நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

எட்டாவது சம்பள கமிஷன் வருமா... எதிர்பார்க்கும் பலன்களைத் தருமா?

எதிர்பார்ப்பு...
பிரீமியம் ஸ்டோரி
News
எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு

மத்திய அரசு ஊழியர் களுக்கு 7-வது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், எட்டாவது சம்பள கமிஷன் எப்போது அமைக்கப் படும் என்ற கேள்வி, மத்திய-மாநில அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

ப.முகைதீன் ஷேக் தாவூது
ப.முகைதீன் ஷேக் தாவூது

10 ஆண்டுகளுக்கு ஒரு சம்பள கமிஷன்...

பத்து வருடங்களுக்கு ஒரு சம்பள கமிஷன் என்ற நடைமுறை நியதியின்படி, 8-வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் 01.01.2026 முதல் நடைமுறைக்கு வர வேண்டும். அந்தத் தேதிக்கு இரண்டு அல்லது மூன்று வருடங் களுக்கு முன்பே மத்திய அரசு சம்பள கமிஷனை அமைத்து விடும். ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்களின் சம்பளம் மற்றும் பிற பலன்களை மேம்படுத்து வதற்கு ஆதாரமான அம்சங் களைப் பரிசீலித்து கமிஷன் தனது பரிந்துரைகளைத் தரும். அப்படித் தரப்பட்ட பரிந்துரைகளைப் பரிசீலித்து, அவற்றை மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டு வரும்.

எதிர்பார்ப்பை உருவாக்கிய மத்திய அமைச்சர்...

அந்த வகையில் 8-வது சம்பள கமிஷன் அமைப்பது குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்ள இதுவே தருணம் என்பதால், கடந்த 02.08.2022 அன்று ராஜ்யசபாவில் இது குறித்து கேள்வி கேட்கப் பட்டது.

“மத்திய அரசு ஊழியர் களின் சம்பளம் மற்றும் ஓய்வு பெற்றோரின் பென்ஷன் முதலானவற்றைச் சீரமைக் கும் எட்டாவது சம்பள கமிஷன் அமைக்கப் போவதில்லை’ என அரசு கருதுவதாக வரும் செய்தி உண்மையா?” என மத்திய நிதி அமைச்சகத்தின் துணை அமைச்சரிடம் கேட்க, (Minister of state in the Ministry of Finance) ‘இல்லை’ என்று பதில் அளித்தார்.

“பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைக்கும் நடைமுறைக்குப் பதிலாக, ஆய்க்ராய்ட் (Aykroyd Formula) ஃபார்முலாவின்படி, அவ்வப்போது நிலவும் விலை வாசி மற்றும் சராசரி மனிதனின் வாழ்க்கைத் தேவைக்கேற்ப ஆண்டு தோறும் சம்பள நிலைகளைச் சீரமைக்கலாம்’ என்று ஏழாவது சம்பள கமிஷன் செய்திருந்த பரிந்துரை பரிசீல னையில் உள்ளதா?” என்ற மற்றொரு கேள்வி அமைச்சரிடம் கேட்கப் பட்டது.

“ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச் சரவை இதை (ஆய்க்ராய்டு பார்முலாவை) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை” என்றும் பதில் தந்துள்ளார், அமைச்சர்.

ஆக, ‘எட்டாவது சம்பள கமிஷன் அமைக்கப்படப் போவதில்லை’ என்கிற கருத்தை மறுத்ததுடன், ‘ஆய்க்ராய்டு ஃபார்முலா’வும் பரிசீலிக்கப்படவில்லை’ என்று அமைச்சர் சொன்னதன்மூலம் ‘8-வது சம்பள கமிஷன் வரும். அதுவும் 2024 பொதுத் தேர்தலுக்கு முன்பே சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு, 01.01.2026 முதல் நடைமுறைக்கு வந்துவிடும்’ என்பது ஊழியர் களின் எதிர்பார்ப்பாகிவிட்டது.

எட்டாவது சம்பள கமிஷன் வருமா... எதிர்பார்க்கும் பலன்களைத் தருமா?

எல்லோருக்கும் ஏறுமுகம்...

தற்போதைய வாழ்க்கைத் தரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் முக்கியமான காரணியாக விளங்குவது சம்பள கமிஷன். கடந்த முக்கால் நூற்றாண்டில் பெருகிவரும் வாழ்க்கை வசதிகளே இதற்கான சான்று. அந்த வகையில், சம்பள கமிஷன் பரிந்துரை மத்திய, மாநில அரசு ஊழியர் களுக்கு மட்டும் பலன் தருகிற ஒன்றல்ல. அரசு ஊழியர் தொடங்கி, அரசு நிறுவனங்கள், தன்னாட்சி-உள்ளாட்சி அமைப்புகள், தனியார் நிறுவனங்களுடன், அன்றாடம் தினச்சம்பளம் பெறுவோரின் சம்பள நிலைகள் மேம்படவும் காரணமாக நிற்கிறது.

உதாரணமாக, 50 வருடங்களுக்கு முன் 5 ரூபாயாக மட்டுமே இருந்த (Unskilled) திறன் பெறாத ஒரு தொழிலாளரின் தினச் சம்பளம், இன்று 800 ரூபாய் என்ற நிலையை எட்டுவதற்கு சம்பள கமிஷனின் பரிந்துரைகள் பரவலாவதுதான் காரணம்.

9-வது சம்பள கமிஷன்

தற்போது வரவிருப்பது ‘8-வது சம்பள கமிஷன்’ என்பது மத்திய அரசு ஊழியர்களுக்குத்தான். தமிழக அரசு ஊழியர்களுக்கு அது 9-வது சம்பள கமிஷனாக இருக்கும். எப்படி எனில், 01.06.1960-ல் முதலாவது சம்பள கமிஷன் வந்தது. இதைத் தொடர்ந்து 02.10.1970, 01.04.1978, 01.10.1984, 01.06.1988 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்த சம்பள கமிஷன்கள் நடைமுறைக்கு வந்தன. இதற்குப் பிறகு, தமிழக அரசு தனியே சம்பள கமிஷன் அமைக்கவில்லை.

மாறாக, 01.01.1996, 01.01.2006, 01.01.2016-ல் மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்த 5-வது, 6-வது, 7-வது சம்பள கமிஷன்களின் அடிப்படையில் உயர் மட்டக் குழு (Official Committee) அமைத்து, குழுவின் பரிந்துரைகள் (6-வது, 7-வது, 8-வது சம்பள கமிஷன்களாக) நடைமுறைக்கு வந்துள்ளன. எனவே, தமிழக அரசு ஊழியர்களுக்கு வரப்போவது 9-வது சம்பள கமிஷனாக இருக்கும். கடந்த காலங்களில் நடைமுறைக்கு வந்த சம்பள கமிஷன் மூலம் ஊழியர்கள் மட்டுமன்றி, ஓய்வு பெற்றோரும் அதிகமான சலுகைகள் கிடைக்கப் பெற்றனர். அவற்றுள் முக்கியமான சலுகைகள் பற்றிப் பார்ப்போம்.

ஊழியர்களுக்கு...

மத்திய அரசு அறிவிக்கும் தேதியிலேயே தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியுடன் தேர்வு நிலை-சிறப்பு நிலை தந்தது 3-வது சம்பள கமிஷன். மத்திய அரசு ஊழியருக்கு இணையான சம்பள விகிதங்களைத் தந்தது 5-வது சம்பள கமிஷன். அதிக சம்பளம் பெறுவோர்க்குக் குறைக்கப்பட்ட சதவிகிதத்தில் அகவிலைப்படியும் குறைவான சம்பள நிலையினருக்கு அதிகரிக்கப் பட்ட சதவிகித அகவிலைப்படியும் இருந்தை மாற்றி அனைவருக்கும் சமமாக அகவிலைப்படி தந்தது 5-வது சம்பள கமிஷன்.

