
ரஷ்ய-உக்ரைன் போர், சர்வதேசப் பணவீக்கம், உள்ளூர் பணவீக்கம், இந்திய ரூபாயின் பணமதிப்பு ஆகியவைதான் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறது...
உலக அரங்கில் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் 2023-ம் ஆண்டு உருவாக இருக்கும் பொருளாதர மந்தநிலை காரணமாக இந்த ஆண்டு தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்றும் 10 கிராம் தங்கத்தின் விலையானது 62,000 ரூபாயைத் தொடலாம் என்றும் தரகு நிறுவனங்கள் கூறுகின்றன. இது குறித்து கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர் கூறியதாவது...
“தங்கத்தின் விலை இவ்வளவுக்குப் போகும் என்று யாராலும் உறுதியாகக் கூற முடியாது. அமெரிக்க ஃபெடரல் வங்கி எடுக்கக்கூடிய வட்டிவிகித உயர்வு போன்ற முக்கியமான முடிவுகளைப் பொறுத்தே சர்வதேச தங்கத்தின் விலை நிர்ணயமாகும். அதைப் பொறுத்து இந்தியாவிலும் தங்கம் விலை நிர்ணயம் ஆகும்.

அமெரிக்க ஃபெடரல் வங்கி, பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார புள்ளிவிவரத்தைப் பொறுத்து தங்களது வட்டி விகித மாற்றங்களை முடிவு செய்யும். தற்போது அமெரிக்காவில் பணவீக்கம் அதிகமாக இருப்பதால், அமெரிக்க ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதங்களை அதிகரித்து வருகிறது. பணவீக்கத்தை 2%-க்குள் கொண்டு வர வேண்டும் என்பதே அவர்களது இலக்கு. இதை நோக்கியே அவர்களது பயணம் இருக்கிறது.
பொதுவாக, வட்டி விகிதங்களை உயர்த்தும் போது, கடன் வாங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து சில நடைமுறை சிக்கல்கள் ஏற்படும். இதைத் தடுக்க அமெரிக்க ஃபெடரல் வங்கி பொருளாதார நடவடிக்கை களைக் குறைப்பதால், பொருளாதார தேக்க நிலை உருவாகிறது. தவிர, ரஷ்யா-உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல பொருள்களின் விநியோகம் பாதிக்கப்படுகிறது. தங்கம் தேவை உள்ள நாடுகளில் அதிக விலை கொடுத்து தங்கம் வாங்கும்போது, பணவீக்கமும் அதிகரிக்கிறது. இது அனைத்து இடங்களிலும் பிரதிபலிக்கும்.
இனி, அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் வட்டி ஏற்றப்போக்கு, ரஷ்ய-உக்ரைன் போர், சர்வதேசப் பணவீக்கம், உள்ளூர் பணவீக்கம், இந்திய ரூபாயின் பணமதிப்பு ஆகியவைதான் தங்கத்தின் விலையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும்’’ என்றார்.