2023-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது. ஆனால் கடந்த மூன்று தினங்களாக தங்கம் விலை கிடுகிடுவென ஏறி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த புதன்கிழமை, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.91-ம், பவுன் ஒன்றுக்கு ரூ.728-ம் ஒரே நாளில் உயர்ந்தது. அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,706 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.45,648 ஆகவும் விற்பனை ஆனது. ஒரே நாளில் ரூ.91 உயர்ந்து அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அடுத்த நாளான வியாழக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.5,750 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.46,000 ஆகவும் விற்பனை ஆகி தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. நேற்றும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,775 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.46,200 ஆகவும் விற்பனை ஆனது.

இப்படி தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே வந்த தங்கத்தின் விலை இன்று திடீரென்று குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.83 குறைந்து ரூ.5,692 ஆகவும், ஒரு பவுன் தங்கம் ரூ.45,436 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது.
கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை மட்டும் தான் உயர்ந்ததா? வெள்ளி கடந்த மூன்று நாட்களில் அதிகபட்சமாக ரூ.1.30 வரை விலை உயர்ந்தது. கடந்த புதன்கிழமை ஒரு கிராம் வெள்ளி ரூ.81.80 ஆக இருந்தது. அடுத்த நாளான வியாழக்கிழமை ஒரு கிராம் வெள்ளி ரூ.82.80 ஆக விற்பனை ஆனது.
நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.83.70 ஆக விற்பனை ஆனது. ஆனால் இன்று ரூ.1.30 குறைந்து ரூ.82.40 ஆக விற்பனை ஆகி வருகிறது.