தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

அழகு... ஆர்மீனியா... பயணம்: கேபிள் காரில் திடுக் பயணம்!

கேபிள் காரில் திடுக் பயணம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கேபிள் காரில் திடுக் பயணம்!

சுமிதா ரமேஷ் (துபாயிலிருந்து)

ர்மீனியாவின் கோர் விராப் பகுதி... இங்கே புகழ்பெற்ற மொனஸ்ட்ரியில் ரொட்டி சுடும் குழி ரொம்பவே பாப்புலர். இது அவர்களின் பிரத்யேகமான ரொட்டி செய்யும் முறை. ஏழுக்கு ஏழு அறை, நடுவில் பெரிய குழி, நெருப்பிட ஒருபக்கத்தில் விறகுகள்... கங்குகளுடன் உள்ள குழியைச் சுற்றிலும் காலை தொங்கப்போட்டு அமரும் இடங்கள். அப்படி அமர்பவர்களின் கால்களுக்கு அடுப்பின் வெப்பம் இதமாகப் பாய்கிறது. அந்தக் குழிக்குள் பெரிய அயர்ன் செய்யும் போர்டு போல கையில் ஏந்தும் பலகையில் ரொட்டிக்கான மாவை `0’ வடிவத்தில் இட்டு அப்படியே அந்த நெருப்பில் போடுகின்றனர். நமது தந்தூரி முறைதான் என விளக்குகிறார்கள் ஆர்மீனியர். இந்த ரொட்டியே அவர்களது ஸ்பெஷல் உணவு.

ரொட்டி குழியின் உள்ளே கால்களை விட்டபடி அமரும் பெண்களுக்கு வாதம், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்வதாக நம்பிக்கை... இன்றும் இது நிச்சயம் நடக்கிறது என்கிறார்கள். எனக்கு ஜெகன்மோகினி சினிமாதான் ஃப்ளாஷ் அடித்தது.

அழகு... ஆர்மீனியா... பயணம்: கேபிள் காரில் திடுக் பயணம்!

17-ம் நூற்றாண்டில் இங்கு chapel எனப்படும் வழிபடும் சர்க்கிள் கட்டப்பட்டுள்ளது. இந்த கோர் விராப்புக்கு யெரவான் ஹைவேயிருந்து பொக்ர் வெடி (Pokr Vedi) என்ற கிராமத்தின் வழியே 3 கிலோமீட்டர் தொலைவு செல்ல வேண்டும். இந்தக் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் வெளியே இயற்கை எரிவாயு பைப் லைன் பார்டர் போல அமைக்கப்பட்டுள்ளது. அதிகமாக பூகம்பம் நிகழும் பகுதி என்பதால், பூமிக்குள் புதைக்காமல் வெளியில் சதுரமாக ஃப்ரேம் போல அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதி வீடுகளின் வாசலில் உயரமான கம்பம் காணப்படுகிறது. கம்பத்தின் மேலுள்ள தட்டையான பகுதியில் வெள்ளை நாரைகள் கூடுகட்டி குடும்பமாக வசிக்கின்றன. அவற்றின் வருகையும் சத்தமும்தான் இந்த மக்களுக்கு சுபசகுனம். இந்த ஊரிலுள்ள குழந்தைகள், `நான் எப்படி பிறந்தேன்?' என்று கேட்டால், `நாரைதான் தந்தது' என்று அந்தக் கூட்டைக் காட்டுவார்களாம்! இப்படித் தங்கள் வாழ்வியலோடு இணைந்த இந்தப் பறவை இனத்தையே தங்களது `குட் லக்' எனக் கொண்டாடுகிறார்கள்.

அழகு... ஆர்மீனியா... பயணம்: கேபிள் காரில் திடுக் பயணம்!

நோராவங் என்ற பள்ளத்தாக்கு... இது பிரவுன் நிற மலைகள் நிறைந்த ஆர்மீனியா வின் தென்பகுதி. கடினமான பாறைகளைக் குடைந்த பாதையில் ஹைவேயை விட்டு விலகி உள்ளே நுழைந்தால் பக்கவாட்டில் சலசலக்கும் அருவிச் சத்தம், பிறகு, சுள் வெயில், வளைந்துப்போகும் சமதள சாலை. பள்ளத்தாக்கின் சிறிய மலைப்பகுதியில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மதத் துறவிகள் வாழ்ந்த மடலாயம். இவர்கள் அன்றைய அரசியல் மாற்றத்துக்கும் கலாசாரத்துக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள். குறிப்பாக,சோவியத் காலத்துக்கு முன்பு பெர்ஷிய, இரானிய படையெடுப்பின்போது தங்கள் மத, கலாசார அடையாளங்களைக் காத்துக்கொள்ள பெரிதும் முயற்சி செய்திருக்கிறார்கள்.

நாமும் அந்தக் காலகட்டத்தில் இருப்பது போன்ற எண்ணத்தை இந்த பழைமை மாறாத, மாடர்ன் பாதிப்பு இல்லாத இயற்கை யுடன் இணைந்த இடங்கள் அளிக்கின்றன. பாரம்பர்ய இடங்களை அப்படி அப்படியே பொக்கிஷமாகப் பாதுகாப்பதை ஆர்மீனியரி டமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

பாரம்பர்ய இடங்களை அப்படி அப்படியே பொக்கிஷமாகப் பாதுகாப்பதை ஆர்மீனியரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இங்கும் தேவாலயங்கள் உள்ளன. ரெண்டு தளங்களில் உள்ள சர்ச்சுகள் Surb Astvatsastin, Sub Karapet churches என்று அழைக்கப்படுகின்றன. கற்களால் ஆன சிறிய படிகளில் ஏறி முதல் தளத்தில் உள்ள சர்ச்சில் பிரார்த்திக்கிறார்கள்.

அழகு... ஆர்மீனியா... பயணம்: கேபிள் காரில் திடுக் பயணம்!

மதுரையில் கூடலழகர் கோயிலில் இதேபோல மூன்று அடுக்கு நிலையில் சந்நிதி இருப்பது என் நினைவுக்கு வந்தது. இந்த சர்ச்சுகளின் வாயில்களில் கற்களில் செதுக்கப்பட்ட சிற்பங்களைக் காட்டி விளக்குகிறார்கள். கூடவே திராட்சைக்கொடிகள் சுற்றி வளைக்கின்றன எங்கும். இந்த வளாகத்தில் சில ஆர்மீனிய ஓவியர்களை அவர்களது பாரம்பர்ய உடைகளில் காண முடிந்தது. தவம் போல நின்றபடியே முகத்தில் கொஞ்சும் வெயிலைப்பொருட்படுத்தாமல் போஸ் கொடுக்கும் மக்களை வரைந்து தள்ளுகின்றனர்.

தத்தேவ்

ஆர்மீனியாவின் தென்கிழக்குப் பகுதியில் வருகிறது தத்தேவ் மலைப்பிரதேசம். கண்ணுக்கெட்டியவரை காணவில்லையே என்றால்... இரண்டு மலை தாண்டி இருக்கிறது என்கிறார்கள்! 

சுற்றிலும் பச்சை அணிந்த மலைகள், காதலோடு உரசிப்போகும் குளுகுளு காற்று... இதமோ இதம் என ரசிக்க ஆரம்பிக்கும் போது நமக்காக கேபிள் கார் காத்திருக்கிறது. அரை மணிக்கொருதரம் மூன்று மலைகளை இரண்டு கேபிள் கார்கள் இணைக்கின்றன. ஒவ்வொன்றும் 30 பேரை சுமக்கும் அளவில் அந்தரத்தில் ஒரு கேபிளால் இழுக்கப்பட்டு நிதானமாக நகர்ந்து செல்கிறது. அடுத்த மலையை கிராஸ் செய்யும்போது ஒரு ஜெர்க், மலையை விட்டு இறங்கி... மூன்றாவது மலையை நோக்கி பயணிக்கும்போது `ஓ'வென அலறுகிறோம் அனிச்சையாக!

Wings of Tatev என்ற இந்த கேபிள்வே ஹாலிட்ஜர் மற்றும் தாத்தேவ் மடாலயத்தை இணைக்கிறது. 2010-ல் அமைக்கப்பட்ட இதுவே உலகிலேயே முதல் நீளமான எங்கும் நிற்காத இரட்டைத்தட கேபிள் கார்.

`மிக நீளமான திரும்பி வரக்கூடிய வான்வழி ட்ராம்வே' எனவும் சொல்லப்படும் இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

5.7 கிலோமீட்டர் வழித்தடத்தை 12 நிமிடங்களில் கடக்கிறது. தத்தேவ் ஸ்டேஷன் சென்று திரும்ப 40 நிமிடங்கள் எடுக்கிறது. சேவைநோக்குடன் இயக்கப்படும் இந்த சர்வீஸில் வரும் லாபம் முழுவதும் தத்தேவ் மடாலயத்துக்காகவும் அப்பகுதி மக்களுக்காகவும் செலவிடப்படுகிறது. இதனால்தான் தத்தேவ் கிராமம் நம்ப முடியாத வகையில் சகல வசதிகளுடன் பராமரிக்கப் படுகிறது. பொது இடங்களில் சுத்தமான டாய்லெட் வசதி உள்ளது (வழக்கம் போல டிஷ்யூ பேப்பர்தான்!).

தடைகள் பல தாண்டி மீண்டுவந்த

இந்த இடத்தின் அழகை

அடுத்த இதழில் ரசிப்போம்!