மீண்டும் ‘2008’? அச்சுறுத்தும் பொருளாதார மந்தநிலை... தப்பிப்பது எப்படி? வழிகாட்டும் நிபுணர்கள்!

கவர் ஸ்டோரி
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையில் இருந்து உலக நாடுகள் மீண்டுவந்துகொண்டிருக்கும் நிலையில் 2008-ல் ஏற்பட்டது போன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் வர அதிக வாய்ப்பிருப்பதாக உலகம் முழுவதும் அச்சம் பரவி வருகிறது.
உலகப் பொருளாதாரத்தின் மையமாக இருக்கும் அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம் தலைவிரித்தாடுகிறது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்றவையும் தீவிர பிரச்னைகளாக மாறி வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் காரண மாக கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் உள்ளிட்ட கமாடிட்டிகளின் விலை கடுமையாக உயர்வதால், சர்வதேச அளவில் வர்த்தகமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அமெரிக்கா மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள் போன்றவற்றிலும் பொருளாதார சிக்கல் உருவெடுத்துள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து இரண்டு காலாண்டுகளுக்கு (அதாவது ஆறு மாதம்) பூஜ்யம் அல்லது மைனஸ் என்கிற அளவில் இருந்தால், அதை பொருளாதார மந்தநிலை என்கிறார்கள். இந்தப் பொருளாதார மந்தநிலை ஆறு மாதங்கள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கலாம். அதன்பிறகு வழக்கமான பொருளாதார சுழற்சி வந்துவிடும். ஆனால், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 10 ஆண்டுகள் வரைக்கும் பாதிப்புக்கு உள்ளானால் அதைப் பொருளாதார நெருக்கடி என்று சொல்லலாம்.
தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடு களில் பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருந்து வருகிறது. இது, பொருளாதார மந்த நிலையாகவோ, பொருளாதார நெருக்கடி யாகவோ மாறும் சூழல் உருவாகும் எனில், அதை எதிர்கொண்டு சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்கிற முன்னெச்சரிக்கை திட்ட மிடல்கள் அவசியம். அதற்கு வழிகாட்டு கிறார்கள் துறைசார்ந்த நிபுணர்கள்.

பொருளாதார ரீதியில் எப்படித் தயாராக வேண்டும்?
பொருளாதார நெருக்கடியானது சந்தையில் பரவலாக ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும், இதை எதிர்கொள்ள இந்தியா எப்படித் தயாராக வேண்டும் என்பது குறித்தும் பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.
“இப்போது உலகம் முழுவதும் விவாதத்துக்கு உள்ளாகி யிருக்கும் பொருளாதார நெருக்கடி பிரச்னை உண்மையா, இல்லையா என்கிற குழப்பமே வேண்டாம். இப்போ திருக்கும் பணவீக்கப் பிரச்னையும், சர்வதேச வர்த்தக சிக்கல்களும் தொடர்ந்து நீடிக்குமெனில் நிச்சயம் பொருளாதார நெருக்கடி வருவதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் VUCA எனப்படுகிற Volatility, Uncertainity, Complexity and Ambiguity ஆகிய நான்கு பிரச்னைகளுமே உலகப் பொருளாதாரத்தில் தற்போது காணப்படுகின்றன. எனவே, இப்போது நாம் யோசிக்க வேண்டியதெல்லாம் இந்த சவால்களைச் சமாளித்து எப்படி நம்மை காப்பாற்றிக் கொள்ளப்போகிறோம் என்பதுதான்.
அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ந்தால், அது உலக நாடுகளில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும். அதே சமயம், அந்த நாடுகளின் பொருளாதார நிலையைப் பொறுத்துதான் அந்தப் பாதிப்பு எவ்வளவு காலம் இருக்கும் என்பது தெரியும். எனவே, இந்தியாவில் என்ன நிலவரம் என்று பார்க்க வேண்டும்.
நம் நாட்டில் தற்போது பலதரப்பட்ட வரிகள் உயர்த்தப் பட்டுள்ளன. மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது, வட்டி உயர்த் தப்படுகிறது. விலைவாசி எல்லாமே உயர்கின்றன. ஆனால், வருமானம் உயரவில்லை. வேலைவாய்ப்பு உருவாக்கமும் குறைவாகவே இருக்கிறது. இத்தகைய சூழலில் இருக்கும்போது பணவீக்கம் உடனே குறைய வாய்ப்பே இல்லை. இதனால் வங்கிகள் மேலும் வட்டியை உயர்த்த வாய்ப்புண்டு.
அப்போது சந்தையில் தேவை குறையும்; உற்பத்தியும் குறையும். அதன் விளைவாக, முதலீடுகள், விரிவாக்க நடவடிக்கைகள் குறைந்து புதிய வேலைவாய்ப்பு களும் குறையும்.
இத்தகைய நிலையில், பொருளா தார மந்தநிலை வரலாம். அப்படி வரும்பட்சத்தில் நிலைமை சற்று மோசமாகலாம். அந்தத் தருணத்தில் நிலைமையைச் சமாளிக்க தேவை யான பணப்புழக்கத்தை அரசும் மத்திய வங்கியும் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது.
ஆனால், வங்கிகளில் பணம் இருந்தாலும், அதை வாங்குவதற்கு தகுதியான கடன்தாரர்கள் தேவை. கடன்களை முறைப்படுத்துவது, வாராக்கடன்களைக் குறைப்பது என இப்போதுதான் வங்கிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. எனவே, தகுதியான நபர்களுக்கு மட்டுமே கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரித்து, பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கத் திட்டமிட்டாலும் கடன்கள் வாங்கி, அதை முதலீடு செய்து லாபமடையும் அளவுக்குத் தொழில் சூழல் இருக்க வேண்டியது அவசியம்.
பொருளாதார நெருக்கடியால் என்னென்ன பாதிப்புகள் வரலாம் என்று பார்க்கும்போது, இந்தியா வின் எரிபொருள் செலவு, இறக்கு மதிச் செலவு, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை உள்ளிட்டவை அதிகரிக்கும். பணவீக்கம் உயர்வதால் ஐரோப்பிய மத்திய வங்கி சமீபத்தில் 0.75% வட்டி உயர்த்தியிருக்கிறது. அமெரிக்காவும் தொடர்ந்து வட்டி உயர்த்தி வருகிறது. இந்தியாவும் வேறு வழியில்லாமல் வட்டியை உயர்த்திதான் ஆக வேண்டும்.
இன்னொரு பக்கம் துறைகள் சார்ந்து பார்க்கும்போது ஏற்றுமதி சார்ந்த துறைகள் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகம். இந்தத் துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறையும். வேலை இழப்பும் காணப்படலாம்.
ஐ.டி நிறுவனங்களுக்குப் பெரிய பாதிப்பு இருக்காது. ஆனாலும் நிறுவன செயல்பாடுகள், நிதிநிலை, நிர்வாகம் போன்றவை ஸ்திரமாக இருக்க வேண்டும். டாலர் மதிப்பு உயர்ந்து வருவதால், பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் டாலரை மாற்றாமலேயே வைத்துள்ளன. அதே சமயம், டெக்ஸ்டைல் போன்ற பொருள்கள் ஏற்றுமதி துறைகள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் அதுசார்ந்த துறைகள் அனைத்துமே நெருக்கடியைச் சந்திக்கும்.
இந்தியாவில் பொருளதார சவால்கள் இருந்தாலும், இந்தியப் பொருளாதாரத்தின்மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. உலகம் முழுவதுமே நாடுகள் மோசமான நிலையில் உள்ளதால், இந்தியச் சந்தைகள் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியிருப்பது, நல்லதொரு வாய்ப்புதான்.
மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு முதலீட்டாளர்கள் கவனம் திரும்பக் காரணம், இங்கு மனிதவள செலவு குறைவு. நெருக்கடி வரும்போது அதில் பாதிப்பு சிலருக்கு இருந்தாலும், சிலருக்கு வாய்ப்பாக மாறும். அப்படியான வாய்ப்புகள் இந்தியாவுக்கு கிடைக்கலாம்” என்றார்.

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எப்படித் தயாராக வேண்டும்?
பொருளாதார மந்த நிலையை முதலீட்டாளர்கள் எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து முதலீட்டு ஆலோசகர் எம்.சதீஷ்குமாரிடம் (நிறுவனர், http://sathishspeaks.com) கேட்டோம். அவர் சொன்னதாவது...
‘‘ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 50 சதவிகிதத் துக்குமேல் வீழ்ச்சிகண்டால் அந்த நாடு பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக நாம் சொல்லலாம். கடந்த 100 ஆண்டுகளில் உலக அளவில் ஒரே ஒரு முறை மட்டும்தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. 1930-ம் ஆண்டில் அமெரிக்கா பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டது. அதிலிருந்து மீண்டு வர எட்டு ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.
