Published:Updated:

22 ஆண்டுகளாக ஏமாற்றிய நிறுவனம்... 50 கிராம் தங்கத்தை போராடி வாங்கிய அதிர்ஷ்டசாலி!

நுகர்வோர் நீதிமன்றம்

கார்ப்பரேட் நிறுவனங்களால் பாதிக்கப்படும் நுகர்வோர்கள் அனைவரும் தமது பிரச்னைக்காக முறையீடு செய்வது இல்லை. இதைத்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

Published:Updated:

22 ஆண்டுகளாக ஏமாற்றிய நிறுவனம்... 50 கிராம் தங்கத்தை போராடி வாங்கிய அதிர்ஷ்டசாலி!

கார்ப்பரேட் நிறுவனங்களால் பாதிக்கப்படும் நுகர்வோர்கள் அனைவரும் தமது பிரச்னைக்காக முறையீடு செய்வது இல்லை. இதைத்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

நுகர்வோர் நீதிமன்றம்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் சிறு கடை நடத்தி வருபவர் ஷியாம் லாவண்யா. இவர் 2001-ம் ஆண்டு தன் மகனின் பிறந்த நாளுக்காக பிரபல குளிர்பானங்களை வாங்கியிருந்தார்.

அந்தக் குளிர்பான நிறுவனம் ஒரு போட்டியை அந்தக் காலகட்டத்தில் அறிவித்திருந்தது. ஒரு சில குளிர்பான பாட்டிலில் உள்ள மூடிகளில் பல்வேறு வித பரிசுத் தொகைகளை அந்த நிறுவனம் அச்சிட்டிருந்தது. அந்தப் பரிசுத் தொகை கொண்ட  மூடியை பெரும் அதிர்ஷ்டசாலிக்கு, மூடியில் குறிப்பிட்ட பரிசு அல்லது பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது.

தங்கம்
தங்கம்

50 கிராம் தங்கம் பரிசு!

ஷியாம் அந்தக் காலகட்டத்தில் தன் மகனின் பிறந்த நாளுக்காக ரூ.1,980 மதிப்பிலான குளிர்பான பாட்டில்களை வாங்கியிருந்தார். அவர் வாங்கியிருந்த குளிர்பான பாட்டில்களில் ஒன்றுக்கு பரிசுத் தொகையாக 50 கிராம் தங்கம் வழங்கப்படுவதாக அச்சிடப்பட்டிருந்தது. அதைக் கண்ட ஷியாம் மகிழ்ச்சியுடன் தான் குளிர்பானம் வாங்கிய கடையையும், பிறகு குளிர்பானத்தை விற்பனை செய்யும் மொத்த பிரதிநிதியையும், அதைத் தொடர்ந்து நிறுவனத்தையும் தமக்கு கிடைக்க வேண்டிய பரிசுத் தொகைக்காக  அணுகினார். ஆனால், அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய பரிசுத் தொகையைத் தருவதற்கு நிறுவன தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனால் மனவேதனை அடைந்த ஷியாம் முதலில் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தை அணுகி புகார் தெரிவித்தார். இதன் தீர்ப்பு ஷியாமுக்கு சாதகமாக வந்தது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து நிறுவனத்தின் தரப்பில் மாநில நுகர்வோர் ஆணையத்திடம் மேல் முறையீடு செய்யப்பட்டது. தற்போது இந்த முறையீட்டுக்கான தீர்ப்பு மாநில அளவிலான நுகர்வோர் தகராறுகளை நிவர்த்தி செய்யும் ஆணையத்திடமிருந்து 2023 ஏப்ரல் 11 அன்று ஷியாமுக்கு சாதகமாக வழங்கப்பட்டிருக்கிறது.

தீர்ப்பு
தீர்ப்பு

வாடிக்கையாளர்களின் ஆசையைத் தூண்டி பொருள்களை வாங்க செய்த நிறுவனம் பரிசுப் பொருள்களை வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. அதனால் நிறுவனம் பரிசாக வழங்குவதாக அறிவித்திருந்த 50 கிராம் தங்கத்தையும் கூடுதலாக ஷியாமுக்கு ஏற்பட்ட அலைச்சலுக்கு ஈடு கட்டும் விதத்தில் 5,000 ரூபாயும் நிறுவனம் வழங்க வேண்டும் என்று   தீர்ப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 22 ஆண்டு சட்டப் போராட்டத்துக்கு நீதி வழங்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக நிறுவன தரப்பில் இந்தப் போட்டி ஏப்ரல் 30, 2001 அன்று நிறைவடைந்துவிட்டதாகவும் அந்தக் குறிப்பிட்ட தேதிக்குள் ஷியாம் தமது நிறுவனத்தை தொடர்பு செய்யாத காரணத்தால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால், அந்தக் குறிப்பிட்ட தேதிக்குள் ஷியாம் மாநில தலைநகரில் உள்ள மொத்த வியாபாரியை சந்தித்ததற்கான சான்றாகப் பயண சீட்டு, மேலும் குளிர்பானங்கள் வாங்கியதற்கான ரசீது ஆகிய ஆவணங்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த ஆவணங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் உடனடியாக நிறுவனம் பரிசுத் தொகையை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

நுகர்வோர் அனைவருக்கும் மகிழ்ச்சி..!

இந்தத் தீர்ப்பு குறித்து கூறிய ஷியாம், ``இந்த வழக்குக்காக 100 முறைக்கு மேல் இந்த 22 ஆண்டுகளில் பல்வேறு வாய்தாக்களில் ஆணையத்திடம் நான் நேரில் ஆஜராகி இருந்தேன். என் குடும்பத்தினர் இவ்வாறு அலைவது எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை என்று குறை கூறிய போதிலும் நுகர்வோர் என்ற முறையில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தனை ஆண்டுக்காலம் வழக்கை தொடர்ந்து நடத்தினேன். தற்போது கிடைத்துள்ள இந்தத் தீர்ப்பு நுகர்வோர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் தீர்ப்பு" என்றார்.

கார்ப்பரேட் நிறுவனம்
கார்ப்பரேட் நிறுவனம்
Representational Image

இது போன்று நுகர்வோர்களை பல்வேறு வகைகளில் ஏமாற்றுவது தினம்தோறும் நடைபெறும் விஷயமாகவே இருக்கிறது. இவ்வாறு கார்ப்பரேட் நிறுவனங்களால் பாதிக்கப்படும் நுகர்வோர்கள் அனைவரும் தமது பிரச்னைக்காக முறையீடு செய்வது இல்லை. இதைத்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. நமது நாட்டில் நீதித்துறை சிறப்பாக இருந்த போதிலும் வழக்கு எடுத்துக் கொள்ளும் நீண்ட காலம் பலரை சட்டப் போராட்டத்திலிருந்து பின்வாங்கச் செய்கிறது. இந்த நிலையில் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கொண்டிருக்கும் ஷியாமின் வெற்றி நுகர்வோர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.