மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தொழிலாளி to முதலாளி - 13: ஒரு வருஷம்... ஏழு ஊழியர்கள்... ₹ 10 கோடி டர்ன் ஓவர்! - மஞ்சுளா

தொழிலாளி to முதலாளி
பிரீமியம் ஸ்டோரி
News
தொழிலாளி to முதலாளி ( கு.ஆனந்தராஜ் )

தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில் சென்னையைச் சேர்ந்த `அரசன் என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் மஞ்சுளா.

மஞ்சுளாவின் பூர்வீகம், பாளையங்கோட்டை. அங்கு ஹோட்டல் தொழில் செய்துவந்த அப்பாவின் திடீர் மரணத்தால் குடும்பச் சூழல் சிக்கலாகிறது. மஞ்சுளாவின் அண்ணன், தன் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு அப்பாவின் ஹோட்டல் தொழிலைக் கவனித்துக்கொள்கிறார். ட்யூஷன் எடுத்து, தன் படிப்புத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்கிறார் மஞ்சுளா. டிப்ளோமா முடித்ததும் சில ஆண்டுகள் வேலைக்குச் செல்கிறார். அவரின் பிசினஸ் கனவுக்குக் குடும்பப் பொருளாதாரச் சூழல் தடையாக இருக்கிறது. திருமணத்துக்குப் பின் வேலைக்குச் சென்றுகொண்டே, நுகர்வோர் பொருள்கள் விநியோகஸ்தரான (Fast Moving Consumer Goods Distributor) கணவரின் பிசினஸுக்கும் உதவுகிறார்.

ஒருகட்டத்தில் கணவரின் தொழிலில் இணைந்த மஞ்சுளா, அக்கவுன்ட்ஸ் வேலைகளைக் கவனித்துக்கொள்கிறார். அந்த நான்கு ஆண்டுக்கால அனுபவத்தில் மஞ்சுளாவுக்கு ஒரு ஸ்பார்க் உண்டாகிறது. கணவர் வழியில் நுகர்வோர் பொருள்கள் விநியோகஸ்தராக, தனியாகத் தொழில் செய்ய நினைக்கிறார். `முறையான அனுபவம் இருந்தால்தான் பிசினஸில் வெற்றி பெற முடியும். நம்ம பிசினஸ்லயே நீ தனியா ஆர்டர் எடு. அதில் உனக்கு நம்பிக்கை வந்தால் அப்புறம் பிசினஸைத் தொடங்கு’ என்கிறார் கணவர். அதன்படி மேலும் மூன்று ஆண்டுக்கால அனுபவத்துடன், தொழில்முனைவோருக்கான அடிப்படைப் பயிற்சிகளும் பெறுகிறார். உறுதியான நம்பிக்கையுடன் பிசினஸ் களத்தில் இறங்குகிறார் மஞ்சுளா. இவரின் புராஜெக்ட் சிறப்பாக இருந்ததால், வங்கிக் கடனுதவியும் விரைவாகக் கிடைக்கிறது. வெற்றிக் கனவுடன் கடந்த ஆண்டு தொழிலில் இறங்கியவருக்கு, காத்திருந்தது ஏமாற்றம்.

``தெளிவான இலக்குடன்தான் தொழிலைத் தொடங்கினேன். உப்பு மற்றும் அரிசியை, பெரிய நிறுவனங்களிடம் மொத்தமாக வாங்கி, எனக்கு ஒதுக்கப்பட்ட ஏரியாவில் விநியோகம் செய்யணும். கிடைக்கிற அனுபவத்தைவெச்சு, பிறகு கூடுதலா வேறு உணவுப் பொருள்களையும் விற்பனை செய்யலாம்னு நினைச்சேன். நாலு மாதங்கள் தொழில் நல்லபடியா போச்சு. எனக்கு அரிசி சப்ளை பண்ணிட்டிருந்த நிறுவனம் நஷ்டமடைய, அந்த நிறுவனத்திடமிருந்து எனக்குக் கிடைக்கிற சப்ளையும் கணிசமாகக் குறைஞ்சது. மாசத்துக்கு 60 லட்சம் ரூபாய் டர்ன் ஓவர் என்கிற இலக்குடன் வேலையைத் தொடங்கினேன். ஆனா, 10 லட்சம் ரூபாய் டர்ன் ஓவர்தான் என்னால பார்க்க முடிஞ்சது.

