மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தொழிலாளி to முதலாளி - 15: புதிய களம்... 1,000 ஊழியர்கள்... ₹ 320 கோடி டர்ன் ஓவர்!

 சாந்தி ஸ்ரீநிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
சாந்தி ஸ்ரீநிவாசன்

சாந்தி ஸ்ரீநிவாசன்

தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில் கோயம்புத்தூர், `பிரீமியர் ஃபைன் லினின்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாந்தி ஸ்ரீநிவாசன்.

பிசினஸ் குடும்பத்தைச் சேர்ந்த சாந்திக்கு, தொழில் முனைவராவதே இலக்கு. சொந்த ஊரான கோயம்புத்தூரில், பி.பி.எம் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போதே திருமணமாகிறது. கணவருடன் லண்டனில் குடியேறியவர், டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட் டிப்ளோமா கோர்ஸ் படிக்

கிறார். பிறகு, கணவருடன் கோயம்புத்தூருக்கே திரும்பியவர், தடைப்பட்ட தன் டிகிரி படிப்பை முடிக்கிறார். குடும்பத்தின் டிராவல் ஏஜென்சி தொழிலையும் சில காலம் கவனிக்கிறார்.

தாங்கள் கட்டிய புதிய வீட்டுக்காகத் தன் தேடல் மற்றும் ஆர்வத்தில் வேலைப்பாடுகள்மிக்க ஃபர்னிச்சர்களை வாங்கிய அனுபவம், ‘இந்தத் தொழிலில் நாம் இறங்கினால் என்ன...’ என்று யோசிக்கவைக்க, ஏழு ஆண்டுகள் ஃபர்னிச்சர் விற்பனைத் தொழிலில் ஈடுபடுகிறார் சாந்தி. இந்த நிலையில், குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான கல்வியைத் தர வேண்டும் என்ற நீண்டகாலக் கனவு அவரைத் தட்டியெழுப்ப, ஃபர்னிச்சர் தொழிலை விட்டுவிட்டு, ப்ளே ஸ்கூல் ஒன்றைத் தொடங்குகிறார். ஆனால், வாழ்க்கை வேறு ஒரு பொறுப்பை அவர் கைகளில் கொடுக்கிறது.

``தரமான அடிப்படைக் கல்வி, குறைந்த லாபம், அளவில்லா மகிழ்ச்சின்னு என் விருப்பம்போல ப்ளே ஸ்கூல் மூணு வருஷங்கள் நல்லபடியா போச்சு. இதற்கிடையே ஜவுளித் தொழிலில் அப்பாவும் சித்தப்பாவும் கவனிச்சுக்கிட்டிருந்த ஒரு யூனிட்டை என்கிட்ட ஒப்படைச்சாங்க. ‘ப்ளே ஸ்கூலை எப்போ வேணாலும் நடத்தலாம். ஆனா, ஆரம்பக்கட்டத்துல இருக்கிற இந்த பிசினஸைப் பொறுப்பா பார்த்துகிறதுதான் முக்கியம். அது உன்னால முடியும். ஏன்னா, உனக்கு டெக்ஸ்டைல் டிசைனிங்ல அனுபவம் இருக்கு’ன்னு அவங்க சொல்ல, 2007-ம் ஆண்டு, ப்ளே ஸ்கூலை நிறுத்திட்டு, இந்த பிசினஸின் நிர்வாகப் பொறுப்பை ஏத்துக்கிட்டேன். ஆனாலும், தனி ஆளா தொழிலை எப்படி நடத்தப்போறோம்னு பயம் இருந்துச்சு. அதை வெளிக்காட்டிக்காம தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கிட்டேன். 100 ஊழியர்கள் இருந்த நிறுவனத்துக்கு, அப்போ ரெண்டு கஸ்டமர் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. லோக்கல் மார்க்கெட்டில்தான் எங்க பொருள்கள் விற்பனையாகிட்டு இருந்துச்சு. இந்த நிலை நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் போதாதுன்னு முடிவெடுத்தேன்.

தொழிலாளி to முதலாளி - 15: புதிய களம்... 1,000 ஊழியர்கள்... ₹ 320 கோடி டர்ன் ஓவர்!

அதுவரை ரா மெட்டீரியல் (நூல் கோன்) மற்றும் ரா ஃபேப்ரிக் மட்டுமே விற்பனை செய்துவந்த நிலையில், ஃபினிஷ்டு புராடக்ட்டா (உடை) உற்பத்தி செஞ்சு விற்பனை செய்ய முடிவெடுத்தேன். குறிப்பா, பெட் கிளாத் துணி வகைகளைத் தேர்வு செய்தேன். இவற்றுக்கு அதிக வரவேற்புள்ள அமெரிக்காவுக்குப் போய், அங்கிருக்கும் சில நிறுவனங்களிடம் பேசினேன். அனுபவம் இல்லாததால, அவங்க கேட்ட கேள்விகளுக்கு என்னால உரிய விளக்கம் கொடுக்க முடியலை. முழு ஆர்வத்துடன் என் தொழிலைப் பத்தி முழுமையா தெரிஞ்சுக்கிட்டேன். கூச்சம் பார்க்காம, எனக்குத் தெரியாத வேலைகளை ஊழியர்களிடம் கத்துக்கிட்டேன். நிறுவனப் பெயரையும் மாற்றினேன்” - மகிழ்ச்சியுடன் பேசும் சாந்தி, தொழில் பயணத்துக்கான அரிச் சுவடியை வலுவாகக் கற்றதால், வெற்றியையும் எளிதில் பெற்றிருக்கிறார்.

அனுபவத்துடன் மீண்டும் அமெரிக்கா சென்றவர் சிறப்பாகப் பேசி, புதிய ஆர்டர்களைப் பிடித்திருக்கிறார். தனி ஆளாக மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத்தியிருக்கிறார். பொள்ளாச்சியில் இயங்கிவரும் தொழிற்சாலையில், ஊழியர்கள் பற்றாக்குறை பெரும் சவாலாக இருந்திருக்கிறது. அப்போது ஒருநாளைக்கு 300 பெட் ஷீட்டுகள்தான் தயாராகியிருக்கின்றன. அடுத்தடுத்து பல்வேறு சறுக்கல்கள் ஏற்பட, அவற்றுக்கான காரணங்களைக் கண்டறிந்து, பிரச்னைகளைச் சரிசெய்திருக்கிறார். ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தைப் புகுத்தியதுடன், தொழிலையும் விரிவு படுத்தியிருக்கிறார். டெய்லரிங் உட்பட எல்லா வேலைகளையும் ஊழியர்களுடன் இணைந்து செய்திருக்கிறார். படிப்படியாக வெற்றி கிடைத்ததுடன், ஊழியர்கள் மற்றும் முதலாளிக்கு இடையேயான பிணைப்பும் அதிகமாகியிருக்கிறது.

தொழில் சார்ந்த கருத்தரங்குகளில் கலந்துகொள்வது, நேரடி விசிட் செய்து பிற நிறுவனங்களின் அனுபவங்களைப் பெறுவது, தொழில் நண்பர்களுடனான உரையாடல், வாசிப்பு உள்ளிட்டவற்றால் சாந்தியின் தொழில்திறன் விரைவாக வளர்ந்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளில், பிசினஸ் லாபப் பாதையில் சென்றிருக்கிறது. புதிய முயற்சிகளைத் துணிச்சலுடன் மேற்கொள்வதையே தன் பலமாக உணர ஆரம்பித்திருக்கிறார் சாந்தி. வியாபார வாய்ப்புகளை விரிவுபடுத்திக்கொண்டே இருப்பதுதான், நீண்டகால வளர்ச்சிக்கு உதவும் என்பதில் உறுதியாக இருந்தவர், வீட்டுப் பயன்பாட்டு பெட் கிளாத் துணிவகைகளுடன், ஹோட்டல் பயன்பாடுகளுக்கான துணி வகைகளிலும் தடம் பதித்திருக்கிறார்.

தொழிலாளி to முதலாளி - 15: புதிய களம்... 1,000 ஊழியர்கள்... ₹ 320 கோடி டர்ன் ஓவர்!

``அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு, கஸ்டமர் நிறுவனங்களின் எண்ணிக்கையை உயர்த்தினேன். பெட் துணி வகைகளில் அதிக வெரைட்டி இருக்காது. எனவே, அவற்றில் வித்தியாசம் காட்டுவது பெரிய சவால். இயற்கை விவசாய பருத்தியைக் கொண்டு ஆர்கானிக் புராடக்டுகளையும் தயாரிக்கிறோம். ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளிலும், `ஜூரோ டிஃபெக்ட்’ல அதிக கண்டிப்புடன் இருப்பாங்க. அதனால, குவாலிட்டி டிபார்ட்மென்ட்டைத் தொடங்கி மிகக் கவனமுடன் செயல்படுறோம். வெளிநாட்டு கஸ்டமர்களின் தேவையைக் கண்காணிக்க, தனி ஆராய்ச்சித்துறையையும் ஏற்படுத்தினேன். சராசரியா 2 - 3 வருஷத்துக் கான இலக்குகளை ஃபிக்ஸ் பண்ணி, அதை அடைவதற்கு ஊழியர்களின் ஒத்துழைப்புடன் ஓடிட்டே இருப்பேன். சூழ்நிலை மற்றும் மக்களின் ரசனைக்கு ஏற்ப தொழிலில் உடனடி மாற்றங்கள் செய்ய கொஞ்சம்கூட யோசிக்க மாட்டேன்’’ என்று தன் வெற்றியின் ஃபார்முலா சொல்கிறார் சாந்தி.

வீடு மற்றும் ஹோட்டலுக்கான பெட் ஷீட், தலையணை உறைகள், க்வில்ட் (Quilt), டுவெட் கவர்ஸ் (Duvet covers), குஷன் கவர்ஸ் உட்பட படுக்கைப் பயன்பாடுகளுக்கான 300 துணி வகைகளைத் தயாரிக்கிறார். இவரின் தொழிற்சாலையில் தினமும் 15,000 பெட் ஷீட்டுகள் தயாராகின்றன. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 18 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். பெட் கிளாத் தயாரிப்பில், இவரது நிறுவனம் இந்திய அளவில் முன்னணியில் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர் களுக்கு முதலாளியான சாந்தி, ஆண்டுக்கு 320 கோடி ரூபாய்க்கு மேல் டர்ன் ஓவர் செய்கிறார்.

‘`ஒருமுறை, தவறான கணிப்பால் அதிக துணிகளைத் தயாரிச்சு நஷ்டம் ஏற்பட்டுச்சு. அந்தப் பெரிய பாடத்தால், அதிலிருந்து இப்போவரை நஷ்டமில்லாம தொழிலை நடத்திட்டிருக்கேன். முன்பு வெளிநாட்டு ஏற்றுமதி ஆர்டர்கள்ல மட்டுமே கவனம் செலுத்தினேன். இந்தியாவில் இப்போதான் மெத்தை பயன்படுத்துறவங்க எண்ணிக்கை அதிகரிச்சுட்டு வருது. பெட் ரூமின் நிறம், கட்டிலின் நிறம், தம்பதியர் மற்றும் குழந்தைகளுக்கான பயன்பாடுன்னு தீம் கான்செப்ட் உட்பட பல வகையிலும் துணி வகைகளை எதிர்பார்க்கிறாங்க. இப்படி மக்களின் ஆர்வத்துக்கேற்ப வேலை செய்றது சுவாரஸ்யமான அனுபவம்” என்கிறவர், கடந்த சில ஆண்டுகளாக இந்திய மார்க்கெட்டிலும் அதிக கவனம் செலுத்துகிறார்.

`Blue Dahlia’ என்ற பிராண்டு பெயரில் தன் நிறுவனத் தயாரிப்புகளை, கோயம் புத்தூரிலுள்ள புதிய ரீடெய்ல் ஷோரூமில் விற்பனை செய்கிறார் சாந்தி. ஆன்லைன் விற்பனையிலும் ஈடுபடுகிறார். குறைந்த விலையில் ஊழியர்களுக்குத் தங்குமிடம் மற்றும் மூன்று வேளை உணவு உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கிறார். ஊழியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை தொலைநிலைக் கல்வி முறையில் படிக்க உதவிவருகிறார்.

``நான் தொழிலுக்கு வந்தப்ப இந்தத் தொழிலில் பெரிசா போட்டியில்லை. இன்னிக்குப் போட்டி அதிகமாகிட்டதால தினந்தோறும் சவால்தான். தரம், நேர்மை தவறாமை, உரிய நேரத்தில் டெலிவரி செய்வது உள்ளிட்ட எங்க கொள்கைகளை விட்டுக்கொடுக்காம தொடர்ந்து உழைக்கிறோம். அதனால, வெற்றியைத் தொடர்ந்து தக்கவெச்சுக்க முடியுது. என் கணவரும் தனியா டெக்ஸ்டைல் பிசினஸ் பண்றார். ஒருத்தர் தொழிலில் இன்னொருத்தர் தலையிட மாட்டோம். ஆனா, பிசினஸ் பத்தி நிறைய விவாதிப்போம். தொழில்ரீதியா ஒருத்தர் வெளியூர் போக நேரும்போது, இன்னொருத்தர் குழந்தைகளைப் பார்த்துக்கிட்டோம். அதனால குடும்பத்துக் கான முக்கியத்துவத்தையும் கொடுக்க முடிஞ்சது. ஊழியர்களின் ஒத்துழைப்புடன், தைரியமா புதிய முயற்சிகளை மேற்கொள்வதால்தான் வெற்றி பெற முடிஞ்சிருக்கு” - தன் தன்னம்பிக்கை மற்றும் உழைப்பால் பிசினஸ் களத்தில் ஜொலிக்கிறார் சாந்தி.

- நாம் வெல்வோம்!

நான் கற்ற பாடம்!

பிசினஸ்ல பிரச்னை வராம இருப்பதுதான், பெரிய பிரச்னை. சவால்களை எதிர்கொண்டு, அதுக்குத் தீர்வுகளைத் தேடிட்டே இருந்தால், புதிய வளர்ச்சிப் பாதைகள் வசமாகும். குறிப்பா, எனக்குத் தெரியாத விஷயங்களை, என் ஊழியர்கள்கிட்டதான் கத்துக்கிறேன். அவங்ககிட்ட ஈகோ, கூச்சம் பார்ப்பது தவறு. `எனக்கு எல்லாமே தெரியும்’னு மட்டும் எப்போதுமே நினைக்கக் கூடாது. புதுசா கத்துக்கிற எண்ணத்துல ஓடிட்டே இருந்தால், நாம அடையும் இலக்கில் வெற்றி காத்திருக்கும்.