பணவீக்கம் அதிகரிப்பதால் ஒரு பக்கம் விலைவாசி உயர்கிறது என்றால், இன்னொரு பக்கம் அரசு மக்களுக்கு வழங்கும் அடிப்படை வசதிகளுக்கான கட்டணங்களும் உயர்ந்துகொண்டே இருக்கின்றன.
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அடுத்தடுத்து மக்களுக்கு அதிர்ச்சியாகக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. முதலில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அடுத்து மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. இப்போது குடிநீர், கழிவுநீர் கட்டணமும், ஏன் லாரியில் வழங்கப்படக்கூடிய தண்ணீர் கட்டணமும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

சென்னையில் குடிநீர் வாரியத்தின் மூலம் 15 மண்டலங்களில் குழாய்கள் மூலமாகவும், லாரி மூலமாகவும் தினசரி 100 கோடி லிட்டர் அளவிலான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையிலும், புறநகர்களிலும் உள்ள ஏரிகளிலிருந்து கிடைக்கும் தண்ணீரையும், இதுபோக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமும் சென்னையில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தக் குடிநீர் விநியோகத்தின் மூலம் சென்னை குடிநீர் வாரியத்துக்கு ரூ.885 கோடி வருவாய் கிடைக்கிறது. இதில் குடிநீர், கழிவுநீர் வரி மூலமான வருவாய் ரூ.505 கோடி, லாரி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் மூலம் ரூ.380 கோடி வருவாயும் கிடைக்கிறது.
சென்னையில் குடிநீர், கழிவுநீர் வரியானது இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் சொத்து மதிப்பில் 7 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதில் குடிநீர் வரி 1.5 சதவிகிதம், கழிவுநீர் வரி 5.5 சதவிகிதம் ஆகும்.
இதுபோக கட்டணமாக மாதம் ரூ.80 வசூலிக்கப்படுகிறது. குடிநீர், கழிவுநீர் இணைப்புக் கொடுக்கப்படாத பகுதிகளில் வரி மட்டும் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதன்படி மொத்தமாக 14 லட்சம் பேர் வரி செலுத்துகின்றனர். 9.13 லட்சம் பேர் கட்டணம் செலுத்துகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2019 - 2020-ம் ஆண்டில் குடிநீர், கழிவுநீர் வசதிக்கான கட்டணம் குடியிருப்புப் பகுதிகளுக்கு 5 சதவிகிதமும், தொழில் நிறுவனங்களுக்கு 10 சதவிகிதமும் உயர்த்தப்பட்டது. மட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் இதே சதவிகிதத்தில் கட்டணம் உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டது. ஆனால், இடையில் கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் 2020-21, 2021-22 நிதி ஆண்டுகளில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. அதன் பிறகு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுவருகிறது. அந்தவகையில், வரும் 2023-24 நிதி ஆண்டுக்கான கட்டண உயர்வு ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரியிடம் பேசியபோது அவர் கூறியதாவது, ``குடிநீர் மற்றும் கழிவுநீர் நிர்வாகம் என்பது மிகவும் முக்கியமான பணி. இதில் எந்தச் சிக்கலும் இல்லாமல் செயல்படுத்துவதற்குப் போதுமான நிதி அவசியம். குடிநீர், கழிவுநீர் சார்ந்து தொடர்ந்து உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. இவை அனைத்துக்கும் மக்களிடமிருந்து பெறும் வரி மற்றும் கட்டணத்தை நம்பிதான் வாரியம் இருக்கிறது.
இதிலும் சரியான நேரத்தில் மக்கள் வரி மற்றும் கட்டணங்களைச் செலுத்துவதில்லை. செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்கு ஒவ்வொரு ஆண்டும் வீடுகளுக்கு 5 சதவிகிதமும் தொழில் நிறுவனங்களுக்கு 10 சதவிகிதமும் கட்டணம் உயர்த்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரி மற்றும் கட்டணம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரண்டு முறை வசூலிக்கப்படுகிறது. சரியான நேரத்துக்குள் வரி, கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் நிலுவைத் தொகைக்கு 1.25 சதவிகிதம் வட்டி வசூலிக்கப்படும். மக்கள் சரியான நேரத்தில் வரி, கட்டணங்களைச் செலுத்தி ஒத்துழைப்பு தர வேண்டும்" என்றார்.