நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கிரிப்டோகரன்சி - சரியான முடிவை எடுங்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

நம் நாட்டில் கிரிப்டோகரன்சியை அனுமதிப்பது தொடர்பாகச் சில முக்கியமான முடிவுகளை மத்திய அரசாங்கம் எடுக்கத் தொடங்கியிருப்பது உள்ளபடி மகிழ்ச்சி தரும் செய்தி ஆகும்.

இது தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழுவானது, ‘இந்த கரன்சியைப் பலவிதமான கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கலாமே அன்றி, தடை விதிக்கக் கூடாது’’ என்று சொல்லியிருக்கிறது. நிலைக்குழுவின் கருத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலையில் மத்திய அரசு இருப்பதால், கிரிப்டோகரன்சிக்குத் தடை விதிப்பதற்குப் பதிலாக அதைக் கட்டுப்படுத்தத் தயாராகி வருகிறது.

உதாரணமாக, கிரிப்டோகரன்சியை இனி ஒரு பொருளாகவும் (commodity), கிரிப்டோகரன்சிகளை வர்த்தகம் செய்யும் எக்ஸ்சேஞ்சுகளை ‘இ-காமர்ஸ்’ வலைதளங்கள் போலவும் வகைப்படுத்தலாமா என மத்திய அரசு தீவிரமாக யோசித்து வருகிறது. தவிர, கிரிப்டோகரன்சிகளை வாங்கும்போதும் விற்கும்போதும் 18% சரக்கு மற்றும் சேவை வரியை (GST) விதிக்கலாமா என்றும் யோசித்து வருகிறது. ஒரு பொருளை வாங்குபவர், அதைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டுதான் வாங்குவார். ‘தெரியாமல் வாங்கிவிட்டேன்’ என்கிற வாதம் எல்லா சமயங்களிலும் எடுபடாது என்பதற்காகவே கிரிப்டோகரன்சியை ஒரு பொருளாக மத்திய அரசாங்கம் கருதுவதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். தவிர, இவற்றுக்கு வரி விதிப்பதன்மூலம் அரசுக்கு வருமானமும் கிடைக்கும். எனவே, கிரிப்டோகரன்சி தொடர்பாக மத்திய அரசின் யோசனைகள் கூடிய விரைவில் விதிமுறைகளாக வெளியாக நிறைய வாய்ப்புண்டு.

அதே சமயம், ‘‘கிரிப்டோகரன்சியானது பல சிக்கலான பிரச்னைகளைக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னைகளுக்கு என்ன தீர்வு என்பது பற்றி நாம் முதலில் பேச வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட கலந்துரையாடல் எதுவும் நடந்த மாதிரி தெரியவில்லை’’ என்று சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ். கிரிப்டோகரன்சியை அனுமதிப்பதில் ரிசர்வ் வங்கியின் கருத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகே, அது தொடர்பான இறுதிமுடிவை மத்திய அரசாங்கம் வெளியிட வேண்டும்.

தெரிந்தோ, தெரியாமலோ மக்கள் அதிக அளவிலான பணத்தை கிரிப்டோ கரன்சியில் போட்டு வருவதை முறைப்படுத்தவே மத்திய அரசாங்கம் அதற்கு அனுமதி அளிக்க நினைக்கிறது என்றாலும், பணமதிப்பு நீக்க நடவடிக்கை போல எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்யாமல், ஆர்.பி.ஐ உட்பட நிதி சார்ந்த அனைத்து அமைப்புகளின் கருத்துகளையும் கேட்டு, இறுதி முடிவெடுத் தால் மட்டுமே, நாட்டின் பொருளாதாரத்துக்கும் மக்களுக்கும் சரியான வழிகாட்டுவதாக இருக்கும். இதில் அவசரப்பட்டால், ரிஸ்க் மிகுந்த ஒரு வர்த்தகத்தில் பெரும்பாலான மக்கள் போட்டி போட்டுக்கொண்டு பணம் போட அரசே வாய்ப்பை ஏற்படுத்தித்தரும் தவற்றைச் செய்த மாதிரி ஆகிவிடும்!

- ஆசிரியர்