தொடர்கள்
பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

கிரெடிட் ஸ்கோர்... தவறான நம்பிக்கைகளும் சரியான விளக்கமும்..!

கிரெடிட் ஸ்கோர்
பிரீமியம் ஸ்டோரி
News
கிரெடிட் ஸ்கோர்

கிரெடிட் ஸ்கோர்

இன்றைக்கு எந்தக் கடன் வாங்குவதாக இருந்தாலும் அதற்கு கிரெடிட் ஸ்கோர் என்கிற கடன் மதிப்பெண் மிக முக்கியமான தாக இருக்கிறது. ஒருவருக்கு எந்தளவுக்கு அதிக கிரெடிட் ஸ்கோர் இருக்கிறதோ, அந்த அளவுக்கு சுலபமாகவும் விரைவாகவும் கடன் கிடைக்கும்.

கிரெடிட் ஸ்கோர் பற்றி நம்மவர்கள் இடையே நிறைய தவறான புரிதல்கள் உள்ளன. அவற்றுக்கு சரியான விளக்கம் இதோ...

சிவகாசி மணிகண்டன்,  நிதி ஆலோசகர், Aismoney.com
சிவகாசி மணிகண்டன், நிதி ஆலோசகர், Aismoney.com

தவறான நம்பிக்கை 1: சம்பளம் அதிகரிக்கும்போது கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கும்.

சரியான விளக்கம்: ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் என்பது அவரின் கடன் சார்ந்த செயல்களைச் சார்ந் திருக்கிறது. அதாவது, கடன் தவணைகளை சரியாகக் கட்டாமல் இருப்பது, வருமானத்தைத் தாண்டி அதிகமாகக் கடன் வாங்கு வது, பல்வேறு கடன்களுக்கு அடிக்கடி விண்ணப்பம் செய்வது ஒருவரின் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.

கிரெடிட் ஸ்கோர் என்பது ஒருவரின் சம்பளம் மற்றும் வருமானத்தைச் சார்ந்த தல்ல. அதிக சம்பளம் என்பது அதிகத் தொகை கடன் வாங்க உதவுமே தவிர, கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்க உதவாது. அதிக கிரெடிட் ஸ்கோர் இருக்கும் நிலையில், குறை வான வருமானம் இருந்தால், அதிக தொகையிலான கடன் அல்லது அதிகமாகக் கடன் வரம்புள்ள கிரெடிட் கார்டு கள் கிடைக்கும்.

தவறான நம்பிக்கை 2: அடிக்கடி ‘செக்’ செய்வதால் ‘கிரெடிட் ஸ்கோர்’ குறையும்.

சரியான விளக்கம்: இது உண்மை இல்லை. கிரெடிட் கார்டு அல்லது கடனுக்கு விண்ணப்பிக்கும்போது கடன் வழங்கும் நிறுவனங்கள் அவரின் கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு இருக்கிறது என ‘செக்’ (Check) செய்யும். இது தவிர, கடன் வாங்குபவரும் அதை ‘செக்’ செய்வார். இதனால், கிரெடிட் ஸ்கோர் குறையும் என நினைப்பது தவறாகும்.

அதே நேரத்தில், கிரெடிட் கார்டு உள்ளிட்ட பல கடன் களைக் கேட்டு குறுகிய காலத் தில் அடிக்கடி விசாரணை (Enquiry) செய்வது நிச்சயம் ஒருவரின் கிரெடிட் ஸ்கோ ரைக் குறைக்கும். அதாவது, இப்படி அடிக்கடி விசாரிப் பவரிடம் நிதி ஒழுங்கு எதுவும் இல்லை; அவர் கடன் வாங்க அதீத ஆர்வத்துடன் இருக் கிறார் என முடிவு செய்து கிரெடிட் ரேட்டிங் அமைப்பு கள் அவரது கிரெடிட் ஸ்கோரைக் குறைத்துவிடு கின்றன.

பொதுவாக, ஒருவர் அவரின் கிரெடிட் ஸ்கோரை சுமார் மூன்று மாதத்துக்கு ஒரு முறை அறிந்து அதற்கேற்ப செயல்பட்டு, கிரெடிட் ஸ்கோரை எப்போதும் அதிகமாக வைத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். இப்படிச் செய்யும் போது ஒருவரின் கிரெடிட் ஸ்கோரில் ஏதாவது தவறு இருந்தாலும் அதை விரைந்து சரிசெய்ய முடியும்.

தவறான நம்பிக்கை 3: கடனை செட்டில் செய்வது கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த உதவும்.

சரியான விளக்கம்: கடன் கணக்கை முடிப்பது (Closing) என்பது வேறு; கடன் கணக்கை செட்டில் செய்வது (Settling) என்பது வேறு. கடன் கணக்கை முடிப்பது, கடன் கணக்கை செயல்பாட்டிலிருந்து நீக்குவதாகும். அப்படிச் செய்யும்போது பாக்கி உள்ள கடன் தொகை முழுமையாக அடைக்கப்படும். இப்படிச் செய்வதால், கிரெடிட் ஸ்கோருக்குப் பெரிய பாதிப்பு இருக்காது.

அதே நேரத்தில், கடன் கணக்கை ‘செட்டில்’ செய் வது, பாக்கி உள்ள கடன் தொகையில் குறிப்பிட்டத் தொகையைத் தள்ளுபடி செய்து மீதித் தொகையைக் கட்டுவதாகும். இதை ‘ரிட்டன் ஆஃப்’ (written off) என்பார்கள். இப்படிச் செய்யும்போது கிரெடிட் ஸ்கோர் குறையும்.

ஒருவர் அவரின் கடன் கணக்கை ‘செட்டில்’ செய் தால், அந்த விவரம் கிரெடிட் ஸ்கோர் அறிக்கையில் ‘செட்டில்டு’ (‘settled’) எனக் குறிப்பிடப்படும். இது நீண்ட காலத்துக்குத் தொடரும். இதனால், எதிர்காலத்தில் வாங்கும் கடன் மற்றும் கிரெடிட் கார்டை வெகுவாக பாதிக்கும்.

கடன் தவணைகளை ஒருவர் சரியாகக் கட்டாமல், கடன் தொகையை ‘செட்டில்’ செய்திருந்தால், அவரைக் கடன் வழங்கும் நிறுவனங்கள் மிகவும் ரிஸ்க்கான கடன்தாரர் என முடிவு செய்யும். இதனால், இனிவரும் காலத்தில் அவருக்குக் கடன் கிடைப்பது கடினமாகும்.

தவறான நம்பிக்கை 4: இதுவரை கடன் வாங்காத தால், வங்கிகள் நிச்சயம் கடன் கொடுக்கும்.

சரியான விளக்கம்: பெரும்பாலானோர் இது வரைக்கும் எந்தக் கடனும் இல்லை; கிரெடிட் கார்டும் பயன்படுத்தவில்லை என்பதால், சுலபமாக புதுக் கடன் கிடைத்துவிடும் என நினைக்கிறார்கள். ஆனால், கடன் கொடுக்கும் நிறுவனங்கள் ஏற்கெனவே கடன் வாங்கி சரியாகச் செலுத்தியவர்களைத்தான் கடன் தரத் தகுதியானவர்களாகக் கருதுகின்றன. இதுவரைக்கும் கடன் இல்லாதவர்களைவிட ஏற்கெனவே கடன் வாங்கி சரியாகச் செலுத்தியவர்களுக்குதான் விரைவாகவும் குறைந்த வட்டியிலும் கடன் கிடைக்கும். கடந்த காலத்தில் கடனை சரியாகக் கட்டியவர்கள் எதிர்காலத்திலும் அப்படியே கட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது; அவர்கள் கடனைக் கட்டாமல் போவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால், கடன் சுலபமாகக் கிடைக்கிறது.

புதிதாகக் கடன் வாங்குபவர்களுக்கு முன்கூட்டியே கடன் ஒப்புதல் (Pre-Approved Loans), கடன் அட்டைகளுக்கு வழங்கப் படும் சலுகைகள் (Offers) ஆகியவை கிடைப்பது கடினமாகும். அதே நேரத்தில், ஏற்கெனவே கடன் வாங்கி சரியாகக் கட்டி யிருப்பவர்களுக்கு இந்தச் சலுகைகள் எளிதில் கிடைக்கின்றன.

