இந்தியாவில் விற்கப்படும் மொத்த நகைகளில், பாதி நகைகள் `மணப்பெண் நகைகள்' என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

தங்கத்தின் விலை எவ்வளவு கூடினாலும், தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைவதில்லை. விழாக்கள், திருமணங்கள், அன்பளிப்புகள் எனத் தங்கம் மக்களின் வாழ்வில் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. இந்தியாவில் விற்கப்படும் தங்க நகைகள் குறித்த சமீபத்திய அறிக்கையை உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ளது.
அதில்,...
* உலகம் முழுதும் தங்கம் விற்பனையில் இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா செயல்படுகிறது. இந்தியாவில் விற்கப்படும் தங்கத்தில் பாதி தங்கம் மணப்பெண் நகைகளுக்கானது.
* மணப்பெண் நகைகள் 22 காரட் தங்கத்தால் செய்யப்படுகிறது. தினசரி பயன்பாட்டுக்கான மணப்பெண் அணியும் நகைகள் 22, 18, 14 காரட் தங்கத்தால் ஆனது.
* தினசரி அணியும் தங்கநகைகள் 5 - 30 கிராம் லைட் வெயிட் எடையுடையவை. இவற்றின் மொத்த விற்பனை 35 - 40 சதவிகிதம். பேஷன் நகைகள் 5 - 20 கிராம் அதிக லைட் வெயிட் எடை கொண்டவை. இவற்றின் விற்பனை 5 - 10 சதவிகிதம்.

* தினசரி அணியும் நகைகள், பேஷன் நகைகளைப் போலல்லாமல், மணப்பெண்களுக்கான தங்க நகைகள் அதிக எடையுடையவை. எடையின் அடிப்படையில் கணக்கிட்டால், விற்பனையில் மணப்பெண் நகைகள் 50 - 55 சதவிகித இடத்தைப் பிடிக்கிறது.
* தங்கத்தின் விலை 2012-ல் இருமடங்கானது. இதனால் தங்க வியாபாரிகள் அதிக எடை கொண்ட நகையிலிருந்து லேசான எடை கொண்ட நகைகளை அதிக அளவு உருவாக்க ஆரம்பித்தனர்.
* பிரபலமாகி வந்த மாடர்ன் டிசைன்கள் மீதிருந்த ஆசை, தங்க விலை உயர்வு, பதிக்கப்பட்ட வைர நகைகளின் வளர்ச்சி போன்ற காரணங்கள், லேசான தங்க நகை விற்பனைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
* இந்திய மக்கள் தொகையில் பாதி பேர் 25 வயதுக்குட்பட்டவர்கள். 35 வயதுக்குட்பட்டவர்கள் 65 சதவிகிதத்தினர். வருடத்துக்கு இந்தியாவில் 1.1 முதல் 1.3 கோடி திருமணங்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது. திருமணத்துக்காக மணப்பெண் தேவைக்கான நகைகளை நீண்ட காலத்துக்கு தக்க வைக்கின்றனர்.
* கடந்த தசாப்தத்தில், இந்தியாவின் நகை ஏற்றுமதியில் ஏறக்குறைய 90 சதவிகிதம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து போன்ற ஐந்து பெரிய சந்தைகளுக்கு மட்டுமே சென்றுள்ளது.

* இந்தியா 146 நாடுகளுக்குத் தங்கத்தை ஏற்றுமதி செய்யும் போது, அவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட மிகச் சிறிய வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
* தசாப்தங்களுக்கு முன்பு வெகுசில தங்க நகை சில்லறை விற்பனையாளர்கள் மட்டுமே ஆன்லைன் விற்பனையில் கவனம் செலுத்தினர். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக வலைதளத்தின் பயன்பட்டால், பெரிய சிறிய என அனைத்து சில்லறை நகைக்கடை விற்பனையாளர்களும் ஆன்லைனில் விற்பனை செய்கின்றனர். இது தங்க நகை விற்பனையை அதிகரித்திருக்கிறது.