மற்ற எபிசோடுகள்
Published:Updated:

முதலீட்டில் உண்மையான வருமானம்... கணக்கிடுவது எப்படி..?

உண்மையான வருமானம்...
பிரீமியம் ஸ்டோரி
News
உண்மையான வருமானம்...

டார்கெட் குரோர்பதி @ 40 - 4

இப்போதுதான் சேமிக்கத் தொடங்கிய 25 வயது மருமகள், வெளிநாட்டில் இருந்து திரும்பிய 35 வயது மருமகன், இறுதியாக சேமிக்கத் தொடங்கிய 45 வயது பக்கத்து வீட்டுக்காரர், ஓய்வு பெறுவதைப் பற்றி கவலைப்படும் 55 வயது நண்பர் மற்றும் 65 வயது உறவினர் இடையே பொதுவான ஒரு விஷயம் உள்ளது. இவர்கள் அனைவரும் வங்கி சேமிப்புக் கணக்கு, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் மற்றும் தங்க நகை தாண்டி வேறு திட்டங்களில் பணம் போட மிகவும் பயப்படுகிறார்கள்.

எம்.சதீஷ் குமார் 
நிறுவனர், 
http://sathishspeaks.com/
எம்.சதீஷ் குமார் நிறுவனர், http://sathishspeaks.com/

சேமிப்பது ஒரு நல்ல பழக்கம், ஆனால்...

சேமிப்பு மற்றும் முதலீடு இரண்டும் வெவ்வேறு விஷயம். பணத்தைச் சேமிப்பது ஒரு நல்ல பழக்கம். ஆனால், அதை முதலீடு செய்யவில்லை என்றால் அது வெறுமனே தூங்கும். இது இளைஞர்களுக்கு மிகவும் பொருந்தி வரும். காரணம், அவர்களுக்கு முதலீட்டுக் காலம் மிகவும் அதிகமாக இருப்பதாகும்.

சேமிப்பாளராக இருப்பதற்கு ஒழுக்கம் தேவை. அது இன்றைய இளைஞர்கள் பலரிடம் இருக்கிறது. முதலீட்டு மூலமான வருமானத்தைப் பற்றிய பாதுகாப்பு உணர்வு தேவை. அதுவும் அவர்களிடம் அதிகம் இருக்கிறது. இவை மிகவும் நல்லொழுக்கமாகத் தோன்றுவதால், பல இளைஞர்கள் சேமிப்பாளர்களாக இருப்பதில் திருப்தி அடைகிறார்கள். ஆனால், இவை மட்டுமே இளைஞர்களின் நிதி இலக்குகளை முழுமையாக நிறைவேற்ற போதுமானதாக இருக்காது.

இந்தியாவில் ஒவ்வொரு குடும்பமும் மாதம் 20 முதல் 30 சதவிகித வருமானத்தைச் சேமிக்கிறது என்று சொல்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். உலக அளவில் இது மிகவும் அதிகமாகும்; மேலும், நம் நாட்டினரைப் பற்றி உலக மக்கள் பெருமையாக நினைக்கிறார் கள். இந்தப் பணம் பெரும்பாலும் வங்கி சேமிப்பு அல்லது ஃபிக்ஸட் டெபாசிட்களில் போட்டு வைக்கப்படுகிறது.

பணவீக்க விகிதம்...

இந்த சேமிப்பு சதவிகித எண்ணை இன்னொரு எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதாவது, சேமிப்புக் கணக்கில் கிடைக்கும் வட்டியை விலைவாசி உயர்வு என்கிற பணவீக்க விகிதத்துடன் (Infation) ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் உண்மையான வருமானம் எவ்வளவு எனத் தெரியும். (உதாரணமாக இங்கே தரப்பட்டுள்ள அட்டவணையைப்பார்க்கவும்).

கடந்த ஆண்டு ஒரு பொருள் 100 ரூபாய்க்கு விற்றது. அதன் விலை இந்த ஆண்டு ரூ.106 ஆக உயர்ந்திருக்கிறது என்றால் விலைவாசி உயர்வு / பணவீக்கம் 6% ஆகும். அந்த அளவுக்கு ஒருவரின் பணத்தின் மதிப்பு உயரவில்லை என்றால் கடன் வாங்கித்தான் செலவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்.

முதலீட்டில் உண்மையான வருமானம்... கணக்கிடுவது எப்படி..?

உண்மையான வருமான விகிதம்...

ஒருவர் 100 ரூபாயை வங்கி சேமிப்புக் கணக்கில் போட்டு வைத்திருக்கிறார். அதற்கு அவருக்கு ஆண்டுக்கு 3% வட்டி வருமானம் கிடைக்கிறது. இந்த நிலையில், பணவீக்க விகிதம் 6 சதவிகிதம் என்றால் உண்மையான வருமான விகிதம் (Real Rate of Return) என்பது மைனஸ் 3 சதவிகிதம் ஆகும்.

இதுவே, அவர் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்கில் சேமிப்புக் கணக்கில் பணம் போட்டிருக்கிறார். அதற்கு அவருக்கு 4% வட்டி வருமானம் கிடைக்கிறது என்றால் உண்மையான வருமானம் மைனஸ் 2% ஆகும்.

ஒருவர் எந்த ஒரு முதலீட்டை மேற்கொண்டாலும், அதன் மூலமான உண்மையான வருமானத்தை அறிந்துகொள்வது அவசியமாகும். அப்போதுதான் அவர் செய்யும் முதலீடு சரியானதா என்பது தெரியவரும்.  

உண்மையான வருமானத்தைக் கணக்கிடுவது மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்.

