
பங்குச் சந்தை
கடந்த ஒன்றரை வருடங்களில் இந்தியாவில் சுமார் 1.42 கோடி டீமேட் அக்கவுன்ட்டுகள் புதிதாக ஆரம்பிக்கப் பட்டு உள்ளன. இதற்குப் பல காரணங்களைக் குறிப்பிடலாம். நாடு தழுவிய ஊரடங்கின்போது பங்குச் சந்தை பற்றிப் படிக்கவும் புரிந்து கொள்ளவும், பங்குகளை வாங்கி விற்கவும் மக்களுக்கு நிறைய நேரம் கிடைத்தது. அக்கவுன்ட்டுகளை ஆன்லைன் மூலம் தொடங்குவதில் தொழில்நுட்பம் வேகமாக மக்களைச் சென்றடைந்ததால் மக்கள் மிக உற்சாகமாக டீமேட் கணக்குகளைத் தொடங்கி, பங்குச் சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

நமக்குத் தெரியாமலே நம் பெயரில் டீமேட் கணக்கு...
இதெல்லாம பாசிட்டிவ்வான விஷயம் என்றாலும், நமக்குத் தெரியாமலேயே நம் பெயரில் டீமேட் அக்கவுன்ட்டு கள் ஆரம்பிக்கப்படுவதாகப் புகார்கள் வந்து எல்லோரையும் அதிர வைத்திருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன், நண்பர் ஒருவரின் மகள் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றபோது, ஒரு பிரபல தனியார் வங்கியில் என்.ஆர்.இ மற்றும் என்.ஆர்.ஓ கணக்கைத் தொடங்கினார். அப்போது வங்கி யின் மேனேஜர் வந்து வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு, “டீமேட் அக்கவுன்ட்டும் ஓப்பன் செய்துகொள்ளுங்கள்; முதல் ஒரு வருடத்துக்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது; தேவையில்லை எனில், நீங்கள் குளோஸ் செய்துகொள்ளலாம்” என்று கூறியுள்ளார். படிக்கும் பெண்ணுக்கு டீமேட் அவசியப்படாது என்று நண்பர் கூறியதும் மேனேஜர் புன்னகையுடன் நகர்ந்துள்ளார்.
வெளிநாட்டில் பல்கலைக்கழகத்தில் உள்ள வேறு வங்கியில் கணக்கை ஆரம்பித்ததால், நண்பரும், அவர் மகளும் இந்தியாவில் தொடங்கிய கணக்கு பற்றி அதிகம் கவலைப்படவில்லை. கடந்த வாரம் அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனி (AMC) ஒன்று, கட்டணம் கட்டும்படி நினைவூட்டல் தகவலை நண்பரின் செல்போனுக்கு அனுப்பியது. அப்போதுதான் அந்தப் பெண்ணுக்கு மூன்று வருடங்களாக டீமேட் கணக்கு இருப்பதும் அதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதும் நண்பருக்குத் தெரியவந்துள்ளது. “நான் மேனேஜரிடமே டீமேட் அக்கவுன்ட் வேண்டாம் என்று கூறினேனே; ஆனாலும் ஓப்பன் ஆகியுள்ளதே?” என்று பதறிப்போய் வங்கியில் சென்று விசாரித்தால் “இன்டர்நெட் பேங்கிங் பேஜில்தான் எல்லாம் வருகிறதே; நீங்கள் கவனிக்காதது உங்கள் தவறு” என்று கூறியுள்ளார்கள். ‘‘சரி போகட்டும், இப்போதாவது குளோஸ் செய்யலாமா’’ என்று கேட்டால், ‘‘அந்தப் பெண் நேரில் வந்து சில பல ஆவணங்களைத் தந்த பின்தான் குளோஸ் செய்ய முடியும்’’ என்று வங்கி ஊழியர்கள் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள். கோவிட் நேரத்தில் வெளிநாட்டில் இருக்கும் பெண் எப்போது வருவது, எப்போது குளோஸ் செய்வது என்று நண்பர் வருந்துகிறார். இது போன்ற புகார்கள் பல இணைய தளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. பொதுத்துறை வங்கிகளைவிட புதிய தலைமுறை தனியார் வங்கிகள் மீதுதான் இப்படிப்பட்ட புகார்கள் அதிகம் வந்துள்ளன.

வெளிநாடு செல்லும்முன்...
ஆன்லைனில் தொடங்கப் பட்ட டீமேட் கணக்கை ஆன்லைன் மூலம் குளோஸ் செய்ய முடியாது என்று சொல் வது வேடிக்கையானது. எனவே, வெளி நாடு செல்பவர்கள் வங்கி அக்கவுன்ட்டுகளை முழுமை யாகச் சரிபார்த்துவிட்டுச் செல்வது நல்லது. வங்கியில் இருந்துவரும் இ-மெயில் மற்றும் குறுஞ்செய்திகளையும் கவன மாகப் பார்க்க வேண்டியது அவசியம். வங்கிகள் மீது அதீத நம்பிக்கை கொண்டு காட்டிய இடத்தில் கையொப்பம் போடு வதைத் தவிர்த்தால், இது போன்ற இக்கட்டுகளில் சிக்காமல் தப்பிக் கலாம்.
நாமே தொடங்கிய டீமேட் கணக்குகள் என்ன செய்யலாம்?
