மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்துவது லாபமா..?

வீட்டுக் கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக் கடன்

கைகொடுக்கும் வீட்டுக் கடன்! - 21

வட்டி அதிகரிப்பு, கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு, வீடுகளின் விலை அதிகரிப்பு போன்றவற்றால் வீட்டுக் கடன் மாதத் தவணை அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில், வீட்டுக் கடனை 20, 25 ஆண்டுகளில் அடைக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர், 
https://winworthwealth.com/
எஸ்.கார்த்திகேயன், நிதி ஆலோசகர், https://winworthwealth.com/

சீக்கிரம் கட்டிமுடிப்பது நல்லதா?

இந்தியாவைப் பொறுத்தவரை, 15, 20 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் வாங்கினாலும் பெரும்பாலானோர் 7 முதல் 10 ஆண்டுகளில் அடைத்து முடித்துவிடுகிறார்கள். கடனைத் திரும்பக் கட்டும் காலம் அதிகரிக்க அதிகரிக்க வட்டிக்குச் செல்லும் தொகை அதிகமாக இருப்பது முக்கியமான காரணம். இன்னும் சிலர், கடனைத் தொடர்ந்து வைத்திருக்க விரும்பாததாலும், சீக்கிரம் அடைத்துவிடுவார்கள்.

இன்று அனைவருக்கும் உள்ள சவால், வீட்டுக் கடனை சீக்கிரம் முடிப்பது நல்லதா அல்லது கடைசி வரை வைத்திருப்பதா என்பதே.

முதலீடா, கடன் அடைப்பா..?

நிறைய பேர் கடனை சீக்கிரமாகக் கட்டி முடிப்பது நல்லது என நினைக்கிறார்கள். கடனோ, முதலீடோ நாம் எப்போதும் உணர்ச்சி வசப்படாமல் யோசித்து முடிவெடுக்க வேண்டும். வீட்டுக் கடன் வட்டி என்பது நமக்குக் கிடைக்கும் கடன்களில் மிகக் குறைந்த வட்டி மற்றும் நீண்ட கால கடன் ஆகும். தற்போதைய நிலையில், வீட்டுக் கடன் வட்டி சுமார் 9% இருக்கிறது. பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரி 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில், கூடுதலாகப் பணம் கட்டி கடனை விரைந்து அடைப்பதா அல்லது அந்தக் கூடுதல் தொகையை முதலீடு செய்து, கூடுதல் வருமானம் பெற்று அதைக் கொண்டு கடனை அடைப்பதா அல்லது வேறு நிதி இலக்குகளுக்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்துவதா என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது.

வீட்டுக் கடனில் திரும்பக் கட்டும் அசலில் நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு வருமான வரி 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை இருக்கிறது. வீட்டுக் கடன் வட்டியில் நிதி ஆண்டில் ரூ.2 லட்சம் வரை வரிச் சலுகை இருக்கிறது. அந்த வகையில் வட்டிக்கு நிகரமாகச் செல்லும் தொகை குறைவாக இருக்கிறது. எனவே, வீட்டுக் கடனை அதற்கு என ஆரம்பத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட ஆண்டுகளுக்கு நிதானமாகக் கட்டி வருவது லாபகரமாக இருக்கும்.

மேலும், நீண்ட காலத்தில் பணவீக்க விகித உயர்வால் வீட்டுக் கடனுக்கான மாதத் தவணை என்பது மிகச் சுலபமாகக் கட்டுவதாக இருக்கும். 15 ஆண்டுகளுக்கு முன் சொந்த வீடு வாங்கி மாதத் தவணை தொகை ரூ.8,000-ஆக இருந்த நிலையில், அந்த ரூ.8,000 இன்றைக்கு மிகப் பெரிய தொகை கிடையாது. வீட்டுக் கடன் வாங்கியவருக்கு வருமானம் / சம்பளம் அதிகரித்தால், அவரால் மிகச் சுலபமாக வீட்டுக் கடன் தவணையைக் கட்ட முடிகிறது.

வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்துவது லாபமா..?

