
கேள்வி பதில்
வே.அன்புக்கரசி, சுரண்டை
என் சம்பளத் தேதியை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எஸ்.ஐ.பி தேதியாக வைக்கலாம் என நினைக்கிறேன். இது சரியா, ஏதாவது பிரச்னை வர வாய்ப்பிருக்கிறதா?
ஏ.எஸ்.முரளிதரன், முதன்மைச் செயல் அதிகாரி, வீரா ஃபின்சர்வ், சென்னை.
‘‘உங்களின் சம்பளம் உடனடியாக முதலீ டாக மாற வேண்டும். அதன்மூலம் அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்கிற உங்களின் ஆர்வம் புரிகிறது. ஆனால், இதில் நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. அதாவது, உங்கள் நிறுவனம் ஏதாவது சிக்கல் காரணமாக சரியான தேதியில் சம்பளம் போடவில்லை; அந்த நேரத்தில் உங்கள் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லை எனில், எஸ்.ஐ.பி தவணை தவறும். அதற்கு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அபராதம் எதுவும் விதிக்காது.
ஆனால், வங்கிகள் அபராதம் விதிக்கும். இதனால், உங்களுக்கு பண இழப்பு ஏற்படு வதுடன், ஒரு எஸ்.ஐ.பி தவணை தவறும். எனவே, சம்பளத் தேதிலிருந்து 3 அல்லது 5 தினங்கள் தள்ளி எஸ்.ஐ.பி தேதியை வைத்துக் கொள்வது நல்லது. உங்களின் சம்பளத் தேதி 5 எனில், எஸ்.ஐ.பி தேதியை 10 ஆக வைத்துக் கொள்வது மிக நல்லதாகும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்காக வைத்திருக்கும் வங்கிக் கணக்கில் எப்போதும் ஒரு மாத எஸ்.ஐ.பி-க்கான தொகையைக் கூடுதலாக வைத்திருக்கும்பட்சத்தில் சம்பளத் தேதி தள்ளிப்போவதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.’’

வித்யாலட்சுமி, கீழக்கரை
என்னிடம் ரூ.10 லட்சம் இருக்கிறது. இந்தப் பணம் இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து என் மகளின் உயர்கல்வித் தேவைக்கு வேண்டும். நான் எது போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்?
எம்.கண்ணன், ஆலோசகர், radhaconsultancy.blogspot.com
‘‘நீண்ட காலம் எனில், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். குறைந்த காலம் எனில், கடன் ஃபண்டுகளில் முதலீடு என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஐந்து வருடம் என்பது, ரெண்டும்கெட்டானாக நடுவில் உள்ளது. உலகப் பொருளாதாரம் மந்த நிலை நோக்கிப் போவதாகச் சொல்லப்படும் நிலையில், இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுமா, ஏற்படாதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மருத்துவ உயர்கல்வி, வெளிநாட்டு உயர்கல்வி என்ற வகையில் பார்த்தால், அதிகம் செலவாகலாம். எனவே, தங்களிடம் இருக்கும், பணத்தை ஹைபிரிட் ஃபண்ட் வகையில் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பிரிவில் முதலீடு செய்யலாம். உதாரணமாக, எடெல்வைஸ் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் – குரோத் ஆப்ஷனில் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்ட் கடந்த 5 வருடத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் தந்திருக்கிறது. கடன் வகை ஃபண்டுகளில் மத்திய கால முதலீடாக முதலீடு செய்யலாம். உதாரணமாக, எஸ்.பி.ஐ மேக்னம் மீடியம் டூரேஷன் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இது கடந்த 5 வருடங்களில் ஆண்டுக்கு சராசரியாக 7% லாபம் கொடுத்துள்ளது.’’
மணிகண்டன், சென்னை -18
முடிந்த நிதியாண்டில் வீட்டுக் கடனுக்கான 12 தவணைகளில் 10 தவணைகள் மட்டுமே கட்டியிருக்கிறேன். எனக்கு வரிச் சலுகை எப்படி கிடைக்கும்?
கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர், சென்னை
‘‘வருமான வரிச் சட்டம் பிரிவு 24-ன்கீழ், ஒரு தனிநபர் வீட்டுக் கடனுக்கான வட்டி செலுத்தும்போது, நிதி ஆண்டில் வரி விலக்கு அதிகபட்சமாக ரூ.2,00,000 பெற முடியும். இது குடியிருக்கும் வீடு மற்றும் வாடகைக்கு விட்டிருக்கும் வீட்டுக்கு கட்டும் வட்டிக்கான அதிகபட்ச வரம்பாகும்.
நிதி ஆண்டில் செலுத்தும் தொகை அதாவது, 10 மாதத் திருப்பிச் செலுத்தும் தொகை ரூ.2 லட்சத்துக்குமேல் இருந்தால். ரூ.2 லட்சத்துக்கு மட்டும் வரிச் சலுகை கிடைக்கும்; ரூ.2 லட்சத் துக்கு கீழ் இருந்தால், எவ்வளவு தொகையோ அவ்வளவும் அந்த ஆண்டில் வரிக் கழிவாகக் கிடைக்கும்.
வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி அதை வாடகைக்கு விட்டிருந்து, நிதி ஆண்டில் ரூ.2 லட்சத்துக்குமேல் வட்டி கட்டும் பட்சத்தில், ரூ.2 லட்சம் மட்டும் ஓராண்டில் வரிச் சலுகை கிடைக்கும். இதற்கு அதிகமாகக் கட்டியிருக்கும் வட்டியை அடுத்து வரும் ஆண்டுகளுக்கு எடுத்துச் சென்று எந்த நிதி ஆண்டில் ரூ.2 லட்சத்துக்குக் கீழ் வட்டி கட்டுகிறீர்களோ, அந்த ஆண்டில் ஈடுகட்டி அதே ஆண்டில் வரிச் சலுகை பெற முடியும்.
இந்த ரூ.2 லட்சம் வட்டிக்கான சலுகை என்பது குடியிருக்கும் வீடு மற்றும் வாடகைக்கு விட்டிருக்கும் வீடு எல்லாம் சேர்ந்து நிதி ஆண்டில் அதிக பட்சம் ரூ.2 லட்சம்தான்.
இதேபோல், திரும்பக் கட்டும் அசலில் நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரைக்கும் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை பெற முடியும். ரூ. 1.5 லட்சத்துக்கு கீழ் அசல் திரும் பக் கட்டப்பட்டால், எவ்வளவு தொகை கட்டப்பட்டதோ, அதற்கு மட்டும் வரிச் சலுகை கிடைக்கும்.’’

