நடப்பு
Published:Updated:

“மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்புதான் எனக்கு யானை பலம்!” - அனுபவம் பகிரும் மாற்றுத்திறனாளி

ரமேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ரமேஷ்

எனக்கு போலியோ வந்தப்ப என்னைக் குணப்படுத்த எங்க வீட்ல பெரிய அளவில சேமிப்பு இல்லை!

“ஒரு பிரச்னை வரும்போது ஆயிரம் பேர் நம்முடன் இருப்பதைவிட, நம்முடைய சேமிப்பு நம்முடன் இருப்பது யானை பலம் தரும். மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்புதான் எனக்கு யானை பலம். என்னுடைய சேமிப்பை நம்பித்தான் என் குடும்பத்தின் நிகழ்கால நாள்கள் நிம்மதியாகக் கழிஞ்சுட்டு இருக்கு.

கொஞ்சம் கொஞ்சமா பணத்தை சேர்க்கிறதுல இருந்து தங்கமாக வாங்கி வைப்பது வரை நம்முடைய பணத்தைச் சேமிக்க ஆயிரம் வழிகள் இருக்கு. ஆனா, லாபம் தர்ற சேமிப்பைத் தேர்வு செஞ்சா நிச்சயம் நல்ல பலனை அடைய முடியும்” - எதார்த்தமாகப் பேச ஆரம்பித்த ரமேஷ், நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான பைக்கிலிருந்து இறங்கி கைகளால் ஊர்ந்து சென்று, ஒரு நாற்காலியில் அமர்ந்துகொள்கிறார். போலியோ பாதிப்பால் தன்னுடைய 10 வயதில் நடக்கும் திறனை இழந்த ரமேஷ், கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில் துறைப்பட்டில் உள்ள சர்க்கரை ஆலையில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். அவருடன் பேசினோம்.

ரமேஷ்
ரமேஷ்

சேமிப்பு இல்லாததாலதான்..!

“எங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் கூலி வேலை பார்த்துதான் என்னைப் படிக்க வச்சாங்க. எனக்கு ஒரு தம்பி, தங்கச்சி இருக்காங்க. அவங்களோட படிப்பு, திருமணச் செலவுகள், என்னுடைய படிப்பு செலவுனு நிறைய பொருளாதாரச் சிக்கல்களை அன்றாடம் எதிர்கொண்டு இருக்கோம். இந்த நேரத்துல ‘கால் இல்லாத இவனைப் படிக்க வச்சு என்ன ஆகப்போகுது’னு நிறைய பேர் எங்க அப்பாகிட்ட கேப்பாங்க. ஆனா, படிப்பு மட்டும்தான் எனக்குத் துணையா இருக்கும்னு என்னோட அப்பா உணர்ந்ததால, ராப்பகலா உழைச்சு படிக்க வச்சாங்க.

சில நேரங்கள்ல காலேஜுக்கு ஃபீஸ் கட்டணும்னாகூட வீட்ல பணமிருக்காது. நகைகளை அடைமானம் வச்சோ, கடன் வாங்கியோதான் ஃபீஸ் கட்டுவேன். அந்த நேரத்தில் எல்லாம் சேமிப்புனு எதாவது இருந்தா, உதவியா இருக்குமேன்னு யோசிச்சுருக்கேன். உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு போலியோ வந்த நேரத்தில், என்னைக் குணப்படுத்த எங்க வீட்ல பெரிய அளவில சேமிப்புக் கிடையாது. அதனால்தான் நான் நடக்கும் திறனை இழந்துட்டேன். இதெல்லாம் எனக்கு சேமிப்பின் முக்கியத்துவத்தை மனசுக்குள்ள விதைச்சுக்கிட்டே இருந்துச்சு.

யோசிச்சு குழந்தையைப் பெத்துக்கிட்டோம்..!

சென்னைப் பல்கலைக்கழகத்துல எம்.ஏ முதலாம் ஆண்டு படிக்கிறப்ப எனக்கு வேலை கிடைச்சுது. நான் வேலைக்குப்போனதும் வீட்டில் திருமணம் செஞ்சு வச்சுட்டாங்க. என் மனைவிக்கு ரெண்டு காதும் கேட்காது. ஆனா, எங்களுக்குள்ள அப்படி ஒரு புரிதல் இருக்கு. ஒருத்தரை ஒருத்தர் எங்கையுமே விட்டுக் கொடுத்தது கிடையாது.

திருமணமான பிறகு, குழந்தை விஷயத்தில் நிறையவே யோசிச்சோம். குழந்தைக்கும் ஏதாவது குறை வந்துருமோனு பயம் இருந்துச்சு. டாக்டருங்ககிட்ட பேசி தெளிவு பெற்ற பிறகுதான் குழந்தை பெத்துக்குற முடிவுக்கே வந்தோம். எங்க பையனுக்கு இப்போ மூணு வயசு ஆகுது. அவன்தான் எங்க எதிர்காலம், நம்பிக்கை எல்லாம்’’ என்ற ரமேஷ், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கியது பற்றிப் பேச ஆரம்பித்தார்.

‘‘நீண்டகாலத்துல எஸ்.ஐ.பி முறையில முதலீடு செய்றப்ப நமக்கு சராசரி விலையில ஃபண்ட் யூனிட் கிடைக்கிறதோட, கூட்டுவட்டியில வருமானமும் கிடைக்கும்னு அவரு சொன்னாரு!’’

நாணயம் விகடன் காட்டிய வழி..!

