மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தொழிலாளி to முதலாளி 16: மாமியார் கொடுத்த ஊக்கம்... ரூ.30 கோடி டர்ன் ஓவர் ஈட்டும் மருமகள்!

தொழிலாளி to முதலாளி
பிரீமியம் ஸ்டோரி
News
தொழிலாளி to முதலாளி ( கு.ஆனந்தராஜ் )

ராக்கி தீபக்

தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில், சென்னையைச் சேர்ந்த SagTaur Systems நிறுவனத்தின் உரிமையாளர் ராக்கி தீபக்.

கேரள மாநிலம், கொச்சி அருகேயுள்ள சிறு கிராமம்தான் ராக்கியின் பூர்வீகம். இவர் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, அப்பா துறவறம் மேற்கொண்டுவிட்டார். கிராமத்துச் சூழலில், ஆண் துணையற்ற நிலையில் குடும்பம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. அரசுப் பள்ளி ஆசிரியராக அம்மா பணியாற்றிவந்த பள்ளியிலேயே ராக்கியும் அவர் தம்பியும் படித்துகொண்டிருந்தார்கள். அம்மாவின் வருமானத்தில் குடும்பம் இயங்கிவந்தது. வெளியுலகத்தில் சுதந்திரமாகச் செயல்படமுடியாத அந்தச் நிலையில் வீடு மற்றும் பள்ளிதான் ராக்கியின் மொத்த உலகம்.

எம்.எஸ்ஸி முடித்ததும் தான் விரும்பியவாறு பேராசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்தார். வேலையில் சேர்ந்த எட்டாவது மாதம் திருமணம். அதுவரை பிசினஸ் பற்றிய தெளிவோ, ஆர்வமோ ராக்கிக்கு இல்லை. கணவர் மூலமாகத் தொழில்துறை குறித்துத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்த கணவருக்கு, ஆந்திர மாநிலத்தின் சிமென்ட் விற்பனைப் பிரிவு நிர்வாகியாகப் பணி மாறுதல் வர, குடும்பத்துடன் ஹைதராபாத்துக்குக் குடியேறுகிறார்கள். பிறகுதான் வெளியுலகைப் பார்க்க ஆரம்பித்து, பிசினஸில் அடியெடுத்து வைக்கிறார், ராக்கி.

`` `பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. உனக்குப் பிடிச்சிருந்தா வேலைக்குப் போ. சுதந்திரமா செயல்படு. என் பேத்தியை நான் பார்த்துக்கிறேன்’னு மாமியார் ஊக்கப்படுத்தினாங்க. இப்படி ஒரு மாமியார் கிடைச்சும் வீட்டுக்குள் முடங்கியிருக்கிறது நியாயமா? பிசினஸ் சென்டர் ஒன்றின் விற்பனைப் பிரிவில் சேர்ந்தேன். `சேஃப் ஸோன்’லயே வாழ்ந்துவந்த எனக்கு, அந்த வேலை புதிய விடியலை ஏற்படுத்துச்சு. வெளியூர்களுக்குத் தனியா டிராவல் செய்து சேல்ஸ் ஆர்டர் பிடிப்பேன். இந்த நிலையில கணவருக்குச் சென்னையில் பணிமாறுதல் கிடைக்க, நானும் சென்னைக்கே பணிமாறுதல் வாங்கிட்டு வந்துட்டேன். அப்புறம், `ஸ்விஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' நிறுவனத்துல மூணு வருஷம் வேலை செய்தேன்.

அப்போ `டைகோ’ (Tyco) என்ற பன்னாட்டு நிறுவனம் இந்தியாவுக்கு வந்தாங்க. அந்நிறுவனத்தின் சென்னை விநியோகஸ்தர் உரிமையை வாங்கச் சொல்லி கணவர் ஆலோசனை கொடுத்தார். எனக்கும் நம்பிக்கை ஏற்பட, வேலையை விட்டுவிட்டு 2001-ம் ஆண்டு, வீட்டில் இருந்தபடியே பிசினஸை தொடங்கினேன். பிறகு, வாடகை வீட்டில் அலுவலகத்தை ஏற்படுத்தி, ஆறு ஊழியர்களுடன் தொழிலை விரிவுபடுத்தினேன். புதிய கஸ்டமர்களைப் பிடிச்சு, அவங்களுக்குத் தேவைப்படும் சி.சி.டி.வி கேமரா, தீத்தடுப்பு அலாரம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை, `டைகோ’ நிறுவனத்திடமிருந்து வாங்கி, பொருத்திக் கொடுப்பது என் நிறுவனத்தின் வேலை. அதில், ஏதாவது சர்வீஸ் வேலைகள் இருந்தால், டைகோ நிறுவனமே பார்த்துக்கும். என் ஊழியர்களுடன் நானும் நிறைய இடங்களுக்குப் போய் புது கஸ்டமர்களைப் பிடிப்பேன். சிறு நிறுவனங்கள், பல்துறை பிரபலங்கள் உட்பட நூற்றுக்கணக்கான கஸ்டமர்களை அப்போ தக்கவெச்சிருந்தேன்’’ என்கிற ராக்கியின் தொழில் பயணத்தில், பெரிய சறுக்கல் ஏற்பட்டது. ஆனால், `மாத்தி யோசி’த்தவர், புதிய பாதையில் தொழில் முனைவோராகத் தடம்பதிக்க ஆயத்தமானார்.

`டைகோ’ நிறுவனம், இந்தியா உள்ளிட்ட `சார்க்’ நாடுகளில் தனது தொழிலை திடீரென நிறுத்திக்கொண்டது. இதனால், ராக்கியின் விநியோகஸ்தர் தொழில், பத்தே மாதங்களில் முடிவுக்கு வந்துவிட்டது. `மாதச் சம்பள வேலையைக் கைவிட்டது தவறான முடிவோ?’ என்பது உள்ளிட்ட பல சிந்தனை ஓட்டங்கள் ராக்கியின் தூக்கத்தைக் கலைத்தன.

ஆனால், `நம்ம தரப்புல எந்தக் குறைபாடும் இல்லையே... பிசினஸ் செய்றதுன்னு இறங்கிட்டு பின்வாங்கறது தவறான முடிவு’ என்று தீர்க்கமாக முடிவெடுத்தார். ‘நேரடியா இன்னொரு நிறுவனத்தைச் சார்ந்திருந்ததால் ஏற்பட்ட சிக்கல் இனி ஏற்படக் கூடாது’ என நினைத்தவர், தன் நிறுவனத்தின் மூலமாகவே சர்வீஸ் பணிகளையும் செய்ய முடிவெடுத்தார். சில லட்சங்களை முதலீடு செய்து, புதிய கட்டமைப்பில் இரண்டு ஊழியர்களுடன் மீண்டும் தொழிலைத் தொடங்கினார்.

இப்போதெல்லாம் ஒரு நிறுவனம் அல்லது வீடு கட்டி முடிக்கும் முன்பே, சி.சி.டி.வி கேமரா வைப்பதற்கு முன்கூட்டியே திட்டமிடுகிறார்கள். 18 வருடங்களுக்கு முன்போ, இதுபோன்ற பாதுகாப்பு உபகரணங்கள் பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவாகவே இருந்தது. அதனால், முதல் சில ஆண்டுகள் ராக்கிக்குக் குறைந்த அளவிலான வருமானமே கிடைத்தது. ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே பல மாதங்கள் சிரமப்பட்டார். ஆனாலும், நம்பிக்கையைக் கைவிடாமல் நிறுவனத்தை வெற்றிப் பாதைக்குக் கொண்டுசெல்ல, மிகக் கடுமையாக உழைக்க ஆரம்பித்தார் ராக்கி. அதன்பலனாக, சிறு நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கான தேவைகள் என வாடிக்கையாளர்கள் அதிகம் வர ஆரம்பித்தார்கள். அவர்களில் பலருக்கும் ஒரே நேரத்தில் சர்வீஸ் வேலைகள் செய்யவேண்டியிருந்ததால் பல சிக்கல்கள் ஏற்பட்டன. என்ன செய்தார் ராக்கி?

``கார்ப்பரேட் நிறுவனங்கள், ஸ்டார் ஹோட்டல்கள், ஐ.டி பார்க் உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் புராஜெட்டுகளை மட்டுமே தேர்ந்தெடுக்க ஆரம்பிச்சேன். ஒவ்வொரு கஸ்டமர் நிறுவனத்தின் சர்வீஸ் பணிகளுக்கும் சில ஊழியர்களை நியமிச்சுடுவேன். எனவே, எல்லா நிறுவனங்களுக்கும் முறையாக கவனம் செலுத்த முடிந்தது.

என் நிறுவனத்துக்கு லோன் கொடுக்க வங்கிகள் முன்வந்தன. லோன் வாங்கினால் நிறுவனத்தை இன்னும் பெரிய அளவில் உயர்த்தலாம்தான். ஆனால், என்னுடையது உற்பத்தி சார்ந்த தொழில் இல்லை. லோன் வாங்கி தொழிலை விரிவுபடுத்துறது சில நேரங்களில் பெரிய சிக்கலை உண்டாக்கிடும். நஷ்டம் ஏற்படக் கூடாதுன்னு ரொம்ப நிதானமாகவும் கவனமாகவும் இருந்தேன். இப்போவரை, வரும் லாபத்தைப் பயன்படுத்தியே தொழிலை விரிவுபடுத்திட்டிருக்கேன்.

தொழிலாளி to முதலாளி 16: மாமியார் கொடுத்த ஊக்கம்... ரூ.30 கோடி டர்ன் ஓவர் ஈட்டும் மருமகள்!

திருட்டு, மோசடின்னு பாதுகாப்பு விஷயத்தில் சவால்கள் அதிகரிச்சுட்டே இருக்கு. பாதுகாப்பு தேவைகளில் நவீனத்தைக் கொடுக்கவேண்டிய கட்டாயம். எனவே, வெளிநாட்டு கருத்தரங்கு களில் புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பங் களைக் கத்துக்கிட்டு வந்து இங்கே பிரபலப் படுத்தறேன். இதனால், கடும் போட்டிச் சூழலிலும் வாடிக்கையாளர்களைத் தக்க வெச்சுக்க முடியுது. `சர்வீஸ் தேவைகளுக்கு நம்ம கஸ்டமர்ஸ் போன் பண்ணினால், அதைத் தொந்தரவா நினைக்கக் கூடாது. நாம காசு கொடுத்து வாங்கிய ஒரு பொருள் பழுதாகிட்டால் நமக்கு என்ன தவிப்பு இருக்குமோ, அந்த மனநிலையில் கஸ்டமரோட நிலையைப் புரிஞ்சுக்கணும்’னுதான் என் ஊழியர்களுக்கு அடிக்கடி சொல்வேன். என் நிறுவன சர்வீஸ் டீம் ஊழியர்கள் உட்பட, எல்லோரும் ஈடுபாட்டுடன் வேலையைச் செய்றாங்க’’ என்கிற ராக்கியின் முகத்தில் வெற்றிப் புன்னகை!

சி.சி.டி.வி கேமரா கண்காணிப்பு, தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வாய்ஸ் ஆக்டிவேஷன் சிஸ்டம், அக்சஸ் கன்ட்ரோல், பில்டிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கிவருகிறது ராக்கியின் நிறுவனம். ஐ.டி.சி ஹோட்டல் குரூப், பார்க் ஹயாத் ஹோட்டல், தி பார்க் ஹோட்டல், சென்னை மற்றும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்கள், கோழிக்கோடு விமான நிலையம், குஜராத்திலுள்ள ஃபோர்டு நிறுவனம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட புராஜெக்ட்டுகள் இவர் வசம்தான். 70-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் முதலாளியாக, ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் டர்ன் ஓவர் ஈட்டிவருகிறார் ராக்கி. தவிர, 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பகுதி நேரப் பணியில் இருக்கிறார்கள்.

``நம் வீட்டிலோ, அலுவலகத்திலோ முக்கியமான பொருள்களை யாராச்சும் திருட்டுத்தனமாகக் கையாள முயன்றால், செல்போனுக்கு அழைப்பு வரும் அல்லது அலாரம் ஒலிக்கும். பல இடங்களில் இருக்கும் சி.சி.டி.வி கேமராக்களை நம் செல்போன்லயே கண்காணிக்க முடியும். இப்படிப் பாதுகாப்பு விஷயத்துல நிறைய தொழில்நுட்பங்கள் வந்திடுச்சு. தீ விபத்து ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், பழைய பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்ப்பது, மின்சாதனப் பொருள்களை முறையாகப் பழுது பார்த்துப் பராமரிச்சுட்டு வந்தாலே தீ விபத்தை பெரும்பாலும் தவிர்த்திடலாம். ஆண்கள் அதிகம் நிறைந்த இந்தத் துறையில், பயணிக்கிறது எனக்கு சவால்தான். ஆனா, இதுகூட சுவாரஸ்யமாகத்தான் இருக்கு’’ எனப் புன்னகையுடன் தம்ஸ் அப் காட்டுகிறார், ராக்கி.

- நிறைவுற்றது

நான் கற்ற பாடம்!

முதலாளி என்று என் இஷ்டத்துக்கு வந்து போறதில்லை. தினமும் காலையில முதல் ஆளா ஆபீஸூக்கு வந்து, 12 மணி நேரம் வேலை செய்யறேன். நம் செயல்பாடுதான் ஊழியர்களுக்கு முன்னுதாரணமா இருக்கணும். அப்போதான் அவங்களுக்கு நம்ம மேல மதிப்பு வரும். நாம் சொல்றதை அக்கறையுடன் கேட்டுப்பாங்க.