
கேள்வி - பதில்
க.பாஸ்கரன், உடுமலைப்பேட்டை.
அசோக் லேலாண்ட் மற்றும் என்.ஹெச்.பி.சி பங்குகளை நீண்ட கால நோக்கில் அவற்றின் தற்போதைய விலையில் வாங்கலாமா?
எல்.அர்ஜுன், https://flyingcalls.com செபி பதிவு பெற்ற பங்குச் சந்தை ஆலோசகர், சேலம்.
“உலக அளவில் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் கடந்த ஒரு வருடமாகச் சிறந்த செயல்பாட்டைக் கொடுக்க முடியாமல் திணறி வருகின்றன. காரணம், கச்சா பொருள்கள், எரிபொருள் விலை உயர்வு மேலும் மென்பொருள் பற்றாக்குறை போன்றவற்றால் அந்த நிறுவனங்களின் செயல்பாடு பாதிப்படைந்துள்ளன.
அசோக் லேலாண்ட் பங்கைப் பொறுத்தவரை, கடந்த ஒரு வருடமாக 100 ரூபாயிலிருந்து 150 ரூபாய்க்கு இடை வர்த்தகம் நடைபெற்று வந்துள்ளது. தற்போது பங்கு 200 நாள் சராசரி மூவிங் ஆவரேஜுக்கு (200DMA) கீழ் ரூ.125 ஆக உள்ளது. ஆகையால், நீண்ட கால நோக்கத்துக்காகப் பங்கை வாங்க வேண்டுமெனில், ரூ.75 முதல் ரூ.100 வரையிலான விலையில் வாங்கலாம். பங்கு விலை 10% முதல் 20% வரை இங்கிருந்து இறங்கும்போது முதலீடு செய்யலாம்.
என்.ஹெச்.பி.சி என்பது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனம் இது. கடந்த ஐந்து வருடங்களாக அதிகபட்சமாக ரூ.35-க்கும், குறைந்தபட்சமாக ரூ.17.50-க்கும் மட்டுமே வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தற்போது ரூ.29 என்ற விலையில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முடிந்த வரை இந்தப் பங்கில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நலம். ஒருவேளை, 20 முதல் 22 ரூபாய்க்கு பங்கின் விலை இறங்கி வரும்போது குறைந்த அளவு முதலீடு செய்யலாம். அல்லது வேறு மின்துறை (Power Sector) சம்பந்தப்பட்ட பங்குகளில் முதலீடு செய்வது நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.”

என்.ரவி, திருப்பூர்
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் மற்றும் கடன் சந்தை சார்ந்த ஃபண்டில் எப்படி வரி விதிக்கப்படுகிறது என்பதை விளக்கிச் சொல்லவும்.
த.ராஜன், இணை நிறுவனர், Holisticinvestment.in
“ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளைப் பொறுத்தவரை, முதலீடு செய்து ஓராண்டுக்குள் விற்று லாபம் பார்த்தால், குறுகிய கால மூலதன ஆதாயத் துக்கு 15% வரி கட்ட வேண்டி யிருக்கும். இதுவே ஓராண்டு கழித்து யூனிட்டுகளை விற்று லாபம் பார்க்கும்போது, நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு நிபந்தனைக்கு உட்பட்டு, ரூ.1 லட்சத்துக்கு வரி கிடையாது. அதற்கு மேற்படும் ஆதாயத்துக்கு 10% வரி கட்டினால் போதும்.
இதுவே கடன் ஃபண்டுகள் எனில், மூன்று ஆண்டுக்குள் யூனிட்டுகளை விற்றால் ஆதாயத் துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். இதுவே மூன்று ஆண்டுகள் கழித்து விற்கும்போது, நீண்ட கால மூலதன ஆதாயத்துக்குப் பணவீக்க சரிக்கட்டலுக்குப் பிறகு 20% வரிகட்டினால் போதும். எனவே, யூனிட்டுகளை விற்கும்போது ஈக்விட்டி ஃபண்டா, கடன் ஃபண்டா என்பதைக் கவனிப்பதுடன், குறுகிய கால மூலதன ஆதாயம், நீண்ட கால மூலதன ஆதாயம் ஆகியவற்றையும் கவனிப்பது அவசியம்.
