லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

உச்சத்தில் விலை... தங்கம் தவிர்க்க முடியாததா, தவிக்கவைப்பதா?

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கம்

#Avaludan

உலகம் முதல் உள்ளூர் வரை, பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...

இந்த வாரத்தில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ 45,520 வரை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது (சென்னை விலை). கிராம் ரூ.5,690. மேலும் இந்த மாதம் 23-ம் தேதி அட்சய திரிதியை வருவது குறிப்பிடத்தக்கது. தங்கத்தை முதலீடாக மேற்கொள்வது, இந்திய கல்யாணச் சந்தையில் தங்கம் முக்கிய இடம்பெற்றிருப்பதால் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு அது மிகப்பெரிய சுமையாக இருப்பது, பெண்களுக்குத் தங்க நகைகள் மீதிருக்கும் விருப்பம்... இப்படி தங்கம் ஒவ்வொரு வீட்டிலும் எந்தளவுக்குத் தவிர்க்க முடியாததாகவும், தவிக்க வைப்பதாகவும் உள்ளது என்பது குறித்த உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்...

தங்கம்
தங்கம்

Kishor

சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று, தங்கத்தை அதிகமாகக் கொள்முதல் செய்யும் நாடுகளில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது (முதல் இடத்தில் சைனா இருக்கிறது). இந்தியாவில் வாங்கப்படும் தங்கத்தில் 50% திருமணத் தேவைகளுக்காக வாங்கப்படுகிறது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. முதலீட்டுக்காக, ஆசைக்காக நகை வாங்குபவர்களைவிட, மகள்களின் திருமணத்துக்கு கடன்பட்டாவது பொன்னகை போட்டு அனுப்பும் குடும்பங்களே இங்கு பெரும்பான்மை. திருமணங்களில் நகைகளின் முக்கியத்துவம் குறையும் போதுதான், நடுத்தர மற்றும் ஏழை வர்க்கக் குடும்பங்களின் முதுகெலும்பு இங்கு நிமிர முடியும்.

Saraswathi Duraisamy

ஏறிக்கொண்டே இருக்கும் தங்கத்தின் விலை சொல்லும் நிரந்தர செய்தி... தங்கம் ஒரு சிறந்த முதலீடு. ஆனால், முதலீட்டு நோக்கத்துக்காக வாங்குபவர்கள் ஆபரணமாக அல்லாமல் காயின்கள், பேப்பர் கோல்டு என்று வாங்க வேண்டும்.

Balambigai

இந்தியக் குடும்பங்களில் தங்கம் ஒரு சிறந்த சேமிப்பாகவும், ஆபத்துக்குக் கைகொடுப்பதாகவும் இருப்பதை மறுக்க முடியாது. இங்கு பலரும் பெண்களை நகைக்கு ஆசைப் படுபவர்கள் என்று கேலி செய்வதை பார்க்கலாம். ஆனால், ஆசையுடன் சிறுகச் சேர்த்து நகை வாங்குவது மட்டுமல்ல, குடும்பத்துக்கு ஒரு நிதிப்பற்றாக்குறை வரும்போது அடமானத்துக்கு அந்த நகைகளைக் கொடுத்துக் கரை யேற்றுவதும் அதே பெண்கள்தான். அந்த வகையில், மற்ற முதலீடுகள் பற்றியெல்லாம் அதிகம் அறிந்திடாதவர்கள், தங்களுக்குத் தெரிந்த முதலீடாக தங்க நகைகளை வாங்கிவைக்கிறார்கள். ஒரு வகையில் அது அவர்களுக்கு தன்னம்பிக்கையும், நிதிப்பாதுகாப்பும் தருகிறது.

Gomathi Sivayam

தங்கத்தை வாங்கும் பொருளாதார சூழல் உள்ளவர்கள் அதை வாங்கலாம். ஆனால், அது தங்களுக்கு சுமையை ஏற்றும் என்ற நிலையில் இருப்பவர்கள், தங்கத்தைத் தவிர்க்கும் முடிவை எடுக்க வேண்டும். அதற்கு, ‘பொண்ணுக்கு எத்தனை பவுன் நகை போடுவீங்க’ என்ற கேள்வியே திருமணங்களை முடிவு செய்யும் நிலை மாற வேண்டும்.

Janaki Paranthaman

கல்யாணத்துக்குப் பெண் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தங்கம் பெரும்பான்மையான வீடுகளில் ஒரு மோகப் பொரு ளாகவே சேர்க்கப்படுகிறது. என்னதான் விலை கூடினாலும் அட்சய திரிதியைக்கு நகைக்கடைகளில் குவியும் கூட்டத்தை பார்க்கும்போது, தங்கத்தின் விலை மட்டுமல்ல, மக்களின் வாங்கும் திறனும்தான் அதிகரித்துள்ளது என்ற முடிவுக்கும் வரவேண்டியுள்ளது.

Jaganathan Papannan

நிலம், வீடு என்பதை போல தங்கம் இங்கு பணம் இருப்பவர் களுக்கான முதலீடாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. அது அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கான மதிப்பீடாகப் பார்க்கப்படுகிறது. ஏழை என்றாலும் கம்மல், மூக்குத்தியாவது கட்டாயம். நடுத்தரக் குடும்பங்களில் கைகளில் எத்தனை வளையல், கழுத்தில் என்ன செயின் என்று தங்கத்தின் மதிப்பீடு கிரேடு ஏறுகிறது. பணக்காரர்கள் அள்ளி அணிந்துகொள்கிறார்கள். எனவேதான் தவித்தாலும் தவிர்க்க முடியாமல் தங்கம் வாங்குகிறார்கள் பலர்.

Prithi Gal

கையில் காசு இல்லை என்ற போதிலும் ஸ்டேட்டஸ் சிம்பலுக் காக தங்கத்தை சீட்டு போட்டு, கடன் வாங்கி, லோன் எடுத்து என வாங்கி வைப்பவர்களுக்கு... சில வார்த்தைகள். இன்றைய விலையில் அத்தனை ஆயிரங்கள், லட்சங்கள் போட்டு வாங்கப் படும் நகைகள், நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்லும் சொற்ப நாள்களை தவிர, மற்ற நாள்களில் எல்லாம் அலமாரியில் தூங்குகிறது. ஆனால், அதற்காக வாங்கிய கடனுக்கோ,

எம்.எம்.ஐக்கோ, சீட்டுக் கட்டவோ அந்தக் குடும்பத்தலைவன்/குடும்பத்தலைவி வருடம் முழுக்க உழைக்கிறார். தங்க நகை போட்டால்தான் மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள் என்ற எண்ணத்துக்கு, நாம் கொடுக்கும் விலை அதிகம். நமக்காக நம்மை மதிப்பவர்கள் போதும். கடன் தவணை இல்லாத நிம்மதியான வாழ்வு வாழலாம்.