
மத்திய அரசு இவ்வளவு பெரிய அறிவிப்பு களை வெளியிட்டிருப்பது, எதிர்பாராத ஆச்சர்யமாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் உள்ளது
இந்திய பிரதமர் மோடி 20 லட்சம் கோடி ரூபாய் திட்டம் பற்றி அறிவித்ததுமே பரபரப்பு பற்றிக்கொண்டது. தொழில்துறையினர் மட்டுமின்றி பொதுமக்களும்கூட நிதி அமைச்சரின் அறிவிப்புகளை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பல்வேறு அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
புலம்பெயரும் தொழிலாளர்களுக்கான திட்டங்கள், வேலையிழப்புகளைத் தடுத்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் ஆகியவை பெரிதாக இடம்பெறவில்லை என்ற விமர்சனங்கள் இருந்தாலும், குறு, சிறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இந்தத் திட்டங்களை வரவேற்கவே செய்கின்றனர்.
இந்தத் திட்டங்களால் எந்த அளவுக்கு தொழில்துறை ஏற்றம் பெறும்... இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு இந்தத் திட்டங்கள் உதவும் என தொழில்துறை சார்ந்தவர்களிடமும் பொருளாதார நிபுணர்களிடமும் கேட்டோம்.
‘‘மத்திய அரசு இவ்வளவு பெரிய அறிவிப்பு களை வெளியிட்டிருப்பது, எதிர்பாராத ஆச்சர்யமாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் உள்ளது’’ என்கிறார் பங்குச்சந்தை ஆலோசகரும் பொருளாதார நிபுணருமான வ.நாகப்பன்.

‘‘கைதட்டுங்கள், விளக்கு ஏற்றுங்கள் என்கிற விஷயங்களை எதிர்பார்த்து பழகிய நமக்கு, திடீரென 20 லட்சம் கோடி ரூபாய்க்கான நலத்திட்ட அறிவிப்புகளைக் கேட்கும்போது சிலிர்ப்பாகத்தான் இருந்தது. இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. குறு, சிறு தொழில் நிறுவனங்களை மையப்படுத்தி நிதி அமைச்சர் அறிவித்துள்ள அனைத்தும் பொருளாதார வளர்ச்சிக்குப் பயனளிக்கும். பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பது எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள்தான். அவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாலேயே, அவர்களுக்கான அறிவிப்புகளை முதலில் அறிவித்திருக்கிறார்கள். ‘ஓப்பனிங் எல்லாம் சரியாத்தான் இருக்கு; ஆனா ஃபினிஷிங் சரியில்லையே’ என்று சொல்லும்படியாக மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு நேர்மாறாக வங்கிகளின் அணுகுமுறை இருந்துவிடக் கூடாது’’ என்றார் அவர்.
கொடிசியா அமைப்பின் முன்னாள் தலைவர் இளங்கோ, ‘‘குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் வாங்குவதற்கான உத்தரவாதத்தை அளித்து வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறார்கள். இது வரவேற்கத் தக்கது. ஆனால், அவை அனைத்தையும் வங்கிகள் தரப்பில் சரியாக நடைமுறைப் படுத்தப்படுமா என்பது கேள்விக் குறியாக இருக்கிறது. ஏற்கெனவே கடன் சிக்கலில் இருக்கும் குறு, சிறு தொழில் நிறுவனங் களுக்கு மீண்டும் கடன் கொடுப்பதற்கு அரசு முன்வந்திருக்கிறது. ஆனால் அடுத்த ஓராண்டு காலத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு, அதன்பின் கடன்களைத் திருப்பிச் செலுத்துவது சாத்திய மாகுமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. உற்பத்திக்கேற்ற தேவைப்பாடு இருந்தால்தான் வருமானம் வரும். எனவே கூடுதல் கடன்களுக்கு அதிகபட்ச வட்டிக் குறைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
தற்போது சராசரியாக இருக்கும் 12 சதவிகித வட்டியை, 5 - 6 சதவிகிதமாகக் குறைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பி.எஃப் செலுத்துவதில் 2 சதவிகிதத்தை மட்டும் குறைத்திருப்பதற்குப் பதிலாக, தொழிலாளர்களும் தொழில் முனைவோர்களும் மூன்று மாதம் பி.எஃப் பணத்தை கட்ட வேண்டாம் என்ற சலுகையை அளித்திருக்கலாம். அந்தப் பணம் இருதரப்புக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும். பி.எஃப் பணத்தைக் கட்டச் சொல்லிவிட்டு, நிதி நெருக்கடிக்காக பி.எஃப் பணத்திலிருந்து 75 சதவிகித பணத்தை எடுத்துக் கொள்ள லாம் எனச் சொல்வது மிகப்பெரிய முரணாக இருக்கிறது’’ என்றார்.
பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் இதுபற்றி பேசும்போது, “குறு, சிறு நிறுவனங் களுக்கான வரையறையை இன்றைய சூழலில் மாற்றியிருப்பது தேவையில்லாதது. பி.எஃப் பிடித்தத்தில் 12 சதவிகிதம் என்பதை 10 சதவிகித மாகக் குறைத்திருப்பதில் அரசுக்கு எந்தப் பங்களிப்பும் கிடையாது. இது நம்முடைய சேமிப்பு. இதைக் குறைத்திருப்பதையும் கணக்கில் காட்டுவது வேடிக்கை. அதேபோல, ஏற்கெனவே நிறுவனங் களுக்குக் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையைக் கொடுக்கப்போவதை யெல்லாம் ஊக்கத்தொகையைப்போல கணக்கில் காட்டுகிறார்கள்.

