தொழிலாளி to முதலாளி - 12: அன்று மேடை நாடக நடிகை. இன்று 2,500 ஊழியர்களுக்கு முதலாளி! - ஸ்ரீவித்யா

காலம் யாருக்காகவும் காத்திருக்காது. எந்தக் கவலைக்கும் இடம்கொடுக்காம நதியைப்போல ஓடிக்கிட்டே இருக்கணும்.
தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில் சென்னையைச் சேர்ந்த `ரவீந்திரா சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீவித்யா.
நடுத்தரக் குடும்பம். கர்னாடக இசைக் கலைஞர்களான பெற்றோரிடம் இசை பயின்றாலும், காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்பதுதான் ஸ்ரீவித்யாவின் கனவு. புகழ்பெற்ற இசைக்கலைஞராக இருந்த தந்தை வைகல் எஸ்.ஞானஸ்கந்தன், ஸ்ரீவித்யா உள்ளிட்ட நான்கு குழந்தைகளையும் சுதந்திரமாகச் செயல்பட ஊக்குவிக்கிறார். அப்பாவின் நண்பர் கூத்தபிரானின் முயற்சியில் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்குகிறார் ஸ்ரீவித்யா. நாயகியாக நடித்த `இம்சைகள்’ நாடகம், இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுக்கொடுக்கிறது. கல்லூரிப் படிப்புக்கு இடையே ஒன்றரை ஆண்டில் 150-க்கும் மேற்பட்ட மேடைகளில் நடிக்கிறார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போதே திருமணமாகிறது ஸ்ரீவித்யாவுக்கு. பிறகு நாடக நடிப்பைக் கைவிட்டவர், பி.ஏ படிப்பை முடிக்கிறார்.
இந்த நிலையில், ஸ்ரீவித்யாவின் குடும்ப வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட, 26 வயதில் சிங்கிள் பேரன்ட்டாக புது வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். மேடை நாடக நடிப்பால், 1980-ம் ஆண்டில் ஆனந்த விகடன் உட்பட அப்போதைய முன்னணி தமிழ்ப் பத்திரிகைகளின் அட்டைப்பட நாயகியாகப் புகழ்பெறுகிறார் ஸ்ரீவித்யா. அதற்குப் பிறகு இவர் எதிர்கொண்ட வாழ்க்கைப் போராட்டங்களும், உழைப்பால் பிசினஸ் நாயகியான இரண்டாவது அத்தியாயமும் பல திருப்பங்கள் நிறைந்தவை.
``சிங்கிள் பேரன்ட் சூழ்நிலை ஏற்பட்டதும், வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம். பெரு முயற்சிக்குப் பிறகு ஒரு மருத்துவமனையில் அட்மின் வேலை கிடைச்சது. மாதச் சம்பளம் 750 ரூபாய். வாடகைக்கு ஒரு சின்ன ரூம் பிடிச்சு, என் இரண்டரை வயதுக் குழந்தையுடன் குடியேறினேன். அடுத்து 1,200 ரூபாய் சம்பளத்துல சென்னை, ‘மலர்’ ஆஸ்பத்திரியில வேலை. அந்த வறுமையிலும் மாதந்தோறும் 100 ரூபாய் சேமிச்சுவெச்சு, டெல்லி இந்திரா காந்தி நேஷனல் ஓப்பன் யுனிவர்சிட்டியில் எம்.பி.ஏ படிச்சேன். சேல்ஸ் வுமனாக, மீண்டும் வேறு நிறுவனத்துல வேலை. தமிழகம் முழுக்க சென்று ஆர்டர் பிடிக்கணும். அப்படி ஒருமுறை வெளியூர் போனப்ப, எனக்கு அம்மை வந்துடுச்சு. ஆபீஸ்ல விடுமுறை கேட்டப்ப, மறுப்பு சொல்லி என்னை வேலையிலிருந்து தூக்கிட்டாங்க. மீண்டும் ‘மலர்’ ஆஸ்பத்திரியிலேயே வேலைக்குச் சேர்ந்தேன்.

அங்கே வேலை பார்த்திட்டிருந்த டாக்டர் ரவீந்திர பத்மநாபன், ரொம்ப நல்ல மனசுக்காரர். தனக்கு வேண்டப்பட்ட இளைஞர் ஒருவருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க, கார்பென்டரி, பெயின்ட் அடிப்பது உள்ளிட்ட வேலைகளுக்கான சிறு நிறுவனம் ஒன்றை ஆரம்பிச்சார். இந்தத் துறையில் பல்வேறு பெரு நிறுவனங்கள் வளர ஆரம்பித்த அந்தக் காலகட்டத்தில், அவர் தன் நிறுவனத்தையும் விரிவுபடுத்த நினைச்சார். ஆஸ்பத்திரியில என் வேலைத் திறமையைப் பார்த்து, அவர் நிறுவனத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கொடுத்தார். 1993-ம் ஆண்டு, ஆரம்பிச்சது இந்தப் பயணம்” என்கிற ஸ்ரீவித்யா, பிசினஸில் கடந்த 26 ஆண்டுகளில் கடந்து வந்திருக்கும் உயரம் அசாத்தியமானது.
சென்னை டி.டி.கே சாலையில் ஒரு டீக்கடை மாடியிலுள்ள சிறிய அறையில்தான் அப்போதைய நிறுவனம் செயல்பட்டிருக்கிறது. 30 ஊழியர்களில், ஸ்ரீவித்யாவுக்கு சேல்ஸ் மேனேஜர் வேலை. தனி ஆளாகப் பல இடங்களுக்கும் அலைந்து நிறைய ஆர்டர்களைப் பிடித்திருக்கிறார். டாக்டர் ரவீந்திர பத்மநாபன் ஆஸ்பத்திரி பணிகளில் அதிக கவனம் செலுத்தியதால், ஸ்ரீவித்யாதான் நிறுவன வளர்ச்சியில் பெரிதும் பங்காற்றியிருக்கிறார். படிப்படியாக வளர்ந்து, நிறுவனத்தின் `வைஸ் பிரசிடென்ட்’ ஆகியிருக்கிறார் ஸ்ரீவித்யா.
ஒரு கட்டத்தில் டாக்டரின் நிறுவனம், ஹவுஸ் கீப்பிங் மற்றும் செக்யூரிட்டி சர்வீசஸ் என இரண்டு பணிகளுக்கும் தனித்தனி நிறுவனங்களாகச் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில், 2001-ம் ஆண்டு டாக்டர் ரவீந்திர பத்மநாபன் மரணமடைய, பெரிய லாபப் பாதையில் இயங்காத அந்நிறுவனத்தை டாக்டரின் குடும்பத்தினர் விற்க முடிவெடுத்தனர். வளர்த்து ஆளாக்கிய நிறுவனம் இன்னொருவரின் வசம் செல்வதில் ஸ்ரீவித்யாவுக்கு மனமில்லை. நிறுவனத்தைத் தானே வாங்கிக்கொள்ள முடிவெடுக்கிறார். ஒப்பந்தத்தின்படி மூன்று ஆண்டுகளில், டாக்டரின் குடும்பத்திடம் உரிய தொகையைக் கொடுத்து நிறுவனத்தைத் தன் வசமாக்கிக்கொள்கிறார். அந்த மூன்று ஆண்டுகளும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ஸ்ரீவித்யா, பிறகும் அப்பொறுப்பைத் தொடர்கிறார். தன் தொழில் குருவான டாக்டரின் நினைவாக, நிறுவனத் துக்கு அவரது பெயரையே சூட்டுகிறார்.
``நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு நான் அவ்வளவு எளிதில் வந்திடலை. முன்பு சேல்ஸ் ஆர்டர் பிடிக்கிற அலைச்சலில், சாப்பாடு மற்றும் தூக்கம் மறந்து வேலை செய்திருக்கேன். வேலை விஷயத்துல டாக்டர் அதிக கண்டிப்புடன் இருப்பார். வீட்டுல கார் இல்லைன்னா, சைக்கிள்லேயே டாக்டர் ஆபீஸ் வந்திடுவார். அந்த எளிமையுடன், பர்சனல் விஷயங்களுக்கு இடம்கொடுக்காம உழைக்கும் குணத்தையும் அவர்கிட்டதான் கத்துக்கிட்டேன்.
18 வருஷத்துக்கு முன்பு செக்யூரிட்டி சர்வீசஸ், ஹவுஸ் கீப்பிங் பணிகளுக்கெல்லாம் பெருசா மதிப்பில்லை. ‘வாட்ச்மேன் கம்பெனியை நடத்துறீங்களே’ன்னு கிண்டலா பேசினவங்களும் உண்டு. ஆனா, எதையுமே நான் கண்டுக்கலை.
டாக்டர் பெயரைக் காப்பாத்தணும், என்னை நம்பியிருக்கிற 400 ஊழியர்களின் குடும்பங்களைக் காப்பாத்தணும், இந்தப் பாதுகாப்புத் துறையில பெண்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கணும், நிறுவனத்தை ரொம்ப பெருசா உயர்த்தணும்... இவற்றையெல்லாம் சாத்தியமாக்குவதுதான் என் நோக்கமாக இருந்தது.
இந்தத் துறையில் பெண்ணாக தலைமைப் பொறுப்பில் இருப்பது பெரும் சவால்தான். அதுக்காக நான் எந்த ஒரு விஷயத்திலும் பின்வாங்கலை. தோல்வி வந்தால், ‘இப்போதானே தொழிலுக்குப் புதுசா வந்திருக்கோம், அடுத்த முறை இது நேராம பார்த்துக்குவோம்’னு மனசுக்கு சொல்லிட்டு இன்னும் அதிக வேகத்துடன் உழைப்பேன். ஒரு கட்டத்திலிருந்து, வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவெச்சிருக்கிறதோடு, ஊழியர்களின் ஒத்துழைப்புடன் நிறுவனத்தை லாபப் பாதையில் கொண்டுபோயிட்டிருக்கேன்” - 30 வயது வரை கனவிலும் நினைத்திராத பிசினஸ் பயணத்தில், இன்று முத்திரை பதித்திருக்கிறார் ஸ்ரீவித்யா.
இவரது நிறுவனத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் வேலைசெய்யும் ஊழியர்களின் ஒரு குழந்தையின் படிப்புச் செலவு முழுவதையும் நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது. கஸ்டமர் நிறுவனங்களின் பாதுகாப்பு சார்ந்த எல்லா விஷயங்களையும் நிறுவனமே கவனித்துக் கொள்கிறது. தவிர, ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு நிறுவனங்களுக்கு ஊழியர்களையும் வேலைக்கு அனுப்புகிறார் ஸ்ரீவித்யா.
வி.ஐ.பி-க்கள் கலந்துகொள்ளும் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பாதுகாப்புப் பணிகளைக் கவனிப்பது உட்பட 20-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு சார்ந்த பணிகளை இவரின் நிறுவனம் மேற்கொள்கிறது. சென்னை தவிர, பெங்களூரு, ஹைதராபாத், கோயம்புத்தூர், ஓசூர், புதுச்சேரி நகரங்களிலும் இவரது நிறுவனத்தின் கிளைகள் செயல்படுகின்றன. இப்போது 2,500-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு முதலாளியான ஸ்ரீவித்யா, கடின உழைப்பால் நிறுவனத்தைப் பெரிய வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுவந்திருக்கிறார். பகுதி நேரமாகப் பல நூறு ஊழியர்களுக்கும் வேலை கொடுக்கிறார்.
`` `நான் இறந்துபோயிட்டா, கம்பெனிக்கு விடுமுறை விடக் கூடாது. கஸ்டமர் கொடுக்கிற பணத்துக்கு, அன்னிக்கும் நல்லபடியா வேலை செய்துகொடுக்கிறதுதான் எனக்கு நீங்க செய்ற உண்மையான மரியாதை’ன்னு மறைந்த டாக்டர் ரவீந்திரன் சொல்வார். டாக்டரின் எண்ணத்தை நிறைவேற்றியதுடன், அதையே எனக்கான கொள்கையாவும் மாத்திக்கிட்டேன். வேலை நேரத்துல என் தனிப்பட்ட சந்தோஷம் மற்றும் கவலைக்கு இடம் கிடையாது. நிறுவனத்தின் வளர்ச்சி மட்டுமே என் ஒரே நோக்கம். அதுக்கு தொடக்கக் காலத்தைவிடவும் இப்போ அதிகமா உழைக்கிறேன்.
என் அண்ணன் இறந்த தருணத்தில்கூட மதியம் போய் அவரோட இறுதிக் காரியத்தை முடிச்சுட்டு, சாயந்திரம் ஆபீஸ் வந்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்தேன். பிறகு என் அப்பா இறந்தபோதும், ஆண் பிள்ளை ஸ்தானத்துல எல்லா காரியங்களையும் முடிச்சுட்டு, சில மணிநேரத்துல ஆபீஸ் வந்துட்டேன். காலம் யாருக்காகவும் காத்திருக் காது. எந்தக் கவலைக்கும் இடம்கொடுக்காம நதியைப்போல ஓடிக்கிட்டே இருக்கணும். இதனாலதான் வாழ்க்கைப் போராட்டத்துல என்னால வெற்றி பெற முடிஞ்சது. குறிப்பா, ஒரு விஷயத்துல உண்மையாவும், அதிகமாகவும் உழைப்பைக் கொடுத்தா, அதுவே நம்மை சிறப்பா இயக்க ஆரம்பிச்சுடும். அடுத்த ஐந்தாண்டுகளில், எங்க துறையில் இந்தியாவின் முதல் பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக என்னுடைய நிறுவனத்தை மாற்றிக்காட்டுவதுதான் என் இலக்கு!” - அதை நிச்சயம் தொட்டுவிடும் தன்னம்பிக்கையுடன் புன்னகைக்கிறார் ஸ்ரீவித்யா.
- நாம் வெல்வோம்!
நான் கற்ற பாடம்!
நாம துவண்டுபோய் உட்கார்ந்தால், அதைப் பார்த்து பலரும் சந்தோஷப்பட காத்திருப்பாங்க. அந்த சந்தோஷத்தை ஒருநாளும் அவங்களுக்குக் கொடுக்கவே கூடாது. தவறான வழியில் போகலைங்கிற நம்பிக்கை நமக்கு இருந்தா போதும். இக்கட்டான சூழல்களிலும் நம்பிக்கை யோடு ஓடிட்டே இருக்கணும். வெற்றி கிடைச்ச பிறகும் ஓட்டத்தை நிறுத்தக் கூடாது. என் ஊழியர்களின் குடும்பங்களை நினைச்சு தொடர்ந்து உற்சாகமாக ஓடிக்கிட்டே இருக்கேன்.