
பிளானிங்
ராமகிருஷ்ணன் வி நாயக், நிதி ஆலோசகர், https://www.dakshincapital.com/
‘தேவையில்லாத பொருள்களை வாங்கிக் குவித்தால், அவசியச் செலவு செய்ய தேவையான பொருள்களை விற்க வேண்டி வரும்’ என உலகின் முன்னணி முதலீட்டாளர்களில் ஒருவ ரான வாரன் பஃபெட் எப்போதோ சொல்லியது இன்றும் அர்த்தம் உள்ளதாக உள்ளது.
தேவை இல்லாத செலவு கள் இன்றைக்கு இன்பம் தருவதாக இருக்கும். ஆனால், நீண்ட காலத்தில் அவை துன்பத்தைத் தருவதாக இருக்கும். அந்த வகையில், தேவை இல்லாத செலவுகளை எப்போதும் தவிர்ப்பது அவசியமாகும்.
தேவை இல்லாத செலவு களைக் கட்டுக்குள் கொண்டு வர உதவும் 8 எளிய வழி களைப் பார்ப்போம்.

1. பக்கா பட்ஜெட் தேவை...
குடும்பத்தின் அனைத்து வரவு மற்றும் செலவை உள்ளடக்கிய பக்கா பட்ஜெட் அவசியம் தேவை. அப்படி பட்ஜெட் போட்டு செலவு செய்யும்போதுதான் கடன் இல்லாத வாழ்க்கை வாழ முடியும்.
மேலும், ஒருவர் கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தை வீணாக்குவதில் இருந்து காப்பாற்றுவது குடும்ப பட்ஜெட் எனில், அது மிகை இல்லை. எனவே, உங்களின் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர பட்ஜெட் போட்டு செலவு செய்வது கட்டாயமாகும்.
2. பொருள்களின் பயன்பாட்டைக் கவனியுங்கள்...
ஒரு பொருளை வாங்க மிகக் குறைந்த நேரம் போதும். ஆனால், அந்தக் குறிப்பிட்ட பொருள் உங்களின் முன்னுரிமைப் பட்டியலில் இருப்பது அவசியம். மேலும், அதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதாக இருக்க வேண்டும். இல்லை எனில், தேவை இல்லாத பொருள் களுக்கு அதிகமாகச் செலவழித்து, பணத்தை வீணாக்கும் அபாயம் உள்ளது.
3. செலவுகளைக் கண்காணியுங்கள்...
அனைத்துச் செலவுகளையும் ஒரு நோட்டில் எழுதி வையுங்கள் அல்லது எக்ஸெல் ஷீட்டில் பதிவு செய்யுங்கள். மாதக் கடையில் எதற்கு, எவ்வளவு செலவு செய்திருக் கிறீர்கள் என்பதை இனம் வாரியாகப் பிரியுங்கள்.
இப்படிச் செய்யும்போது, தேவை இல்லாமல் செய்த செலவுகள் தனியே தெரியும். அவற்றை அடுத்துவரும் மாதங்களில் படிப்படியாகக் குறைத்தாலே சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கான தொகை சுலபமாகக் கிடைத்துவிடும். இப்போதெல்லாம் செலவுக் கணக்குகளைக் குறித்து வைக்க நிறைய இணைய தளங்கள் உதவுகின்றன. மேலும், மொபைல் செயலிகளும் உள்ளன.
4. ஷாப்பிங் பட்டியல் போடுங்கள்...
பலர் கடைகளுக்குச் சென்ற பிறகு, அங்கு கண்ணில் படும் பொருள்களை எல்லாம் வாங்கி வருகிறார்கள். இதனால் அவசியம் தேவையில்லாத பொருள்களை வாங்கும் அபாயம் அதிகம் இருக்கிறது. இதற்குப் பதில் வீட்டைவிட்டு கிளம்பும்போதே என்னென்ன பொருள்கள் அவசியம் தேவைப்படுகிறது என்கிற பட்டியல் போட்டுவிடுவது நல்லது.
உதாரணமாக, அடுத்த வாரம் உங்கள் பிள்ளையின் பிறந்த நாள் வருகிறது. அதை வீட்டிலேயே குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாட விரும்புகிறீர்கள் எனில், என்னென்ன பரிசு பொருள்கள் வாங்க வேண்டும், எப்படி அலங்காரம் செய்ய வேண்டும், இதர செலவுகள் என்னென்ன இருக்கின்றன, அவை ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சம் எவ்வளவு செலவு செய்ய வேண்டும், மொத்தச் செலவு தொகை எவ்வளவு என்பது வரைக்கும் பட்டியல் போட்டுக் கொண்டு கடைக்குக் கிளம்புவது நல்லது. உதாரண மாக, பிள்ளையின் முதல் பிறந்த நாள் அலங்காரச் செலவுகள் ரூ.15,000-க்குள் முடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தால் அதற்குள் முடிக்க வேண்டும்.