எட்டாவது சம்பள கமிஷன் வருமா... எதிர்பார்க்கும் பலன்களைத் தருமா?

ஓய்வூதியதாரர்களுக்கு...

பணியில் உள்ள ஊழியர் களுக்குக் கிடைத்த சலுகைகளை விட, ஓய்வுபெற்றவர்கள்தான் அதிக சலுகைகள் பெற்றனர், சம்பள கமிஷன் மூலம். இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் மத்திய அரசு ஊழியர்களுக்குக் கூட கிடைக்காத பல சலுகைகள் தமிழக அரசு ஓய்வூதியதாரர் களுக்கும் கிடைத்துள்ளன.

உதாரணமாக, மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும்போது கிடைக்கக்கூடிய அதிகபட்ச விடுப்பு சம்பளம் 10 மாதங்களுக்கு மட்டுமே. ஆனால், தமிழக அரசில் ஓய்வு பெறுவோர் 11 மாத சம்பளம் (வரை) விடுப்பு சம்பளம் பெறுகின்றனர்.

இவை தவிர, முதலாவது சம்பள கமிஷனுக்குப் பிறகுதான் குடும்ப பென்ஷன் கிடைக்க ஆரம்பித்தது. 3-வது சம்பள கமிஷனில்தான் 6 ரூபா யாக இருந்து மெள்ள மெள்ள தவழ்ந்துகொண்டிருந்த குறைந்த பட்ச பென்ஷன் 100 ரூபாய் ஆனது. அனைவருக்கும் 30% குடும்ப ஓய்வூதியம் நடை முறைக்கு வந்தது.

4-வது சம்பள கமிஷனைத் தொடர்ந்து, பணியில் உள்ளவர் களுக்கு வழங்கப்படும் அதே சதவிகிதத்தில் ஓய்வுபெற்றவர் களுக்கும் டி.ஏ (DA) கிடைத்தது. இதை அடுத்து வந்த சம்பள கமிஷன் பரிந்துரைகளும் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு பலன்களை வாரி வழங்கின.

இதெற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் 01.01.2016 முதல் நடைமுறைக்கு வந்த மத்திய அரசின் 7-வது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி, பென்ஷன் கம்யூடேஷன் தொகை பெரிய அளவு விரிவடைந்தது. அதாவது, 31.12.2015 அன்று ரூ.24,000 அடிப் படை சம்பளத்துடன் ஓய்வு பெற்றவர் பெற்ற பென்ஷன் கம்யூ டேஷன் தொகை ரூ.4,01,808. இதே சம்பளதாரர் 01.01.2016-க்குப் பிறகு அதாவது, ஒரே ஒரு நாளைக்குப் பிறகு ஓய்வு பெறும்பட்சத்தில் இவரது பென்ஷன் கம்யூடேஷன் தொகை ரூ.10,56,354 ஆக உயர்ந்தது.

அதுமட்டுமன்றி, 01.01.2006-ல் நடைமுறைக்குவந்த 6-வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, ரூ.23,100 ஆக இருந்த அதிகபட்ச குடும்ப பென்ஷன், 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ரூ.1,25,000 ஆக உயர்ந்தது.

8-வது சம்பள கமிஷன் எதிர்பார்ப்பு...

இத்தகைய உயர்வுகள் எதிர் பார்க்கப்படும் 8-வது சம்பள கமிஷனில் சம்பள உயர்வு பற்றிய எதிர்பார்ப்பு என்ன?

சென்ற 7-வது சம்பள கமிஷனில் ஊதிய நிர்ணய காரணி (Fitment Factor) 2.57 என்பதாக இருந்தது. அதாவது 6-வது சம்பள கமிஷன்படி பெற்ற சம்பளத்தை 2.57 என்ற காரணியால் பெருக்கினால் வருகிற தொகை 7-வது சம்பள கமிஷன் சம்பளமாக இருந்தது.

சம்பளம்...

அந்த வகையில் வரவிருக்கும் 8-வது சம்பள கமிஷன் பரிந்துரைக் கக்கூடிய ஊதிய நிர்ணயக் காரணி 1.96 என்பதாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த எதிர் பார்ப்பு உண்மையானால், தற்போது ரூ.90,000 அடிப்படைச் சம்பளம் பெறும் ஒருவரின் எட்டாவது சம்பள கமிஷன் பரிந்து ரைப்படியான அடிப்படை சம்பளம் ரூ.1,76,400 என்பதாக நிர்ணயமாகலாம். (ரூ.90,000 x 1.96= ரூ.1,76,400).

அதிகபட்ச பணிக்கொடை...

7-வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, தற்போதைய அதிகபட்ச பணிக்கொடை ரூ.20 லட்சம் என்பதாக உள்ளது. அகவிலைப்படி 50% உயர்ந்தால், ரூ.25 லட்சம் ஆகவும், 100% உயர்ந்தால், ரூ.30 லட்சம் ஆகவும் பணிக் கொடை வரம்பு உயரும் என்பது பரிந்துரை. எஞ்சியுள்ள மூன்று வருடங்களில் அகவிலைப்படி 100% உயர வாய்ப்பு குறைவு. ஆனால், 50% வரை உயரக்கூடும். அந்த வகையில், தற்போதைய சம்பள கமிஷன் காலம் முடிவதற்குள்ளேயே பணிக்கொடை வரம்பு ரூ.25 லட்சமாக உயரக்கூடும். அடுத்தகட்ட பணிக்கொடை வரம்பை சம்பள கமிஷன் தீர்மானிக்கக்கூடும்.

பென்ஷன்...

1.96 என எதிர்பார்க்கப்படும் ஊதிய நிர்ணயக் காரணியை சம்பள கமிஷன் பரிந்துரைக்குமேயானால், தற்போது ரூ.1.25 லட்சம் என உள்ள மத்திய அரசு ஊழியர் களுக்கான அதிகபட்ச பென்ஷன் ரூ.2.45 லட்சம் என்ற வரம்பைத் தொடலாம். உயர்த்தப்பட்ட அதிகபட்ச குடும்ப பென்ஷனும்கூட ரூ.2.45 லட்சமாகலாம்.

பென்ஷன் கம்யூடேசன்...

தற்போது 90,000 ரூபாயை அடிப்படை சம்பளமாகப் பெறுபவர் மேற்கண்ட ஊதிய நிர்ணயக் காரணி ஏற்கப் படுமெனில், தனது சம்பளமாக 1,76,400 ரூபாயைப் பெறக்கூடும். ஓய்வுபெற்றால் இவரது பென்ஷன் தொகை ரூ.88,200-ஆகவும், கம்யூடேசன் ரூ.34,69,012-ஆகவும் அமையலாம்.

இதர எதிர்பார்ப்பும் கோரிக்கைகளும்...

* தற்போது 80 வயது நிறைந்த பென்ஷனருக்குத்தான் 20% முதல் (Additional) கூடுதல் பென்ஷன் படிப்படியாக உயர்த்தப்படுகிறது. இதை மாற்றி, 65 வயதில் 5%, 70 வயதில் 10%, 75 வயதில் 15% எனக் கூடுதல் பென்ஷன் வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு செய்த பரிந்துரை ராஜ்யசபா செயலகத்தில் ஒப்புதலுக்குக் காத்திருக்கிறது.

* மாதம் ரூ.1,000 மருத்துவப்படியை 3,000 உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையும் நடைமுறைக்கு வரலாம்.

* கம்யூடேசன் தொகைக்காக 15 வருடம் பென்ஷனில் பிடித்தம் செய்வதை 12 ஆண்டாகக் குறைக்க வேண்டும்.

* 300 நாள்களாக உள்ள ஈட்டிய விடுப்பு வரம்பை 300-க்கு மேல் உயர்த்த வேண்டும் உட்பட 7 கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஏற்கப் படுமானால் மத்திய அரசு ஊழியர்களுடன், தமிழக அரசு ஊழியர்களும் 8-வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு ஏற்ப பணப்பலன்கள் பெற முடியும்.