ஊரடங்கின்போது, டீமேட் அக்கவுன்ட் ஓப்பன் செய்தவர் கள் ஏராளம். தற்போது ஊரடங்கு முடிந்து, வேலை, பொழுதுபோக்கு மற்றும் குடும்பக் காரணங்களுக்காகப் பயணம் மேற்கொள்வது நேரம் செலழிப்பது அதிகரித்து வருகிறது. ராக்கெட் வேகத்தில் மேலே மேலே ஏறிக்கொண்டிருந்த பங்குச் சந்தையும் சற்றுக் களைத்துப்போனதுபோல் தோன்றுகிறது. இந்த நிலையில், எத்தனை பேர் முன்பு போல பங்குச் சந்தையில் ஆக்டிவ்வாக இயங்கப்போகிறார்கள் என்பது கேள்விக்குறிதான். எனவே, இந்தப் புதிய விளை யாட்டை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, சிறிது காலம் கழித்து மீண்டும் உள்ளே வரலாம் என்று சிலர் நினைக்கலாம். அப்படி இயக்கத்தைக் குறைப்பவர்கள் அல்லது நிறுத்துபவர்கள் டீமேட் அக்கவுன்ட்டை ஃப்ரீஸ் அல்லது குளோஸ் செய்வது நல்லது.
அக்கவுன்ட் ஃப்ரீஸ் என்றால்..?
டீமேட் அக்கவுன்ட் ஃப்ரீஸ் (freeze) / குளோஸ் செய்யப்படாமல் செயலற்ற நிலையில் இருக்கும் டீமேட் அக்கவுன்ட்டுகளில் மோசடிகள் நடக்க வாய்ப்பு உண்டு. டீமேட் கணக்கை கொஞ்ச காலத்துக்குச் செயல்படாமல் நிறுத்திவைக்க தங்கள் புரோக்கர் அல்லது டிபாசிட்டரி பார்டிசிபன்டை நேரில் அணுகி, கணக்கை ஃப்ரீஸ் செய்வதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்துதந்தால், அந்தக் கணக்கு செயல்படுவதை ஃப்ரீஸ் செய்துவிடுவார்கள். அந்தக் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர நாம் வேண்டுகோள் விடுத்தால், மீண்டும் அதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்து விடுவார்கள். இந்தக் காலகட்டத்தில் நம் டீமேட் கணக்குக்கு வர வேண்டிய டிவிடெண்ட், போனஸ், பங்கு பிரிப்பு போன்ற பயன்கள் வந்துவிடும்; முறைகேடான பரிவர்த்தனைகள் நடப்பது தடுக்கப் படும். கணக்கை மீண்டும் இயக்க விரும்பும்போது, அதற்கு உண்டான விண்ணப்பத்தில் ‘அன்ஃப்ரீஸ்’ (Unfreeze) என்ற ஆப்ஷனில் ‘டிக்’ செய்தால் வழக்கம் போல் கணக்கு இயங்கத் தொடங்கிவிடும்.
அக்கவுன்ட் குளோஸ்
இன்னும் நீண்ட காலத்துக்கு அல்லது எப்போதுமே எனக்கு டீமேட் கணக்கு வேண்டாம் என்று எண்ணுபவர்கள் அதை முறையாக குளோஸ் செய்வது நல்லது. டீமேட் கணக்கில் எந்தப் பங்கும் இல்லை என்றாலும் ஆண்டுதோறும் கணக்குப் பராமரிப்புக் கட்டணம் (Account Maintenance Charges) கட்ட வேண்டியிருக்கும். புரோக்கரைப் பொறுத்து இந்தக் கட்டணம் ரூ.400 முதல் ரூ.1,500 வரை மாறுபடும். டீமேட் கணக்கு இயக்கமே இன்றி ‘டார்மன்ட்’ (Dormant) நிலைக்குச் செல்லும்பட்சத்தில், இந்தப் பராமரிப்புக் கட்டணங்களுடன் ரூ.500 ‘ரீஆக்டிவேஷன்’ கட்டணத்தையும் கட்ட வேண்டியிருக்கும். அதன் பின்னரே அக்கவுன்டை ‘குளோஸ்’ செய்ய இயலும். ஆகவே, டீமேட் கணக்கு இனி தேவையில்லை என்று நினைத்தால், டிபாசிட்டரி பார்ட்டிசிபன்ட் அல்லது புரோக்கரை நேரில் அணுகித் தேவையான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தந்தால், டீமேட் அக்கவுன்ட் குளோஸ் செய்யப்படும்.
சிலர் நான்கைந்து புரோக்கர்களிடம் டீமேட் கணக்குகளை வைத்திருக்கலாம். அவற்றில் இரண்டை மட்டும் வைத்துக் கொண்டு மீதியை குளோஸ் செய்ய எண்ணலாம். அப்போது குளோஸ் செய்ய விரும்பும் அக்கவுன்ட்டுகளில் உள்ள பங்குகளை ஆஃப் மார்க்கெட் பரிவர்த்தனை மூலம் மற்ற இரண்டு அக்கவுன்ட்டுகளுக்கு மாற்றிவிட்டு, அதன்பின் அந்த மூன்று கணக்குகளையும் குளோஸ் செய்ய விண்ணப்பம் தரலாம்.
உங்கள் டீமேட் அக்கவுன்ட் ஓப்பன் செய்யப்பட்டது பணம் சம்பாதிக்கவோ, பணத்தை இழக்கவோ அல்ல. ஆகவே, உங்கள் டீமேட் கணக்குகளை முழுமையாகச் சரிபாருங்கள். தேவை யற்றவற்றை ஃப்ரீஸ் / குளோஸ் செய்யுங்கள்.