டார்கெட் குரோர்பதி @ 40 -6: இளைஞர்கள் செய்ய வேண்டிய இலக்குகள் சார்ந்த முதலீடுகள்..!

முதலீட்டில் எவ்வளவு ரிஸ்க் இருக்கிறது என்பது முதலீட்டாளருக்குத் தெரிந்திருக்க வேண்டும்...
குறுகிய கால செலவுகள், நடுத்தரக் கால செலவுகள், நீண்ட கால செலவுகள் எனப் பல வகையான செலவுகள் நமக்குண்டு இருக்கின்றன. இன்றைய இளைஞர்கள் இந்த செலவுகளைக் கடன் வாங்காமல், பணத்தை சேமித்து நிறைவேற்ற வேண்டும் எனில், அவர்கள் இலக்கு சார்ந்து முதலீடுகளை (Goal Based Investments) மேற்கொண்டு வருவது கட்டாயம்.

உதாரணமாக, குறுகிய கால இலக்குகள் எனில், கிரெடிட் கார்டு கடனை அடைப்பது, உள்நாட்டு சுற்றுலா செல்வது என்பது போல இருக்கலாம். நடுத்தரக் கால இலக்கு என்பது சொந்தமாக கார் வாங்குவது, வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வது, நீண்ட கால இலக்கு என்பது போல இருக்கலாம். நீண்ட கால இலக்கு என்பது பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் மற்றும் பணி ஓய்வுக் காலம் என்பது போல இருக்கலாம்.
இப்படி நிதி இலக்குகளை நிர்ணயம் செய்துகொண்டு, எத்தனை ஆண்டுகள் கழித்து இதற்கான பணம் தேவைப்படும், அதற்கு மாதம் தோறும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைக் கணக்கிட்டு தொடர்ந்து முதலீடு செய்துவர வேண்டும். ஏற்கெனவே முதலீடுகள் செய்து வரும்பட்சத்தில், அந்த முதலீடுகளை நிதி இலக்கு களுடன் இணைக்க வேண்டும். இதற்கான முதலீட்டுத் தொகையும் சரியான அளவில் இருக்கிறதா என்பதைக் கணக்கிடுவது அவசியம். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், நிதி ஆலோசகர் ஒருவரின் உதவியை நாடத் தயங்கக்கூடாது.
நான்கு வகை சொத்துப் பிரிவுகள்...
முதலீட்டு வாய்ப்புகள் என்று பார்த்தால், முக்கியமாக நான்கு விதமான சொத்துப் பிரிவுகள் (Asset Class) இருக்கின்றன. ஃபிக்ஸட் இன்கம், தங்கம், ரியல் எஸ்டேட், ஈக்விட்டி என்பவை அந்த நான்கு பிரிவுகளாகும்.
இதில் ஃபிக்ஸட் இன்கம் பிரிவின் கீழ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட், தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள், கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகியவை அடக்கும். தங்கம் என்கிறபோது தங்க நகைகள், தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள், கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், தங்கப் பத்திரம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ரியல் எஸ்டேட் என்கிறபோது வீடு, மனை ஆகியவையும், ஈக்விட்டி என்கிறபோது நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளைக் குறிக்கும்.
இந்த நான்கு சொத்துப் பிரிவுகளில் எந்தச் சொத்துப் பிரிவு உங்களின் எந்த நிதி இலக்கை நிறைவேற்றும் என்பதைக் கண்டறிந்து அதில் முதலீடு செய்யவேண்டும். அதற்கு இந்தச் சொத்துப் பிரிவுகளில் குறுகிய காலத்தில், நடுத்தரக் காலத்தில், நீண்ட காலத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்; முதலீட்டில் எவ்வளவு ரிஸ்க் இருக்கிறது என்பது முதலீட்டாளருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
ஃபிக்ஸட் இன்கம் பிரிவின்கீழ் வரும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை எடுத்துக்கொள்வோம். இதன் சிறப்பு 100% நிலையான வட்டி வருமானம். ஆனால், பெரிய பாதக அம்சம் என்பது மிகக் குறைவான வருமானம் ஆகும். அந்த வருமானம் பணவீக்க விகிதம் அதாவது, விலைவாசி உயர்வு அளவுக்குதான் இருக்கும். இன்றைக்குப் பணவீக்க விகிதம் 6% - 7 சதவிகிதமாக உள்ளது. இதே அளவுக்குதான் ஃபிக்ஸட் டெபாசிட் வருமானமும் இருக்கிறது.