வீட்டுக்குத் தேவையான அவசியமான பொருள்கள் எல்லாம் இருக்கிறது. இதையும் தாண்டி முதலீட்டுக் கான தொகை, வீட்டுக் கடன் இ.எம்.ஐ-க்கான தொகை போக, தாராளமாகப் பணம் இருக்கிறது எனில் மட்டுமே ஆடம்பரமான பொருள்களை வாங்க வேண்டும் மற்றும் ஆடம்பரமான சேவைகளை அனுபவிக்க வேண்டும்.

5. ரொக்கப் பணப் பயன்பாடு...
மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் ரொக்கப் பணத்தின் பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியில் நீண்ட காலமாகக் களமிறங்கி இருக்கிறது. அந்த வகையில், நாம் ஆன்லைன் பரிவர்த்தனை, கார்டு பரிவர்த்தனை, மொபைல் பேங்கிங் ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறோம். இந்த முறையில் நாம் அளவுக்கு மீறி செலவு செய்யும் அபாயம் அதிகமாக இருக்கிறது. அதுவும் கையில் கிரெடிட் கார்டு இருந்து விட்டால் கேட்க வேண்டாம்.
செலவைக் கட்டுக்குள் கொண்டு வர கிரெடிட் கார்டுகளுக்குப் பதில் டெபிட் கார்டைப் பயன்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.
எந்தப் பொருளையும் கடனில் வாங்குவதில்லை என இலக்கு நிர்ணயம் செய்துகொண்டு செயல்படுவது நல்லது. டெபிட் கார்டு பயன்படுத்துவது என்றாலும் ரொக்கப் பணமாக எடுத்து வைத்துக்கொண்டு, கடைகளுக்கு செல்லும்போது குறிப்பிட்ட அளவு பணத்தை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். டெபிட் கார்டை எடுத்துச் செல்லக் கூடாது. மேலும், கடைக்குக் கிளம்பும்முன் அன்றைக்கு செலவு செய்யும் தொகைக்கு ஒரு வரம்பை டெபிட் கார்ட்டில் நிர்ணயித்துக்கொண்டு சென்றால்தான் செலவைக் கட்டுக்குள் வைக்க முடியும். இதேபோல் கூகுள் பே, போன் பே போன்றவற்றிலும் வரம்பு நிர்ணயம் செய்துகொள்வது நல்லது.
6. விண்டோ ஷாப்பிங் தவிர்க்கவும்...
கடையில் உள்ள பொருள்களுள் எதையும் வாங்கும் நோக்கம் இன்றி பார்த்து வருவதை ‘விண்டோ ஷாப்பிங்’ (Window-Shopping) என்கிறார்கள். அண்மையில் நண்பர் ஒருவர் அவர் வசிக்கும் பகுதியில் புதிதாக ஷாப்பிங் மால் ஒன்று திறக்கவே, அங்கு என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும், சனிக்கிழமை மாலை பொழுதுபோக்கவும் மனைவியுடன் அந்த மாலுக்கு சென்றிருக்கிறார். அந்தக் கடையில் உள்ளவர்களின் கவர்ச்சி பேச்சு, தள்ளுபடி விலை, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போன்ற சலுகைகளில் மயங்கி கிரெடிட் கார்ட்டில் ரூ.20,000-க்கு பொருள்களை வாங்கி யிருக்கிறார்.
வீட்டுக்கு வந்து நிதானமாக யோசித்தால் அவற்றில் பல பொருள்கள் தேவை இல்லாதவை. எனவே, சும்மா பொழுதுபோக்குக்கு என்று கூட நோட்டம் விடுவதற்காக கூட எந்தக் கடைக்குள்ளும் போகாதீர்கள்; மீறினால் பர்ஸ் காலி. ஆன்லைனில் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இணையதளங்களில் பொருள்களை பார்வையிடும் போதும் இப்படி தேவை இல்லாத பொருள்களை வாங்கிவிடும் அபாயம் இருக்கிறது.
7. நிதி இலக்குகளைப் பட்டியல் போடுங்கள்...
ஒருவருக்கு குறுகிய காலம், நடுத்தரக் காலம், நீண்ட கால நிதி இலக்குகள் என்னென்ன இருக்கின்றன என்பதை முதலில் பட்டியல் போட வேண்டும். அதன் பிறகு, அவற்றை நிறைவேற்ற மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் எனப் பட்டியல் போடுங்கள்.
அதன்படி முதலீடு செய்ய ஆரம்பியுங்கள். கூடவே வங்கி சேமிப்புக் கணக்கில் இது வரைக்கும் சேர்ந்திருக்கும் தொகையைப் பிரித்து நிதி இலக்குகள் நிறைவேறுவதற்கு முதலீடு செய்யுங்கள். இப்போது உங்கள் கைவசம் உபரித் தொகை பெரிதாக இருக்காது. இனி தேவை யில்லாத செலவுகள் செய்யத் தோன்றாது. அதே நேரத்தில், அவசரச் செலவுகளை சமாளிப்பதற்கு என சுமார் மூன்று மாத செலவுக்குரிய தொகையை அவசரக் கால நிதியாக வங்கி சேமிப்புக் கணக்கு மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் லிக்விட் திட்டத்தில் போட்டு வையுங்கள்.
8. தள்ளுபடியால் லாபமா?
வீட்டுக்கு ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி போன்ற ஏதாவது ஒன்று வாங்க வேண்டியிருக் கிறது எனில், அவற்றைப் பண்டிகைக் கால தள்ளுபடிக்காகக் காத்திருந்து வாங்கலாம் தவறில்லை; லாபமாக இருக்கும்.
பெரும்பாலும் அனைத்துப் பெரிய கடை களும், பிராண்டுகளும் சிறப்புத் தினங்கள் மற்றும் முக்கியமான பண்டிகைகளையொட்டி சிறப்புத் தள்ளுபடி வழங்கி வருகின்றன. மற்ற நேரங்களில் கடனுக்கு வட்டி விதிக்கும் நிலையில், இது போன்ற நேரங்களில் வட்டி இல்லாத கடன்களை வழங்குகின்றன. அதே நேரத்தில், இந்தப் பொருள்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது; வட்டி இல்லாமல் கடனில் கிடைக்கிறது என்பதற்காக மட்டும் வாங்குவது அதிக இழப்பாகும். அந்தப் பொருளாலும் பயன் இல்லை. மேலும், வேறு நிதி இலக்குக்குத் தேவையான பணமும் வீணாகிறது.
குறிப்பிட்ட டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுக்குக் குறிப்பிட்ட பிராண்ட் பொருளை வாங்கும்போது ரூ.5,000 அல்லது ரூ.6,000 என்பதுபோல் அடிக்கடி உடனடித் தள்ளுபடி அல்லது 120 நாள்களுக்குப் பிறகு தள்ளுபடி என இருக்கிறது. அந்த கார்டு உங்களிடம் இருந்தால், அந்தப் பொருள் அவசியம் தேவை எனில், வாங்கிக்கொள்ளலாம். அல்லது உங்கள் உறவினர்கள், நண்பர்களிடம் அந்த கார்டு இருந்தால் அதைப் பயன் படுத்தித் தள்ளுபடி சலுகையை அனுபவிப்பது மூலம் பணம் மிச்சமாகும்.
ஆக, தேவையில்லாத செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவரும் வழிகளைச் சொல்லிவிட்டோம். இந்த வழிமுறைகளை உங்கள் வாழ்க்கையின் தேவைக்கேற்ப நடைமுறைப்படுத்தி, பணத்தைச் சேமித்து முதலீடு செய்யத் தொடங்குங்கள்!
அதிக செலவுக்குப் பின்னால் உள்ள உளவியல்!
ஒருவர் தேவையில்லாமல் அதிகமாகச் செலவு செய்கிறார் எனில், அதற்கு சில உளவியல் காரணிகள் (Psychological factors) இருக்கக்கூடும். பலருக்கும் புதிதாக ஒன்றை வாங்குவதன்மூலம் ஒரு கணநேர திருப்தி மற்றும் சாதனை உணர்வு கிடைக்கிறது. வெளிப்படையாகச் சொல்வது எனில், மற்றவர்கள்முன் பந்தாவாக உணர்வதே இதற்குக் காரணமாகும். நண்பர்கள் அனைவரும் சேர்ந்து வெளியில் எங்காவது சிற்றுண்டி சாப்பிடச் சென்றிருப்பார்கள். அப்போது செலவுத் தொகையை அனைவரும் பிரித்துக்கொள்ளும் சூழ்நிலை இருக்கும். ஆனால், ஒருவர் பந்தாவுக்காக மொத்தத் தொகையையும் கொடுத்து பெருமை தேடிக்கொள்வது நடக்கும். இதுபோன்ற மனநிலை சார்ந்த பணச் செயல்களைத் தவிர்த்தாலே வீண் செலவுகளைத் தவிர்க்க முடியும்.