஆகிவிட்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் அவருடைய உடல்நிலை மோசமானது. எனவே, காலாவதி ஆன பாலிசியை மீண்டும் புதுப்பித்துள்ளார். ஆனால், பாலிசி புதுப்பித்த சில வாரங்களிலேயே அவர் இறந்துள்ளார். அவருடைய பாலிசி மீதான பணத்தை தர எல்.ஐ.சி நிறுவனம் மறுத்துள்ளது.
இதுதொடர்பாக மல்லிகாவின் மகள் உமாதேவி சென்னை நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் புகார் செய்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை அரியலூர் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்துக்கு மாற்றியது. இந்த வழக்கை விசாரித்த அரியலூர் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் நீதிபதி ராம்ராஜ் பாலிசி புதுப்பித்து 3 ஆண்டுகளுக்குள் பாலிசிதாரர் இறந்ததால் பாலிசி தொகையைத் தர வேண்டியதில்லை.
ஆனால் எல்.ஐ.சி-யின் சட்ட விதிமுறைகளின்படி பாலிசிதாரர் செலுத்திய பிரீமியம் தொகையை எல்.ஐ.சி நிறுவனம் தர வேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக இந்தப் பணத்தை தராமல் இருந்துவந்துள்ளது. இது நிறுவனத்தின் சேவை குறைபாடு ஆகும்.

எனவே பாலிசிதாரரின் வாரிசுக்கு பிரீமியம் தொகையோடு சேர்த்து ரூ.50,000 இழப்பீடாக எல்.ஐ.சி நிறுவனம் தர வேண்டும். நான்கு வாரத்துக்குள் இந்தப் பணத்தை தர வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.