தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

2023 புத்தாண்டு... வாழ்வில் வளம் சேர்க்கும் 10 நிதித் தீர்மானங்கள்!

நிதித் தீர்மானங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
நிதித் தீர்மானங்கள்

நிதித் தீர்மானங்கள்

கிஷோர் சுப்ரமணியன், நிறுவனர், https://www.shreeconsultants.in

புத்தாண்டு வந்துவிட்டது. அனைவரும் புதிய ஆரம்பத்துக்குத் தயாராகிவிட்டோம். புத்தாண்டில், புது மனிதராக புதிய வாழ்க்கை முறையைப் (Lifestyle) பின்பற்ற தீர்மானம் போடுகிறோம். புத்தாண்டில் நமது தனிப்பட்ட நிதி தொடர்பான பின்வரும் 10 தீர்மானங்களை நிறைவேற்றி, அதை வாழ்க்கையில் தொடர்ந்து பின்பற்றுவது மூலம் வாழ்வில் கூடுதல் வளங் களைச் சேர்க்க முடியும்.

கிஷோர் சுப்ரமணியன் 
நிறுவனர், 
https://www.shreeconsultants.in
கிஷோர் சுப்ரமணியன் நிறுவனர், https://www.shreeconsultants.in

1. குடும்ப பட்ஜெட்...

பட்ஜெட் (Budget) என்கிற வரவு செலவுத் திட்டத்துக்குள் உங்கள் செலவுகள் இருந்தால், அது உங்கள் நிதி இலக்குகளை அடைவதை உறுதிப்படுத்தும். ஏற்கெனவே பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துகிறீர்கள் எனில், அதைத் தொடருங்கள்; தேவையில்லாத செலவுகள் ஏதாவது இருந்தால், அவற்றை நீக்கி சேமிப்பை அதிகரியுங்கள்.

இதுவரை குடும்ப பட்ஜெட் போட்டதே இல்லை எனில், அதைத் தொடங்க புத்தாண்டே சிறந்த நேரம். இதை நிதித் தீர்மானத்தில் முதலாவதாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

மாதச் சம்பளம் அல்லது சம்பாத்தியத்தை குடும்ப செலவுகளுக்கு (வீட்டு வாடகை, உணவுச் செலவு) 30%, வாழ்க்கைமுறை செலவுகளுக்கு 30%, சேமிப்பு, முதலீட்டுக்கு 20% மற்றும் கடன் தவணைகளுக்கு 20% என பிரித்துக்கொள்ளுங்கள். சொந்த வீடு இருக் கிறது; கடன் இல்லை எனில், அதற்கான தொகையை சேமிப்பு மற்றும் முதலீட்டில் சேர்த்தால் விரைவில் செல்வந்தராக முடியும்.

2. சேமிப்பு, செலவு...

சேமிப்பு என்பது நம் வாழ்க்கையின் முக்கியமான ஓர் அங்கமாக இருக்க வேண்டும். இது உங்கள் நிதி இலக்குகளை அடைவதற்கான முக்கியமான கருவியாகும். சேமிப்புத் திட்டத்தை உருவாக்கும்போது கூடவே செலவுத் திட்டத்தையும் உருவாக்குங்கள். அப்படிச் செய்யும்போது, செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

சம்பளத்தில், வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை சேமிப்புக்கென எடுத்து வைத்துவிட்டு, மீதியை செலவு செய்யப் பழகுங்கள். இப்படிச் செய்யும்போது சேமிப்பு எப்போதும் தடைபடாது. சம்பளத்தில் 10% தொடங்கி 50% வரை எளிதாகச் சேமிக்கலாம். சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க செலவை அதிகரிப்பதற்குப் பதில் சேமிப்பை அதிகரிப்பேன் என இந்த ஆண்டு நிதித் தீர்மானம் போடுங்கள்.

2023 புத்தாண்டு... வாழ்வில் வளம் சேர்க்கும் 10 நிதித் தீர்மானங்கள்!

3. காப்பீடு கட்டாயம்...

