
கிரெடிட் கார்டு
நம் மக்கள் கடன் அட்டை (Credit Cards) பயன்படுத்துவது முன்பை விட மிகவும் அதிகரித்துள்ளது. 2022 மார்ச் நிலவரப்படி, இந்தியாவில் 7.36 கோடி கிரெடிட் கார்டுகள் புழக்கத் தில் உள்ளன. 2022 மார்ச் மாதத்தில் இந்தியர்கள் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்தது ரூ.1 லட்சம் கோடியாக உள்ளது. இது ஓராண்டுக்கு முன்புவிட 48% அதிகம். கடந்த மார்ச்சில் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் புதிதாக கிரெடிட் கார்டை வாங்கியிருக்கிறார் கள். கிரெடிட் கார்டு மூலம் ஒருவர் மாதம் சராசரியாக ரூ.14,500-க்கு பொருள்களை வாங்கி வருகிறார்.

இந்த நிலையில், கிரெடிட் கார்டு குறித்த பல தவறான புரிந்துகொள்ளல்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றுக்கான சரியான விளக்கத்தை இனி பார்ப்போம்.
பொருள்களை வாங்கிய முதல் நாளே கடனுக்கான தொகைக்கு வட்டி போடப்படும்...
விளக்கம்: அனைத்து கிரெடிட் கார்டுகளும் வட்டி இல்லா சலுகைக் காலத்து டன்தான் வெளியிடப்படு கின்றன. கிரெடிட் கார்டு பில்லிங் சுழற்சி (Credit Card billing cycle) முடிவடைவதற்கும், கிரெடிட் கார்டுக் கான பணம் கட்டுவதற்கான கெடு தேதி (Credit Card Payment Due Date) இவற்றுக்கும் இடைப்பட்ட காலம் வட்டி யில்லா கருணைக் காலம் (Interest Free Grace Period) ஆகும். கெடு தேதிக்கு முன் கிரெடிட் கார்டு பில்களைக் கட்டிவிட்டால் வட்டி எதுவும் கிடையாது. இந்தக் கெடு தேதிக்குப் பிறகுதான் வட்டி போட ஆரம்பிப் பார்கள்.
ஒரு கிரெடிட் கார்டு இருந்தால் போதும்...
விளக்கம்: பொதுவாக, கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வெவ்வேறு பிராண்டுகள், சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர் களுடன் கூட்டுச் சேர்ந்திருக் கின்றன. இந்த நிறுவனங்களின் பொருள்களை, தயாரிப்பு களை வட்டி இல்லாமல் கிரெடிட் கார்டுதாரர் வாங்க ஆஃபர் தருகின்றன. அதாவது, கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பிரத்தியேக ஒப்பந்தங்கள் மூலம் தள்ளுபடிகள், சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. பல பிராண்டுகள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங் கள் இப்படி ஆஃபர்களை ஒரு குறிப்பிட்ட கிரெடிட் கார்டுக்கு மட்டும் வழங்கி வரலாம். இதனால் வேறு கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அந்தச் சலுகைகள், தள்ளுபடி கிடைக்காமல் போகக்கூடும். இதனால், ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பது லாபகரமாக இருக்க வாய்ப்பு உண்டு. அதே சமயம், ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதால், அதிகம் செலவு செய்வதற்கும் வாய்ப்பு உண்டு. எனவே, ஜாக்கிரதை.

கிரெடிட் கார்டு கடன் வரம்பை அதிகரிப்பது நல்லதல்ல...