கிரெடிட் ஸ்கோர்... தவறான 
நம்பிக்கைகளும் சரியான விளக்கமும்..!

தவறான நம்பிக்கை 5: பழைய கிரெடிட் கார்டுகளைக் கணக்கு முடித்தால் கிரெடிட் ஸ்கோர் உயரும்.

சரியான விளக்கம்: கிரெடிட் கார்டு கணக்குகளை முடிப்பது (Close) ஆண்டுக் கட்டணத்தை மிச்சப்படுத்த உதவுமே தவிர, ஒருபோதும் கிரெடிட் ஸ்கோர் உயர உதவாது. அதே நேரத்தில், ஒருவரின் கிரெடிட் கார்டு மிக அதிக வட்டியைக் கொண்டிருந் தால், அந்த கார்டை ரத்து செய்துவிட்டு குறைவான வட்டி கொண்ட வேறு கார்டு வாங்கிக்கொள்வது லாபமாக இருக்கும்.ஒருவருக்கு நீண்ட கடன் வரலாறு இல்லாதபட்சத்தில், அவர் அவசரப்பட்டு கிரெடிட் கார்டு கணக்குகளை ‘குளோஸ்’ செய்வது புத்திசாலிதனமல்ல. கிரெடிட் கார்டு மூலம் பொருள் களை வாங்கி அதற்குரிய பணத்தை வட்டியில்லாக் காலம் மற்றும் தவணைகளை சரியாகச் செலுத்தினால், கிரெடிட் ஸ்கோர் உயரும்.

கிரெடிட் கார்டு கணக்கை முடிக்கும்முன் யோசித்து செயல்படவும். ஒருவர் பல்வேறு கடன் திட்டங்களை எப்படி பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்துதான் அவரின் கிரெடிட் ஸ்கோர் இருக்கிறது. பல வகையான கடன்களை வாங்கி அவை அனைத்தையும் சரியாகக் கட்டி வரும்பட்சத்தில் மட்டுமே கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்கும்.

ஒரு கடனுக்கு விண்ணப்பிக்கும்போது ஒருவருக்கு எவ்வளவு ஆண்டுகளுக்கு கடன் வரலாறு (Credit History) இருக்கிறது எனக் கடன் வழங் கும் நிறுவனத்தால் அலசி ஆராயப்படுகிறது. ஒருவர் நீண்ட காலமாக கடன்கார ராக இருந்து, அதைச் சரியாகச் செலுத்திவரும் பட்சத்தில், புதுக் கடன் சுலபமாகக் கிடைக்கும்.

கிரெடிட் கார்டை குளோஸ் செய்யும்போது, ஒருவரின் கடன் வரம்பு (Credit Limit) குறைந்துவிடும். இது, ஒருவர் அதிகமாக கடனைப் பயன்படுத்துவதாகக் கருதப்படும். இது அவரின் கிரெடிட் ஸ்கோரைக் குறைக்கும்.

தவறான நம்பிக்கை 6: கிரெடிட் கார்டில் பாக்கி வைத்திருப்பது கிரெடிட் ஸ்கோரை உயர்த்தும்.

சரியான விளக்கம்: கிரெடிட் கார்டுக்கு செலுத்த வேண்டிய தொகையைப் பாக்கியாக வைத்திருப்பது ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் உயர உதவாது. இது அதிக வட்டிக்குதான் வழிவகுக்கும். எனவே, ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை முழுமையாகக் கட்டுவதுதான் புத்திசாலித் தனம் மற்றும் லாபகரமானது.

கிரெடிட் கார்டில் பாக்கி வைப்பது ஒருவரின் கடனைப் பயன்படுத்தும் விகிதத்தை (Credit card Utilization Rate) பாதிக்கும். இது கிரெடிட் ஸ்கோரைக் குறைக்கும். கிரெடிட் கார்டில் அதிக கடன் பாக்கி இருக்கும்பட்சத் தில் அதை இ.எம்.ஐ-ஆக மாற்றிக் கட்டிவருவதன்மூலம் வட்டியைக் கணிசமாகக் குறைக்க முடியும்.

தவறான நம்பிக்கை 7: அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால் அவர் பணக்காரர்.

