மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீட்டுக் கடன் வட்டிச் சுமையைக் குறைக்கும் வழிகள்..!

வீட்டுக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக் கடன்

கைகொடுக்கும் வீட்டுக் கடன்! - 22

வீட்டுக் கடன் வாங்கியவர்களில் பெரும்பாலானோர் வட்டிக்கு வரிச் சலுகை கிடைத்தாலும் வட்டிக்குச் செல்லும் தொகையைக் குறைக்கவே முயற்சி செய்கிறார்கள். இதன் விளைவுதான் 15, 20 ஆண்டுகளில் அடைக்கும் விதமாக வாங்கும் வீட்டுக் கடன் 7, 8 ஆண்டுகளில் அடைபட்டு விடுகிறது.

எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர், 
https://winworthwealth.com/
எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர், https://winworthwealth.com/

வீட்டுக் கடன் வட்டியைப் பல வழிகளில் குறைக்க முடியும். குறிப்பாக, மாதத் தவணையை அதிகரித்து கட்டுதல், பகுதிக் கடனை அடைத்தல், வட்டி குறைவான வேறு வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்துக்குக் கடனை மாற்றுதல் எனப் பல வழிகளில் வீட்டுக் கடன் வட்டி செலவைக் குறைக்க முடியும்.

கடன் வாங்கும்போதே குறைவான வட்டி...

வீட்டுக் கடன் வாங்கும்போதே குறைவான வட்டியைத் தேர்வு செய்யும்போது வட்டிக்குச் செல்லும் தொகை கணிசமாகக் குறையும். பெரும்பாலானோர் அவர்களுக்கு சம்பளக் கணக்கு அல்லது சேமிப்புக் கணக்கு இருக்கும் வங்கியிலேயே வீட்டுக் கடன் வாங்குகிறார்கள். இதனால், வீட்டுக் கடன் சுலபமாகக் கிடைத்துவிடுகிறது. அதாவது, அதிகம் அலைய வேண்டியிருக்காது; கடன் நடைமுறை சுலபமாக இருக்கும்; மிக அதிக ஆவணங்கள் தேவைப்பட்டிருக்காது.

ஆனால், வட்டி விகிதம் அதிகமாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. வீட்டுக் கடனில் திரும்பக் கட்டும் காலம் மிகவும் அதிகம் என்பதால், 0.25 - 0.5% வட்டி குறைவாக இருந்தாலே வட்டி அதிகமாக மிச்சமாகும்.

உதாரணமாக, ஒருவர் ஆண்டுக்கு 9% வட்டியில் ரூ.30 லட்சம் வீட்டுக் கடனை வாங்கினால், 20 ஆண்டுகளில் கடனைக் கட்டும் போது, வட்டிக்குச் செல்லும் தொகை ரூ.34.78 லட்சமாக இருக்கும். இதுவே வட்டி விகிதம் 0.5% அதிகமாக 9.5 சதவிகிதமாக இருந்தால், வட்டிச் செலவு ரூ.37.11 லட்சம் ஆகும். அதாவது, ரூ.2.33 லட்சம் கூடுதலாகக் கட்ட வேண்டும். எனவே, பல்வேறு வங்கிகள் மற்றும் வீட்டுவசதி நிறுவனங்களில் விசாரித்து அதன்பிறகு, வீட்டுக் கடன் வாங்கும் வங்கியைத் தேர்வு செய்வது லாபகரமானது.

ஒருவருக்கு 800-க்குமேல் கிரெடிட் ஸ்கோர் இருக்கும்பட்சத்தில் மற்றும் வீட்டுக் கடனில் கையிலிருந்து போடும் தொகை 25 சத விகிதத்துக்குமேல் இருக்கும்பட்சத்தில் நிச்சயம் மற்றவர்களைவிடக் குறைவான வட்டியில் வீட்டுக் கடன் வாங்க முடியும். வேலைபார்க்கும் நிறுவனம் பிரபலமான நிறுவனமாக இருந்தாலும் வட்டியில் பேரம் பேசி குறைக்க முடியும்.

வீட்டுக் கடன் வட்டிச் சுமையைக் 
குறைக்கும் வழிகள்..!

கடன் கட்டும் காலம்...

வீட்டுக் கடனைத் திரும்பக் கட்டும் காலம் 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் எனக் குறுகியதாக இருந்தால் வட்டியாகக் கட்டும் தொகை குறைவாக இருக்கும். அதே நேரத்தில், மாதத் தவணை மிக அதிகமாக இருக்கும். உதாரணமாக, ஒருவர் ரூ.30 லட்சம் வீட்டுக் கடன் வாங்குகிறார். கடனுக் கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 9%. இந்தக் கடனை 10 ஆண்டுகளில் திரும்பக் கட்டுவதாக இருந்தால், மாதத் தவணையாக ரூ.38,000 கட்ட வேண்டும். இதில், வட்டிக்குச் செல்லும் தொகை ரூ.15.60 லட்சம் ஆகும்.

இதுவே கடனை 20 ஆண்டுகளில் கட்டும்போது, மாதத் தவணையாக ரூ.26,990 கட்ட வேண்டும். இங்கே வட்டிக்குச் செல்லும் தொகை ரூ.34.78 லட்சமாக இருக்கும். பத்து ஆண்டுகளுக்குப் பதில் 20 ஆண்டுகளில் வீட்டுக் கடனைக் கட்டும்போது வட்டி மட்டும் ரூ.19.18 லட்சம் கூடுதலாகக் கட்ட வேண்டும்.

ஆக, குறுகிய காலத்தில் வீட்டுக் கடனைக் கட்டி முடிக் கும்போது, வட்டிச் செலவை வெகுவாகக் குறைக்கலாம். அதே நேரத்தில், மாதம் ரூ.11,010 அதிகமாகக் கட்டி வர வேண்டும். எனவே, அதிக மாதத் தவணை தொடர்ந்து கட்ட முடியும் எனில், மட்டுமே குறுகிய காலத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

பகுதி தொகையைக் கட்டுதல்...

வீட்டுக் கடனைப் பொறுத்த வரை, மாதம்தோறும் பாக்கி இருக்கும் தொகைக்குதான் வட்டி விதிக்கப்படும். அந்த வகையில், இடையில் மொத்தத் தொகை கட்டும்பட்சத்தில் பாக்கித் தொகை உடனே குறைந்துவிடும். இதனால் நீண்ட காலத்தில், வட்டிக்குச் செல்லும் தொகை கணிசமாகக் குறையும். உதாரணமாக, ஒருவருக்கு ரூ.30 லட்சம் வீட்டுக் கடன் பாக்கி இருக்கிறது. வீட்டுக் கடனில்ரூ.5 லட்சத்தைத் திரும்பச் செலுத்தினால், பாக்கிக் கடன் ரூ.25 லட்சமாகக் குறைந்துவிடும். அடுத்த மாதம் இந்த ரூ.25 லட்சத் துக்குதான் வட்டி போடப்படும்.

மேலும், மாறுபடும் வட்டியில் வாங்கப்படும் வீட்டுக் கடனில் பகுதிக் கடனை அடைக்க அபராதம் எதுவும் இல்லை. எனவே, போனஸ், அரியர்ஸ் தொகை போன்று ஏதாவது தொகை மொத்தமாகக் கிடைத் தால், அதை வீட்டுக் கடனை அடைக்கப் பயன்படுத்தினால் வட்டிக்குச் செல்லும் தொகை கணிசமாகக் குறையும்.

இப்படி வீட்டுக் கடன் அசலை அதிகமாகக் கட்டினாலும் 80சி பிரிவின்கீழ் நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம்தான் வருமான வரிச் சலுகை கிடைக்கும் என்பதை மனதில் கொள்வது அவசியமாகும்.

வேறு வங்கிக்குக் கடனை மாற்றுதல்...

ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட கடன்களுக்கு அதிக வட்டியையும், இப்போது புதிதாகக் கடன் வாங்குபவர் களுக்குக் குறைவான வட்டியையும் வங்கிகள் வசூலிக்கின்றன. நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், இப்போது கடனுக்கான வட்டி சுமார் 9.5 சத விகிதத்துக்குமேல் இருக்கும். இந்த நிலையில், சுமார் 8 சத விகிதத்துக்கு வேறு வங்கியில் வீட்டுக் கடன் கிடைக்கும்பட்சத்தில் அதற்கு மாற்றிக்கொள்வது லாபகரமாக இருக்கும்.

