மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தொழிலாளி to முதலாளி: இரண்டு லட்சம் முதலீடு... 70 ஊழியர்கள்... ₹ 70 கோடி வருமானம்!

தொழிலாளி to முதலாளி
பிரீமியம் ஸ்டோரி
News
தொழிலாளி to முதலாளி ( கு.ஆனந்தராஜ் )

தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது.

இந்த இதழில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த `சிபி பாலிமர்ஸ்’ நிறுவன உரிமையாளரான சாந்தி சுப்ரமணியம்.

நடுத்தர விவசாயக் குடும்பம். சாந்தி உள்ளிட்ட நான்கு குழந்தைகளையும் பெற்றோர் நன்கு படிக்கவைத்தனர். பி.எஸ்ஸி முடித்ததும், சாந்திக்குத் திருமணமாகிறது. கணவருடன் மும்பையில் குடியேறுகிறார். அங்கு ஆறு மாதங்கள் வேலைக்குச் சென்றவருக்கு திடீரென ஒரு ஸ்பார்க். `தொழில் தொடங்க வேண்டும்; பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்’ என்கிற தன் இளமைக் காலக் கனவுக்கு வடிவம் கொடுக்க நினைக்கிறார். ஏற்கெனவே பிசினஸ் செய்து நஷ்டமடைந்த அப்பாவின் அனுபவத்தைத் தனக்கான பாடமாக எடுத்துக்கொள்கிறார். தொழில் தொடங்குவதற்கு முன்பு திட்டமிடல் உள்ளிட்ட முன் பணிகளில் கவனம் செலுத்துகிறார்.

சொந்த ஊரான நாமக்கல்லில் இருந்த வரை வீடு, கல்லூரிதான் உலகம் என்றிருந்த சாந்தி, பிசினஸ் ஆர்வம்வந்ததும் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கிறார். அதன் மூலம் பல அனுபவங்கள் கிடைக்கின்றன. தருணம் வந்துவிட்டது என உள்ளுணர்வு சொல்ல, பிசினஸ் வேட்கையுடன் மும்பையிலிருந்து கோயம்புத்தூருக்குக் குடியேறுகிறார்.

தொழிலாளி to முதலாளி: இரண்டு லட்சம் முதலீடு... 70 ஊழியர்கள்... ₹ 70 கோடி வருமானம்!

``என் கணவர் மெக்கானிக்கல் இன்ஜினீயர். அவர் யோசனைப்படி, இருவரும் இணைந்து ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள் தயாரிக்கிற நிறுவனத்தைத் தொடங்கினோம். அவர் உற்பத்திப் பணிகளைக் கவனிக்க, நான் நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்தினேன். அடுத்த ஆறு வருஷங்கள்ல, தொழிலில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைச்சது. அதனால தனியா வேற ஒரு தொழில் செஞ்சு என் திறமையை வெளிப்படுத்தணும்னு நினைச்சேன். `ஃபுட் கிரேடு’ அனுமதியுடன் கூடிய `பெட் (PET - Polyethylene Terephthalate)’ பாட்டில்கள் பிரபலமாகிட்டிருந்த காலம் அது. அதுகுறித்து, மும்பையில நடந்த ஒரு காட்சியில நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். எதிர்காலத்துல உணவுப் பொருள்கள் உற்பத்தியில இந்த பாட்டில்களின் பயன்பாடு மிகப்பெரிய அளவில் இருக்கும்னு புரிஞ்சது. எனவே, ‘பெட்’ பாட்டில்கள் தயாரிப்புல இறங்கலாம்னு முடிவெடுத்து, அதற்கான பயிற்சிகளைப் பெற்றேன்.

அப்போ எங்களுக்குப் பூர்வீக சொத்து எதுவுமில்லை. எங்க சேமிப்பை மூலதனமா வெச்சுதான் நானும் கணவரும் முதலில் தொழிலைத் தொடங்கினோம். அதனால, தொழிலில் ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டாலும், `பூர்வீக சொத்துகளை இழந் துட்டோம்' என்பது போன்ற பேச்சு வராது. அதோடு, வைராக்கியத்துடன் வேற தொழில் செஞ்சு மீண்டு வந்திடலாம்னு உறுதியா நினைச்சேன். அதனால எந்தப் பயமும் இல்லை. சேமிப்புப் பணத்துடன், என் நகைகளை அடமானம் வெச்சேன். இரண்டு லட்சம் முதலீட்டில், 1997-ம் ஆண்டு, கோயம்புத்தூர்ல புது நிறுவனத்தைத் தொடங்கினேன். அப்போ என்னுடன் சேர்த்து ஏழு ஊழியர்கள் இருந்தோம். இரவு பகலா உழைச்சு, ஓரளவுக்கு வளர்ந்தோம்” - பல மடங்கு உற்சாகத்துடன் பேசுகிறார் சாந்தி.

தொழிலாளி to முதலாளி: இரண்டு லட்சம் முதலீடு... 70 ஊழியர்கள்... ₹ 70 கோடி வருமானம்!

பெட் பாட்டில்கள் எடை குறைவாக இருந்தாலும், அவை கணிசமான அளவில் இடத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும். எனவே, இந்த பாட்டில்களை அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும். அதனால், உள்ளூர் விற்பனைதான் சாந்தியின் பிரதான சாய்ஸ். பெரிதாக லாபம்

இல்லாவிட்டாலும், சுமாராகச் சென்றுகொண்டிருந்த தொழிலில் பெரிய அடி விழுகிறது. அப்போது கோவையில் இயங்கிவந்த `பிஸ்லரி’ குடிநீர் நிறுவனத்துக்கு சாந்தியின் நிறுவனம்தான் பிரதான பாட்டில் சப்ளையர். அந்நிறுவனம் திடீரென சென்னைக்கு இடம் மாற, அந்நிறுவனத்தின் ஆர்டர் ரத்தாகிறது. இதுபோன்ற சில காரணங்களால், உற்பத்தி கணிசமாகக் குறைகிறது. ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே சிரமமாகி, ஒருகட்டத்தில் மேற்கொண்டு தொழிலை நடத்துவதே சிரம மாகிறது. மனம்தளராத சாந்தி, சரிவை ஈடுகட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அவற்றில் படிப்படியாக வெற்றி காண்கிறார். எப்படி?

தொழிலாளி to முதலாளி: இரண்டு லட்சம் முதலீடு... 70 ஊழியர்கள்... ₹ 70 கோடி வருமானம்!

அப்போது கண்ணாடி மற்றும் பி.வி.சி பாட்டில்களே அதிக புழக்கத்தில் இருந்தன. அவற்றுக்கு மாற்றாக, `யூஸர் ஃப்ரெண்ட்லி’யான ‘பெட்’ பாட்டில்களைப் பயன்படுத்தச் சொல்லி பல நிறுவனங்களிடம் வலியுறுத்துகிறார். பல்வேறு புதிய வடிவங்களில் ‘பெட்’ பாட்டில்களைத் தயாரிக்கிறார். புதுப்புது ஆர்டர்கள் கிடைக்க, தொழிலும் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. கணவரின் சொந்த கிராமமான ராசிபுரம் அருகிலுள்ள பழந்தின்னிப்பட்டியில் தன் நிறுவனத்தின் புதிய கிளையை, 2015-ம் ஆண்டு தொடங்குகிறார்.

பெரிய நிறுவனங்களுக்கு ட்ரக்கில் பல ஆயிரங்களில் பாட்டில்களை அனுப்புவது சாந்தியின் வாடிக்கை. அதேநேரம், தன்னைத் தேடிவரும் சிறு, குறு தொழிலாளர்களை ஊக்குவிப்பதிலும் தனி கவனம் செலுத்துகிறார். இதில் லாபம் குறைவாக இருந்தாலும், `நாமும் இந்த நிலையிலிருந்துதானே வளர்ந்து வந்தோம்’ என்ற எண்ணத்தில் மிகச்சிறிய ஆர்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார். இப்படிப் பல தொழில்முனைவோர்களை உருவாக்கியிருக்கும் சாந்தி, தடைகள் பலவற்றைக் கடந்து வெற்றி பெற்றிருக்கிறார்.

‘`ஆரம்பத்துல ஒரு பாட்டிலுக்கு சராசரியா 50 பைசாதான் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் இல்லாதது, திடீரென கணிசமான ஆர்டர் குறைவதுன்னு சவால்கள் நம்மை சளைக்காம தொடர்ந்துட்டேதான் இருக்கும். ஆனாலும், நம்பிக்கையுடன் நிறைய ஆர்டர்களைப் பெறுவதற்கான வழிகளில் கவனம் செலுத்தினேன். லாபத்தைத் தொழில் விரிவாக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்தினேன். கிடைச்ச பாடங்களில் மீண்டும் தோல்வி வராமல் பார்த்துக்கிட்டேன்.