தற்போது பொருளாதார நெருக்கடி வருவதற்கான சூழல் இருப்பதாகக் கூறப்படுகிறது. பொருளாதார சுழற்சியில் (Economic Cycle) பொருளாதார மந்தநிலை என்பது வழக்கமான ஒரு பகுதியாகும். பொருளாதார சுழற்சியில் முதலில் ஒரு தொழில் அல்லது வணிகம் நன்றாக விரிவாக்கம் பெற்று உச்சத்தைத் தொடும்.
அந்த உச்சநிலை ஓரளவுக்குதான் நிலையாக இருக்கும். அதன்பிறகு வணிகத்தில், பொருளாதாரத்தில் சற்று வளர்ச்சி குறையும். இந்தக் காலகட்டத்தைதான் பொருளாதார மந்தநிலை காலம் என்பார்கள்.
ஒவ்வொரு எட்டு ஆண்டுக்கு ஒரு முறை பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது பொருளாதார சுழற்சியில் ஒரு பகுதியாகும். அதுதான் இப்போது அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பொருளாதார மந்த நிலை குறித்து இந்திய முதலீட் டாளர்கள் பெரிதாகக் கவலைப் படத் தேவையில்லை. ஒரு வகையில் பார்த்தால், பொருளா தார மந்தநிலை நல்லது என்று கூட சொல்லலாம். பல நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிப்புக்கும், அந்த நிறு வனத்தின் லாப அதிகரிப்புக்கும் சிறிதுகூட தொடர்பு இல்லாமல் இருக்கும். அதாவது, நிகர லாப அதிகரிப்பைவிட பங்கின் விலை பல மடங்கு அதிகரித்திருக்கும். நிறுவனத்தின் லாபத் துக்கும் பங்கு விலைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும். இந்த நிலையில், பங்கு விலை சரியான மதிப் பீட்டுக்கு வர இந்தப் பொருளா தார மந்தநிலை உதவும்.
கோவிட் 19 பரவல் காலத்தில் பொருளாதார மந்தநிலை உருவானது. அப்போது நிலை மையை சீராக்க அமெரிக்காவில் அதிகமாக டாலர் கரன்சிகளை அச்சடித்து விநியோகம் செய்தார்கள். மேலும், வட்டி விகிதத்தை மிகவும் குறைத் தார்கள். இதன் விளைவாக, மக்கள் கையில் நிறைய பணம் புழங்க ஆரம் பித்தது; அவர்கள் தாராளமாகச் செலவு செய்ய ஆரம்பித்தார்கள்.
அதிகமாகச் செலவு செய்ய ஆரம்பிக்கும்போது பொருள் களின் விலை அதிகரித்து விடும். விளைவு, பணவீக்க விகிதம் அதிகரித்துவிடும். அமெரிக்காவில் இப்போது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்க விகிதம் சுமார் 8 சதவிகிதமாக உயர்ந்து விட்டது. நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி சுமார் 1.5 சதவிகித மாகத்தான் இருக்கிறது.
அதிகரித்த பணவீக்க விகிதத்தைக் குறைக்க அமெரிக்காவில் தற்போது வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டில் மட்டும் 3% அமெரிக்காவில் வட்டி உயர்த்தப்பட்டு இருக்கிறது. அங்கு தற்போது வட்டி விகிதம் என்பது 4.4 சதவிகிதமாக உள்ளது. அமெரிக்காவில் மிக நீண்ட காலமாக 0.25% வட்டி இருந் தது. அதனுடன் ஒப்பிடும் போது இது மிகவும் அதிக வட்டி விகிதமாகும். வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் நிலையில், யாரும் அதிகம் கடன் வாங்க மாட்டார்கள். குறிப்பாக, நிறுவனங்கள் கடன் வாங்குவது தடைபடும்.
இந்தியாவில் பணவீக்க விகிதம் சுமார் 6% - 7% என்கிற அளவுக்கு இருக்கும் நிலையில், நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சி 6.5% - 7% என்கிற நிலையில் இருக்கிறது.
இத்தகைய சூழலில், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கும்போது, நீண்ட காலத்தில் செல்வம் சேர்க்க முதலீடு செய்பவர்கள் தான் பங்குச் சந்தை முதலீட்டுக்கு வர வேண்டும். முதலீட்டுக் காலம் குறைந்தது 5 ஆண்டுகளாக இருக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார மந்தநிலை வந்தாலும் முதலீட்டில் நஷ்டப்படாமல் இருக்க முடியும்.
தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்யும்போது நீண்ட காலத்தில் ஈக்விட்டி மூலம் எதிர்பார்க்கும் சராசரி வருமானம் 12 சதவிகிதத்துக்கு மேலேயே கிடைத்துவிடும்.
