
மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச்! 11
வித்யா பாலா, இணை நிறுவனர், Primeinvestor.in
நீண்ட காலத்துக்குத் தங்களுடைய முதலீடுகளை வைத்திருக்க நினைக்கும் முதலீட்டாளர்களிடம் இருக்கும் பெரிய பிரச்னை, அவர்கள் தங்களுடைய முதலீடு களைத் தெளிவாக வைத்திருக்காமல் சிக்கல் மிகுந்ததாக ஆக்கிக்கொள்வதுதான். நீண்ட கால முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டைத் திட்டமிடும்போது மனதில் கொள்ள வேண்டிய 5 முக்கியமான விதிமுறைகள் இனி...
1. தொடர்ச்சியான சேமிப்பு, முதலீடு...
நீண்டகால முதலீட்டில் முதன்மையான விதிமுறை இது. எந்த விதத்திலும் இதை சமரசம் செய்துகொள்ளக் கூடாது. வழக்கமாக தொடர்ச்சியான சேமிப்பு என்றாலே எஸ்.ஐ.பி என்று நினைக்க வாய்ப்புள்ளது. ஆனால், நான் குறிப்பிட நினைப்பது அதுவல்ல. நீங்கள் மொத்தமாகவும் முதலீடு செய்யலாம். ஆனால், இலக்கு என்ன, எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதை யோசிக்காமல் மொத்த முதலீடுகளை மேற்கொண்டால் அதில் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொடர்ச்சியான சேமிப்பும், முதலீடும் பெரிய இலக்குகளை எளிதில் எட்டும் செயல்திட்டத்தை வகுக்க உதவுவதுடன், அவற்றின் போக்கைக் கண்காணிக்கவும் உதவுகிறது.

உதாரணமாக, உங்களுடைய குழந்தையின் மேற்படிப்புக்காக பத்து வருடத்தில் ரூ.30 லட்சம் திரட்ட இலக்கு வைத்திருக்கிறீர்கள் எனில், குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 10% வருமானம் தரக்கூடிய முதலீட்டில் இன்று மொத்தமாக முதலீடு செய்வதாக இருந்தால், ரூ.11.5 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இல்லை எனில், ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 முதலீடு செய்து வர வேண்டும். இவை இரண்டில், ஒவ்வொரு மாதமும் செய்யக்கூடிய முதலீடு எளிமையானதும், கூடுதல் பலன் தரக்கூடியதாகவும் இருக்கும். ஏனெனில், முதலீட்டைத் தொடர்ச்சியான மாதாந்தர சேமிப்பாக மாற்றும்போது சந்தையின் ஏற்ற, இறக்கத்தைப் பற்றிய கவலை இல்லாமல் இருக்க முடியும். அது மட்டுமல்லாமல், தொடர்ந்து முதலீட்டைக் கண்காணிக்கவும், சேமிப்பைப் படிப்படியாக அதிகரிக்கவும் முடியும். முதலீடு செய்து விட்டு மறந்துவிடக்கூடியதாக இருக்காது. காலப்போக்கில் நம்முடைய இலக்கு பெரிதானால், நம்முடைய சேமிப்பையும் நாம் அதிகப்படுத்திக்கொள்ளலாம்.
தொடர்ச்சியாக முதலீடு செய்வதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், நம் இலக்கை எட்டுவதற்கேற்றபடியான முதலீட்டுத் திட்டங்களைக் கண்டடைவது. மொத்தமாக முதலீடு செய்துவிட்டு மறந்துவிடும் நிலையில் அது எளிதான காரியமில்லை. மாதாந்தர தொடர் முதலீட்டில் நம்மால் மாற்றங்களை எளிதில் மேற்கொள்ள முடியும். அதே போல, நீண்ட கால நிதி இலக்குகளுக்கு நேரடியாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைக்காட்டிலும், மியூச்சுவல் ஃபண்டுகள், இ.டி.எஃப் (Exchange Traded Funds), நிரந்தர வருமானம் தரக்கூடிய டெபாசிட் திட்டங் கள் போன்றவை பொருத்தமானதாக இருக்கும்.
2. எதற்காக சேமிக்கிறோம், எவ்வளவு சேமிக்க வேண்டும்?
எவ்வளவு சேமிக்க வேண்டும், எதற்காகச் சேமிக்கிறோம் என்று தெரியாமலேயே சேமிக்கிறீர்கள் எனில், நீங்கள் உங்களுடைய இலக்குகளை எட்ட முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். நம்முடைய நிதி இலக்குகள் என்னென்ன, அதற்கு எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதை எளிதாக நம்மால் கணக்கிட முடியும். மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் மூலம் இதைச் சுலபமாகச் செய்துவிட முடியும்.
இதற்கு முதலில் இலக்குகளைத் தீர்மானிக்க வேண்டும். இலக்குகளை எத்தனை ஆண்டு களில் எட்ட வேண்டும் எனத் தீர்மானித்து, அதற்கேற்ப எவ்வளவு சதவிகித வருமான வளச்சியில், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைக் கணக்கிட்டால் போதும். இந்தக் கணக்கீடுகள் காலப் போக்கில் மாறக்கூடியது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், முதலீட் டின் மீதான வருமான விகிதம் நம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக மாறுபடும் நிலையில், வேறு முதலீடுகளுக்கு நாம் மாற வேண்டியிருக்கும். தவிர, முதலீட்டை அதிகரிக்க வேண்டிய நிலையும் வரலாம். எனவே, அவ்வப்போது நம்முடைய போர்ட்ஃபோலியோவை மறுஆய்வு செய்து கொண்டே இருப்பது நல்லது.
3. இலக்குகளுக்கேற்ற உத்திகள்
பொதுவாக, வீடு, கார், குழந்தைகளின் மேற்படிப்பு, திருமணம், சர்வதேச சுற்றுலா போன்ற இலக்குகள் நமக்கு இருக்கும். பெரும்பாலானோர் பிறருடைய ஆலோசனையின் படி அல்லது அவரவருக்கு இருக்கும் புரிந்துகொள்ளலுக் கேற்ப முதலீடு செய்கிறார்கள். ஆனால், ஒவ்வோர் இலக்குக்கும் தனித்தனி உத்திகளைக் கொண்ட முதலீடுகள் தேவையாக உள்ளன. ஏனெனில், இலக்குகள் வெவ்வேறா னவை; அவற்றை எட்டும் கால அளவும் மாறுபடு பவை என்கிறபோது, அதற்கேற்ப நம் முதலீடுகளைத் திட்டமிட வேண்டும். எல்லா இலக்கு களுக்கும் மொத்தமாக ஒரே போர்ட்ஃபோலியோவைக் கொண்டிருப்பது முதலீட்டு வாய்ப்புகளைச் சுருக்கிவிடும்.
எனவே, முதலீட்டுத் திட்டங் களின் உத்திகள், அவற்றில் உள்ள ரிஸ்க்கின் தன்மை, வருமானம் ஆகியவற்றைப் பொறுத்து நம்முடைய இலக்குகளை எட்டத் தேவையான போர்ட்ஃபோலி யோக்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். குறுகிய கால இலக்கு களுக்கு குறுகிய காலத்துக்கான முதலீட்டுத் திட்டங்கள், நீண்டகால இலக்குகளுக்கு அதற்கேற்ப நீண்ட கால முதலீட்டுத் திட்டங்கள் எனத் திட்ட மிட்டுக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப பணத்தை ஒதுக்கீடு செய்வது அவசியம்.

4. நல்ல திட்டங்களில் முதலீடு செய்தல் மற்றும் முதலீடுகளை மறு ஆய்வு செய்தல்
இலக்குகள் என்னென்ன, அவற்றுக்கு எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று திட்டமிடுவது முதலீட்டில் வெறும் ஆரம்பநிலை தான். அதற்கு அடுத்தகட்ட முக்கிய மான வேலை, சரியான முதலீட்டு வகைகளைத் தேர்வு செய்வதும், சரியான திட்டங்களில் இலக்கை எட்டும்வரை தொடர்ச்சியாக முதலீடு செய்வதும்தான். இது எளிதான வேலை அல்ல. இதற்கு நிதி ஆலோசகர்களின் உதவி தேவைப்படலாம். நாம் தேர்ந் தெடுக்கிற முதலீட்டு வகையானது, நிலையான வருமானத்தைத் தொடர்ந்து தந்துவருகிறதா, அதன் செயல்திறன் எப்படி இருக்கிறது என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து, மாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில், இழப்பைச் சந்திக்க நேரிடலாம்.
நல்ல திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்வதை உறுதிசெய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, பாஸிவ் முறையில் இண்டெக்ஸ் ஃபண்டுகளிலும், லிக்விட் ஃபண்டு களிலும் தொடர்ந்து முதலீடு செய்து வரலாம். ஏனெனில், சரியான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வுசெய்வது எளிதான காரியமில்லை. சிறந்த ஆக்டிவ் ஃபண்டுகளில் முதலீடு செய்யாததால், கூடுதல் வருமானத் தைப் பெறும் வாய்ப்பைத் தவற விட்டதற்காக நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள் எனில், பாஸிவ் ஃபண்டுகளில் முதலீடு செய்தாலே போதும்.
இரண்டாவது, பாஸிவ், ஆக்டிவ் இரண்டின் கலவை யாக முதலீடுகளைத் திட்ட மிடுவது. இதில் பாஸிவ் ஃபண்டுகள் சந்தையின் நகர்வுகளிலிருந்து பலன் அடைவதை உறுதி செய்யும்; ஆக்டிவ் ஃபண்டுகள் சந்தையின் சராசரியை விடவும் கூடுதலாக வருமானம் தரும் பிரிவுகளின் பலனை அடைவதை உறுதிசெய்யும்.
5. மறுசமன் செய்துகொள்வது (Rebalance)
முதலீட்டை மறுசமன் செய்வது என்பது, மதிப்பு உயர்வாக உள்ள சொத்து வகைகளின் முதலீட்டுப் பங்களிப்பைக் குறைத்து, மதிப்பு குறைந்த சொத்து வகைகளில் முதலீட்டை அதிகரிப்பது ஆகும். சந்தை உச்சத்தில் இருக்கும்போது விற்பது மற்றும் இறக்கத்தில் இருக்கும்போது முதலீடு செய்வது குறித்த பல கேள்வி களுக்கு இந்த மறுசமன் நடைமுறை சரியான தீர்வாக இருக்கும். சந்தையைச் சரியாகக் கணித்து முதலீட்டு முடிவை எடுக்க முடியாது. அதற்கு மாறாக, மறுசமன் செய்யலாம். இதைச் செய்ய சந்தை எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க வேண்டியதில்லை. முதலீடு களின் செயல்திறன் எப்படி இருக்கிறது என பார்த்து, சரியாக செயலாற்றாத முதலீடுகளிலிருந்து வெளியேறி அல்லது பங்களிப்பைக் குறைத்து, நன்றாகச் செயலாற்றும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். ஈக்விட்டி சார்ந்த திட்டங்களின் வருமானம் குறைந் தால், அவற்றில் ஒதுக்கீட்டைக் குறைத்து, கடன் திட்டங்களில் முதலீட்டை அதிகரிக்கலாம்.
நம்முடைய முதலீட்டு இலக்கை நாம் எட்டும் போது ரிஸ்க் அதிகமுள்ள ஈக்விட்டி சார்ந்த முதலீட்டை குறைத்துக் கொண்டு ரிஸ்க்கு குறைவான கடன் திட்டங் களில் முதலீட்டை அதிகரிப்போம். இதை மறுசமன் செய்வதோடு ஒப்பிட்டு சிலர் குழப்பிக் கொள்வார்கள். ஆனால் இது மறுசமன் செய்யும் உத்தி ஆகாது. இங்கு ரிஸ்க்கை குறைப்பது மட்டுமே நோக்கம். ஆனால் மறுசமன் செய்வதில் நாம் செய்த முதலீடு தரும் வருமானத்தை கணக்கில் எடுத்து கொள்வோம். எனவே, இரண்டுக்கும் உள்ள வித்தி யாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். 10 ஆண்டு களுக்குக் குறைவான நிதி இலக்குகளுக்கு மறுசமன் மிக முக்கியம். ஃபண்டுகளின் செயல்பாட்டைப் பொறுத்து எவற்றில் தொடர்வது, எவற்றில் இருந்து வெளியேறுவது என்பதை முடிவு செய்யலாம்.
(ஆய்வு தொடரும்)