வீட்டுக் கடனை வேறு வங்கி அல்லது வீட்டுவசதி நிறுவனத்துக்கு மாற்றினால் எப்போதும் லாபகர மாக இருக்கும் என்று சொல்ல முடியாது. வேறு வங்கிக்கு வீட்டுக் கடனை மாற்றும்போது, புதிய கடனுக்கு விண்ணப்பிக்கும்போது மீண்டும் பொறியாளர் மதிப்பீட்டு அறிக்கை, சட்டக் கருத்து (Legal Opinion), வீட்டுக் கடன் பரிசீலனை ஆகியவற்றுக்குக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அந்த வகையில் அதிக கடன் தொகை மற்றும் கடன் வாங்கிய சில ஆண்டு களில் கடனை மாற்றினால்தான் வட்டியில் ஓரளவுக்கு சேமிப்பு இருக்கும்.

மேலும், புதிய வங்கி அல்லது வீட்டுவசதி நிறுவனம் எவ்வளவு காலத்துக்கு புதிய கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தை அதிகரிக்காமல் வைத்திருக்கும் எனச் சொல்ல முடியாது. எனவே, கண்ணை மூடிக்கொண்டு வேறு வங்கிக்கு மாற்றாமல், எவ்வளவு மிச்சமாகும் எனச் சரியாகக் கணக்கிட்டு அதன் பிறகே இறுதிமுடிவை எடுக்க வேண்டும். இப்படி மாற்றும்போது வட்டி விகித வேறுபாடு 1.5 - 2 சதவிகிதமாவது இருக்க வேண்டும். மேலும், கடனைக் கட்டிமுடிக்கும் காலம் குறைந்தது 5 ஆண்டு களுக்கு மேலாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் மட்டுமே வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றுவது மூலம் சில லட்சம் ரூபாயாவது மிச்சமாக வாய்ப்பு உண்டு.

வீட்டுக் கடன் வட்டிச் சுமையைக் 
குறைக்கும் வழிகள்..!

கவனிக்க வேண்டிய வசதிகள்...

* வீட்டுக் கடனை மாற்றும்போது கடன் வாங்கியவரின் வயது சுமார் 55-க்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் வீட்டுக் கடனை மாற்ற வங்கிகள் தயங்கும்.

* மாதத் தவணையைத் தொடர்ந்து தவறாமல் கட்டி வந்திருக்க வேண்டும்.

* மேலும், நிரந்தரப் பணியில் இருக்க வேண்டும்; தற்போதைய சம்பளச் சான்றிதழ் கொடுக்க வேண்டும்.

* கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே புதிய வங்கி கடனை மாற்றிக்கொள்ள சம்மதிக்கும். இப்படி ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு வீட்டுக் கடனை மாற்ற அந்தக் கடன் மாறுபட்ட வட்டி விகிதத்தில் வாங்கப்பட்டிருந்தால், அபராதம் எதுவும் விதிக்கக் கூடாது என்பது ஆர்.பி.ஐ-யின் விதிமுறை ஆகும்.

சம்பள உயர்வுக்கேற்ப மாதத் தவணை...

பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில வீட்டுவசதி நிறுவனங்கள் வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையை ஆண்டுதோறும் அதிகரித்துக்கட்ட அனுமதிக்கின்றன.ஒருவருக்கு ஆண்டுக்கு 10 - 20% சம்பள உயர்வு கிடைக்கிறது எனில், அவர் ஆண்டுதோறும் சுமார் 5% வீட்டுக் கடன் தவணையை அதிகரித்துக் கட்டி வரலாம். இப்படி செய் வதன் மூலம் வீட்டுக் கடன் விரைவிலேயே முடிந்து விடுவதுடன் வட்டியும் கணிசமாக மிச்சமாகியிருக்கும்.

கடன் வாங்கியவர் வேறு வங்கியிலிருந்து கடன் எதுவும் வாங்காமல் அவரின் சொந்தப் பணத்தை, அதாவது குடும்பச் சொத்து விற்ற பணத்தில் பங்காகக் கிடைத்த தொகை, முதலீட்டுப் பெருக்கம் மூலம் கிடைத்த தொகை, சொந்த சேமிப்பு போன்றவற்றைக் கொண்டு பகுதிக் கடன் அல்லது மொத்தக் கடனை அடைக்க பயன்படுத்தும் பட்சத்தில் பல வங்கிகள், வீட்டுவசதி நிறுவனங்கள் அபராதம் எதுவும் விதிப்பதில்லை. ஆண்டுக்கு இவ்வளவு அதிகரித்து கட்ட வேண்டும் அல்லது இவ்வளவு தொகை கூடுதலாகக் கட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்து வீட்டுக் கடனைக் கட்டி வருவது நல்லது!

(சொந்த வீட்டை வாங்குவோம்)