சேவைக்கான பணவீக்க விகிதம் அதாவது, கல்விக் கட்டணம், மருத்துவக் கட்டணம் ஆகியவற்றின் பணவீக்க விகிதம் என்பது 8% - 9 சதவிகிதமாக இருக்கிறது. அந்த வகையில் ஃபிக்ஸட் டெபாசிட், ஃபிக்ஸட் இன்கம் முதலீட்டுத் திட்டங்கள் மூலம் பணவீக்க விகிதத்தைத் தாண்டிய வருமானம் கிடைப்பது கடினம்.

எது நல்ல முதலீடு?
ஒரு நல்ல முதலீடு என்பது பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தருவதாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் பணவீக்க விகிதத்தைவிட 3% - 4% அதிக வருமானம் தருவதாக இருக்க வேண்டும். பணவீக்க விகிதத்தைவிட இரு மடங்கு வருமானம் கொடுக்கும் முதலீடு மிக நல்ல முதலீடுகளாகும்.பணவீக்க விகிதம் 6% - 7% என்ற நிலையில் சுமார் 12% - 14% வருமானம் நீண்ட காலத்தில் கிடைக்கும்பட்சத்தில் அது நல்ல முதலீடு.
அடுத்த சொத்துப் பிரிவு, தங்கம். கடந்த 5000-க்கும் மேற் பட்ட ஆண்டுகளாக இந்தியர்கள் தங்க நகைகளை வாங்கி வருகி றார்கள். நமக்கும் தங் கத்துக்கும் இருக்கும் உறவு மிக நீண்டது. தங்கத்தின் நீண்ட கால வருமானம் என்பது ஆண்டுக்கு சராசரியாக 7% அளவுக்குத்தான் இருக்கிறது. அந்த வகையில் தங்கத்தின் மூலமான வருமானமும் பணவீக்க விகித அளவுக்குதான் இருக்கிறது.
அதற்காக ஃபிக்ஸட் இன்கம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யக் கூடாது என்பதல்ல. ஒருவரின் ஒட்டுமொத்த முதலீட் டில் சுமார் 10% - 15% தொகையை ஃபிக்ஸட் இன்கம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்து வரலாம். மொத்த பணத்தையும் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் தங்கத்தில் போடும்பட்சத்தில் இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் குறைவாக இருப்பதால், நிதி இலக்குகளை நிறைவேற்ற அதிகத் தொகை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அல்லது நிதி இலக்குகளைத் தள்ளிப்போட வேண்டியிருக்கும். அணிந்து அழகு பார்க்கத் தேவைக்கு மட்டுமே தங்க நகை வாங்கிக்கொள்ளலாம்.
ரியல் எஸ்டேட்...
மூன்றாவது சொத்துப் பிரிவு, ரியல் எஸ்டேட். இது எப்போதும் உணர்ச்சிப் பூர்வமான முதலீடாக இருக்கிறது. முதலீட்டைத் தாண்டி அனைவருக்கும் ஒரு சொந்த வீடு கனவாக இருக்கும். அது தனிவீடாக இருக்கலாம் அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பாக இருக்கலாம். இது குடியிருக்க பயன்படுவது சாதகமான அம்சமாகும். அதுவே, ஆனால், இதை எளிதில் விற்றுப் பணமாக்க முடியாது. மனை அல்லது வீட்டை விற்க சில மாதங்கள் ஏன் சில ஆண்டுகள் கூட காத்திருக்க வேண்டி வரலாம்.
இதில் உள்ள இன்னொரு பாதகமான அம்சம், அதன் விலையை சரியாக நிர்ணயிக்க முடியாதது. நியாயமான சந்தை விலை என்று எதையும் குறிப்பிட முடியாது. மேலும், விலை ஏற்றம் என்பது எல்லாப் பகுதிகளிலும் சமமாக இருக்காது. சில இடங்களில் நீண்ட ஆண்டுகளுக்கு விலை ஏறாமல்கூட இருக்கும். ஒருவர் அவரின் வீட்டின் மதிப்பு ரூ.1 கோடி என நினைத்துக்கொண்டிருப்பார். விற்க வேண்டும் என்று நினைக்கும்போது, வாங்குபவர்கள் கேட்கும் விலைகளைப் பொறுத்தே அதன் விலை இருக்கும். ரூ.1 கோடிக்குப் போகும் என்று நினைத்த வீடு, ரூ.75 லட்சத்துக்குப் பலரும் கேட்கும் நிலையில் அந்த விலைக்குத்தான் விற்கவேண்டிய நிலை வரும். ஆறு மாதம் அல்லது ஓராண்டு காத்திருந்தபின், தேவைகள் நெருக்கும்போது கேட்கும் விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள்...
நான்காவது சொத்துப் பிரிவு, பங்குச் சந்தை சார்ந்தது. இதில் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் முக்கியமானவை. இவற்றின் மூலம் நீண்ட காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த 12% வருமானம், ஆண்டுதோறும் ஃபிக்ஸட் டெபாசிட் மாதிரி கிடைக்குமா எனில், கிடைக்காது. பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் என்பது உத்தரவாதமான வருமானம் தரும் முதலீடு கிடையாது. குறுகிய காலத்தில் மூலதனத்தில்கூட இழப்பு ஏற்படும் ரிஸ்க் இருக்கிறது. ஆனால், நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட இரு மடங்கு வருமானத்தை எதிர்பார்க்க லாம். ஒருவர் பொறுமையாக ஐந்தாண்டுகளுக்குமேல் தொடர்ந்து இடைவிடாது முதலீடு செய்து வரும்பட்சத்தில் நல்ல வருமானத்தைப் பெற முடியும்.
ஒருவரின் ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட நிதி இலக்குகளுக்கு நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் இளைஞர்கள் முதலீடு செய்துவரலாம். பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். மேலும், இவற்றின் மூலமான வருமானத்துக்குக் கட்டும் வருமான வரி, இதர சொத்துப் பிரிவுகளைவிட குறைவாக இருக்கும். மேலும், இந்த முதலீடுகளை விற்கும்போது மூன்று நாள்களுக்குள் பணம் வங்கிக் கணக்கு வந்து சேர்ந்துவிடும்.
எந்த ஒரு முதலீட்டையும் நாம் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தாலும், அதை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த முடியவில்லை எனில், அதனால் பெரிய பலன் இல்லை. ரியல் எஸ்டேட், எண்டோவ்மென்ட் லைஃப் பாலிசி ஆகியவற்றை எளிதில் பணமாக்குவது கஷ்டம். ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை, குடியிருக்க ஒரு வீடு வாங்குவது நல்லது. அதற்குமேல் அதில் பணத்தைப் போடுவது லாபம் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு குறைவான காலம் இருக்கும்பட்சத்தில் ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
பொதுவாக, ஒருவரின் மொத்த முதலீட்டில் 10% ஃபிக்ஸட் இன்கம், 10% தங்கம், 40% பங்குச் சந்தை சார்ந்த முதலீடு, 40% ரியல் எஸ்டேட் என பிரித்து முதலீடு செய் வது லாபகரமாக இருக்கும். உங்கள் குறிப்பிட்ட தேவைக் கேற்ப, இதில் 5% - 10% முன்பின் இருந்தால் தவறில்லை!
(குரோர்பதி ஆவோம்)