இந்த நிலையில என் கணவர் அவருடைய நிறுவனத்தை நிறுத்திட்டு, என் பிசினஸ்லயே கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டார். தரமான பொருள்களைத் தயாரிச்சாலும், கண்கவர் பாட்டில்களில் அடைச்சு விற்பனை செய்தால்தான் அவை வாடிக்கையாளர்களைக் கவரும். அதனால், காலமாற்றத்துக்கேற்ற பிரத்யேக பாட்டில்களைத் தயாரிக்கிறோம். எங்க ரெகுலர் கஸ்டமர்கள்கிட்டயும், `புது புராடக்ட்டு களைத் தயாரிச்சு, அதைப் புதுவிதமான பாட்டில்களில் அடைச்சு விற்பனை செய்தால் வளர்ச்சி அதிகரிக்கும்’னு ஆலோசனை கொடுப்போம். அதனால, நாங்களும் வாடிக்கையாளர்கள் நிறுவனங்களும் சேர்ந்து பயனடைகிறோம்” - விடாமுயற்சி, கடின உழைப்புடன் இதுபோன்ற சாதுர்ய திட்டமிடல்களும் சாந்தியை வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற்றிருக்கின்றன.

இப்போது அழகுசாதனப் பொருள்கள், ஹெர்பல் பொருள்கள், உணவுப் பொருள்கள், ஜவுளிப் பொருள்கள், தண்ணீர் மற்றும் குளிர்பானம் எனப் பல்வேறு பொருள்களுக்கான பாட்டில்களைத் தயாரிக்கிறார் சாந்தி. பழனி பஞ்சாமிர்தம், கெவின் கேர், ஆச்சி நெய், ஆர்.கே.ஜி நெய், உதயகிருஷ்ணா நெய், பொடாரன் குளிர்பானம் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களும் இவரது வாடிக்கையாளர்கள். இப்போது ராசிபுரம் மற்றும் கோயம்புத்தூர் என இரு கிளைகளிலும் 70 ஊழியர்கள் வேலைபார்க்கிறார்கள். மாதத்துக்கு 500 டன்னுக்கு அதிகமாக உற்பத்தி நடக்கிறது. ஆண்டுக்கு 70 கோடி ரூபாய்க்கு மேல் டர்ன் ஓவர் பார்க்கிறார். அடுத்த ஆண்டுக்குள் 100 கோடி ரூபாய் டர்ன் ஓவர் இலக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறார்.

“சவால்கள் எப்போதும் இருந்துக்கிட்டே தான் இருக்கும். அதையெல்லாம் பார்த்து மிரண்டால் தொழில் செய்ய முடியாது. ஒவ்வொரு பிரச்னையையும் உடனுக்குடன் சரிசெய்து முடிக்கிறதால, தொழிலில் உயர்வதற்கான நம்பிக்கை அதிகரிச்சுட்டே இருக்கு. ஆரம்பத்திலிருந்து இப்போவரை என் நிறுவனத்துல நானும் ஓர் ஊழியர்தான். உற்பத்தி அதிகமா இருந்தாலோ, வேலையாள் வரலைன்னாலோ நானும் ஒருத்தியா இறங்கி வேலை செய்வேன். எப்பவும் கம்பெனிக்குதான் முன்னுரிமை கொடுப்பேன். இதில் என் குடும்பத்தாரின் ஒத்துழைப்புக்கு முக்கியப் பங்குண்டு. ஊழியர்கள் பற்றாக்குறைக்காக வருத்தப்படாம, இப்போ ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை அதிகப்படுத்திட்டோம். அதனால, தொய்வின்றி வேலைகள் நடந்துட்டே இருக்கு. இப்போ ‘பெட்’ பாட்டில்களுக்கு நிறைய வரவேற்பு இருக்கிறதால, ஆர்வமுள்ளவங்க இத்துறைக்கு முறையான பயிற்சியுடன் தாராளமா வரலாம்!” - நம்பிக்கையுடன் உற்சாகமளிக்கிறார் சாந்தி.

- நாம் வெல்வோம்!

நான் கற்ற பாடம்!

ஷ்டம், ஏமாற்றம்னு பல்வேறு பிரச்னைகள் வந்தபோதும் துவண்டு போகவே இல்ல. சுயதொழில்னு இறங்கி யாச்சு. பின்வாங்குவது சுலபம்னாலும், அது வெற்றிக்கு வழியில்ல. பொறுமையுடன் பிரச்னைக்குத் தீர்வு காண்பது மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும். இதை 22 வருஷங்களா தொடர்ந்து கடைப்பிடிக்கிறேன். அதுதான் என் வெற்றிக்குக் காரணம்.