சரியான விளக்கம்: கிரெடிட் ஸ்கோர் என்பது ஒருவரின் கடன் கட்டும் ரிஸ்க்கைப் பிரதிபலிக்கிறது; அவரின் பணக்கார தன்மையை அல்ல.

அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால், ஒருவர் நல்ல கடன் வரலாற்றைக் கொண் டிருக்கிறார் என அர்த்தம். அதே போல், அதிக சம்பளம் என்பது அதிக கிரெடிட் ஸ்கோரைப் பெற்றுத் தராது. அது ஒருவரின் கடன் வரம்பை அதிகரிக்க உதவும். இப்போது சம்பளம் அதிகரித் துள்ளது எனில், அந்த விவரத்தை கிரெடிட் கார்டு நிறுவனத்துக்குத் தெரிவித் தால், அது கடன் வரம்பை அதிகரிக்க உதவும்.

தவறான நம்பிக்கை 8: வயதாகும் வரை கிரெடிட் ஸ்கோரைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை.

சரியான விளக்கம்: கடன் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 18-ஆக இருக்கிறது. அந்த வயதிலேயே நல்ல கிரெடிட் ஸ்கோர் இருக்கும் பட்சத்தில்தான் எந்தக் கடனும் கிடைக்கும். தேவைக்கு சிறிய கடன்களை இளம் வயதிலேயே வாங்கி சரியாக செலுத்துவது மூலம் பிற்காலத்தில் பெரிய கடன்களை சுலபமாக வாங்க முடியும்.

தவறான நம்பிக்கை 9: கடனை விரைந்து அடைப்பது கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கிறது.

சரியான விளக்கம்: கடனை விரைந்து அடைப் பதன்மூலம் ஒருவர் கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். கிரெடிட் கார்டு கடனை விரைந்து அடைப்பது கிரெடிட் ஸ்கோர் உயர உதவும். அதே நேரத்தில், மாதத் தவணையில் கட்டுவது போல் கடனை வாங்கிவிட்டு, அதை விரைந்து கட்டுவது கிரெடிட் ஸ்கோர் உயர உதவாது. கிரெடிட் ஸ்கோர் பற்றி பெரிதாகக் கவலைப்படாமல் வட்டிச் செலவைக் குறைக்க வரிச் சலுகைகள் அளிக்கும் நல்ல கடனான வீட்டுக் கடன் தவிர, இதர கடன்களை விரைந்து அடைப்பது நல்லது.

தவறான நம்பிக்கை 10: கல்விக் கடன் கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது.

சரியான விளக்கம்: கிரெடிட் கார்டு கடன் களைத் தாமதமாகக் கட்டுவது, அபராதத்துடன் கட்டுவது மட்டும் கிரெ டிட் ஸ்கோரை பாதிக்கும் என்பதில்லை. கல்விக் கடன், தங்க நகை அட மானக் கடன் போன்ற வற்றை வாங்கிவிட்டு அவற்றை சரியாகக் கட்ட வில்லை என்றாலும், ஒரு வரின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கும்.

தவறான நம்பிக்கை 11: டெபிட் கார்டை சரி யாகப் பயன்படுத்துவதால், கிரெடிட் ஸ்கோர் உயரும்.

சரியான விளக்கம்: டெபிட் கார்டுகள் மூலம் செலவு செய்வது, கிரெடிட் கார்டுகள் மூலம் செலவு செய்வது வேறு வேறு. டெபிட் கார்டு பயன்பாட்டுக்கும் கடனுக்கும் தொடர்பு கிடையாது. டெபிட் கார்டில் இருப்பது ஒருவரின் சொந்தப் பணமாகும். அவர் அதைச் சரியாகப் பயன்படுத்துவதால், கிரெடிட் ஸ்கோர் உயராது.

ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் இருந்தால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்குமா?

ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டுகள் வைத்திருந்தாலும் ஒருவருக்கு தரப்பட்டிருக்கும் கடன் பயன் பாட்டு வரம்புக்குள் அவர் செலவு செய்தால், அவரின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்காது.

ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செலவு செய்தாலும் அது கடன் வரம்புக்குள் இருந்து, சரியான தேதிக்குள் கடனை அடைத்துவிட்டால் அவரின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது.