
தெளிவான நிதி இலக்கு இல்லை எனில், வாழ்க்கையின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற முடியாது...
கே.எஸ்.ராவ், தலைவர் - முதலீட்டாளர் கல்வி மற்றும் விநியோக மேம்பாடு, ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி
‘நிதிச் சுதந்திரம் (Financial Freedom)’ என்பது வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு அர்த்தம் தருவ தாக இருக்கிறது. சிலருக்கு, போதுமான செல்வத்தைக் குவிப்பது என்று அர்த்தம்; இன்னும் சிலருக்கு, தேவை யற்ற கடன்களிலிருந்து விடுபடுவது எனப் பலரும் பல வகையில் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள்.

நிதிச் சுதந்திரம் என்பது உங்களுக்கு என்ன அர்த்தம் தந்தாலும், அதை அடைய சில அடிப்படை வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். அந்த அடிப்படை வழிமுறைகள் இதோ...
நிதி இலக்குகள் மிக முக்கியம்...
ஒரு பயணிக்குப் போய் சேரும் ஊர் எந்தளவுக்கு முக்கியமோ, அது போல் உங்கள் முதலீடுகளுக்கான நிதி இலக்குகள் மிகவும் முக்கியமானது. நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், பயணம் செய்வது மூலம் ஊர் போய் சேர முடியாது. அதேபோல், உங்களிடம் தெளிவான நிதி இலக்கு இல்லை எனில், வாழ்க்கையின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற முடியாது.
உங்களிடம் பொருத்தமான நிதி இலக்குகள் இருந்தால், அந்த இலக்குகளை அடைய நீங்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், வாழ்க்கை என்பது ‘நிதி அதிகாரமளிப்பில் வாழ்வது’ (L-I-F-E : Living In Financial Empowerment) என இருக்கும். இல்லை எனில், அது ‘நிதிச் சிக்கலில் வாழ்வது’ (L-I-F-E - ‘Living In Financial Entanglement’) என்பதாக ஆகி விடும். எனவே, வாழ்க்கையின் முக்கியமான குறிக்கோள் களை நிறைவேற்ற நிதி இலக்குகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு முதலீடு செய்து வருவது அவசிய மாகும். அப்போதுதான் நிதிச் சுதந்திரம் அடைய முடியும்.
குடும்ப பட்ஜெட் போடுங்கள்...
குடும்ப வரவு செலவுத் திட்டம் (Budget) உங்கள் செலவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், உங்கள் நிதி இலக்குகளை நோக்கி வேலை செய்ய வைக்கிறது. உங்களுக்காக வேலை செய்யும் ஒன்றை உருவாக்க வும் மற்றும் நீங்கள் வசதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவும் பட்ஜெட் வழி ஏற்படுத்திக் கொடுக்கும். ஒருவர் பட்ஜெட் போட்டு செலவு செய்யும் பட்சத்தில் கூடிய விரைவிலேயே நிதிச் சுதந்திரம் அடைய முடியும்.
பட்ஜெட் தயார் செய்ததும், அதில் அடிப்படை மற்றும் அவசியமான செலவுகளை அடையாளம் காணுங்கள். தேவைகளுக்கும் விருப்பங்களுக்குமான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுங்கள். எது ஒன்று இல்லை என்றாலும், வாழ்க்கை இனிமையாக இருக்கும் எனில், அந்தச் செலவுகளைக் குறைத்தாலே சேமிப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் அதிக பணம் கிடைக்கும்.
இளம் வயதிலேயே சேமிப்பை ஆரம்பியுங்கள்...
கூட்டு வளர்ச்சி / வட்டியின் நன்மைகளை நாம் அனைவரும் அறிவோம். முதலீட்டை முன்கூட்டியே தொடங்குவதன் மூலம் மட்டுமே அதைப் பயன் படுத்திக்கொள்ள முடியும். முதலீட்டை எவ்வளவு சீக்கிரமாக ஆரம்பிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்க வேண்டும். இளம் வயதில் முதலீட்டை ஆரம்பிக்கும்போது சிறிய தொகை இருந்தாலே போதும், பெரிய தொகுப்பு நிதியைச் சேர்த்துவிட முடியும். அப்போது சுலபமாக நிதிச் சுதந்திரமும் கைக்கூடும்.

கடன் மறுசீரமைப்பு...
ஒருவருக்கு கடன் பெரும் நிதிச் சுமையாக இருக்கலாம். இது கடன்கள் அல்லது கிரெடிட் கார்டு பில்களாக இருக்கலாம். அதிக வட்டி செலுத்துவதை விட விரைவில் அவற்றை அடைத்து விடுவது நல்லது. ஒருவர் வட்டி கட்டுவது குறைந்தாலே நிதிச் சுதந்திரம் சீக்கிரம் வாய்க்கும்.
அவசரகால நிதி...
அவசரகால நிதியை ஏன் சேர்த்து வைத்திருக்க வேண்டும் என்பதை நமக்கெல்லாம் கோவிட் -19 தொற்றுநோய் கற்றுக் கொடுத்தது. குறைந்தது ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்கு உங்கள் செலவுகளை ஈடுசெய்யும் அளவுக்கு அவசரகால நிதி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வங்கி சேமிப்புக் கணக்கு மற்றும் வங்கி வைப்புத் தொகையைவிட அதிக வருமானத்தை அளிக்கும், விரைவில் பணமாக்கக்கூடிய லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் அதிக தரக் குறியீடு கொண்ட கடன் ஃபண்டுகளில் அந்தப் பணத்தை முதலீடு செய்து நீங்கள் பயன்படுத்தலாம்.
அவசரச் செலவுக்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்துவதால் நிதிச் சுதந்திரத்துக்காக முதலீடு செய்துவரும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளை எடுக்க வேண்டி இருக்காது. எனவே, உங்களின் நிதிச் சுதந்தரம் நிச்சயமானதாக இருக்கும்.
சீரான முதலீட்டுத் திட்டம்...
செல்வத்தை உருவாக்குவது என்பது திட்ட மிடல் மற்றும் பயிற்சி, குறிப்பிட்ட நிதி இலக்குகளை நிர்ணயிப்பது மற்றும் இந்த இலக்குகளை ஒருமுகப் படுத்தப்பட்ட செயல்களுடன் தொடர்வதாக உள்ளது. அதற்கு சீரான முதலீட்டுத் திட்டம் (Systematic Investment Plan -SIP) உதவும். எஸ்.ஐ.பி-கள், உங்கள் முதலீட்டுப் பயணத்தில் செல்வ உருவாக்கம் மற்றும் நிதிக்கான சுதந்திரத்துக்கு நம்பகமான நண்பனாக இருக்கும். நீண்ட காலத்துக்கு தொடர்ந்து முதலீடு செய்ய எஸ்.ஐ.பி முறை ஓர் எளிய மற்றும் வசதியான வழியாக உள்ளது. சந்தையின் ஏற்ற இறக்கங்கள் இரண்டிலும் தொடர்ந்து முதலீடு செய்ய எஸ்.ஐ.பி முறை உதவும் என்பதால், நீங்கள் செல்வத்தை உருவாக்கி, நிதிச் சுதந்திரத்தை அடைவீர்கள்.
எஸ்.ஐ.பி மூலம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்யப்பட்ட தொகை, 2022 அக்டோபர் மாதத்தில் ரூ.13,041 கோடியாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்ற செப்டம்பர் மாதத்தில் ரூ.12,976 கோடியாக இருந்த எஸ்.ஐ.பி மூலம் திரட்டப்படும் முதலீடு முதல் முறையாக ரூ.13,000 கோடி யைக் கடந்துள்ளது. எஸ்.ஐ.பி முதலீட்டுக் கணக்குகள் 5.93 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தப் போக்கு, எஸ்.ஐ.பி முதலீட்டு முறை மூலம் முதலீட்டாளர்கள் செல்வத்தை உருவாக்கி வருகிறார்கள் என்பதைத் தெளிவாக்கியுள்ளது.

சேமிப்பும் முதலீடும்...
அவசரகால நிதி மற்றும் குறுகிய காலத் தேவைகளுக்கு எஸ்.ஐ.பி முறையில் கடன் ஃபண்டுகளில் சேமித்து செய்து வரலாம்.
நீண்ட கால இலக்குகளுக்கு எஸ்.ஐ.பி முறையில் பங்குச் சந்தை ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். ஈக்விட்டி டைவர்சிஃபைடு ஃபண்டுகள் அதாவது, ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகள் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
சமூகத்துக்கு திருப்பி அளித்தல்...
பெரும்பாலும், நாம் வாழ்வில் வெற்றி பெற்று சிறப்பான இடத்தை அடைந்ததும், பெற்றதை சமூகத்துக்குத் திரும்ப அளிக்க விரும்புகிறோம், ஆனால், போதிய நிதி கிடைக்காமல் அதை மேற்கொள்வ தில்லை. அது போன்ற எண்ணம் இருப்பவர்கள், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு பெரிய தொகுப்பு நிதியைக் குவிக்க எஸ்.ஐ.பி முறையில் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். அதன் மூலம் விருப்பப் படி சமூகத்துக்குத் திரும்ப அளிக்கும் மகிழ்ச்சியைப் பெற முடியும்.