தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

‘Money’ துளிகள்: கைமீறி செலவு செய்யத் தூண்டும் கடன் நோட்டு..!

‘Money’ துளிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
News
‘Money’ துளிகள்..!

‘Money’ துளிகள்..!

‘Money’ துளிகள்: கைமீறி செலவு செய்யத் தூண்டும் கடன் நோட்டு..!

ஏழரைக்குப் பதில் நாலரை!

நான்கு வருடங்களுக்குமுன் மிகப் பிரபலமான நகைக்கடை ஒன்று, ‘பழைய தங்க நகைகளைக் கொடுத்துவிட்டு, ஒரு வருடம் கழித்து செய்கூலி, சேதாரம் இன்றி புதிய நகை களை வாங்கிக்கொள்ளலாம்’ என விளம்பரம் செய்தது. அதில் மதிமயங்கி 2018 டிசம்பரில் என் 5 சவரன் சங்கிலியையும் இரண்டரை பவுன் வளையல்களையும் கொடுத்தேன். ஒரு வருட முடிவில் ஒரு கிராமுக்கு 600 ரூபாய் விலை அதிகரிக்கவே, நகைக்கடையை அணுகி விசாரித்தேன். ‘விலை குறையும்வரை காத்திருந்து வாங்கிக்கொள்ளலாம்’ என்றனர். 2020-ல் கொரோனா மட்டுமல்ல, தங்கத்தின் விலையும் ஏகத்துக்கு உயர்ந்தது. மேலும், சில மாதங்கள் காத்திருந்து அன்றைய மதிப்பில் நகை வாங்கினேன். செய் கூலி சேதாரத்துக்கான பணத்தை மிச்சப்படுத்த நினைத்து, ஏழரைப் பவுனுக்குப் பதிலாக வெறும் நாலரைப் பவுன் நகைதான் வாங்கினேன். கிட்டத்தட்ட ரூ.1.25 லட்சம் நஷ்டம்இது போன்ற விளம்பரங்களை நம்பி, யாரும் ஏமாற வேண்டாம்!

- எஸ்.விஜயலட்சுமி, ஈரோடு.

‘Money’ துளிகள்: கைமீறி செலவு செய்யத் தூண்டும் கடன் நோட்டு..!

கடன் இல்லாத தீபாவளி... கைகொடுத்த ஆர்.டி!

தீபாவளி என்றாலே எனக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபாய் செலவு இருக்கும். முன்பெல்லாம் கடன் வாங்கியோ, கிரெடிட் கார்டு மூலமோதான் சமாளித்து வந்தேன். கடந்த 2021 தீபாவளியின்போது ஒரு முடிவு செய்தேன். மாதம்தோறும் சம்பளத்திலிருந்து 900 ரூபாய் வங்கியில் ஆர்.டி ஆரம்பித்து சேர்த்து வந்தேன். அக்டோபர் 2022-ல் மொத்தம் 10,800 ரூபாய் கிடைத்தது. அதில் 9,000 ரூபாய் வரை தீபாவளிக்கு மகிழ்ச்சியாகச் செலவு செய்தேன். மீதம் இருந்த தொகையை தீபாவளி அன்றே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டேன். கடன் வாங்காமல் தீபாவளியைக் கொண்டாடி யதில் எனக்கு மிகவும் சந்தோஷம்.

இப்போது அடுத்த தீபாவளிக்கு ஆர்.டி தொடங்கிவிட்டதால், எனக்கு பணம் இல்லை என்கிற பிரச்னையே இல்லை. குறுகிய காலத்தில் நமக்கு சின்ன சின்னதாகத் தேவைப்படும் தொகையைச் சேர்க்க ஆர்.டி அருமையான வாய்ப்பு!

- ச.அஸ்வின், சிதம்பரம்

‘Money’ துளிகள்: கைமீறி செலவு செய்யத் தூண்டும் கடன் நோட்டு..!

இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்... 25,000 டெபாசிட் கட்டுங்க..!

சில மாதங்களுக்குமுன், எனது மொபைல் போனுக்கு டெல்லியின் லேண்ட்லைன் நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. பிரபல இன்ஷூரன்ஸ் கம்பெனி ஒன்றின் பெயரைச் சொல்லி, அங்கு பாலிசி எடுத்த நபர் ஒருவர் இறந்துவிட்டதாகவும், இறந்தவர் நாமினியாக என் பெயரைத் தந்திருப் பதாகவும் சொன்னார்கள். இறந்தவர் யாரென்றே எனக்குத் தெரியாது. இன்ஷூரன்ஸ் மூலம் கிடைக்கும் இழப்பீட்டுத் தொகையை நான் பெற வேண்டும் எனில், ரூ.25,000 பணத்தை அவர்கள் சொல்லும் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றார்கள்.

அவர்கள் செய்வது தில்லுமுல்லு எனத் தெரிந்தவுடன், “நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள். நான் ரெக்கார்டு செய்துகொண்டிருக்கிறேன், சிறிது நேரத்தில் அங்கு போலீஸ் வந்துவிடும்” என நான் சொன்னவுடன் இந்தியில் கோபமாகத் திட்டிவிட்டு, போனை வைத்துவிட்டார்கள். இப்படியும் ஓர் ஏமாற்றும் கும்பல் இருக்கிறது. உஷார் மக்களே..!

- கிருஷ்ணகுமார், நவி மும்பை

‘Money’ துளிகள்: கைமீறி செலவு செய்யத் தூண்டும் கடன் நோட்டு..!

கைமீறி செலவு செய்யத் தூண்டும் கடன் நோட்டு...

சிறிய மளிகைக் கடை ஒன்றில், வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்களைக் கடனாக வாங்குவேன். சம்பளம் வாங்கியவுடன் மொத்தத் தொகையையும் தந்துவிடுவேன். தேதி தவறாமல் நான் தந்துவிடுவதால், ரூ.5,000, ரூ.6,000 என்றாலும் வாங்கிக்கொள்ளச் சொல்வார் கடைக்காரர்.

கையிலிருந்து ரூபாயாகக் கொடுக்காததால் கண்ணில் பட்டதையெல்லாம் வாங்குவதால், கடன் தொகை சில மாதங்கள் அதிகரித்துவிடும். பொருள்களின் தரம் என்னவோ சுமார்தான். ஒருமுறை நண்பர் ஒருவரிடம் இதுகுறித்து பேசும்போது, ‘கடனில் பொருள்கள் வாங்குபோது இஷ்டத்துக்கு அவசியம் இல்லாத பொருள்களை வாங்கிவிடும் ஆபத்துடன், இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. கடனில் வாங்குபவர்களுக்கு பொருள்களின் விலையை 2% - 3% கடைக்காரர்கள் அதிகம் வைத்து விற்பார்கள்’’ என்றார். இது பற்றி விசாரித்தபோது உண்மை என்று எனக்குத் தெரிந்தது.

அதன் பிறகு கடனில் பொருள்களை வாங்குவதை விட்டுவிட்டு, நண்பர் வாங்கும் ஹோல்சேல் மார்க்கெட்டில் மளிகை சாமான்களை வாங்க ஆரம்பித்துவிட்டேன். பொருள்கள் தரமாக இருந்ததுடன் என் மளிகை பட்ஜெட் 10 - 15% வரை மிச்சமானது.

- சிவதாரன், சென்னை.

பண அனுபவங்களைப் பகிருங்கள்..!

சேமிப்பு, முதலீடு, ஏமாற்றம், இழப்பு, ஷாப்பிங், லாபம், நஷ்டம் என எல்லாவிதமான பண அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட அனுபவங்களுக்கு தகுந்த சன்மானம் உண்டு. அனுப்ப வேண்டிய மெயில் முகவரி: navdesk@vikatan.com