குறு, சிறு நிறுவனங்களுக்கு வங்கிகள் கடனுதவி தருவதற்கான அளவீட்டை நிதி அமைச்சர் வெளியிட்டிருக்கிறார். ஆனால் நடைமுறையில் இவர்களின் அறிவிப்புகளை வங்கிகள் கேட்பதே யில்லை.
ஏற்கெனவே அறிவித்த தவணைத் தள்ளிவைப்புத் திட்டத்தையே பெரும்பாலான வங்கிகள் சரியாகச் செயல்படுத்தவில்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து பல்லாயிரம் கோடி வாராக்கடன்களாக ஆனதால், சிறிய நிறுவனங்களை நம்பி கடன்கொடுக்க வங்கிகள் தயாராக இல்லை. எனவே, வங்கிக்கடன் அறிவிப்புகளால் எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பது கடினம்’’ என்றார்.
‘‘நிதி அமைச்சரின் அறிவிப்புகளில் குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான வரையறையை மாற்றியமைத்திருப்பதை வரவேற்கிறோம்’’ என்கிறார் ‘டேக்ட்’ அமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ். அவர் மேலும் கூறுகையில், ‘‘தற்போது நவீன எந்திரங்களின் விலை லட்சக்கணக்கில் இருக்கும்போது, மைக்ரோ நிறுவனங் களுக்கான வரையறையை, மூலதன வரம்பை 1 கோடி ரூபாயாகவும், டர்ன் ஓவர் வரம்பை 5 கோடி ரூபாயாகவும் உயர்த்தியிருப்பது பலனளிக்கும். குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவதற்காக 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதையும் வரவேற்கிறோம்.
இதன்மூலம், வங்கிகளில் 4 ஆண்டு தவணையில், பிணையில்லாத கடன்கள் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், வங்கிகள் தரப்பில் இதனை எவ்வாறு செயல்படுத்துவார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. வங்கிகளைப் பொறுத்தவரை, நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்கு நிறைய விதிமுறைகள் வைத்துள்ளார்கள். கடந்த ஆண்டுகளில் நிறுவனத்தின் வரவு செலவு, இருப்பு நிலைகளைப் பார்த்து கடன் அளிக்கப்படும் என்கிறார்கள். ஆனால், இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாகவே பொருளாதார மந்தநிலையின் காரணமாக நிறுவனங்களின் வருமானம் குறைவாகவே இருந்தது. தற்போது கொரோனா காரணமாக முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், நிறுவனத்தின் வரவு செலவுக் கணக்கின் அடிப்படையில் இல்லாமல், நிறுவனம் எம்.எஸ்.எம்.இ-யில் பதிவு செய்யப்பட்டுள்ளதா, இதில் செய்யப் பட்டுள்ள முதலீடு எவ்வளவு என்பதையெல்லாம் மதிப்பிட்டு, அதன் அடிப்படையில் கடன் வழங்கலாம். இப்படி கூடுதலாக வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதத்தை 6 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். அப்படிக் குறைப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப் படவில்லை’’ என்றார்.

மத்திய அரசின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும்கூட வங்கிகள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருவார்கள் என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இந்த விஷயத்தில் வங்கிகள் கறாராக இருப்பதற்குக் காரணமே உயர்ந்துவரும் வாராக்கடன் சிக்கல்களாகும். இதில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காகத்தான் குறு, சிறு நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் கொடுப்பதில் கறார் காட்டுகிறார்கள். இந்த நிலையில் மாற்றம் வந்தால் மட்டுமே இந்த அறிவிப்புகளின் பலன் சம்பந்தப்பட்டவர்களுக்கு சேரக்கூடும். இல்லையென்றால் வெறும் அறிவிப்புகளாகவே நின்றுவிடும்.