தொழிலாளி to முதலாளி - 13: ஒரு வருஷம்... ஏழு ஊழியர்கள்... ₹ 10 கோடி டர்ன் ஓவர்! -  மஞ்சுளா

நாலு மாதமாகியும், அந்த அரிசி நிறுவனத்தின் நிலைமை சரியாகலை. அதனால அரிசி விற்பனையை கைவிட்டுட்டேன். அதுக்காக வருத்தப்பட்டு உட்காராமல், பேப்பர் விநியோகஸ்தர் வேலைக்கு நல்ல வரவேற்பு இருக்குன்னு அதில் களமிறங்கினேன். புது டெல்லியில் இருக்கும் `ஜே.கே பேப்பர் லிமிடெட்’ என்ற பெரிய நிறுவனத்துல அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தராக உரிமை வாங்க முடிவெடுத்தேன். தமிழகத்திலிருந்து என்னைப் போல பலரும் அந்நிறுவனத்திடம் விண்ணப்பிச்சிருந்தாங்க. அதில், நான் மட்டும்தான் பெண். அதோடு, இதில் எனக்கு முன் அனுபவம் இல்லை. இந்த இரு விஷயங்களும் எனக்குப் பின்னடைவாக அமைஞ்சது. இருந்தாலும் விடாமுயற்சியுடன் அணுகினேன். முதலில் தயங்கினாலும், என் நிறுவனத்துக்கு வந்து பார்த்த அந்த பேப்பர் நிறுவனத்தினருக்கு ஒருகட்டத்தில் என்மேல் நம்பிக்கை வந்தது. விநியோகஸ்தர் உரிமையும் எனக்குக் கிடைச்சது. இப்போவரை அந்நிறுவனத்துடனான தொழில் நட்பு சிறப்பாக இருக்கு” - முதல் முயற்சி சறுக்கினாலும், விடாமுயற்சியுடன் வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறார் மஞ்சுளா.

பேப்பர் விநியோகஸ்தராக ஆர்டர்கள் எடுப்பதற்கு பல நிறுவனங்களைச் சளைக்காமல் மஞ்சுளா அணுக, படிப்படியாக கஸ்டமர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. அந்த முயற்சியை இன்று வரை தொடர்ந்துவருபவர், இப்போது கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், ஜெராக்ஸ் கடைகள், வணிக நிறுவனங்கள், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல துறைகளுக்கும் தேவையான பல்வேறு அளவு பேப்பர்களை விற்பனை செய்து வருகிறார். சென்னையில் இவருக்கென வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் உள்ள நிறுவனங்களுக்கும், தமிழகத்திலுள்ள பல்வேறு நிறுவனங்களுக்கும் பேப்பர்களை விற்பனை செய்துவருகிறார். மஞ்சுளாவின் பிரதான சாய்ஸ், ரீடெய்ல் விற்பனைதான். சிறிய ஆர்டராக இருந்தாலும் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளும் இவரின் கொள்கையால், கஸ்டமர்களின் எல்லை விரிவடைந்திருக்கிறது.

மற்ற விநியோகஸ்தர்களைவிட சற்று விலை குறைவாகக் கொடுத்தாலும், `கேஷ் அண்டு கேரி’ முறையில்தான் தொழில் செய்கிறார் மஞ்சுளா. இப்படி கடன் கொடுக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பவர், வருமானத்தைத் தொடர்ந்து தொழிலேயே முதலீடு செய்கிறார். ஆர்டர்களை விரைவாக முடித்துவிட வேண்டும் என்பதால், எப்போதும் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேப்பர் பண்டல்களை இருப்புவைத்திருக்கிறார். இதற்கிடையே தூத்துக்குடியைச் சேர்ந்த உப்பு நிறுவனத்திடமிருந்து, கல் உப்பு மற்றும் தூள் உப்பை வாங்கி விற்பனை செய்துவருகிறார்.

``முதன்முறை தோல்வி கிடைச்சப்போ, `இதுக்கெல்லாம் கவலைப்படாதே. மீண்டு வா... உன்னால முடியும்’னு என் கணவர் ஊக்கம் கொடுத்தார். பிறகு, ஒவ்வொரு விஷயத்திலும் விழிப்புடன் செயல்பட ஆரம்பிச்சேன். தொழில் போட்டிகள் நிறைய உண்டு. அதையும் மீறி ஆர்டர் பிடிச்சால்தான் வெற்றி பெற முடியும். எந்த ஊரிலிருந்து ஆர்டர் வந்தாலும், `உடனே அனுப்பிடுறேன்’னு பொய் சொல்லி தாமதமா பொருளை அனுப்பிவைக்க மாட்டேன். எவ்வளவு நாள்கள் ஆகும் என்பதை வெளிப்படையாகச் சொல்லி, சொன்ன நேரத்துக்குள் டெலிவரியை முடிச்சுடுவேன். இதனால் என் கஸ்டமர்களின் நன்மதிப்பைத் தொடர்ந்து தக்கவெச்சுக்கிறேன்.