நிதித் திட்டமிடலின் அடிப்படை, அன்புக்குரிய வர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் ஆயுள் காப்பீடு (Life insurance) பாலிசி எடுப்பதாகும். குடும்பத்தின் வருமானம் ஈட்டும் நபர் இல்லை எனில், குடும்ப உறுப்பினர்கள் வாழ்க்கை தரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தேவைப் படும் தொகையைக் கணக்கிட்டு, அந்தத் தொகை அளவுக்கு ஆயுள் காப்பீடு பாலிசி எடுப்பது அவசியமாகும்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் மிகவும் மலிவானது, குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளித்து இது, குடும்ப உறுப்பினர்களுக்கு முழுமையான நிதிப் பாதுகாப்பை அளிக்கிறது.

குடும்பத்தின் ஆண்டு வருமானத்தைப்போல் 10 - 15 மடங்கு தொகைக்கு ஆயுள் காப்பீடு இருக்க வேண்டும் என்பது பொதுவான விதிமுறை ஆகும். வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன் போன்றவை இருக்கும்பட்சத்தில் அந்தத் தொகைக்கு இணையாக தனியே டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொள்வது நல்லது.

ஏற்கெனவே, ஆயுள் காப்பீடு இருக்கும்பட்சத்தில், கவரேஜ் தொகையைப் போதுமான அளவுக்கு அதிகரித்துக் கொள்ளுங்கள். இதுவரைக்கும் ஆயுள் காப்பீடு எடுக்கவில்லை எனில், உடனடியாக எடுக்க இதுவே சரியான நேரமாகும். இதைப் புத்தாண்டு தீர்மானத்தில் அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்து, குடும்பத்தின் மருத்துவச் செலவைக் குறைக்கும் மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுத்துக்கொள்ள வேண்டும். ரூ.5 லட்சம் - ரூ.10 லட்சம் என பாலிசி எடுங்கள். கூடிய வரைக்கும் அதிக தொகைக்கு எடுங்கள். இல்லை எனில், ரூ.2 லட்சம், ரூ.3 லட்சத்துக்கு ஒரு பாலிசி எடுத்துக்கொண்டு ரூ.5 லட்சம், ரூ.10 லட்சத்துக்கு டாப்அப் பாலிசி எடுத்துக் கொள்ளுங்கள். காரணம், சாதா ரண நுகர்வோர் பணவீக்க விகிதம் 6% - 7% சதவிகிதமாக இருக்கும் நிலையில், மருத்துவப் பணவீக்க விகிதம் 18% - 20% அளவுக்கு அதிகமாக உள்ளது.

4. அவசரகால நிதி...

நெருக்கடியான நேரத்தில் உதவக்கூடிய அவசரகால நிதி எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதை கோவிட் 19 பாதிப்பு நமக்கு எல்லாம் கற்றுத் தந்துள்ளது. குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு மாத செலவுக்குத் தேவையான பணத்தை எப்போதும் தயாராக வைத்திருங்கள். இந்தத் தொகை ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருக்கலாம். இந்தத் தொகையை தேவையில்லாத வரை தொடாமல் இருக்க வேண்டும்.

5. கவலை அளிக்கும் கடன்...

மோசமான கடன், ஒருவருக்கு மன அழுத்தத்தையும் கவலையை யும் உருவாக்குகிறது. எனவே, இந்த ஆண்டில், மோசமான கடன்களைத் தவிர்ப்பதன் மூலம் மன அழுத்தம் இல்லாத நிம்மதியான வாழ்க்கைக்கு தீர்மானம் போடுங்கள். கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்வதை குறைப்பதன் மூலம் கடன் சிக்கலைத் தவிர்க்கலாம். அடுத்து, உணர்ச்சி வசப்பட்டு தூண்டுதல் மூலம் தேவையில்லாமல் பொருள் களை வாங்குவதைக் குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம். நிதித் திட்டங்களை சரியாக நிறைவேற்ற மிகப்பெரிய தடை கடன் என்பதைப் புரிந்துகொண்டு செயல் படுவது நல்லது.

6. முதலீட்டுக்கு முன்னுரிமை...

