தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஆயுள் காப்பீட்டு பாலிசியில் தோழியை நாமினியாக நியமிக்கலாமா..?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்

கேள்வி பதில்

பாஸ்கரன், குரோம்பேட்டை, சென்னை.

நான் உடல்நலம் இல்லாமல் இருக்கிறேன். என் சொத்துகளை விற்க என் திருமணமான மகளுக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்க முடியுமா?

டி.ஜீவா, வழக்கறிஞர் மற்றும் நோட்டரி பப்ளிக், சென்னை.

“திருமணமான உங்கள் மகளுக்கு தாராள மாக பவர் தரலாம். ஆனால், நீங்கள் உயிருடன் இருக்கும்வரைதான் அது செல்லும். அதன்பிறகு அது ரத்தாகிவிடும். சொத்தை விற்கும்போது, நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்பதற்கான மருத்துவச் சான்றிதழை உங்கள் மகள் சார் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பவர் பெற்றவர் அவர் பெயரில் சொத்தைப் பதிவு செய்ய முடியாது. இதை எல்லாம் மனதில் அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்வது நல்லது.”

ஆயுள் காப்பீட்டு பாலிசியில் தோழியை நாமினியாக நியமிக்கலாமா..?

ஆரோக்கிய வேல், புதுச்சேரி.

நான் ஆயுள் காப்பீட்டு பாலிசி ரூ.50 லட்சத்துக்கு எடுக்க விரும்புகிறேன். இந்த பாலிசியில் என் நெருக்கிய தோழியை நாமினியாக நியமிக்க முடியுமா? மேலும், ஆயுள் காப்பீட்டு பாலிசியில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை நாமினியாக நியமிக்கலாமா?

சி.கேசவன், பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜர், ஆதித்ய பிர்லா கேப்பிடல்.

“ஒருவர் தனது இன்ஷூரன்ஸ் பாலிசியில் நெருங்கிய தோழியையோ, நண்பரையோ, தூரத்து உறவினரையோகூட நாமினியாக நியமிக்க முடியும். ஆனால், இது பல குழப்பங் களையும் சட்டச் சிக்கல்களையும் ஏற்படுத்தும். எனவே, தவிர்க்கப்பட வேண்டும்.

தன் குடும்பத்தைத் தவிர்த்து வெளியாள்களை நாமினியாக நியமிக்கும்போது க்ளெய்ம் என்று வந்தால் சட்டபூர்வமான வாரிசு, நாமினியைத் தவிர்த்துத் தனக்கு க்ளெய்ம் தர வேண்டும் என்று கோரும்பட்சத்தில் காப்பீட்டு நிறுவனம், நாமினி மற்றும் சட்டபூர்வ வாரிசு இருவரையும் நீதிமன்றம் சென்று உத்தவு வாங்கிவரும்படி கூறிவிடும்.

மேலும், வெளியாள்களை நாமினியாக நியமிப்பதன்மூலம் பாலிசிதாரருக்கு அபாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதால், பல காப்பீட்டு நிறுவனங்களும் இதை ஏற்பதில்லை.

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகளை நியமிக்க முடியும். சதவிகித அடிப்படையில் இழப்பீட்டைப் பிரித்துக் கொடுக்க பாலிசி தாரரே தனது ஒப்புதலைப் பதிந்து வைக்க முடியும். மனைவிக்கு 70%, தாய்க்கு 30% என்று ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகளை நியமிக்கலாம்.”

ஆயுள் காப்பீட்டு பாலிசியில் தோழியை நாமினியாக நியமிக்கலாமா..?

நந்தக்குமார், மூணாறு.

ஒரு நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை எந்த அறிகுறிகளை வைத்து முடிவு செய்ய முடியும்?

என்.ஜெயகுமார், சார்ட்டர்ட் ஃபைனாஷியல் அனலிஸ்ட் (CFA).

“ஒரு நாட்டில் தொடர்ந்து இரண்டு காலாண்டு களாக ஜி.டி.பி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி எதிர்மறை வளர்ச்சி (Degrowth) அடைந்தால், அதைப் பொருளாதார மந்தநிலை எனலாம். ஜி.டி.பி வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரங் களைக் கணக்கிட்டு பொதுவெளியில் வெளியிட இரண்டு மாதங்கள் ஆகும். எனவே, ஒரு நாட்டில் பொருளாதார மந்தநிலை உள்ளதா என உறுதியுடன் தெரிந்துகொள்ள இரண்டு மாதங்கள் ஆகும்.

இதைப் பற்றி முன்கூட்டியே தெரிந்துகொள்ள யீல்டு கர்வ் (Yield Curve) உதவுகிறது. தலைகீழான யீல்டு கர்வ் பொருளாதார மந்த நிலைக்கு முன்பாகப் பலமுறை நிகழ்ந்து உள்ளது என்பதால், தலைகீழான யீல்டு கர்வ் நிகழ்ந்தால் அதன்பிறகு, மந்தநிலை வரும் என்பது எழுதப்படாத நியதி ஆகும்.”

எம்.சிவகண்ணன், இ-மெயில் மூலம்.