தொழிலாளி to முதலாளி - 13: ஒரு வருஷம்... ஏழு ஊழியர்கள்... ₹ 10 கோடி டர்ன் ஓவர்! -  மஞ்சுளா

அடுத்ததா, இரண்டு நண்பர்களுடன் இணைந்து `சிகாடா பேப்பர் பிரைவேட் லிமிடெட்’ என்ற புதிய நிறுவனத்தைக் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கினேன். சுயதொழில் செய்ய நினைக்கிற பெண்களுக்கு வழிகாட்டுவது முதல் விற்பனை வாய்ப்புகளுக்கு உதவுறது வரை, அவங்களைக் கைதூக்கிவிடுறதுதான் நிறுவனத்தின் நோக்கம். வருஷத்துக்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் டர்ன் ஓவர் செய்தால், ஜிஎஸ்டி கணக்கைத் தொடங்கணும். சரியான இடவசதி இல்லாதவங்ககூட, `விர்ச்சுவல் ஆபீஸ்’ முறையில் ஜிஎஸ்டி கணக்கைத் தொடங்கி பிசினஸைப் பெரிய அளவில் செய்யலாம். இதுபோன்ற பல்வேறு வழிகாட்டுதல்களையும் பெண்களுக்குக் கொடுக்கிறோம்” என்கிற மஞ்சுளா, குறுகிய காலத்திலேயே தன் பிசினஸ் பயணத்துக்கான அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்திக் கொண்டதால், வெற்றி எளிதில் சாத்தியமாகியிருக்கிறது.

இப்போது சென்னை மற்றும் தமிழகத் தின் பல்வேறு நகரங்களுக்கும், சில வெளி மாநிலங்களுக்கும் பேப்பர்களை விற்பனை செய்கிறார் மஞ்சுளா. டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ், மளிகைக் கடைகளுக்கு ஹோல்சேல் மற்றும் ரீடெயில், உணவுத் தொழில் எனப் பல தரப்புக்கும் உப்பு விற்பனையும் செய்துவருகிறார். மாதந்தோறும் 190 டன் பேப்பர் மற்றும் 32 டன் உப்பு விற்பனை நடைபெறுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்கிறார். தொழில் விரிவாக்கத்துக்கான பணிகளிலும் கவனம் செலுத்திவருகிறார். ஆச்சர்யமான விஷயம்... விற்பனைப் பிரிவு, அலுவலகப் பணி, சரக்குகளை ஏற்றுதல், வாகன ஓட்டுநர் பணி உள்ளிட்ட தேவைகளுக்கு ஏழு ஊழியர்களை மட்டுமே நியமித்துள்ளார் மஞ்சுளா.

``எங்க பையன் பிறந்து பத்து மாசம்தான் ஆகுது. எனக்கு சிசேரியன் பிரசவம் முடிஞ்ச ஒரு வாரத்துலயே, குழந்தையுடன் வேலைக்கு வந்துட்டேன். இப்போ வரை என் ஆபீஸ் வேலையைப் பார்த்துக்கிட்டேதான் குழந்தையைக் கவனிச்சுக்கிறேன். தொழிலில் சாதிக்கணும் என்கிற வைராக்கியம்தான் என்னை இப்படித் தொய்வின்றி இயக்கிக்கிட் டிருக்கு. குடும்பத்துக்கான நேரத்தைத் தவிர்த்து, மற்ற எல்லா நேரமும் பிசினஸுக்குத்தான் செலவழிப்பேன். முதல் முறை கிடைச்ச தோல்வி பாடத்துலேருந்து, இனி தோல்வி வரக் கூடாதுங்கிறதுல அதிக கவனம் செலுத்துறேன். உப்பு விற்பனையில மாதத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய்தான் வருமானம் கிடைக்குது. ஆனா, என்னிடம் உப்பு வாங்கும் ரெகுலர் கஸ்டமர்களை இழந்துடக் கூடாதுன்னு இதைத் தொடர்ந்து செய்துகிட்டிருக்கேன்.

நிறைய பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து, என்னுடைய புது நிறுவனத்தை வெற்றிகரமா கொண்டுபோகணும். பிசினஸில் தொடக்க நிலையில்தான் இருக்கேன். இன்னும் போக வேண்டிய தூரம், அடைய வேண்டிய வெற்றி நிறைய இருக்கு” என்று உத்வேகத்துடன் புன்னகைக்கிறார் மஞ்சுளா.

- நாம் வெல்வோம்!

நான் கற்ற பாடம்!

முதலாளியாகிட்டோம்னு தேவைக்கு மீறி, அதிக வேலையாள்களை நியமிக்கிறதுல எனக்கு விருப்பமில்லை. நானும் தொழிலாளர் களைப்போல வேலை செய்றேன். தேவையற்ற செலவுகளைக் குறைக்கிறதுடன், ஒவ்வொரு விஷயத்துலயும் திட்டமிட்டுச் செயல்படுறேன். இப்படிச் செய்தால்தான் தொழிலுக்கான அடித்தளத்தை வலுப்படுத்த முடியும்.