தேவையில்லாத செலவுகளைக் குறைப்பது மூலம் சேமிப்பை, முதலீட்டை அதிகரிக்க முடியும். பணத்தை சேமிப்பது அதைச் சம்பாதிப்பதற்குச் சமமாகும். சேமிப்புக் கணக்கில் கிடக்கும் பணத்துக்கு சுமார் 3% வட்டிதான் கிடைக்கும். மிகக் குறுகிய காலத் தேவைக்கு மட்டும் சிறிது பணத்தை சேமிப்புக் கணக்கில் வைத்துவிட்டு மீதியை நடுத்தரக் கால பணத் தேவைக்கு கடன் ஃபண்டுகளிலும் நீண்ட காலத் தேவைக்கு பங்குச் சந்தை ஃபண்டுகளிலும் முதலீடு செய்யுங்கள். மேலும், சம்பளம் அதிகரிக்கும்போது செலவை அதிகரிக்காமல் சேமிப்பை அதிகரியுங்கள். இது விரைவில் நிதி இலக்குகள் நிறைவேற உதவும். அந்த வகையில் ஆண்டுதோறும் புத்தாண்டில் எஸ்.ஐ.பி முதலீட்டை அதிகரிக்கும் தீர்மானத்தை எடுங்கள்.

7. வருமான வரிச் சேமிப்பு...

வருமான வரியைச் சேமிக்கும் முதலீடுகளை ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே தொடங்குவேன் என நிதித் தீர்மானம் போடுங்கள். வரிச் சலுகை பெற கடைசி நேரத்தில் முதலீடு செய்வது, பல நேரங்களில் தவறாக அமைந்துவிடுகிறது.நிதி ஆண்டின் ஆரம்பத்தில் முன்கூட்டியே திட்டமிடும் போது வயது, ரிஸ்க் எடுக்கும் திறன், நிதி இலக்கு, தேவை ஆகியவற்றின் அடிப்படையில் சரியான வரி சேமிப்பு முதலீட்டைத் தேர்வு செய்ய முடியும் என்பதை உணருங்கள்.

2023 புத்தாண்டு... வாழ்வில் வளம் சேர்க்கும் 10 நிதித் தீர்மானங்கள்!

8. நிதி காலண்டரை உருவாக்குங்கள்...

நிதி விஷயங்களுக்காக ஒரு காலண்டரை உருவாக்கிக் கொள்ள தீர்மானம் போடுங்கள். எந்தெந்த மாதங்களில் என்னென்ன செலவுகள், முதலீடு செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு, அவற்றை இதில் குறித்து வைக்கலாம்.மாதம்தோறும் செலுத்த வேண்டிய கட்டணங்கள், குறிப் பிட்ட இடைவெளியில் செலுத்த வேண்டிய கட்டணங்கள், ஆண்டுக்கு ஒரு முறை கட்ட வேண்டிய கட்டணங்கள் அவற்றுக்கான தேதிகள் போன்றவற்றை இதில் குறித்து வைக்கலாம். இதற்காக ஒரு டைரியைப் பயன்படுத்தலாம். அல்லது மாத காலாண்டரில் பளிச் என்று தெரியும் விதமாக வண்ண மார்க்கர் மூலம் குறித்து வைக்கலாம்.

9. குடும்பத்துடன் கலந்து ஆலோசிக்கவும்...

பிள்ளைகளுக்கு, பணத்தைச் சேமிக்க சொல்லிக் கொடுங்கள். குடும்பத்தின் நிதி இலக்குகளை அவர்களுக்கு புரிய வைத்து குடும்ப பட்ஜெட்டில் பங்கேற்க வையுங்கள். கணவன், மனைவி சேர்ந்து திட்டமிடுங்கள். நிதிப் பொறுப்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எந்த ஒரு பெரிய செலவு அல்லது முதலீடு செய்யும் முன் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்து முடிவு செய்ய தீர்மானம் போடுங்கள்.

10. நிதி அறிவு...

தனிநபர் நிதி (Personal Finance) மேலாண்மை பற்றிய அறிவைப் பெற தீர்மானம் போடுங்கள். இதற்கு நாணயம் விகடன் போன்ற இதழ்களையும், சில ஆங்கிலப் பத்திரிகைகளையும் படிக்கலாம்.

புத்தாண்டு நிதித் தீர்மானங்கள் மற்றும் இலக்குகளை எதார்த்தமாக வைத்திருங்கள். அப்போதுதான் அவற்றை சுலபமாக நிறைவேற்ற முடியும்!