விளக்கம்: கடன் வரம்பை அதிகரித்தால் செல வழிப்பது அதிகரித்துவிடும் என்பதற்காக இப்படி சொல்லப்படுகிறது. வாழ்க்கை தரம் உயரும்போது, சம்பளம் மிகவும் அதிகரிக்கும்போது ஒருவர் வாங்கும் நுகர்வோர் பொருள்களின் மதிப்பும் அதிகமாக இருக்கும். அப்போது கிரெடிட் கார்டின் கடன் வரம்பு அதிகமாக இருப்பது நல்லது. இப்படிக் கடன் வரம்பை அதிகரிப்பது மூலம் இக்கட்டான சூழலில் வேறுவழியே இல்லாதபட்சத்தில் கிரெடிட் கார்டு மூலம் அதிக மதிப்பில் கடன் பெற முடியும். இந்தத் தேவைகள் எதுவும் இல்லாதபட்சத்தில் கடன் வரம்பை அதிகரிக்கத் தேவையில்லை.
இலவச கிரெடிட் கார்டுகளே பெஸ்ட்...
விளக்கம்: ஆண்டுக் கட்டணம் இல்லாத இலவச கிரெடிட் கார்டுகள் நல்ல டீல்தான். ஆனால், இது போன்ற கார்டுகளில் ரிவார்ட் பாயின்டுகள், ஏர்போர்ட் லவுஜ் சலுகை போன்றவை கிடைக்காது.கிரெடிட் கார்டு மூலம் ஓராண்டில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் செலவு செய்யும்பட்சத்தில் ஆண்டுக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகின்றன. கூடவே சில புதிய ஆஃபர்களும் கிடைக்கும். எனவே, ஆண்டுக் கட்டணம் எதுவும் இல்லாத கிரெடிட் கார்டுகளே சிறந்தவை என்று கருத முடியாது.
கிரெடிட் கார்டை ரத்து செய்தால் கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கும்....
விளக்கம்: கடனை அடைக்கும்பட்சத்தில்தான் ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்குமே தவிர, கிரெடிட் கார்டை ரத்து செய்வதால் கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்காது. அதே நேரத்தில், குறுகிய காலத்தில் பல கிரெடிட் கார்டு நிறுவனங்களில் கிரெடிட் கார்டு கேட்டு விசாரணை செய்தால், விண்ணப்பித்தால் கிரெடிட் ஸ்கோர் குறைய வாய்ப்பு உண்டு. இப்படிக் கேட்பவர்களுக்கு கடன் தேவை அதிகமாக இருக்கலாம் என கிரெடிட் ஸ்கோர் அமைப்புகள் நினைப்பதே இதற்குக் காரணம். கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்கி அதை சரியான நேரத்தில் கட்டி வருவது மூலம் கிரெடிட் ஸ்கோர் நிச்சயம் அதிகரிக்கும். கிரெடிட் கார்டு மூலம் பொருள்களை சுமார் 40 - 45 நாள்களுக்கு வட்டியில்லாமல் வாங்க உதவும். சில பொருள்களைத் தள்ளுபடி விலையில் வாங்கவும் உதவியாக இருக்கும். இந்த வசதிகளை நாம் சரியாகப் பயன் படுத்திகொள்ள வேண்டும்.

செலுத்த வேண்டிய குறைந்தபட்சத் தொகையைச் செலுத்திவந்தால் வட்டி இல்லை...
விளக்கம்: கிரெடிட் கார்டில் செலுத்த வேண்டிய மொத்தத் தொகையை (Total Amount Due) செலுத்த முடியா விட்டால், குறைந்தபட்சத் தொகையைச் (Minimum Amount) செலுத்தி, கிரெடிட் கார்டைத் தொடர்ந்து பயன்படுத்த வங்கிகள் அனுமதிக்கின்றன. குறைந்தபட்ச நிலுவைத் தொகையை செலுத்துவது என்பது பணம் செலுத்தத் தவறியதாக (Missing Payment) வகைப்படுத்தப்படவில்லை. இப்படிச் செய்வதால் ஒருவரின் கிரெடிட் ஸ்கோரில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாது. இருந்தாலும், செலுத்த வேண்டிய மொத்தத் தொகைக்குப் பதிலாக குறைந்தபட்ச நிலுவைத் தொகையை மட்டும் செலுத்தும்போது, செலுத்தப்படாத மீதமுள்ள நிலுவைத் தொகைக்கு மாதத்துக்கு சுமார் 2% முதல் 3.5% வரை வட்டி விதிக்கப்படும் என்பதை மறக்கக் கூடாது.
