மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தொழிலாளி to முதலாளி - 14: 10 நிறுவனங்கள்... ₹112 கோடி டர்ன் ஓவர்!

தொழிலாளி to முதலாளி
பிரீமியம் ஸ்டோரி
News
தொழிலாளி to முதலாளி ( கு.ஆனந்தராஜ் )

‘Advanced Beauty & Cosmetic Clinic’ என்கிற நிறுவனத்தை 2015-ம் ஆண்டு தொடங்கினேன்

தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில் சென்னையைச் சேர்ந்த ‘STC - Global IT Partner In Testing Groups’ நிர்வாகி மது சரண்.

குடும்பத்தில் மூத்த பெண் மது. கணினித் தொழில்நுட்பம் பிரபலமாகிவந்த 1995-ம் ஆண்டில் ப்ளஸ் டூ முடித்ததும், இரண்டு ஆண்டுக்கால கணினிப்பயிற்சியில் சேர்கிறார்.

அடுத்த மூன்றே மாதங்களில் அவருக்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்க, அந்நிறுவனத்தின் எம்.டி உட்பட சிலருக்கு கணினிப் பயிற்சிகொடுக்கும் பணி. 750 ரூபாய் சம்பளம், அடுத்த மூன்று மாதங்களில் 5,000 ரூபாயாக உயர்கிறது. ‘கணினித் தொழில்நுட்பமே நமக்கு ஏணி’ என்கிற நம்பிக்கை மதுவுக்கு உண்டாகிறது. பிறகு பல ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றியவர், ஐந்து ஆண்டுகளில் `எம்.எஸ் ஆபீஸ்’ பயிற்சியாளராக உயர்கிறார். இதற்கிடையே, தொலைதூரக் கல்விமுறையில் கல்லூரிப் படிப்பையும் நிறைவுசெய்கிறார்.

2000-ம் ஆண்டுகளில் ஐ.டி தொழில்நுட்பம் மிகவும் பிரபலமாக இருந்த காலகட்டத்தில், சாஃப்ட்வேர் டெஸ்ட்டிங் தெரிந்தவர்களுக்கு கைநிறைய சம்பளம் கிடைத்தது. டெஸ்ட்டிங் தொழில்நுட்பம், மதுவுக்கு அத்துபடி. அந்தச் சூழலை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட மது, கணினித் தொழில்நுட்பத்தில் அனுபவமுள்ள தன் கணவர் மற்றும் நண்பருடன் இணைந்து, இந்தியாவிலேயே முதல் டெஸ்ட்டிங் பயிற்சி நிறுவனத்தைத் தொடங்குகிறார்.

மது சரண்
மது சரண்

``ஐ.டி தொழில் வளர்ந்த அந்தக் காலத்துல, இணையதளம் சார்ந்த அதன் பயன்பாடுகள்ல நிறைய தொழில்நுட்பத் தவறுகள் வர ஆரம்பிச்சது. அதனால, வாடிக்கையாளர்கிட்ட போறதுக்கு முன்னாடி பரிசோதனை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுச்சு. தொழில் பார்ட்னர்ஸான எங்க மூவருக்கும் கணினி தொழில்நுட்பத்துல நல்ல அனுபவம் இருந்துச்சு. ஆனா, எங்ககிட்ட பொருளாதார பலம் இல்ல. ஐந்து கணினிகளை வாடகைக்கு வாங்கி, சின்ன வாடகைக் கட்டடத்துலதான் நிறுவனத்தைத் தொடங்கினோம். எடுத்ததுமே நல்ல வரவேற்பு. அப்போ ஐ.டி மோகத்துல இருந்தவங்க, வேலையில் அடுத்தகட்டத்துக்கு போக நினைச்ச இளைஞர்கள்னு பலரும் டெஸ்ட்டிங் கத்துக்க ஆவலா இருந்தாங்க. அவங்கள்ல பலரும் எங்களை நாடி வந்தாங்க.

ஒரு வருஷத்துலேயே சென்னை அண்ணா நகர்ல பெரிய அளவில் நிறுவனத்தின் கிளையைத் தொடங்கினோம். சாஃப்ட்வேர் டெஸ்ட்டிங் பயிற்சிக்குப் பெரிய வரவேற்பு இருந்தது; போட்டியும் இல்லை. வெளிமாநிலங்கள், வெளிநாடுகள்ல இருந்தெல்லாம் எங்ககிட்ட பயிற்சியெடுக்க பலர் வந்தாங்க. லாபத்தைத் தொடர்ந்து தொழிலேயே முதலீடாகப் போட்டோம்” என்கிற மதுவின் பிசினஸ் பயணம், அடுத்த இரண்டே ஆண்டுகளில், டெல்லி, மகாராஷ்டிரம் உட்பட பல மாநிலங்களில் 45 கிளைகளை நடத்தும் அளவுக்கு ஜெட் வேகத்தில் முன்னேறியிருக்கிறது.

2005-ம் ஆண்டு, புதிய டெஸ்ட்டிங் கம்பெனியை மது தொடங்கி புதுப்புது புராஜெக்ட்டுகளை எடுத்தபோது, மதுவின் நிறுவனத்தில் பயிற்சி எடுத்தவர்களே போட்டி யாளர்களாக உருவானார்கள். தொழிலில் பெரிய வேகத்தடை விழுந்தது. அடுத்த சில ஆண்டுகளில், ஐ.டி தொழில்நுட்பம் உலக அளவில் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. இதன் தாக்கத்தால் ஒவ்வொரு மாதமும் பல கோடி நஷ்டம், ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலை என்று இடியாப்பச் சிக்கல்களில் மாட்டினார் மது. வெற்றி மட்டுமே பிசினஸில் நீண்டகால பயணத்துக்கு உதவாது என்பதை அந்த அனுபவத்தால் உணர்கிறார்.

ஒருகட்டத்தில், அண்ணா நகர் கிளையைத் தவிர மற்ற 44 கிளைகளையும் ஒட்டு மொத்தமாக விற்றார். தவிர, அதுவரை சேர்த்த சொத்துகளையெல்லாம் விற்று கடனை அடைக்கும் நிலை. பிசினஸில் வளர்ச்சியை மட்டுமே பார்த்துவந்த மதுவுக்கு, அந்த நஷ்டம் பெரிய அதிர்ச்சிதான். ஆனால், `நஷ்டம் வந்தா என்ன... என்கிட்ட திறமை இருக்கு’ என பாசிட்டிவ் உத்வேகத்துடன் அடுத்தகட்ட நகர்வை எடுத்துவைத்தார் மது. இன்றும் அண்ணா நகர் டெஸ்ட்டிங் நிறுவனம் நல்ல முறையில் இயங்கிவருகிறது.

தொழிலாளி to முதலாளி - 14: 10 நிறுவனங்கள்... ₹112 கோடி டர்ன் ஓவர்!

``அப்போ, ஒவ்வொரு மாசமும் பியூட்டி பார்லருக்குப் போவேன். அந்தத் தொழிலின் வரவு, செலவு, வரவேற்பு குறித்து அவங்ககிட்ட சும்மா பேசிட்டிருப்பேன். ஒருகட்டத்துல, நல்ல வரவேற்புள்ள அத்துறையில ஈடுபடணும்னு ஆர்வம் வந்துச்சு. கடன் பெற்று சென்னையில் ‘A La Change’, ‘Allure’ என இரண்டு பியூட்டி சலூன்களைத் தொடங்கினேன். புகழ்பெற்ற ஒயின் ஃபேஷியலை இந்தியாவிலேயே முதலில் அறிமுகப்படுத்தியது நான்தான். பியூட்டி சலூன் தொழில் நல்லபடியா போச்சு. ஸ்கின் கேர், ஹேர் கேர், ஸ்லிம் கேர்னு மூன்று சிகிச்சைகளுக்கும், ‘Advanced Beauty & Cosmetic Clinic’ என்கிற நிறுவனத்தை 2015-ம் ஆண்டு தொடங்கினேன். அனுபவமுள்ள மருத்துவர்களை வேலைக்குச் சேர்த்தேன். இப்போது 32 கிளைகளுடன், இந்நிறுவனம் பல மாநிலங்கள்ல செயல்படுது’’ என்று சொல்லும் மது, இன்னும் பல தொழில்களிலும் ஈடுபட்டிருக்கிறார்.

‘`பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க, ‘MAMI’S House of Coffee’ என்ற காபி மற்றும் சிற்றுண்டியுடன்கூடிய 25 நடமாடும் உணவகங்களை நடத்திட்டிருக்கேன். `ஆந்திரா சில்லீஸ் ரெஸ்டாரன்ட்’ என்ற உணவகத்தை நடத்திட்டு வர்றேன். பெங்களூரு போன்ற நகரங்களில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போவதால, அங்க `டே கேர்’ சென்டருக்கு பெரிய டிமாண்டு இருக்கு. அதனால, ‘Oxford International School’ என்ற பெயர்ல இந்தியாவிலேயே 24 மணி நேரமும் செயல்படும் முதல் `டே கேர்’ ஸ்கூலைத் தொடங்கினேன். இளைஞர்களுக்கு வழிகாட்ட, ‘Voice of Young India’ ஃபோரம் நடத்திட்டு வர்றேன். ‘River NGO – The Power of Women’ அமைப்பைத் தொடங்கி, சுயதொழிலில் ஆர்வமுள்ள பெண்களுக்கு உதவிகள் செய்கிறேன்” - ஆச்சர்யங்களை அடுக்கிக்கொண்டே செல்கிறார் மது. இதுவரை 5,000-க்கும் மேற்பட்ட தொழில்முனை வோர்களை உருவாக்கியிருப்பவர், ஐ.நா அமைப்பின் ‘பெண் தொழில்முனைவோர் களுக்கான இந்தியத் தூதுவர்’ என்கிற கெளரவ விருதைப் பெற்றிருக்கிறார். அதோடு, தமிழக அரசின் விருதையும் பெற்றிருக்கிறார் மது நிர்வகித்து வரும் 10 நிறுவனங்களில், ஐ.டி, காஸ்மெட்டிக்ஸ், ஹெல்த் புராடக்ட்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் இயக்குநராக இருக்கிறார். இவற்றின்மூலம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக டர்ன் ஓவர் நடக்கிறது. மேலும், மற்ற ஏழு நிறுவனங்களில் 100 ஊழியர்கள், 12 கோடி ரூபாய் டர்ன் ஓவர் என அந்தத் தொழில்களும் வளர்ந்துவருகின்றன. கிராமப்புற பெண்கள் மற்றும் சுயஉதவிக் குழு பெண்களின் தொழில் மேம்பாடு, ‘Govt of Kerala, Start – up’, ‘POSH (Prevention of Sexual Harassment In Corporate)’ உட்பட மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் செயல்படும் ஐந்து அமைப்புகளில் உறுப்பினராகவும் இருக்கிறார்.

‘`எதுக்கு இத்தனை துறைகளில் கவனம் செலுத்துறேன்னு நினைக்கலாம். மக்களுக்குத் தேவையுள்ள, அதேநேரம் எனக்கு ஆர்வமுள்ள தொழில்களில் கவனம் செலுத்தணும் என்பதுதான் என் எண்ணம். ரிவர் என்.ஜி.ஓ, வாய்ஸ் ஆஃப் யங் இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்களும் சேவை நோக்கத்தில் மட்டுமே இயங்குது. மற்ற எல்லா நிறுவனங்களும் நஷ்டமில்லாம போகுது. ஒரு தொழில் கைவிட்டாலும், இன்னொரு தொழில் நிச்சயம் காப்பாத்திடும். திறமையான மற்றும் நேர்மையான ஊழியர்கள் துணையுடன் என் எல்லா தொழில்களையும் நல்லபடியா கொண்டுபோறேன்” - மதுவின் நம்பிக்கையைப்போல, அவரின் பிசினஸ் பயணங்களும் விரிவடைந்துகொண்டே செல்கின்றன.

- நாம் வெல்வோம்!

நான் கற்ற பாடம்!

முதன்முறை எனக்குக் கிடைச்ச தோல்வி பாடத்துக்குப் பிறகு, ரொம்ப கவனமா இருக்கேன். சோர்ந்துபோய் உட்காராத குணம்தான் பிசினஸ் பயணத்துக்கு முக்கியம். நம்ம முயற்சிக்கு வெற்றி தாமதமாகலாம். நிறைய தடைகள் வரலாம். ஆனா, முயற்சி செய்றதை நிறுத்திட்டா வெற்றி கிடைக்காது. இன்னும் புதிய தொழில்களைத் தொடங்கும் முனைப்புடன் இருக்கேன். இதனால, எப்போதும் என்னால் ஆக்டிவ்வா இயங்க முடியுது.