நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

வருமான வரி விதிப்பில் மாற்றம்: தங்க நகை முதல் தங்கப் பத்திரம் வரை... எது லாபம் தரும்?

தங்கம்...
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கம்...

5 ஆண்டுகளுக்குமேல் காத்திருக்க முடியும் என்பவர்களுக்கு ஆர்.பி.ஐ வெளியிடும் தங்கப் பத்திர முதலீடு லாபகரமாக இருக்கும்...

நிதி மசோதா 2023-24-ல் மத்திய அரசு செய்த திருத்தத்தால், கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை மூன்றாண்டுகளுக்குப் பிறகு விற்கும்போது, வழங்கப்பட்ட நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகை நீக்கப்பட்டிருக்கிறது. அதாவது, முதலீடு செய்து மூன்றாண்டு கழித்து விற்கும் போது, லாபத்தில் பணவீக்க விகிதத்தை ஈடுகட்டுவது (Indexation) நீக்கப்பட்டிருக்கிறது.

ராமகிருஷ்ணன் வி நாயக் நிறுவனர், 
https://www.dakshincapital.com/
ராமகிருஷ்ணன் வி நாயக் நிறுவனர், https://www.dakshincapital.com/

பணவீக்க விகித ஈடுகட்டல் என்பது முதலீட்டின் மீதான லாபத்தில் பணவீக்கத்தைக் கழித்துக்கொள்வதாகும். உதாரணமாக, ஒரு கடன் ஃபண்ட் ஆண்டுக்கு 8% வருமானம் கொடுத்துள்ளது. மூன்றாண்டுகளில் மொத்தம் 24% லாபம் தந்திருக்கும். இந்த மூன்றாண்டுகளில் சராசரி பணவீக்க விகிதம் 7% என வைத்துக்கொண்டால், மூன்று ஆண்டுகளில் மொத்தப் பணவீக்க விகிதம் 21% ஆகும். இந்த ஃபண்ட் யூனிட்டுகளை மூன்று ஆண்டுகள் கழித்து விற்கும்போது, பணவீக்க விகித சரிக்கட்டலால் (24 - 21), 3 சதவிகிதத்துக்கு மட்டும் 20% வருமான வரி கட்டினால் போதும்.

வருமான வரி விதிப்பில் மாற்றம்:
தங்க நகை முதல் தங்கப் பத்திரம் வரை... எது லாபம் தரும்?

வருமான வரி விதிப்பில் மாற்றம்...

2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல், இந்திய நிறுவனப் பங்குகளில் 35% மற்றும் அதற்கும் குறைவாக முதலீடு செய்யும் கடன் ஃபண்டுகளுக்கு அவற்றின் முதலீட்டுக் காலம் எதுவாக இருந்தாலும் முதலீட்டாளர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வருமான வரி கட்ட வேண்டும் என நிதி மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. கடன் ஃபண்டுகளில் செய்யப்பட்ட வருமான வரி மாற்றம் காரணமாக, கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகள், கோல்டு இ.டி.எஃப்-கள் ஆகியவற்றின் வருமானத்துக்கு முன்பைவிட அதிக வரி கட்ட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதாவது, கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகள், கோல்டு இ.டி.எஃப்-களில் பொது மக்களிடமிருந்து திரட்டப்படும் நிதி, இந்திய நிறுவனப் பங்குகளில் 35 சதவிகிதத்துக்கும் குறைவாக முதலீடு செய்யப்படுவதால், அந்த ஃபண்டின் லாபத்துக்கு முதலீட்டாளர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும்.

தங்கத்தில் முதலீடு செய்ய பல வழிகள்...

தங்கத்தில் முதலீடு செய்ய பல வழிகள் உள்ளன. தங்க நகை, தங்க நாணயம், தங்கக் கட்டியாக வாங்கலாம். டிஜிட்டல் வழியில் எனில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், கோல்டு இ.டி.எஃப்-ஆக முதலீடு செய்யலாம். மேலும், ஆர்.பி.ஐ வெளியிடும் தங்கப் பத்திரம் (Gold Bond) மூலமும் தங்கத்தில் முதலீடு செய்யலாம். கோல்டு பாண்ட் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.5% வட்டியும் வழங்கப் படுகிறது.