வீட்டுக் கடனை 15, 20 ஆண்டுகளுக்குப் பதில் 5, 10 ஆண்டுகளில் கட்டுவது மூலம் வட்டிக்குச் செல்லும் தொகை கணிசமாக மிச்சமாகும் என்பது உண்மைதான். அதே நேரத்தில், அதிக தொகையை மாதத் தவணை யாகக் கட்ட வேண்டியிருக்கும். இது குடும்ப பட்ஜெட்டில் கட்டாயம் துண்டு விழவைக்கும். இதர செலவுகளைக் குறைத்து செய்ய வேண்டி யிருக்கும் அல்லது சில செலவுகளைத் தவிர்க்க வேண்டி இருக்கும் அல்லது பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம் போன்ற இதர முக்கியமான தேவைகளுக்கு முதலீடு செய்வது தடைபடும்.

இதற்குப் பதில், கடனை அதற்குரிய காலத் தில் நிதானமாகக் கட்டிவரும் பட்சத்தில் சில ஆண்டுகளில் இ.எம்.ஐ சுமையாகத் தெரியாது. இப்போது நாம் ஏற்கெனவே சொன்னது போல் மீதித் தொகையை முதலீடு செய்வது மூலம் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அதே நேரத்தில், சிலர் வீட்டுக் கடனை பெரும் சுமையாக நினைக்கிறார்கள். அவர்கள் கடனை சென்டிமென்டாக நெகட்டிவ் என பார்க்கும் சூழ்நிலையில் அதை விரைந்து அடைத்துவிடுவது நல்லதாகும்.

மாறுபடும் வட்டியில் வாங்கி இருக்கும் வீட்டுக் கடனில் பகுதிப் பணத்தைக் கட்டினால் அல்லது பாக்கி முழுத் தொகையைக் கட்டி னால் அபராதம் எதுவும் போடக் கூடாது என்பது ஆர்.பி.ஐ விதிமுறை. அதே நேரத்தில், நிலையான வட்டியில் வீட்டுக் கடன் வாங்கி இருக்கும் பட்சத்தில் பாக்கி உள்ள கடன் பாக்கியில் 4% வரை அபராதம் கட்ட வேண்டியிருக்கும்.

வீட்டுக் கடனை முன் கூட்டி அடைக்கத் திட்டமிடும் போது அபராதம் உள்ளதா என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது. எவ்வளவு வேண்டுமானாலும் பகுதி பணத்தைக் கட்டுவதற்கு சில வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் அனுமதிக் கின்றன. அதே நேரத்தில், சில வங்கிகள், ஆண்டுக்கு சில இ.எம்.ஐ-களை மட்டுமே கூடுதலாகக் கட்ட அனுமதிக் கின்றன.

வீட்டுக் கடனை முழுமை யாக முன்கூட்டியே அடைக்க போகிறீர்கள் எனில், அந்தத் தகவலை வங்கிக்கு முன் கூட்டியே தெரிவித்து விடுங்கள். அப்போதுதான் கடனை அடைப்பது வேகமாக நடக்கும். கடனை முன்கூட்டியே முழுமையாக அடைக்கும் விஷயத்தை மெயில் அல்லது கடிதம் மூலம் உறுதிப்படுத்துவது அவசியம்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

சினிமா, திரைப்பட நடிகர்கள், குறிப்பிட்ட ஆண்டுகளில் மாற்றத்துக்கு உள்ளாகும் வணிகம் மற்றும் தொழிலில் ஈடுபட்டிருப் பவர்கள், குறுகிய காலமே கிடைக்கும் தொழிலில் இருப்பவர்கள் போன்றவர்கள் வீட்டுக் கடனை விரைந்து அடைப்பதில் தவறில்லை. இதுபோன்றவர்கள் கடனை நீண்ட காலத்துக்கு வைத்துக்கொள்ளாமல் சுமார் ஐந்து ஆண்டுகளில் அடைக்கலாம்.

நிரந்தரமான வேலை / தொழில், ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து சம்பளம் / வருமானம் உயரும் என்கிறபட்சத்தில், வீட்டுக் கடனை விரைந்து அடைக்கத் தேவையில்லை. வழக்கமான மாதத் தவணையைக் கட்டிவந்தால் போதும். கூடுதல் தொகையை வேறு நல்ல முதலீடுகளில் முதலீடு செய்துவரலாம். இப்படி செய்யும்பட்சத்தில் நீண்ட காலத்தில் செல்வம் உருவாக்குதல் நடக்கும்.

 வீட்டுக் கடன் வெகுவாகக் குறைந்து ரூ.8 லட்சம், ரூ.5 லட்சம் என்பதுபோல் இருக்கும் நிலையில் மொத்தமாக அதை அடைத்துவிடத் தோன்றும். சொத்துப் பத்திரம் நம் கைக்கு வந்துவிடும் என்று எண்ணத் தோன்றும். வங்கியில் பத்திரம் இருப்ப தாலோ, நம் வீட்டில் பத்திரம் இருப்பதாலோ பெரிய வேறுபாடு ஒன்றும் இருக்காது.

