பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

அதிக வட்டியில் கிரெடிட் கார்டு கடன்... மீண்டுவருவது எப்படி?

 கிரெடிட் கார்டு
பிரீமியம் ஸ்டோரி
News
கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

அண்மையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் என்னிடம் நிதி ஆலோசனை கேட்க வந்திருந்தார். குறைந்த வட்டி விகிதத்தில் எந்தக் கடன் எல்லாம் கிடைக்கும் என விசாரித்தார். எதற்கு என நான் கேட்க, அதிக வட்டியிலான கிரெடிட் கார்டு கடன்களை அடைக்கத்தான் என கேஷுவலாகச் சொன்னார்.

த.ராஜன் 
நிதி ஆலோசகர், 
Holisticinvestment.in
த.ராஜன் நிதி ஆலோசகர்,  Holisticinvestment.in

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. காரணம், அவர் மாதம்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்; வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், சாப்பாட்டுச் செலவு என எந்தப் பிரச்னையும் இல்லை. அப்பாவின் காரை அவர் பயன்படுத்தி வருவதால், கார் இன்ஷூரன்ஸ் பிரீமியம்கூட அவர் கட்ட வேண்டியதில்லை.

அவரின் கிரெடிட் கார்டு வரம்பு ரூ.5 லட்சம் என்பதால், அவர் கண்டதை எல்லாம் கண்டபடி வாங்கி, 30% முதல் 44% வரை வட்டி கட்டி வருகிறார். கிரெடிட் கார்டுகளை முறையாகப் பயன்படுத்தாமல் இருப்பதே இதற்குக் காரணம்.

மூன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகள்...

நாங்கள் ஒரு சர்வே செய்தோம். 25 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் சம்பாதிக்கும் நபர்கள் கிரெடிட் கார்டுகளை எப்படிப் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் எத்தனை கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கிறார்கள், பாக்கித் தொகை எவ்வளவு இருக்கிறது என்பதை எல்லாம் அந்த சர்வேயில் கேள்வி களாகக் கேட்டோம்.

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்கள் சராசரியாக 3.6 கிரெடிட் கார்டுகளை அதாவது, 3 முதல் 4 கிரெடிட் கார்டுகளை வைத்திருக் கின்றனர். சுமார் 85% பேர்களிடம் கிரெடிட் கார்டு மூலம் எவ்வளவு கடன் வாங்கினார்கள் என்கிற விவரம்கூட தெரிவில்லை. அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அக்கறையும் அவர்களிடம் இல்லை என்பதைப் பார்த்து, எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சரி, இனி கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்கியிருந்தால், கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்.

அதிக வட்டியில் கிரெடிட் கார்டு கடன்... மீண்டுவருவது எப்படி?

1. மொத்த கிரெடிட் கார்டு கடன் என்பது என்ன?

முதலில், கிரெடிட் கார்டுகளில் ஒவ்வொரு கார்டுக்கும் ஆண்டு வட்டி விகிதம் எவ்வளவு, ஒவ்வொரு கார்டிலும் தனித்தனியே மொத்த நிலுவைத் தொகை என்ன என்பதை அவர்கள் கண்டறிய வேண்டும். நாங்கள் அட்டவணையில் தந்துள்ளபடி (பார்க்க, அட்டவணை - அட்டவணையில் கடன் பாக்கி மற்றும் மாதம் கட்ட வேண்டிய தொகை உதாரணத்துக்கு ஆங்கில எழுத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது) கணக்கிட்டு, கிரெடிட் கார்டு மொத்த பாக்கி தொகை எவ்வளவு இருக்கிறது என்பதை எந்த நேரத்திலும் தெரிந்துகொள்ள உதவும்.

இந்தக் கடன்களிலிருந்து எப்படி வெளியேறுவது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

2. எந்த கிரெடிட் கார்டு கடனை முதலில் அடைக்க வேண்டும்?

கடனை அடைக்க இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழியில், அனைத்துக் கடன் களிலும் குறைந்தபட்ச தொகையைச் (Minimum Amount) செலுத்த வேண்டும். அதே நேரம், அதிக வட்டியிலான கடனில் இன்னும் கொஞ்சம் கூடுதல் தொகையைக் கட்டி வர வேண்டும். இரண்டாவது வழியில், அனைத்துக் கடன்களிலும் குறைந்தபட்சத் தொகையை செலுத்த வேண்டும். குறைவாகப் பாக்கி உள்ள கடனில் இன்னும் கொஞ்சம் கூடுதல் தொகையைக் கட்ட வேண்டும்.

முதல் முறையில், கிரெடிட் கார்டு கடனை அடைக்கும் போது வட்டிக்குச் செல்லும் தொகை குறையும். இரண்டாவது முறையில், கடன்களின் எண்ணிக்கை விரைந்து குறையும். இதனால் மனரீதியாக ஒரு திருப்தி, சந்தோஷம் ஏற்பட்டு, மற்ற கடன்களையும் விரைந்து அடைக்கும் சூழ்நிலை உருவாகும். இந்த இரு வழிமுறைகளில் ஒருவருக்கு எது வசதியான முறையாக இருக்கிறதோ, அதைப் பின்பற்றி கிரெடிட் கார்டு கடன்களிலிருந்து விடுதலை பெறலாம்.

3. வட்டி விகிதத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை

கிரெடிட் கார்டு நிறுவனங் களுடன் வட்டியைக் குறைக்க பேச்சுவார்த்தை (Negotiate) நடத்தலாம். நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்கும்பட்சத்தில் ஓரிரு கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வட்டி விகிதத்தைக் குறைக்க ஒப்புக்கொள்ளும் வாய்ப்புள்ளது. இதன்மூலம் உங்கள் வட்டி சுமையைக் குறைத்து, கடனை விரைந்து அடைக்க முடியும்.

4. கிரெடிட் கார்டு கடனை அடைக்க என்ன செய்யலாம்?

கிரெடிட் கார்டு கடன்களை விரைந்து முடிக்க பணம் திரட்டும் மாற்று வழிகளைக் கண்டறியுங்கள். உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரி பவர்கள், வணிகக் கூட்டாளிகள் போன்றவர்களிடம் வட்டி இல்லாமல் அல்லது குறைந்த வட்டியில் கடன் வாங்க முடியுமா என்று பாருங்கள்.

அதிக வட்டியில் கிரெடிட் கார்டு கடன்... மீண்டுவருவது எப்படி?

பெரும்பாலான வங்கிகள் தனிநபர் கடன்களை 13%-14% வட்டி விகிதத்தில் வழங்குகின்றன. உங்கள் சம்பளம் எந்த வங்கிக் கணக்கில் போடப்படுகிறதோ, அந்த வங்கியில் தனிநபர் கடன் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

பி.பி.எஃப், ஆயுள் காப்பீடு பாலிசி, தங்க நகை அடமானக் கடன் மூலமும் கிரெடிட் கார்டு கடன்களை அடைக்கலாம். இவற்றின் மூலம் வாங்கும் கடனுக்கான வட்டி 8-11%க்குள் தான் இருக்கும்.

அடுத்து ஆர்.டி, எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவந்தால், கிரெடிட் கார்டு கடனை முடிக்கும் வரை அவற்றை நிறுத்தி வைக்கலாம். முக்கியமாக, கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை முழுவதுமாகக் கட்டி முடிக்கும் வரை அநாவசிய செலவுகளை தவிர்ப்பது அவசியம்!

இந்த வழிகளைப் பின் பற்றினால் கிரெடிட் கார்டு கடன்களை விரைவில் அடைத்து, நிம்மதியாக இருக்கலாம்!