ஒருவர் நீண்ட கால முதலீட்டாளராக இருக்கும் பட்சத்தில் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்ய பயப்படத் தேவையில்லை. தரமான பங்குகள் மற்றும் ஃபண்டுகளில் முதலீடு செய்துவிட்டு அமைதியாக இருக்கலாம். ஆனால், உங்களின் முதலீட்டுக் கலவையை 3 அல்லது 6 மாதத்துக்கு ஒரு முறை மறுபரிசீலனை செய்வது அவசியமாகும்” என்றார்.

தனிநபர் செய்ய வேண்டியது என்ன?
பொருளாதார நெருக்கடியால் தனிநபர்களுக்கு என்ன பாதிப்பு, அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலனிடம் கேட்டோம்.
‘‘தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலை 2008-ல் இருந்தது போன்றதல்ல. மாறாக, 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மந்தநிலையைப்போல உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள் பலர்.
தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் மந்தநிலை ஏற்கெனவே தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது. ஏற்றுமதியை நம்பியிருந்த நிறுவனங்கள் சில பாதிக்கப்பட்டு இருக் கின்றன. சூரத் ஜவுளி, டைமண்ட் துறை நிறுவனங்கள் தீபாவளி யின் போதுகூட மூடப் பட்டிருந்தன.
உள்நாட்டு சந்தையை நம்பியிருப்பவர்கள் சமாளித்துக்கொண்டார்கள். இது ஓர் உதாரணம்தான். உலகப் பொருளாதார நெருக்கடி உறுதி ஆகிவிட்டால், இது பல துறைகளிலும், பல பகுதிகளிலும் நடக்கும் வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலும், இந்தப் பொருளாதார நெருக்கடி வேலைவாய்ப்புகளில்தான் பெரிய சிக்கலைக் கொண்டு வரப் போகிறது என்கிறார்கள் நிபுணர்கள். எனவே, வேலை மாறுவது, வேலையை விடுவது போன்ற முயற்சிகளில் இப்போதைக்கு இறங்க வேண்டாம்.
தனிநபர்கள் பொருளாதார நெருக்கடி பாதிப்புகளில் சிக்காமல் இருக்க சில விஷயங்களில்கவனமாக இருக்க வேண்டும். புதிய கடன்கள் எதுவும் இப்போதைக்கு வாங்காமல் இருப்பது நல்லது. மிகவும் தவிர்க்க முடியாத காரணங்கள் தவிர, புதிதாக கடன் வாங்கி எதையும் வாங்க வேண்டாம்.
நிறைய பேர் இப்போது மனைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். வீடு, மனை, கேட்ஜெட்டுகள் எதுவாக இருந்தாலும் பொருளாதார மந்தநிலையின் போக்கு தெரியும் வரை பொறுமையாக இருப்பது நல்லது. ஜூலை 2023-க்குப் பிறகு, உலகப் பொருளாதாரத்தின் போக்கு ஒரு தெளிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை தனிநபர்கள் செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
2023 பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிக்க ஆறு மாத காலத்துக்கு சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. தேவையற்ற செலவுகளைக் கூடுமானவரைத் தவிர்த்து விடுங்கள். தொடர்ந்து வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருவதால், தற்போதுள்ள கடன்களில் அதிக வட்டி உள்ள கடன்களை முடிந்தவரை அடைத்துவிட முயற்சி செய்யலாம்.
உலக அளவில் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் வளர்ச்சி சற்று பாசிட்டிவ் போக்கில் உள்ளது. ஆனாலும், பொருளாதார நெருக்கடி வரும்போது எஃப்.ஐ.ஐ போன்ற முதலீட்டாளர்கள் திடீரென்று வெளியேற வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற நெருக்கடி காலத்தில் எந்தவொரு சொத்து வகையும் பாசிட்டிவ் ரிட்டர்னைக் கொடுக்க வாய்ப்பு குறைவு.
நெருக்கடியான காலங்களில் தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றை பாதுகாப்பான முதலீடாக மக்கள் கருது வார்கள். ஆனால், இவையும் அழுத்தத்தில்தான் இருக்கும் என்றே தெரிகிறது.
எனவே, ‘கேஷ் அஸெட்’ என்று சொல்லப்படுகிற ஃபிக்ஸட் டெபாசிட், டேர்ம் டெபாசிட் போன்ற முதலீடுகளை மேற்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். முடிந்தவரை எல்லா குடும்பங்களுமே அவசரகால நிதியை வைத்துக்கொள்வது அவசியம். ஒன்றுக்கு மேற்பட்ட வருமான ஆதா ரங்கள் உள்ள குடும்பங்கள் மூன்று மாதங்களுக்குத் தேவை யான செலவுகளைச் சமாளிக்க அவசரகால நிதியை வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வருமானம் மட்டுமே உள்ள குடும்பத்தினர் ஆறு மாதங்களுக்குத் தேவையான அவசரகால நிதியை வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். திடீரென்று வரும் மருத்துவச் செலவுகள்தான் நிதி நிலையில் பெரிய சிக்கலாக மாறும்.
எனவே, காப்பீடு இல்லாத வர்கள் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் கவரேஜ் உள்ள குடும்பக் காப்பீடு ஒன்றை வாங்கிக் கொள்ள வேண்டும். கைவசமும், வங்கிக் கணக்கிலும் கணிச மாகப் பணம் சேமிப்பில் வைத்திருப்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார்.
உலகப் பொருளாதார நெருக்கடியை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நமது யுக்திகளை அமைத்துக்கொண்டால், பெரிய அளவில் பாதிப்பு எதையும் சந்திக்காமல் நம்மால் தப்பித்துக்கொள்ள முடியும்.
இதற்குத் தேவை, விழிப்புணர்வுடன்கூடிய அறிவுதான். அது இருந்தால், பொருளாதார நெருக்கடி பற்றி நம்மில் யாரும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை!
2008 பொருளாதார நெருக்கடி - ஒரு பார்வை
அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை 2007 டிசம்பரிலிருந்து ஜூன் 2009 வரை நீடித்தது. அமெரிக்க வீட்டுவசதி துறையில் அளிக்கப்பட்ட கடன்களால் ஏற்பட்ட குழப்பங்கள்தான் இந்தப் பொருளாதார மந்தநிலைக்குக் காரணமானது. 2007-ல் வீடுகளின் விலை கடுமையான சரிவைச் சந்தித்தது. வீடுகளைக் கடனில் வாங்கிக் குவித்த மக்கள் வீடுகளை விற்றுக் கடனை அடைக்க விரைந்தனர். இது மேலும் நிலைமையை மோசமாக்கியது. வங்கிகள் கடனைத் திரும்ப வசூலிக்க முடியாமல் திணறின. இதனால் பல முன்னணி வங்கிகள் திவால் ஆகின.
2008 செப்டம்பர் 15-ம் தேதி மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான லேமன் பிரதர்ஸ் திவால் ஆனதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து பல வங்கிகள் திவால் ஆவதாக அறிவித்தன. 2008 பொருளாதார நெருக்கடியில் அமெரிக்காவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2008-ல் மைனஸ் 0.01-ஆகவும் 2009-ல் மைனஸ் 2.5-ஆகவும் குறைந்தது.
அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி மெள்ள பிற நாடுகளுக்கும் பரவியது. 2008-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் உலக அளவில் 25 நாடுகள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகின. 2009-ம் ஆண்டின் முதல் காலாண்டில் 59 நாடுகள் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டன. மிகச் சில நாடுகளே இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பின. ஆஸ்திரேலியா, பொலிவியா, சீனா, கொலம்பியா, இந்தியா, இந்தோனேஷியா, மால்டோவா, போலந்து, ஸ்லவோகியா, தென் கொரியா, உருகுவே ஆகிய நாடுகள்தான் தப்பின. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2008 பொருளாதார நெருக்கடி காலத்தில் ஆரம்பத்தில் சற்று சரிவைச் சந்தித்தது. 2007-ல் 9.8-ஆக இருந்த இந்தியப் பொருளாதார வளர்ச்சி, 2008-ல் 3.9-ஆக வீழ்ந்தது. ஆனால், அடுத்த ஆண்டே சரிவிலிருந்து மீண்டு, 10.3 சதவிகிதத்தை எட்டியது.
இந்தியா பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிக்க முக்கியமான காரணம், இந்தியாவின் நிதிநிலை ஸ்திரமாக இருந்ததுதான். மக்களின் சேமிப்பு, வங்கிகளின் கட்டமைப்பு, ரிசர்வ் வங்கி, செபி ஆகிய கண்காணிப்பு அமைப்புகளின் கொள்கை நடவடிக்கைகள் ஆகியவைதான் இந்தியா பொருளாதார நெருக்கடியில் சிக்காமல் தப்பிக்க உதவின என்பது குறிப்பிடத்தக்கது.