
முதலீடு
அஞ்சல் அலுவலகச் சேமிப்புக் கணக்கு தவிர, மற்ற அனைத்து முதலீடுகளுக்குமான வட்டி விகிதத்தை 0.1% குறைத்துள்ளது மத்திய அரசு. ஓய்வுக்கால முதலீடான பி.பி.எஃப் வட்டி 7.9 சதவிகிதமாகவும், பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமான செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி 8.4 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது.

காலாண்டுக்கு ஒருமுறை வட்டி மாற்றம்
ஒவ்வொரு காலாண்டும் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங் களுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் நிர்ணயித்து வருகிறது. இந்திய அரசாங்கம் வெளியிட்டிருக்கும் கடன் பத்திரங் களுக்குக் கடந்த காலாண்டில் கிடைத்த வருமானத்தின் அடிப்படையில், இந்தச் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
வருமானத்துக்கு உத்தரவாதம்
அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்களின் வருமானத்துக்கு மத்திய அரசின் உத்தரவாதம் இருப்பதால், முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், குடும்பத் தலைவிகள், மூத்த குடிமக்கள், கிராமப்புறத்தினர் எனப் பலதரப்பட்டவர்கள் முதலீடு செய்து வருவதைப் பார்க்க முடிகிறது. அவர்கள் இந்த வட்டிக் குறைப்பினால் நிச்சயம் பாதிக்கப்படவே செய்வார்கள்.

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை, தொடர்ந்து மூன்று முறை 0.25% குறைத்துள்ளது. இதனால் கடனுக்கான வட்டியும் குறைந்துள்ளது. கூடவே, டெபாசிட்டுகளுக்கான வட்டியும் குறைந்துள்ளது. அந்த வகையில்தான், அஞ்சல் அலுவலக சேமிப்புக்கான வட்டியும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வட்டி வருமானம் குறைந்துவரும் நிலையில், இதற்கான மாற்று என்ன, இந்தச் சேமிப்புத் திட்டங் களைவிட அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதா என்று பார்ப்போம்.
மாற்று முதலீடுகள்
அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டத்துக்கு இப்போது ஆண்டுக்கு 4% வட்டி வட்டி வழங்கப்படு கிறது. இதற்குப் பதிலாக, மியூச்சுவல் ஃபண்டில் உள்ள லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்தால், ஆண்டுக்கு சுமார் 6.5% வருமானம் கிடைக்கும். இதில் முதலீடு செய்யக் கட்டணம் எதுவும் கிடையாது. மேலும், நினைத்தபோது பணத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளவும் முடியும்.

அஞ்சல் அலுவலகத் திட்டங்களில், தற்போதைய நிலையில் மூலதன இழப்பு ஏற்படாது. ஆனால், வருமானம் ஏற்ற இறக்கமாக இருக்கும். அந்த வகையில், நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களாக இருக்கும் பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட், ஐந்து ஆண்டு தேசிய சேமிப்புச் சான்றிதழ், செல்வமகள் சேமிப்புத் திட்டம், கிஷான் விகாஸ் பத்திரம், ஐந்து வருட டேர்ம் டெபாசிட், ஐந்து வருட ஆர்.டி 7.2%, ஐந்து வருட மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக மியூச்சுவல் ஃபண்ட் கடன் சார்ந்த ஃபண்டு களைக் கவனிக்கலாம்.
இந்தத் திட்டங்களில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி வருமானம் கிடைக்க வாய்ப்பு இருப்பதுடன், மூன்றாண்டுகளுக்குப்பிறகு பணவீக்க விகித சரிகட்டலுக்குப் பிறகு இருக்கும் லாபத்துக்கு 20% வரி செலுத்தினால் போதும். வரிச் சலுகை வேண்டும் என்பவர்கள் பி.பி.எஃப், என்.எஸ்.சி போன்றவற்றுக்கு மாற்றாக, பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டுகளில் நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்படுவதால் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை.
மேலும், கிஷான் விகாஸ் பத்திரம், ஐந்து வருட ஆர்.டி ஆகியவை நீண்ட காலத் திட்டங்கள் என்பதால், அவற்றுக்குப் பதில் கடன் ஃபண்டுகள் அல்லது கலவை (ஹைபிரீட்) ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். சிறிதளவு ரிஸ்க் இருந்தாலும் சேமிப்புத் திட்டங்களைவிட சற்றுக் கூடுதல் வருமானம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது!