நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

‘‘மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்!’’ புத்தக வெளியீட்டு விழாவில் பேச்சு!

நூல் வெளியீடு
பிரீமியம் ஸ்டோரி
News
நூல் வெளியீடு

நூல் வெளியீடு

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய மக்கள் எல்லோரையும் பாடாய்ப் படுத்திய நடவடிக்கைதான் பணமதிப்பு நீக்கம். இந்த நடவடிக்கைப் பற்றி 2017-ம் ஆண்டில் பொருளாதார ஆய்வாளர்கள் சி.பி.சந்திரசேகர், ஜெயதி கோஷ், பிரபாத் பட்நாயக் ஆகிய மூன்று முக்கிய பொருளாதார நிபுணர்கள் இணைந்து எழுதிய ‘Demonetisation Decoded: A Critique of India’s Currency Experiment’ என்கிற புத்தகம் பரவலாக அனைவராலும் பேசப்பட்டது.

அந்தப் புத்தகத்தை பேராசிரியர்களான செள.புஷ்பராஜ், வே.சிவசங்கர் ஆகியோர், ‘பணமதிப்பு நீக்கம்: இந்திய நாணயப் பரிசோதனை குறித்த பார்வை’ என்கிற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து, அதை சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்தில் வெளியிட்டனர்.

இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக, தமிழகத்தின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவரும் மற்றும் பொருளாதார நிபுணருமான ஜெ.ஜெயரஞ்சன், அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்ட மைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் டி.தாமஸ் ஃபிராங்கோ ராஜேந்திரதேவ் ஆகியோரும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார்கள்.

நூல் வெளியீடு
நூல் வெளியீடு

கறுப்புப் பணம் ஒழியவில்லை...

முதலில் பேசிய ஜெயரஞ்சன், ``2016-ம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்கம் என்பது, பொருளாதார நடவடிக்கை கிடையாது. அது ஓர் அரசியல் முடிவு. மோடியின் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை நிரூபிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு அது என்பது இந்தப் புத்தகத்தில் மிகச் சரியாகக் கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.

மோடி தலைமையிலான அரசு, பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டபோது கறுப்புப் பணத்தை ஒழிப்போம், கள்ளநோட்டு அச்சடிப்பது குறைக்கப்படும் எனப் பல காரணங்களைச் சொன்னார்கள். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அதில் ஒரு காரணம்கூட இன்னும் நிறைவேறவில்லை.

நாட்டை ஒரு சிலருக்காக மாற்றுவதுபோல, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி உட்பட மோடி தலைமையிலான அரசின் அனைத்து நடவடிக்கைகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது” என்றார்.

புதிய நோட்டு சிலருக்கு முன்கூட்டியே கிடைத்தது எப்படி?

அவரைத் தொடர்ந்து பேசிய தாமஸ் ஃப்ராங்கோ, ``2016-ம் ஆண்டுக்கு முன்பாக 1946-ல் பணமதிப்பு நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிந்தது. மீண்டும் 1975-ல் பணமதிப்பு நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் தோல்வியில் முடிந்தது. ஏனெனில், பண மதிப்பு நீக்கத்தால் கறுப்புப் பணம், ஊழல், தீவிரவாதம், கள்ளநோட்டு அச்சடிப்பு என எதையும் ஒழித்துவிட முடியாது. அப்படி ஊழலை ஒழிக்க வேண்டும் என மோடி அரசு நினைத்தால், மிகப் பெரிய ஊழல் நடக்கும் அரசின் `எலெக்டோரல் பாண்டு(Electoral bonds)’ வெளியீட்டைத் தான் முதலில் ஒழிக்க வேண்டும்.

அதேபோல, கள்ள நோட்டு புழக்கத்தைக் குறைப்பதற்காக வும், டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற் காகவும் பணமதிப்பு நீக்கம் செய்வதாக மத்திய அரசு சொன்னது. ஆனால், கள்ளநோட்டு புழக்கம் என்பது 2016-லிருந்து ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதே போல, 2016-ல் 16 லட்சம் கோடி நோட்டுகளாக இருந்த இந்திய கரன்சிகளின் எண்ணிக்கை, தற்போது சுமார் 25 லட்சம் கோடி நோட்டுகளுக்குமேல் புழக்கத்தில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

மேலும், பணமதிப்பு நீக்கம், கறுப்புப் பணம் புழங்குவதை எப்படி அதிகரித்திருக்கிறது என்பதை தெரியப்படுத்துவதற் காக, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படாத ஒரு சில விஷயங்களையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கடந்த 2016-ல் பணமதிப்பு நீக்கம் நடைபெறும்போது, ``ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிக்குப் பணம் நேரடியாகச் செல்லாமல், சிலரின் கைகளுக்கு மட்டும் நேரடியாகச் சென்றிருக்கிறது என நான் சந்தேகப்படுகிறேன்” என இந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சரியான விளக்கம் கொடுத்து எந்த அறிக்கையையும் மத்திய அரசு வெளியிடவில்லை. இது மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது.

ஆக, மோடி தலைமையிலான அரசால் சொன்னதைச் சரியாக நிறைவேற்ற முடியவில்லை என்கிறபோது, ‘நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்’ என மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதுதான் அவருக்கு இருக்கும் கடமைகளிலேயே மிக முக்கிய கடமையாகும்” என்றார் காட்டமாக.

ஜெயரஞ்சன்,  தாமஸ் ஃப்ராங்கோ,  பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
ஜெயரஞ்சன், தாமஸ் ஃப்ராங்கோ, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

மத்திய அரசின் தவறான முடிவு...

இவர்களைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

``2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு மோடி பணமதிப்பு நீக்கம் நடவடிக்கையை அறிவித்தபோது, நான் சிங்கப்பூரில் இருந்தேன். அப்போது அதிகாலை மூன்று மணிக்கு என் மனைவியிடம் இருந்து அழைப்பு வந்தது. மோடி அறிவித்திருக்கும் பணமதிப்பு நீக்கம் குறித்து என்னிடம் என் மனைவி தெரிவித்தார். தூக்கக் கலக்கத்தில் இருந்ததால், அதை என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. மத்திய அரசு மிகப்பெரிய தவறான முடிவை எடுத்திருக்கிறது என்பது விடிந்த பிறகுதான் தெரிந்தது.

ஒரு அரசு புழக்கத்தில் இருக்கும் பணத்தை மதிப்பு நீக்கம் செய்கிறது எனில், அதற்கு இணையான மதிப்பு நீக்கம் செய்யப்படாத நோட்டுகளின் எண்ணிக்கை புழக்கத்தில் போதுமானதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறி விட்டது. அதனால் பாதிக்கப்பட்டது பணக்காரர்கள் அல்ல. பாமர மக்கள்தான்” என்றார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பல பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தாலும், அதனால் ஏற்பட்ட சில நல்ல விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் பேசப்படவில்லை என்பதுதான் ஒரே குறை!