கார்டில் நிலுவைத் தொகை (Unpaid Balance) இருந்தால், வட்டி இல்லாத காலத்துக்கு (Interest-free Period) ஒருவர் தகுதி பெற மாட்டார். அதாவது, ஒருவர் கிரெடிட் கார்டு மூலம் செய்யும் அனைத்து புதிய வாங்குதல்களுக்கும் (New Purchases) முதல் நாளிலிருந்தே வட்டி விதிக்கப்படும். கிரெடிட் கார்டு கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால், செலுத்தப்படாத பாக்கித் தொகை சிறிய அளவில் இருந்தாலும், கூடிய விரைவில் அது பெரிய கடனாக உயர்ந்துவிடும்.
கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பது டெபிட் கார்டு மூலம் பணத்தை எடுப்பது போன்றது...
விளக்கம்: டெபிட் கார்டைப்போல, கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஏ.டி.எம்-மிலிருந்து பணம் எடுக்கலாம். இது கிரெடிட் கார்டு ரொக்க முன்பணம் (Cash Advance) எனப் படுகிறது. இது அதிக வட்டியிலான கடனாகும். இப்படி பணம் எடுக்கும்போது உடனடியாக வட்டி விதிக்கப்படும். அதாவது, பணம் எடுப்பதற்கு வட்டி இல்லா கால சலுகை கிடையாது. இந்த வட்டி கிரெடிட் கார்டின் வகையைப் பொறுத்து மாதம்தோறும் 2% - 3.5% (ஆண்டுக்கு 24 - 36%) வரை வட்டி போடப்படும். கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதற்குத் தனிக் கட்டணம் இருக்கிறது. இது பொதுவாக, ரூ.300 - ரூ.500 ஆக இருக்கும். இந்தத் தொகை கிரெடிட் கார்டு பில்லுடன் சேர்க்கப் படும். இந்தக் கடனை முழுமை யாக அடைக்காமல் வாங்கப் படும் பொருள்களுக்கான தொகைக்கும் வட்டி இல்லா சலுகை காலம் கிடையாது.
பயன்படுத்தப்படாத கிரெடிட் கார்டை ரத்து செய்வது கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கும்...
விளக்கம்: கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவில்லை எனில், அதை ரத்து செய்வது நல்ல விஷயமே. இதன் மூலம் கிரெடிட் கார்டு ஆண்டுக் கட்டணம் குறையும். மேலும், ஒருவரின் கிரெடிட் வரம்பு குறைந்து ஒட்டுமொத்த கடன் பயன்பாட்டு விகிதம் குறையும். குறைந்த கடன் பயன்பாட்டு விகிதம், கடன் சார்ந்து இல்லாத வாழ்க்கை முறையைக் காட்டு கிறது. இது கிரெடிட் ஸ்கோருக்கு நல்லது.
அனைத்து கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளும் 45 - 50 நாள்கள் வட்டி இல்லாத காலம் கிடைக்கும்...
விளக்கம்: ஒருவர் பெறும் உண்மையான இலவசக் கடன் காலம் என்பது பரிவர்த்தனை செய்யும் தேதியைப் பொறுத் தது. ஒருவர் பில்லிங் சுழற்சியின் முதல் நாளில் பொருள்களை வாங்கினால், வட்டி இல்லாத காலத்தின் 45-50 நாள்களை முழுமையாகப் பெற முடியும்; ஆனால், அத்தகைய சுழற்சிக் காலத்தின் 20-வது நாளில் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு மீதமுள்ள 25-30 நாள்கள் மட்டுமே இலவசக் கடன் காலத்துக்குத் தகுதியுடையதாக இருக்கும்.