 உபரியாக இருக்கும் பணத்தை ஒருவர் ஆடம்பரச் செலவு செய்கிறார்; மேலும், செலவு என்பது கட்டுக்குள் இல்லை. தேவையில்லாத செலவுகள் அதிகம் ஆகிறது எனில், அந்தப் பணத்தைக் கொண்டு பாக்கியிருக்கும் வீட்டுக் கடனை அடைத்துவிடுவது லாபகரமாக இருக்கும். வீட்டுக் கடனை வைத்துக் கொண்டு ஆடம்பரச் செலவுகளைச் செய்யாதீர்கள்.

 உங்களால் பணத்தை சரியாக நிர்வகிக்க முடியும். ரிஸ்க் எடுத்து முதலீடு செய்து பணத்தை பன்மடங்கு பெருக்க முடியும் எனில், அதைச் செய்வது லாபகரமாக இருக்கும். சிறிய முதலீட் டின்மூலம் பகுதி நேரத் தொழில்/வணிகம் மூலம் கூடுதலாக சம்பாதிக்க முடியும் என்பவர்கள் வீட்டுக் கடனை விரைந்து அடைக்கத் தேவையில்லை.

 வீட்டுக் கடனை விரைந்து அடைப்பதற்குப் பதில் எதிர்காலத்தில் தங்கம் தேவை என்கிறவர்கள், தங்க நாணயம், டிஜிட்டல் வழியில் தங்கத்தை வாங்கி வைக்கலாம்.

 கடன் வாங்கி வீடு வாங்கியிருக்கும்பட்சத்தில் செலவுகளில் மிகவும் சிக்கனம் தேவை. தேவை இல்லாத பொருள்களை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது!

(சொந்த வீட்டை வாங்குவோம்)

என்.ஆர்.ஐ-களுக்கு இந்தியாவில் வீட்டுக் கடன் கிடைக்குமா?

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) வெளிநாட்டிலிருந்தபடி இந்தியாவில் வீட்டுக் கடன் பெற்று இந்தியாவில் வீடு கட்டலாம் அல்லது வீடு வாங்கலாம். பெரும்பாலான வங்கிகளும், வீட்டுவசதி நிறுவனங்களும் என்.ஆர்.ஐ-களுக்கு வீட்டுக் கடன் வழங்க அதிக ஆர்வம் காட்டு கின்றன. வீட்டுக் கடன் தொடர்பான பெரும்பான்மையான விதிமுறைகள் இந்தியர்களுக்கும் என்.ஆர்.ஐ.களுக்கும் ஒரே போல் இருக்கின்றன. கடன் வாங்குபவர் செலுத்தும் முன்பணம் வீட்டின் மதிப்பில் 15% - 20 சதவிகிதமாகவும், கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 5 முதல் 30 ஆண்டுகள் எனவும் இந்தியர்களுக்கு இருப்பது போலவே என்.ஆர்.ஐ-களுக்கும் இருக்கின்றன. மேலும், வட்டி விகிதமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.

என்.ஆர்.ஐ-கள் தங்களுடைய பாஸ்போர்ட்டின் நகல், எந்த நாட்டில், எந்தப் பணியில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான சான்றிதழ், சம்பளச் சான்றிதழ், இந்தியாவில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு (என்.ஆர்.இ./எஃப்.சி.என்.ஆர் /என்.ஆர்.ஓ) போன்ற விவரங் களைக் கூடுதலாகக் கேட்பார்கள். இவற்றுடன் இந்தியர்களுக்கு வீட்டுக்கடன் வழங்க என்னென்ன ஆவணங்களைக் கேட்பார்களோ, அவற்றை என்.ஆர்.ஐ-களிடமும் கேட்பார்கள். என்.ஆர்.ஐ-கள் அவருக்கு பதில், வீட்டுக் கடன் தொடர்பான வேலைகளைச் செய்ய ஒருவரை வெளிநாட்டில் இருந்தபடியே நியமித்து, பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்க முடியும். என்.ஆர்.ஐ-கள் வீட்டைப் பழுது பார்க்கவும், புதுப்பிக்கவும், விரிவுபடுத்தவும் வீட்டுக்கடன் பெறலாம்.