மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தொழிலாளி முதலாளி - 8: மூளைக்கு வேலை கொடுத்தோம்...ஜெயலலிதாவின் பாராட்டு கிடைத்தது!

தொழிலாளி to முதலாளி
பிரீமியம் ஸ்டோரி
News
தொழிலாளி to முதலாளி ( கு.ஆனந்தராஜ் )

ரேகா ரங்கராஜ் - வித்யா கஜபதி ராஜ் சிங்

தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில் சென்னையைச் சேர்ந்த ‘Sumyog’ வெடிங் பிளானர் நிறுவன உரிமையாளர்களான ரேகா ரங்கராஜ் மற்றும் வித்யா கஜபதி ராஜ் சிங்.

தொழிலாளி முதலாளி - 8: மூளைக்கு வேலை கொடுத்தோம்...ஜெயலலிதாவின் பாராட்டு கிடைத்தது!

10-15 ஆண்டுகளுக்கு முன்புவரை, ஒரு குடும்பத்தில் கல்யாணம் என்றால் பல நாள்களுக்கு முன்பே எல்லா சொந்தபந்தங்களும் ஒன்றுகூடி, ஆளுக்கொரு வேலையாகச் செய்து, திருமணத்தைச் சிறப்பிப்பார்கள். இன்றைய நியூக்ளியர் குடும்பச் சூழலில் இவையெல்லாம் குறைந்துவிட்டன. எனவே, திருமண வேலைகளை எளிதாக்க `வெடிங் பிளானர்’களின் வருகை தீர்வாக அமைந்தது. சென்டிமென்ட் நிகழ்ச்சியாக மட்டுமே இருந்த திருமணங்கள், ‘வெடிங் பிளானர்’களின் வருகைக்குப் பிறகு பிரமாண்டம், வண்ணமயம் என மாறியிருக்கின்றன.

வெளிநாடுகளைத் தொடர்ந்து, 1990-களில் டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய இந்திய நகரங்களில் வெடிங் பிளானர்கள் பிரபலமானார்கள். ரேகாவும் வித்யாவும் பெண்களுக்கான அமைப்பு ஒன்றில் உறுப்பினர்களாகப் பழக ஆரம்பித்து, தோழிகளாகியுள்ளனர். அந்தக் காலத்தில் என்.டி. டி.வி-யில் ஒளிபரப்பான `பிக் ஃபேட் இண்டியன் வெடிங்' நிகழ்ச்சி பிரபலமானது. அந்த நிகழ்ச்சியைப் பார்த்த வித்யா, அதுகுறித்து ரேகாவிடம் ஆலோசிக்கிறார். இருவருக்கும் அந்த நிகழ்ச்சியில் வரும் கிராண்ட் வெடிங் மற்றும் புதுமையான வேலைப்பாடுகள் பிடித்துப்போகிறது. தமிழகத்திலும் திருமணங்களை வண்ணமயமாக்க நினைக்கின்றனர். தமிழகத்தின் முதல் வெடிங் பிளானர் நிறுவனமாக, 2005-ம் ஆண்டு பிசினஸ் பயணத்தைத் தொடங்குகின்றனர்.

வித்யா கஜபதி ராஜ் சிங், ரேகா ரங்கராஜ்
வித்யா கஜபதி ராஜ் சிங், ரேகா ரங்கராஜ்

``எங்களுக்குக் கிடைச்ச முதல் ஆர்டர், அறுபதாம் கல்யாண நிகழ்ச்சி. திட்டமிடலுடன் அந்த நிகழ்ச்சியை நல்லபடியா நடத்தினோம். நல்ல பெயர் கிடைக்க, அடுத்ததா முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனுடைய அப்பாவின் சதாபிஷேகத்துக்கான ஆர்டர் கிடைச்சது. அதில் புதுமையான ஐடியாக்களைச் செயல்படுத்தினோம். அந்த நிகழ்ச்சியில் கலந்துகிட்ட நிறைய பிரபலங்களுக்கு எங்க வேலைகள் பிடிச்சுப்போக, படிப்படியா ஆர்டர்கள் வர ஆரம்பிச்சது. திருமண ஆர்டர்களில், குதிரை சாரட் வண்டியில மணமக்களை அழைச்சுட்டு வரும் எங்க யோசனைக்குக் கல்யாண வீட்டினர்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சது. அதுக்காக நாங்க இருவரும் சென்னை முழுக்க அலைஞ்சு குதிரையை வாடகைக்குப் பிடிச்சோம். ஒரு கல்யாணத்தில், திடீரென அதிகாலை ரெண்டு மணிக்கு மணமகள் வீட்டார், கார் டெக்கரேஷன் வேணும்னு சொல்லிட்டாங்க. உடனே பூக்காரர் வீட்டுக்குப் போய் அவரை எழுப்பி, நிறைய அலைஞ்சு பூ வாங்கி, விடியற் காலைக்குள் டெக்கரேஷனை முடிச்சுட்டோம்.

பலரின் இல்லற வாழ்க்கைக்கு நாங்க தொடக்கப்புள்ளியாக இருக்கிறோம். அதனால், எங்க வீட்டுக் கல்யாணம் மாதிரிதான் எல்லா ஆர்டர்களிலும் வேலை செய்றோம்.

தாலி கட்டும்போது விருந்தினர்களுக்கு சாக்லேட் அல்லது இனிப்பு கொடுப்பதால், அனைவரும் தித்திப்புடன் மணமக்களை வாழ்த்துவாங்க. இதை எல்லா கஸ்டமர் களுக்கும் தவறாமல் செல்வோம். முதலில் இதில் ஆர்வம்காட்டாத ஒரு கஸ்டமர், திடீர்னு கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு, ‘சாக்லேட் கொடுத்துடலாம்’னு சொல்ல அதிர்ச்சியாகிட்டோம். ஆனாலும், ஐடிசி, தாஜ் உட்பட பல ஸ்டார் ஹோட்டல்கள்ல விடிய விடிய அலைஞ்சு முகூர்த்தத்துக்குள் ஆயிரம் ஸ்பெஷல் சாக்லேட்களை வாங்கிட்டோம்.

தொழிலாளி முதலாளி - 8: மூளைக்கு வேலை கொடுத்தோம்...ஜெயலலிதாவின் பாராட்டு கிடைத்தது!

கல்யாண வீட்டார் ரொம்ப பரபரப்புடன், பதற்றத்துடன் இருப்பாங்க. அதனால, முக்கியமான தேவைகளைக்கூட சில நேரங்களில் அவங்க சொல்ல மறந்துடலாம். அல்லது சொல்லிட்டதாக நினைச்சுக்கலாம். கடைசி நேரத்துல வந்து ‘இது வேணும்’னு சொல்வாங்க. ‘இப்போ சொன்னால் எப்படிச் செய்ய முடியும்’னு சொல்லி அவங்களை ஏமாற்றமடையவோ, கோபப்படவோ வைக்கக் கூடாது. ஒரு கல்யாணத்தில் நூறு விஷயங்களைச் சிறப்பா செய்தாலும் ஒரு சின்ன விஷயத்தில் கெட்ட பெயர் வந்துடும். அதுக்கு இடம் கொடுக்கக் கூடாது’’ என தங்கள் தொழிலிலுள்ள சவால்கள் மற்றும் வெற்றி ரகசியங்களை விவரித்தார் ரேகா.

10 ஆண்டுகளுக்கு முன்பு தொழில்நுட்பங்கள் பெரிதாக வளராத நிலையில், இத்தொழில் பற்றி மக்களிடம் கொண்டுசெல்வது சவாலானதாக இருந்திருக்கிறது இந்தத் தோழிகளுக்கு. தொடக்கக் காலத்தில் பெரிதாக லாபம் இல்லாமை, சில கஸ்டமர்கள் ஏமாற்றியதால் பல லட்சம் ரூபாய் இழப்பு எனப் பல சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அப்போது `அவள் மணமகள்' போன்ற `வெடிங் மேகசின்’களும் இல்லை. அதனால் அதிகளவில் பயணங்கள் சென்று, புதிய கான்செப்ட்டுகளை அறிமுகப்படுத்தி, கஸ்டமர்களின் எண்ணிக்கையை உயர்த்தி யிருக்கிறார்கள். ஒரு திருமண ஆர்டர் என்றால் அதிலுள்ள எல்லா வேலைகளுக்கும் பொறுப்பேற்று, பலநூறு நபர்களின் வேலை களைக் கண்காணிக்க வேண்டும். இன்றுவரை ஒரு ஆர்டர் முடியும்வரையிலான சில தினங்களுக்கு இவர்களுக்குத் தூக்கம் கிடையாதாம். அர்ப்பணிப்புடன் கூடிய இந்த உழைப்பினால்தான் பல ஆயிரம் நபர்கள் கலந்துகொள்ளும் திருமணத்தைச் சிக்கலின்றி வெற்றிகரமாக நடத்திக்கொடுத்து பாராட்டுகளைப் பெற்றுவருகிறார்கள், இந்தத் தோழிகள்.

தொழிலாளி முதலாளி - 8: மூளைக்கு வேலை கொடுத்தோம்...ஜெயலலிதாவின் பாராட்டு கிடைத்தது!

``வித்தியாசமான ஃப்ளவர் டெக்கரேஷன், ஸ்டேஜ் டெக்கரேஷன், லைட்டிங்ஸ் மற்றும் எல்.இ.டி லைட் செட்டிங்ஸ், லைட் மியூசிக், சங்கீத், மெஹந்தி, வாணவேடிக்கை, டான்ஸ், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், ஹேர் டிரஸ்ஸர், ஹாஸ்பிடாலிட்டினு திருமணத்தில் பல புதுமைகளைப் படிப்படியாகத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தினோம். இப்படி விருந்தினர்களை வரவேற்பதில் தொடங்கி தாம்பூலப்பை கொடுப்பதுவரை 200-க்கும் மேற்பட்ட வெரைட்டிகளைச் செய்திருக்கோம். 14 வருடத் தொழில் அனுபவத்தில், `இது எங்களுக்குத் தெரியாது; செய்ய மாட்டோம்’னு எதையுமே சொன்னதில்லை. ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் நாங்களே சக ஊழியர்களுடன் சேர்ந்து வேலை செய்வோம். ஒவ்வொரு ஆர்டரிலும் புதுமையைப் புகுத்துவது எங்க வாடிக்கை. அதற்காக மூளைக்கு நிறைய வேலை கொடுப்போம்.

ஃபேஸ்புக் நிறுவனத்துல வேலை செய்யும் புனேவைச் சேர்ந்தக் காதலர்களின் கல்யாண ஆர்டர் எங்களுக்குக் கிடைச்சது. கோவாவில் நடந்த அந்தக் கல்யாணத்தில், ஃபேஸ்புக் உரிமையாளர் மார்க் ஸக்கர்பெர்க் கலந்துகிட்டார். அவர் எங்க வேலையைப் பாராட்டியது மறக்க முடியாத நிகழ்வு. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் ரேகாவுக்குப் பழக்கம் உண்டு. அவர் முதல்வராக இருந்த போது, சென்னை வேப்பேரியில் புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தைத் திறந்துவைத்தார். அந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாங்கதான் செய்திருந்தோம். விழா ஏற்பாடுகள், வரவேற்பு எல்லாமே ஜெயலலிதாவுக்குப் பிடிச்சுப்போக, எங்களைப் பாராட்டி வாழ்த்துச் செய்தி அனுப்பினார்” எனும்போது பெருமிதம் வித்யா முகத்தில்.

இன்று நடுத்தரக் குடும்பங்களிலிருந்து பிரபலங்கள்வரை இவர்கள் நடத்தும் ‘சம்யோக்’ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள். நடிகர் துல்கர் சல்மான் மற்றும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தின் மகன்கள் திருமணத்தை நடத்தியிருக்கும் இந்தத் தோழிகள், 1,500-க்கும் மேற்பட்ட திருமணங்கள் மற்றும் பிறந்த நாள், வளைகாப்பு, திறப்பு விழா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட இதர சுப நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆர்டரையும் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக்கொண்டு முடிக்கும் அளவுக்கு பிரமாண்ட ஆர்டர்களில் பிஸி இந்தத் தோழிகள். பல லட்சங்கள் வரை ஒவ்வொரு ஆர்டருக்கும் வருமானம் வரும் அளவுக்கு நிறுவனத்தை வளர்த்திருக்கிறார்கள். இன்று தமிழகத்தில் ஏராளமான வெடிங் பிளானர் நிறுவனங்கள் இருந்தாலும், அவர்களுக் கெல்லாம் முன்னோடி மற்றும் முன்னணியில் இருப்பவர்கள், இந்தத் தோழிகளே!

``பலரின் இல்லற வாழ்க்கைக்கு நாங்க தொடக்கப்புள்ளியாக இருக்கிறோம். அதனால், எங்க வீட்டுக் கல்யாணம் மாதிரிதான் எல்லா ஆர்டர்களிலும் வேலை செய்றோம். விளம்பரம் எதுவும் செய்யாமலேயே எங்க தொழில் விரிவடைஞ்சதுக்கு இந்த அர்ப்பணிப்புதான் காரணம். கஷ்டங்கள் நிறைந்த, வேலை நேரத்தை அறுதியிட்டுச் சொல்லமுடியாத தொழில் இது. எங்க குடும்பத்தாரின் ஒத்துழைப்பும் எங்கள் வெற்றிக்குக் காரணம். இந்தத் துறையில் பெண்கள் மிகக்குறைவாகவே இருக்காங்க. வருமான வாய்ப்புகள் அதிகமுள்ள இந்தத் துறையில் பெண்கள் பலரும் சாதிக்க வரணும்” என அழைப்புவிடுக்கிறார்கள் இந்த சக்சஸ் தோழிகள்.

- நாம் வெல்வோம்!

நாங்கள் கற்ற பாடம்!

``பல லட்சங்கள் வருமானம் வர்றதா இருந்தாலும், ஒரு நேரத்தில் ஒரு கல்யாண ஆர்டரை மட்டும்தான் எடுப்போம். அதை வெற்றிகரமா முடிச்ச பிறகுதான், அடுத்த ஆர்டரில் கவனம் செலுத்துவோம். இப்படி ஒவ்வொரு ஆர்டரிலும் கஸ்டமர்களின் திருப்தியைச் சம்பாதிக்கிறதாலதான் அடுத்தடுத்த ஆர்டர்கள் தடையில்லாமல் கிடைக்குது!”