
விழிப்புணர்வு
பொதுவாக, திரைப்படங்களில் காதல், கலாட்டா எல்லாம் காட்டிவிட்டு, கல்யாணத்துடன் ‘சுபம்’ என்று முடித்துவிடுவதைப் பார்க்கிறோம். ஆனால், நிஜ வாழ்க்கையில் உண்மையான கதை அப்புறம்தானே ஆரம்பிக்கிறது? அதேபோல கல்வி, வேலை, சேமிப்பு, முதலீடு, இன்ஷூரன்ஸ், வருமான வரி போன்றவற்றைப் பற்றி அதிகம் பேசுகிறோம், எழுதுகிறோம், செயல்படுகிறோம். ஆனால், இத்தனையையும் ஒழுங்காகச் செய்து முடித்து ஓரளவு நல்ல நிலையை அடைந்தவர் களும், அவர்களின் நெருங்கிய உறவினர்களும் சில சமயங்களில் அந்தப் பணத்தின் பயனை அனுபவிக்க முடியாமல் போகிறது. காரணம், யாராலும் தப்பவோ, தள்ளிப்போடவோ முடியாத முதுமையால் ஏற்படும் பாதிப்புகள்.

முதுமை தரும் பிரச்னைகள்...
முதுமையால் வரும் பிரச்னைகளை உடல் சார்ந்தவை, மனம் சார்ந்தவை, உணர்வு சார்ந்தவை, சமூகம் சார்ந்தவை, பொருளாதாரம் சார்ந்தவை என்று ஐந்து விதமாகப் பிரிக்கலாம். இவற்றில், பொருளாதாரப் பிரச்னைகள் குறை வாக இருப்பவர்களுக்கு மற்ற பிரச்னைகளும் ஓரளவு குறையும் சாத்தியக்கூறு உள்ளது. ஆனால், இந்திய முதியவர்களில் 35% பேர் மட்டுமே பொருளாதார ரீதியாகப் பிறரைச் சாராமல் இருக்கின்றனர். பேசிவ் இன்கம் எனப்படும் பென்ஷன், வாடகை, வட்டி வருமானம் போன்றவை கிடைக்கப்பெறும் முதியவர்கள்கூட அவற்றை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் போகும் சந்தர்ப்பங்கள் உள்ளன.
முதுமையின் பாதிப்பு உடனடியாக வெளியே தெரிவதில்லை. பணம் கையாளுவதில் தடுமாற்றம், கணக்குவழக்குகளில் குழப்பம், முடிவெடுக்க முடியாமல் தடுமாறுதல், வாங்கிய பொருளையே மீண்டும் மீண்டும் வாங்குதல், பில்களைக் குறித்த நேரத்தில் கட்டாமல் விடுதல் போன்றவை ஏற்படத் தொடங்கு கின்றன. இப்படித் தடுமாறும் வயதான நபரை மோசடிக் கும்பல்களும் குறிவைக்கின்றன.
பணம் இருக்கு; ஆனால், இல்லை...
நாமினேஷன் வசதி பற்றிய விழிப்புணர்வு தற்போது பலருக்கும் வந்துள்ளது. ஆனால், ஒருவர் இறப்புக்குப் பிறகுதான் நாமினிக்குப் பணம் கிடைக்கும். கோமாவில் படுத்திருக்கும் ஒருவர் அல்லது லைஃப் சப்போர்ட்டில் வைக்கப்பட்டிருக்கும் ஒருவரின் மருத்துவச் செலவுக்கும், தினசரி கவனிப்புச் செலவு களுக்கும் ஏராளமாகப் பணம் தேவைப்படும். அவரிடம் கோடி, கோடியாகச் செல்வம் குவிந் திருந்தாலும் சரியான ஏற்பாடுகள் செய்திராத பட்சத்தில் அதை அவரோ, அவரின் உறவினர் களோ உபயோகிக்க இயலாமல் போகும்.
ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி, மியூச்சுவல் ஃபண்ட் வருமானம், பென்ஷன், வாடகை, பில்கள் போன்ற அத்தனை பணப் பரிவர்த் தனைகளும் வங்கி சேமிப்புக் கணக்கு மூலம்தான் நடக்கிறது. ஒருவரின் சேமிப்புக் கணக்கை மோசடிகளில் இருந்து பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு வங்கிகளுக்கு இருப்பதால், அவை மனிதாபிமான அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பது நடக்காது.
வங்கிகள் கடுமையான விதிமுறைகளைக் கைக்கொள்வதில் ஆச்சர்யமில்லை. உதாரண மாக, மும்பையில் கோமாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவருக்கு வங்கியில் ஏராளமாகப் பணம் இருந்தாலும், அவர் கையெழுத்து இல்லாமல் அவர் மனைவி யால்கூட அந்தப் பணத்தை எடுக்க முடிய வில்லை.