“நான் வழக்கமா நாணயம் விகடன் படிப்பேன். அதில் மியூச்சுவல் ஃபண்ட், குடும்பச் சேமிப்பு, சிக்கனம் பத்தியெல்லாம் நிறைய கட்டுரை வரும். நமக்குக் கிடைக்கிற வருமானத்துல முடிஞ்ச அளவுக்குக் கொஞ்சம் பணத்தையாவது சேமிக்கணுங்கிற கருத்தை நாணயம் விகடன்ல திரும்பத் திரும்ப படிச்சதாலே, சேமிக்கணுங்கிற எண்ணம் என் மனசுல பதிஞ்சுடுச்சு. அதனால குழந்தை பிறக்குறதுக்கு முன்னாலயே அவனுக்காக சேமிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.

ரமேஷ்
ரமேஷ்

தபால் நிலையம் டு தங்கம்..!

எனக்கு சம்பளம் ரூ.23,000 ரூபாய். குடும்பச் செலவுகள் போக, என்னால அதிகபட்சம் மாதம் 1,000 ரூபாய்தான் சேமிக்க முடியும். அந்தத் தொகைக்குள்ள இருக்கிற சேமிப்புத் திட்டங்கள் பற்றி நிறைய பேர்கிட்ட கேட்டேன். தபால் நிலையத்துல ஆரம்பிச்சு, தங்கம் வாங்குறது வரை பலரும் பல ஐடியா கொடுத்தாங்க.

கடைசியா பாண்டிச்சேரியில இருக்கிற நிதி ஆலோசகர் ராஜசேகரன் பத்தி தெரிஞ்சுகிட்டு அவரைப் பார்த்தேன். அவருதான் எனக்கு மியூச்சுவல் ஃபண்ட் பத்திச் சொன்னாரு.ஆரம்பத்துல கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. சேமிக்கிற பணம் நஷ்டமாயிடுமோன்னுதான் பயம். ஆனா, நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விளக்கமா பதில் சொல்லி என் சந்தேகத்தைத் தீர்த்தாரு. நீண்டகாலத்துல எஸ்.ஐ.பி முறையில முதலீடு செய்றப்ப நமக்கு சராசரி விலையில ஃபண்ட் யூனிட கிடைக்கிறதோட, கூட்டு வட்டியில வருமானமும் கிடைக்கும்னு அவரு கணக்குப் போட்டுக் காட்டுனாரு. அதுக்குப் பிறகுதான் எனக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுல நம்பிக்கை வந்துச்சு.

மாசம் ரூ.1000 முதலீடு..!

2016 ஆகஸ்ட் மாசம் முதல் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மூலமா மாதம் ரூ.1,000 மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக முதலீடு செய்ய ஆரம்பிச்சேன். திடீர் செலவுகளைச் சமாளிக்க மாதம் ரூ.500, குழந்தையின் எதிர்காலத்துக்காக ரூ.500 என இந்த முதலீட்டைத் தொடர்ந்து செஞ்சுட்டு வர்றேன். என் பையனோட 23 வயசில் ரூ.10 லட்சம் சேர்க்கணுங்கிறது என் இலக்கு. என்னால மொத்தமாக அவனுடைய படிப்புக்கோ அல்லது திருமணச் செலவுக்கோ செலவு செய்ய முடியாதுங்கிறதால மியூச்சுவல் ஃபண்ட் மூலமா முதலீடு செய்றேன்.

கொரோனாவால மார்ச், ஏப்ரல் மாசத்துல சந்தை இறங்குனதால, நான் செஞ்ச முதலீட்டு மதிப்பு குறைஞ்சது. நான் பதற்றப்படல. குறுகியகாலத்துல இப்படி நடக்கும்னு தெரிஞ்சுதான் நான் முதலீடு செஞ்சேன். நேரம் கிடைக்கும்போது என்.ஏ.வி மதிப்பு ஏறுதா இறங்குதான்னு நானே செக் பண்ணிப்பேன்’’ என்றார் ரமேஷ். சாதாரண மனிதராக இருந்தாலும் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் பற்றி யோசிக்கும் இவர், அனைவருக்கும் மிக நல்ல உதாரணம்!

சாதாரண மக்களுக்கும் கைகொடுக்கும் முதலீடு!

“மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்புதான் எனக்கு யானை பலம்!” - அனுபவம் பகிரும் மாற்றுத்திறனாளி

திருவண்ணாமலை ரமேஷுக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை அறிமுகப்படுத்தி, அதில் முதலீடு செய்யும் யோசனையைச் சொன்னவர் புதுச்சேரியைச் சேர்ந்த நிதி மற்றும் முதலீட்டு ஆலோசகர் ராஜசேகரன். அவருடன் பேசினோம். “முதலீடு பற்றி நான் நாணயம் விகடனில் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். நான் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு, கூகுளில் என் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து, என்னைத் தேடிவந்தார் ரமேஷ். இவர் மட்டுமல்ல, இவரைப் போன்ற சாதாரண மக்கள் நாணயம் விகடன் மூலம் என்னிடம் முதலீடு செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். என்னிடமுள்ள மொத்த முதலீட்டாளர்களில் 25% பேர் இப்படிப்பட்ட சாதாரண மக்கள்தான். ரூ.100, ரூ.150, ரூ.200, ரூ.300, ரூ.500, ரூ.700 என மாதம்தோறும் பலரும் முதலீடு செய்கிறார்கள். இது மாதிரியான சாதாரண மனிதர்களிடம் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிப் பேசும்போது அவர்கள் புரிந்துகொள்கிற பல விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். நீண்டகாலத்தில் பணவீக்கத்தைவிட கொஞ்சம் கூடுதலான வருமானத்தை இந்தச் சாதாரண மக்களுக்குப் பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் என் ஆசை. பணம் படைத்தவர்களுக்கு சேவை செய்கிற அதே நேரத்தில், இது மாதிரியான மக்களுக்குக்கும் பாடுபட வேண்டும் என்று நினைத்து செயல்படுகிறேன்’’ என்றார்.