இந்திய குடிமக்களைப் பொறுத்தவரை, மூலதன ஆதாயத்துக்கு வரி பிடித்தம் (டி.டி.எஸ்) செய்ய மாட்டார்கள். ஆனால், முதலீட்டாளர் பான் எண் அடிப்படையில் அவர் வரி கணக்கில் இந்த விவரம் இப்போது மத்திய நிதி அமைச்சகத்தால் தானாகவே சேர்க்கப்பட்டுவிடு கிறது. எனவே, வரி கட்டாமல் இருக்க முடியாது என்பதால், இந்த விஷயத்தில் உஷாராக இருப்பது அவசியம்.”

வைஷ்ணவி பாலாஜி, முகநூல் மூலமாக.
என் அம்மா அவர் சேர்த்த பணத்தில் என் இரண்டு குழந்தைகளுக்கு தலா ரூ.2 லட்சம் கல்விக்கு பயன்படுத்த அளித்துள்ளார். இதை எதில் முதலீடு செய்தால், 10 வருடம் கழித்து நல்ல பலன் கிடைக்கும்?
எம்.கண்ணன், ஆலோசகர், Radhaconsultancy.blogspot.com
“குழந்தைகளின் கல்விக்காக பணம் சேமித்து, அவர்களைப் படிக்க வைப்பது, அவர்களது வருங்காலத்துக்கு மிகவும் உதவிகர மானதாக இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில், குழந்தை களுக்கான தனிப்பட்ட திட்டங் கள் உள்ளன. மற்ற திட்டங் களிலிருந்து இந்தக் குழந்தை களுக்கான திட்டம் சற்று மாறு பட்டது. காரணம், குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு முதலீடு செய் யும் தொகையை இடையிலேயே எடுத்துவிடாமல், குழந்தைகளின் வயது 18 ஆன பிறகு எடுக்குமாறு இந்தத் திட்டங்கள் வகை செய்யப் பட்டுள்ளன. உங்கள் அம்மா கொடுத்த தலா ரூ.2 லட்சத்தை உங்கள் குழந்தைகளின் பெயரில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், அவர்கள் 18 வயதுக்குப் பின்னர், அதில் வரும் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கலாம். அந்த நேரத்தில் அதை எடுத்து அவர்கள் படிப்புக்குப் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.
கடந்த ஐந்து வருடங்களில் குழந்தைகள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நல்ல வருமானம் கொடுத்துள்ளன. ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஃபண்ட் ஆண்டுக்கு 15.34%, ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஃபண்ட் 13.59% எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் 11.93% வருமானம் கொடுத்துள்ளன.”
கணேஷ் குமார், சென்னை - 17.
நான் என் ஓய்வுக்காலத்துக்கான ஈக்விட்டி ஃபண்ட் ஒன்றில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். இப்போது நிதிச் சிக்கலில் மாட்டியிருக்கிறேன். இந்த எஸ்.ஐ.பி முதலீட்டை இடையில் நிறுத்த முடியுமா?
ஆர்.வெங்கடேஷ், நிறுவனர், www.gururamfinancialservices.com
“ஒருவரால் ஏதோ ஒரு காரணத்தால் தொடர்ந்து எஸ்.ஐ.பி முதலீட்டை மேற்கொள்ள முடியவில்லை எனில், அவர் தாராளமாக அந்த முதலீட்டை நிறுத்தி வைத்துக் கொள்ளலாம். செபி அமைப்பின் அறிவுரைப்படி அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் ஆன்லைன் மற்றும் நேரடியாக மியூச்சுவல் ஃபண்டுகள் நிறுவனங்களின் கிளைகள் மற்றும் ஏஜென்ட்டுகளின் உதவியோடு எஸ்.ஐ.பி-யை நிறுத்தும் வசதியை ஏற்படுத்தித் தருகின்றன. மூன்று மாதம், ஆறு மாதம் என்பது போல் தற்காலிகமாக எஸ்.ஐ.பி-யை நிறுத்தி வைத்துக்கொள்ள முடியும். கொரோனா முதல் அலை பாதிப்பின்போது பலருடைய சம்பளம் குறைந்ததால் இந்த வசதியைப் பயன்படுத்தினார்கள்.
நிரந்தரமாக எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தும் வசதியும் இருக்கிறது. அதற்கு, ஒரு மாதத்துக்கு முன் அதற்கென இருக்கும் படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும். மேலும், ஒருவர் தேர்ந்தெடுத்த ஃபண்ட் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படவில்லை எனில், அந்த ஃபண்டின் எஸ்.ஐ.பி-யை நிறுத்திவிட்டு வேறு ஃபண்டில் எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பிக்க முடியும். எஸ்.ஐ.பி-யை நிறுத்த ஃபண்ட் நிறுவனங்கள் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை.”