1. உங்கள் கண்ணுக்கு நேரடி யாகத் தெரியாத உண்மையான வருமானத்தை நீங்கள் பார்க்க முடியும். இது, நீங்கள் முதலீட்டு வருமானத்தைக்கொண்டு ஆகாயத்தில் அரண்மனைகளை கற்பனையில் கட்டுவதைத் தடுக்கிறது. அதாவது, எதார்த்த வருமானத்தை எடுத்துக் காட்டு கிறது. மேலும், உண்மையான வருமான நிலை உங்களுக்குத் தெரிந்தால், அதற்கு ஏற்ப உங்கள் சரியான முதலீட்டுக் கலவையை (Portfolio) உருவாக்க முடியும்.

2. உண்மையான வருமான விகிதம், பணவீக்கத்தின் இழப்பை வருமானத்தில் சரிசெய்கிறது. இது பெயரளவு வருமான விகிதத்தை (Nominal Rate of Return) விட, ஒரு முதலீட்டின் மூலமான வருமான  செயல்திறனின் மிகவும் துல்லியமான அளவீடு ஆகும். பூஜ்ஜிய பணவீக்கம் அல்லது பணவாட்ட (Deflation) காலத்தைத் தவிர்த்த இதர காலங்களில் பெயரளவு வருமான விகிதங்கள், உண்மையான வருமான விகிதங் களைவிட அதிகமாக இருக்கும். பணவாட்டம் என்பது பணவீக்கத் துக்கு எதிரானது ஆகும். அதாவது, விலைவாசி மைனஸில் இருப்பதாகும்.

3. வருமான விகிதம் (Rate of Return - ROR) அல்லது லாப விகிதம் (Rate of Profit - ROP), ஒருவர் செய்திருக்கும் முதலீடு எவ்வளவு லாபகரமாக இருக்கிறது என்பதற்கான முக்கியமான அளவீடு ஆகும். அதாவது, இது ஒரு முதலீடு எவ்வளவு லாபகரமானது என்பதைக் குறிக்கிறது. ஒரு முதலீடு எந்த அளவுக்கு லாப கரமாக இருக்கிறது என்பதை அதன் உண்மையான வருமானத்தை வைத்துக் கண்டுபிடித்து விடலாம்.

முதலீட்டில் உண்மையான வருமானம்... கணக்கிடுவது எப்படி..?

வருமான வரி...

இன்னும் ஒரு படி மேலே, போய் அந்த வருமானம் கைக்கு வந்து சேரும்போது எந்த அளவுக்கு லாபகரமாக இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். அந்த வகையில், அந்த வருமானத் துக்கு எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும் என்பதைக் கவனிப்பது கட்டாயமாகும்.

வரி கட்டுபவர் எஃப்.டி-யில் முதலீடு செய்திருக்கிறார். முதலீட்டை எவ்வளவு காலம் வைத்திருந்தாலும். வட்டி வருமானத்துக்கு அவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ அதற்கு ஏற்ப (பழைய வரி முறையில் 5%, 20%, 30%) வரி கட்ட வேண்டும்.

இதுவே ஒருவர் கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் முதலீட்டை மூன்று ஆண்டுக் குள் திரும்ப எடுத்தால், குறுகிய கால மூலதன ஆதாயத்துக்கு அவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும். அந்த வகையில், மூன்று ஆண்டுக்கு உட்பட்ட நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் ஃபண்டுகள் மூலம் ஒரே அளவிலான வருமானம் கிடைத்தால், வரிக்கு பிந்தைய நிலையில் இரண்டு முதலீடு மூலமும் கிடைத்த வருமானமும் ஒரேமாதிரியாக இருக்கும்.

கடன் ஃபண்டுகளை மூன்றாண்டுகள் கழித்து விற்று லாபம் பார்க்கும்போது, நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு, ஒருவர் எந்த வருமான வரம்பில் வந்தாலும் அவர் 20% வரி கட்ட வேண்டும். இங்கே பணவீக்க விகித சரிக்கட்டலை மிக எளிமையாகச் சொல்வது என்றால் வருமானத்திலிருந்து பணவீக்க விகிதத்தை கழித்துக்கொண்டு மீதி லாபத்துக்கு வரிக் கட்டு வதாகும்.

உதாரணத்துக்கு, மூன்று ஆண்டுகளில் ஆண்டு சராசரி பணவீக்க விகிதம் 6%, கடன் ஃபண்ட் மூலமான மூன்று ஆண்டு வருமானம் 8% என்றால், மூலதன ஆதாய வரி (24-18%=) 6 சதவிகித வருமானத் துக்கு மட்டும் 20%, அதாவது 1.2% வரி கட்டினால் போதும்.

நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளை எடுத்துக்கொண்டால், ஓராண்டுக்கு உட்பட்ட குறுகிய கால மூலதன ஆதாய வரியாக ஒருவர் எந்த வரி வரம்பில் வந்தாலும் 15% வரி கட்ட வேண்டும். இந்த முதலீடுகள் ஓராண்டுக்கு மேற்பட்ட நிலையில் நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு வரி இல்லை. அதற்கு மேற்படும் லாபத்துக்கு மட்டும் 10% வருமான வரி கட்ட வேண்டும்.

எனவே, ஒரு முதலீட்டின் மூலமான உண்மையான வருமானத்தை உணர்ந்து முதலீடு செய்தால், விரைவிலேயே நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிட முடியும்.

இளைஞர்களே உங்கள் முதலீட்டின் உண்மையான வருமானத்தைக் கணக்கீடு செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்.

(குரோர்பதி ஆவோம்)