தங்கத்தை நகையாக வாங்கும்போது செய்கூலி, சேதாரம் சுமார் 12 - 15% இருக்கிறது; 3% ஜி.எஸ்.டி உண்டு. ஆக, நகை வாங்கும்போதே 15 - 18% போய்விடுகிறது. இந்த நகையை ஓராண்டுக்குள் விற்றால் லாபத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்புக்குள் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். இதுவே அவர் மூன்றாண்டுகள் கழித்து விற்கும் போது, பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு, ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும் 20% கட்டினால் போதும். இதே சலுகை இதற்குமுன் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், கோல்டு இ.டி.எஃப்-க்கும் வழங்கப்பட்டது. ஆனால், 2023 ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு செய்யப்படும் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், கோல்டு இ.டி.எஃப் முதலீட்டுக்கு முதலீட்டுக் காலம் எதுவாக இருந்தாலும், முதலீட்டாளர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும்.

வருமான வரி ஆதாயக் கணக்கு...

தங்கப் பத்திர முதலீட்டில் வருமான வரியில் புதிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்தப் பத்திரத்தில் முதலீட்டை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, எடுக்கும்பட்சத்தில் மூலதன ஆதாய வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை. மேலும், இதன் யூனிட்டுகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப் படுவதால், ஓராண்டு கழித்து விற்கும்போது, பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20% வரி கட்டினால் போதும்.அந்த வகையில், வருமான வரி ஆதாயத்தின்படி முதல் இடத்தில் ஆர்.பி.ஐ தங்கப் பத்திரம் வருகிறது. இரண்டாவது இடத்தில், தங்க நகைகள், நாணயங்கள் வருகின்றன. அதற்கு அடுத்த இடங்களில்தான் கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகள் மற்றும் கோல்டு இ.டி.எஃப் ஆகிய முதலீடுகள் வருகின்றன.

வருமான வரி விதிப்பில் மாற்றம்:
தங்க நகை முதல் தங்கப் பத்திரம் வரை... எது லாபம் தரும்?

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

தங்க நகையைப் பொறுத்த வரையில் முதலீட்டு நோக்கில் வாங்குவது அதிக இழப்பாக இருக்கும். காரணம், செய்கூலி. சேதாரம், ஜி.எஸ்.டி எல்லாம் சேர்ந்து 15 - 20% அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்தால் தான் லாபம். மேலும், தங்கத்தை விற்கும்போது பழைய நகை எனத் தங்கத்தின் விலையில் 2% - 3% கழிக்கப்படும். மேலும், பல நகைக் கடைகளில் தங்க நகையை வாங்கிக்கொண்டு முழுப் பணம் தர மாட்டார்கள். கொஞ்சம் பணம் தந்துவிட்டு, மீதமுள்ள பணத்துக்கு நகை வாங்கச் சொல்வார்கள். இவற்றையெல்லாம் கூட்டிக் கழிக்கும்போது, லாபத்துக்கு அதிக வரி கட்டினாலும் டிஜிட்டல் தங்க முதலீடுகள் லாபகரமாக இருக்கின்றன. டிஜிட்டல் தங்க முதலீடு என்கிறபோது, ஆர்.பி.ஐ-யின் தங்கப் பத்திரத்தை நினைத்த நேரத்தில் வாங்க முடியாது. அது ஆண்டுக்கு சில முறை மட்டுமே வெளியிடப்படும். அப்போதுதான் அதை வாங்க முடியும். மேலும், அதை விற்பதும் சுலபம் இல்லை.