இது போன்ற சம்பவங்கள் பற்றிய புகார் களால் ரிசர்வ் வங்கியும், டிபார்ட்மென்ட் ஆஃப் பென்ஷனும் சில அனுமதிகளைத் தந்துள்ளன.

ரிசர்வ் வங்கி தரும் ஸ்பெஷல் அனுமதிகள்...
1. வங்கிக்கு வரவோ, கையெழுத்துப் போடவோ இயலாத வர்களின் இடதுகை பெருவிரல் ரேகையை உபயோகித்து பணம் எடுக்கலாம். அந்த ரேகைக்கு இரண்டு தனிநபர்கள் அடையாளச் சான்றாகக் கையெழுத்திட வேண்டும். அதில் ஒருவர் வங்கி ஊழியராக இருக்க வேண்டும்.
2. முழுவதுமாகக் கையெழுத்து பெற இயலாவிட்டால் ஒரு சிறிய குறியை எழுதச் சொல்லி, அதை இரண்டு பேர் அடையாளம் காட்டலாம்.
3. கையெழுத்தோ, கைரேகையோ கிடைக்காத பட்சத்தில், கால் பெருவிரல் ரேகையை உபயோகப்படுத்தலாம்.
துரிதப்படுத்தப்படும் முதுமை
90 வயதில் இயற்கையாக வரும் தள்ளாட்டங்கள் ஒருபக்கம் இருக்கட்டும்; அல்சீமர், டிமென்ஷியா என்று பல வடிவங்களில் உலவும் மறதி நோய் 70 வயதுகளிலேயே நமது ஞாபக சக்தியையும், சிந்திக்கும் திறனையும், முடிவெடுக்கும் திறனையும் ஒருங்கே தாக்கி, முதுமையின் அவலங்களைத் துரிதப்படுத்துகிறது. இதனால் தங்கள் தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை நடத்த இயலாமல் தவிக்கும் முதியோரின் எண்ணிக்கை பெருகிவருகிறது. 2015-ல் எடுத்த சர்வேபடி, 44 லட்சம் இந்தியர்களின் மூளைச் செயல்பாடு இந்த மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. “இது உண்மை அல்ல; நிஜத்தில் இந்த எண்ணிக்கை ஐந்து கோடியைத் தாண்டும்” என்ற செய்தியும் உலவுகிறது.
மறதி முற்றும்முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
முதுமை காரணமாகவோ, வியாதி காரணமாகவோ மறதி முற்றுவதை உணர்ந்தவர்கள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் தாங்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தின் பலனை கடைசி வரை முழுமையாக அனுபவிக்க இயலும்.
1. மறதி ஏற ஏற வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு முக்கியத் தேவையான கையெழுத்துகூட மாறிவிடும் அபாயம் உண்டு. ஆகவே, நம்பகமான ஒருவருடன் வங்கியில் ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்துக்கொள்ள வேண்டும்.
2. பத்து வருடங்களுக்கு தனக்கு மருத்துவச் செலவுக்கும், வசதியான வாழ்வுக்கும் தேவைப் படக்கூடிய பணத்தை எளிதில் எடுக்கும்படி வங்கிச் சேமிப்புக் கணக்கில் வைத்திருக்க வேண்டும்.
3. ஏதாவது சொத்துகள் விற்கப்பட வேண்டியிருந்தால், அதை விரைவில் முடிப்பது நல்லது. மறதி முற்றிய பின் மறதி நோயாளி போடும் கையெழுத்து செல்லாது.
4. உடனடியாக உயில் எழுத வேண்டும். அதை ரெஜிஸ்டர் செய்வது மோசடிகளைத் தடுக்கும். மறதி முற்றிய பின் எழுதப்படும் உயில் செல்லாது.
5. வங்கிக் கணக்குகள், பென்ஷன், லாக்கர்கள், ஷேர்கள், மியூச்சுவல் ஃபண்டுகள், அசை யாச் சொத்துகள் என்று பலவித சொத்துகள் உள்ளவர்கள் அவற்றைக் கையாளபவர் ஆஃப் அட்டார்னி அல்லது லீகல் கார்டியன் நியமிக்க வேண்டும்.
6. சொத்து விவரங்களை குடும்பத்தினர் அனைவருடனும் கலந்து பேசி பொருளாதார முடிவுகளை எடுப்பது அவசியம். இல்லாவிட்டால் சொத்துத் தகராறுகள் ஏற்பட்டு குடும்பம் கோர்ட் வரை செல்ல நேரலாம்.
நாம் நல்ல நிலையை அடைந்த பின் முதுமை மற்றும் வியாதிகள் நம் முயற்சிகளைப் பாழடிக்காமல் பார்த்துக்கொள்வதும், நமக்கு உதவும் நிலையில் உள்ளோருக்கு சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்வதும் நம் சொந்தங்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை.