பிசினஸ் ஸ்டாண்டர்ட் ஊடகம் நடத்திய BFSI Insight Summit கருத்தரங்கு மாநாட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் பொருளாதார ஊடக ஆசிரியர்கள், பொருளாதார வல்லுநர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்தக் கருத்தரங்கில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசுகையில், ``100% யூகங்களின் அடிப்படையில் செயல்படும் கிரிப்டோகரன்சிகளில் எந்தவொரு மதிப்பும் இல்லை, உலகின் பொருளாதாரத்துக்கும், நிதிநிலைக்கும் கிரிப்டோகரன்சிகள் ஆபத்தாக இருக்கும்.

கிரிப்டோகரன்சிகள் நிதி நிலைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கிரிப்டோகரன்சி பயன்பாட்டுக்கு சட்ட அனுமதி வழங்கக் கூடாது என ரிசர்வ் வங்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு 30% வரி விதித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு 40 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.
தனியார் கிரிப்டோகரன்சிகள் தற்போதைய அமைப்பை சீர்குலைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி அமைப்புக்கு ஏற்றவாறு இல்லாமல் இருக்கின்றன.
இரண்டாவதாக 100% யூகங்களின் அடிப்படையில் மட்டுமே கிரிப்டோகரன்சிகள் ஏறி இறங்குகின்றன. இந்த கிரிப்டோகரன்சி களுக்கு எந்தவொரு மதிப்பும் இல்லை. இதனால் பொது நன்மை, மதிப்பு என்ன என்ற தெளிவு இல்லை என்பதால் இது அபாயகரமானது.
உலகின் அடுத்த நிதி நெருக்கடி, தனியார் கிரிப்டோ கரன்சிகளால்தான் உண்டாகும். `பிட்காய்ன்' போன்றவற்றைத் தொடர்ந்து வளர விட்டால் இந்நிலை ஏற்படும். பணவீக்கத்தை எதிர்த்து போராட மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே சிறப்பான ஒருங்கிணைந்த அணுகுமுறை உள்ளது.

பணவீக்கத்தைக் குறைக்க வட்டி விகிதங்கள், பணப்புழக்கம், பணவியல் கொள்கை ஆகியவற்றில் ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய நிதித்துறை மிகவும் வலுவாக உள்ளது.
ரிசர்வ் வங்கி அண்மையில் சொந்தமாக டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிஜிட்டல் ரூபாய் பயன்பாடு சட்டபூர்வமானது. டிஜிட்டல் ரூபாயின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும். மத்திய வங்கிகளின் `டிஜிட்டல்' நாணயங்கள்தான் எதிர்கால நாணயங்களாக இருக்கும். ஏற்கெனவே மொத்த பரிவர்த்தனைகள் மற்றும் சில்லறை பரிவர்த்தனைகளுக்கு சோதனை அடிப்படையில் டிஜிட்டல் ரூபாய் பயன்பாட்டை ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. இதனால் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும். நோட்டு அச்சடிப்பதற்கான செலவுகளும் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.