ஆனால், டீமேட் கணக்கில் இருக்கும் கோல்டு பாண்ட் யூனிட்டு களை ஒருவர் எப்போது வேண்டு மானாலும் விற்க முடியும். உடனே விற்க முடியவில்லை என்றாலும், சில தினங்களுக்குள்ளாவது விற்க முடியும். இதன் குறைந்தபட்ச ‘லாக்இன் பீரியட்’ ஐந்து ஆண்டுகள் ஆகும். குறைந்தபட்சம் முதலீடு செய்ய ரூ.5,500 தேவை. ஆனால், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், கோல்டு இ.டி.எஃப்-களில் எப்போது வேண்டு மானாலும் முதலீடு செய்யலாம்; வெளியேறலாம்.

கோல்டு இ.டி.எஃப்-களில் முதலீடு செய்ய டீமேட் தேவை; ஆண்டுக்கு 300 - 500 ரூபாய் டீமேட் பராமரிப்புச் செலவு இருக்கிறது. முதலீட்டாளருக்கு ஏற்கெனவே பங்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கான டீமேட் கணக்கு இருந்தால், அதிலேயே கோல்டு இ.டி.எஃப் முதலீட்டையும் மேற்கொள்ள முடியும். இவற்றில் முதலீடு செய்ய சுமார் ரூ.55 இருந்தால்கூட போதும்.

கோல்டு சேவிங்ஸ் ஃபண்டில் முதலீடு செய்ய பான், ஆதார் எண் இருந்தால் போதும். இதில் எஸ்.ஐ.பி முறை யில் மாதம் ரூ.100, ரூ.500, ரூ.1,000கூட முதலீடு செய்யலாம். இந்த அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்தால், வருமான வரியைக் கணக்கிட்டால் குறைவான வருமானம் கொண்டவர்கள், குறைவான சேதாரம் கொண்ட நகை களை வாங்கியிருக்கும் நிலையில், அதன் விலை சுமார் 12 - 15 சதவிகிதத்துக்குமேல் (சேதாரம், செய்கூலி, ஜி.எஸ்.டி) தங்கத்தின் விலை மிக அதிகமாக 25% என்பதுபோல் அதிகரித்தால்தான் லாபமாக இருக்கும். அதே நேரத்தில், தங்க நாணயத்தில் முதலீடு செய்திருந்தால், ஜி.எஸ்.டி வரி 3%, செய்கூலி, சேதாரம் 5% என்பது இழப்பாக இருக்கும்.

தங்கத்தில் முதலீடு செய்து, ஐந்து முதல் எட்டு ஆண்டுகள் வரை காத்திருக்கத் தயார் என்பவர்களுக்கு ஆர்.பி.ஐ தங்கப் பத்திர முதலீடு லாபகரமாக இருக்கும். இதில் செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி இழப்பு கிடையாது. முதலீட்டுக்கு செலவு கிடையாது. வருமான வரி பற்றி கவலையில்லை. தங்கத்தின் திடீர் விலை அதிகரிப்பால் விரைந்து லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் மற்றும் கோல்டு இ.டி.எஃப் ஏற்றதாக இருக்கும். தங்கத்தில் ஒருவர் அவரின் மொத்த முதலீட்டில் சுமார் 10% - 15% அளவுக்குதான் முதலீடு செய்ய வேண்டும்.

பங்குச் சந்தை ஃபண்டுகள்...

10, 15, 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தங்க நகை வாங்க வேண்டும் என்பவர்கள் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் (லார்ஜ்கேப் ஃபண்ட், மல்ட்டி கேப் ஃபண்ட், ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட்) முதலீடு செய்து, அந்தத் தொகையைக் கொண்டு புதிய டிசைன் நகை வாங்குவதுதான் லாபகரமாக இருக்கும். மேலும், இந்த ஃபண்டுகள் மூலம் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் எதிர்பார்க்கலாம். இந்த ஈக்விட்டி ஃபண்டுகள் வருமான வரி அனுகூலம் கொண்டவை. அதாவது, முதலீடு செய்து ஓராண்டுக்கு மேற்பட்ட நிலையில் நிதியாண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு வரி இல்லை; அதற்கு மேற்பட்ட ஆதாயத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும் 10% வரி கட்டினால் போதும்.