நான் நிப்பான் கோல்டு இ.டி.எஃப், ஆக்ஸிஸ் கோல்டு இ.டி.எஃப் மற்றும் எஸ்.பி.ஐ கோல்டு இ.டி.எஃப்பில் மாதம்தோறும் முதலீடு செய்து வருகிறேன். இதைத் தொடர்ந்து முதலீடு செய்துவரலாமா? என் மொத்த முதலீட்டுத் தொகையில் தங்கத்தின் சதவிகிதம் எவ்வளவு இருக்க வேண்டும்?

லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், http://moneyvedam.com

“தங்கம் என்பது பணவீக்கத் துக்கு எதிரான ஒரு பாதுகாப்பு மட்டுமே. எனவே, உங்கள் மகளின் திருமணத்துக்குத் தங்கம் வாங்க வேண்டும் என்ற இலக்கை நீங்கள் கொண்டிருக்கா விட்டால், உங்கள் மாதாந்தர சேமிப்பில் 10% - 15 சதவிகிதத்துக்கு மேல் தங்கத்துக்கு என ஒதுக்க வேண்டியதில்லை.

வட்டி விகிதங்கள் உயர்வு மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரிப்பதால், தங்கத்தின் விலை குறுகிய காலம் மற்றும் நடுத்தர காலத்தில் அதிகமாக ஏற்றம் காணாது எனலாம்.”

ஆயுள் காப்பீட்டு பாலிசியில் தோழியை நாமினியாக நியமிக்கலாமா..?

கே.விஜயன், தென்காசி

இந்தியாவில் நடத்தப்படும் சிட் ஃபண்ட் திட்டங்களில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRI) சேர முடியுமா? விதிமுறைகள், நிபந்தனைகள் ஏதாவது இருக்கிறதா?

ஏ.சிற்றரசு, பொதுச் செயலாளர், அகில இந்திய சிட் ஃபண்ட்ஸ் சங்கம்.

“இந்தியாவில் நடத்தப்படும் சீட்டுகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) சேரலாம். அவர்களைச் சேர்த்துக்கொள்வதற் கான அனுமதியை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. அவர்களுடைய என்.ஆர்.ஓ (NRO) வங்கிக் கணக்கி லிருந்து சீட்டு தவணைத் தொகை களைச் செலுத்தலாம்.

அவர்கள் சீட்டு எடுக்கும்போது, அவர்களுக்குச் சேர வேண்டிய தொகையும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பணப் பரிவர்த்தனை முழுவதும் என்.ஆர்.ஓ வங்கிக் கணக்கின் மூலம் மட்டுமே நடைபெற வேண்டும். சீட்டில் பெற்ற பணத்தை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. சீட்டில் சேரும் நபர் வெளிநாடு வாழ் இந்தியர் என்பதை சீட்டு நிறுவனம் தங்களுடைய ஆவணங்களில் குறிப்பிட வேண்டும்.”

மலர்விழி, சென்னை

என் வயது 25. இப்போதுதான் சென்னையில் வேலைக்குச் சேர்ந்திருக் கிறேன். எனக்கு இப்போது பிடித்தம் எல்லாம் போக சம்பளமாக ரூ.35,000 கிடைக்கிறது. சென்னை ஓ.எம்.ஆர் பகுதியில் 8 - 10 ஆண்டுகளில் வீட்டுக் கடன் மூலம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளேன். அதற்கு முன்பணம் திரட்ட நான் எது போன்ற மியூச்சுவல் திட்டங்களில் முதலீடு செய்து வர வேண்டும்..?

எம்.கண்ணன், ஆலோசகர், radhaconsultancy. blogspot.com

“இளம் வயதில் வீடு வாங்கத் திட்டமிட்டு பணம் சேர்ப்பது சிறப்பு. ஓ.எம்.ஆர் பகுதியில் இன்றைய விலையில் இரண்டு படுக்கை அறைகொண்ட அடுக்குமாடி வீடு சுமார் ரூ.50 லட்சம் ஆகும். இன்னும் 10 ஆண்டுகளில் 5% வருட உயர்வில், வீட்டின் விலை ரூ.80 லட்சமாக இருக்கும். அதற்கு முன்பணமாக (மார்ஜின் தொகை) நீங்கள் 20% தொகை சுமார் ரூ 16 லட்சம் கட்ட வேண்டும்.

10 வருடங்கள் என்பதால், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் ஈக்விட்டி திட்டத்தில் முதலீடு செய்யலாம். வருட வருமானம் 15% என்று எடுத்துக்கொண்டால், நீங்கள் மாதம்தோறும் கட்ட வேண்டிய எஸ்.ஐ.பி தொகை ரூ.6,000 ஆகும். அதே சமயம், எட்டு வருடங்களில் வீட்டுக் கடன் வாங்குவது எனில், நீங்கள் கட்ட வேண்டிய எஸ்.ஐ.பி மாதம்தோறும் ரூ.9,000 என்ற அளவில் இருக்கும்.

இந்த எஸ்.ஐ.பி-யை நீங்கள் டைவர்சிஃபைட் ஈக்விட்டி அல்லது ஃபிளெக்ஸிகேப் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.”