ம.வேலுச்சாமி, மயிலாடுதுறை.
பங்குச் சந்தை இறக்கத்தின்போது, முதலீட்டுக்கேற்ற சரியான பங்குகளை எப்படி அடையாளம் காண்பது? அதற் கான ஏதாவது டெக்னிக்கல் தொழில் நுட்பம் இருக்கிறதா?
எல்.அர்ஜுன், செபி பதிவு பங்குச் சந்தை ஆலோசகர், https://flyingcalls.com
‘‘நல்ல பங்குகளைத் தேர்வு செய்ய எந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தத் தேவையில்லை. இறக்கத்தின்போது நல்ல பங்கு களின் விலை மிகவும் குறைவாகவே இறங்கும். ஒருவேளை, வேகமாக இறங்கினால் உடனடியாக மேலெழுந்துவிடும். கடன் இல்லாத நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது குறைந்த அளவு கடன் உள்ள நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நிறுவனத் தின் கடந்த ஐந்து ஆண்டுக்கால வளர்ச்சி சீராக வந்துள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.
மிகச் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் மட்டும்தான் டிவிடெண்ட் தரும். எனவே, தொடர்ந்து டிவிடெண்ட் கொடுக்கும் நிறுவனத்தின் பங்குச் சந்தை இறக்கத்தில் இருந்தால் அதில் முதலீடு செய்யலாம். ரிட்டர்ன் ஆன் ஈக்விட்டி அதிகம் உள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது எப்போதும் நல்லது. பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எளிது அந்த முதலீட்டை லாபகரமாக மாற்ற மேற்கூறிய விஷயங்களைக் கவனித்தாலே நல்ல லாபம் ஈட்டலாம்."

நாகமணி, மதுரை
பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரும்போது, எவ்வளவு ஆண்டுகள் கழித்தால் நெகட்டிவ் வருமானத்தைத் தவிர்க்க முடியும். 10, 15 ஆண்டுக் காலத்தில் ஒரு டைவர்சிஃபைட் ஃபண்டில் எத்தனை சதவிகிதம் லாபம் எதிர்பார்க்கலாம்?
ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in
“உங்களுடைய இரண்டு கேள்விகளுக்குமே 100% உத்தரவாதமான பதில் கிடையாது என்பதே உண்மை. கடந்த கால சந்தை ஓட்டத்தை வைத்து ஒரு நிகழ்தகவு ரீதியாகவே பதில் சொல்ல இயலும். அப்படிப் பார்க்கை யில், ஆராய்ச்சி என்ன சொல்கிறதென்றால், இந்திய பங்குச் சந்தையில் ஏழு ஆண்டுகளுக்கு மிகையாக முதலீடு செய்தால் நஷ்டம் அடைவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. எஸ்.ஐ.பி முறையில் இது ஒவ்வொரு மாத முதலீட்டுக்கும் தனித்தனியாகப் பொருந்தும். ஆகையால் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது ஒரு பத்து வருடங்கள் கழித்து நெகட்டிவ் வருமானத்தைக் கூடுமான அளவு தவிர்த்துவிடலாம். 10, 15 ஆண்டுகள் முதலீடு செய்யும்போது பங்குச் சந்தையிலிருந்து ஆண்டுதோறும் பத்து முதல் பதினைந்து சதவிகிதம் எதிர்பார்க்கலாம்.”