
இந்தியாவில் மைனர்கள் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய முடியுமா?
ஹர்ஷ் ஜெயின், இணை நிறுவனர், https://groww.in/
இன்றைய இந்தியப் பெற்றோரின் மிக முக்கியமான இலக்குகளில் ஒன்றாக இருக்கிறது குழந்தைகளின் நிதிப் பாதுகாப்பு. தங்கள் பிள்ளைகளின் கல்வி, திருமணம் மற்றும் இதர தேவைகளுக்கு பணப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே பெற்றோர்கள் விரும்பும் விஷயமாக இருக்கிறது.
இந்த நோக்கம் நிறைவேற வேண்டும் எனில், பெற்றோர்கள் தங்கள் பெயரில் முதலீடு செய்து வரலாம். அல்லது தங்கள் மைனர் (Minor) பிள்ளைகளின் பெயரில் முதலீடு செய்து வரலாம்.

பிள்ளைகள் பெயரில் ஏன் முதலீடு..?
பெற்றோர்கள் தங்கள் பெயரில் முதலீடு செய்யும்போது, அந்தத் தொகையை எடுத்து இதர தேவைகளுக்கு பயன்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில், பிள்ளைகள் பெயரில் முதலீடு இருக்கும்பட்சத்தில் அந்தக் குறிப்பிட்ட இலக்குக்கு மட்டுமே பயன்படுத்த மிக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த வகையில், பெரும்பாலோர் பெற்றோர் பிள்ளைகள் பெயரில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
பொதுவாக, மைனர் பிள்ளைகள் பெயரில் எப்படி முதலீட்டைத் தொடங்குவது மற்றும் அதற்கான வழிமுறைகள், விதிமுறைகள் என்ன என்பதை அறிந்துகொள்வது அவசியம்.
யார் மைனர், என்ன நடைமுறை..?
இந்திய வயது வந்தோர் சட்டம் 1875-ன்படி (Indian Majority Act, 1875,), மைனர் என்பவர் 18 வயதை எட்டாத தனிநபர் ஆவார். அவர் ஆணாகவோ / பெண்ணாகவோ இருக்கலாம். மைனர் என்பதைத் தமிழில் இளவல் எனக் குறிப்பிடலாம்.
மைனர் குழந்தையின் பெயரில் முதலீடு செய்யும்போது, கணக்கு வைத்திருப்பவர் (Account Holder) எனக் குழந்தையின் பெயரைக் குறிப்பிட்டு, முதலீட்டை ஆரம்பிக்க முடியாது. மைனர் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக முதலீடு செய்ய விரும்பினால் அந்தக் குழந்தையின் பெயரில் செய்யப்படும் அனைத்து முதலீடுகளுக்கும் அனுமதிக்கப்பட்ட இடங்களில், குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதற்குப் பின் வரும் விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அந்த விஷயங்கள் என்ன என்று பார்ப்போம்.
காப்பாளர் வேண்டும்...
மைனர் குழந்தைகள் தெளிவான முதலீட்டு முடிவுகளை எடுக்கும் திறனைக் கொண்டிருக்க மாட்டார் எனக் கருதப்படுவதால், அவர்கள் செய்யும் முதலீடுகளை நிர்வகிக்க பொறுப்பான ஒரு காப்பாளர் (Guardian) இருக்க வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பெற்றோர்கள் மைனர் குழந்தைகளின் இயற்கையான காப்பாளர்களாக (Natural Guardians) இருப்பார்கள். ஆனால், பெற்றோர் இல்லாதபட்சத்தில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்டப்படியான பாதுகாப்பாளர் தேவைப்படுவார். ஆனால், முதலீட்டின் உரிமை மைனர் குழந்தைக்கு மட்டுமே இருக்கும்.
பிறப்புச் சான்றிதழ் தேவை...
குழந்தையின் வயதுக்கு ஆதாரமாகப் பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate) தேவைப்படும். தவிர, பாதுகாப்பாளருக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவை நிரூபிக்கும் ஓர் ஆவணம் (Document) அவசியம் தேவைப்படும். அது மட்டுமன்றி, பாதுகாப்பாளரின் வங்கி விவரங்கள், நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் ‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள்’ (KYC) போன்ற அனைத்துத் தேவையான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.பாதுகாப்பாளர் தனது வங்கிக் கணக்கிலிருந்து முதலீடு களுக்கான பணத்தைச் செலுத்த வேண்டும்.
மைனருக்காகத் தொடங்கப்பட்ட கணக்கு கூட்டுக் கணக்காக (Joint Account) இருக்காது. மேலும், அந்தக் கணக்குக்கு நாமினிகளாக எவரையும் நியமிக்க முடியாது.

மேஜரானதும் செய்ய வேண்டியவை...
மைனர் குழந்தை மேஜர் வயதை அடைந்த பிறகு, செய்ய வேண்டிய முக்கியமான சில விஷயங்கள் உள்ளன. மைனர் குழந்தை மேஜரானதும், குழந்தையின் பான் மற்றும் கே.ஒய்.சி சமர்ப்பிக்கப்பட வேண்டும். வங்கிக் கணக்கில் குழந்தையின் கையொப்பம், முதலீட்டுக் கணக்கில் பாதுகாப்பாளரின் கையொப்பத்துக்குப் பதில் மேஜரான குழந்தையின் கையெழுத்து மாற்றப்படும்.
மைனர் குழந்தை மேஜர் ஆனதும் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கு மூலமே முதலீடு தொடர்பான அனைத்து எதிர்கால பரிவர்த்தனைகளையும் செய்ய முடியும். அதே போல, மைனர் குழந்தை பெயரில் செய்யப் பட்ட முதலீட்டைப் பாதுகாப்பாளர்களால் இயக்க முடியாது.
1. பங்குச் சந்தை
இந்தியாவில் மைனர்கள் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய முடியுமா?
முடியும். மைனர் ஒருவர் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யலாம். டீமேட் கணக்குகள், பங்கு வர்த்தகக் கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகளைப் பாதுகாப்பாளர் இயக்க வேண்டும்.
இவை தவிர, இன்னும் சில பின்வரும் விஷயங்களையும் மனதில் கொள்ள வேண்டும். அதாவது, மைனர் பெயரில் பங்கு வர்த்தகம் மற்றும் டீமேட் கணக்கைத் தொடங்க, மைனர் மற்றும் மைனர்களின் பாது காப்பாளர்(கள்), தங்கள் பான் கார்டை சமர்ப்பிக்க வேண்டும்.
மைனர் பெயரில் 3-இன்-1 கணக்கை (வங்கிச் சேமிப்பு கணக்கு + பங்கு வர்த்தகம் + டீமேட் கணக்கு) ஆரம்பிக்கலாம்.
மைனர் குழந்தைகள் பங்கு வர்த்தகக் கணக்கு மூலம் பங்குச் சந்தையில் டெலிவரி எடுக்கப் படும் விதமாக மட்டுமே பங்கு களில் முதலீடு செய்ய அனுமதிக் கப்படுகிறது. இந்தக் கணக்கின் மூலம் ஈக்விட்டி இன்ட்ராடே, ஈக்விட்டி டெரி வேட்டிவ் டிரேடிங் (எஃப் & ஓ) மற்றும் கரன்சி டெரிவேட்டிவ்ஸ் (எஃப் & ஓ) பிரிவுகளில் வர்த்தகம் செய்ய முடியாது.
ஒரு மைனர் குழந்தை, மேஜராகும்போது ஏற்கெனவே இருக்கும் டீமேட் கணக்கை முடிவுக்குக் கொண்டுவந்து, மேஜரின் பெயரில் புதிய கணக்கைத் தொடங்கலாம். அப்போது மைனர் கணக்கில் உள்ள அனைத்துப் பங்குகளும் புதிய டீமேட் கணக்குக்கு மாற்றப் படும். அல்லது ஏற்கெனவே உள்ள டீமேட் கணக்கைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். இப்போது மேஜரான பிள்ளை டெபாசிட்டரி பங்கேற்பாளருடன் (DP) புதிய ஒப்பந்தம் செய்து, புதிய டீமேட் கணக்கைத் தொடங்கத் தேவை யான அனைத்து நடைமுறை களையும் நிறைவேற்ற வேண்டும்.
2. மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்டுகளில் மைனர்கள் தாராளமாக முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டைக் காப்பாளர்களின் உதவியுடன் மேற்கொள்ள முடியும். இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் குறைந்தபட்ச வயது 18 ஆகும். அதிகபட்ச வயதுக்கான வரம்பு எதுவும் கிடையாது.
மேலே கூறப்பட்ட நடைமுறை களைத் தவிர, ஒருவர் பின்வரும் விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
மைனர் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய, பிறப்புச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், மைனரின் பாஸ்போர்ட் அல்லது பிறந்த தேதிக்கான ஆதாரம் ஆகியவற்றில் ஏதாவது ஓர் ஆவணம் தேவைப்படும்.
ஆம்ஃபி (AMFI) அமைப்பின் விதிமுறைகளின்படி, பெற்றோருக்கு இடையேயான பரஸ்பர முடிவு அல்லது தற்போதைய காப்பாளரின் மரணம் காரணமாக மைனரின் பாதுகாப்பாளர் மாறினால், இறப்புச் சான்றிதழ், புதிய காப்பாளரின் பான் எண், கே.ஒய்.சி உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.
காப்பாளர் உயிருடன் இருக்கும் நிலையில், அவர் மாற்றப்படுகிறார் எனில், ஏற்கெனவே காப்பாளராக இருந்தவரின் சம்மதம் தெரிவிக்கும் கடிதம் தேவைப்படும்.
புதிதாக நியமிக்கப்படும் காப்பாளர் பெயர் மற்றும் அவரின் கையொப்பம் வங்கியில் மாற்றப்பட வேண்டும்.
மைனர் குழந்தை மேஜராகிவிட்டால், எம்.ஏ.எம் (MAM- Minor attaining Majority) என்கிற படிவத்தை நிரப்பித் தர வேண்டும். இந்தப் படிவத்தை நிரப்பிக் கொடுக்கும் முன் அவரின் பெயரில் பான் இருப்பது அவசியம். தற்போதுள்ள வங்கிக் கணக்கை மேஜர் கணக்காக மாற்றி இருக்க வேண்டும். அல்லது மேஜரான பிறகு தொடங்கிய புதிய வங்கிக் கணக்கு இருக்க வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி, எஸ்.டி.பி, எஸ்.டபிள்யூ.பி முறைகளைத் தொடர வேண்டும் எனில், அதற்குரிய படிவத்தைப் பூர்த்தி செய்துகொடுக்க வேண்டும். இவற்றைச் செய்யவில்லை எனில், மைனருக்கு 18 வயதானதும் மேற்கொண்டு மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பான செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுவிடும்.
3. தங்கம்
மத்திய அரசுக்காக ஆர்.பி.ஐ வெளியிடும் சாவரின் கோல்டு பாண்டுகளில் (Sovereign Gold Bond - SGB) மைனர்கள் முதலீடு செய்ய முடியும். இந்த முதலீட்டை காப்பாளர் ஒருவர் மூலம்தான் செய்ய முடியும். அவர்தான் விண்ணப்பதாரராக (Applicant) இருப்பார். காப்பாளரின் பான் கார்டு நகலுடன் எஸ்.ஜி.பி விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
மைனர் டீமேட் கணக்கு மூலம் கோல்டு இ.டி.எஃப் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். இவை தவிர, மியூச்சுவல் ஃபண்ட் வழியில் கோல்டு சேவிங்ஸ் ஃபண்டு களிலும் முதலீடு செய்யமுடியும். பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள், இந்த மூன்று முறைகளில் அவர்களுக்காகத் தங்கத்தில் முதலீடு செய்து வரலாம்.
4. ரியல் எஸ்டேட்
மைனர் சார்பாக அவர்களின் இயற்கையான பெற்றோர் அல்லது சட்டபூர்வக் காப்பாளர் கையொப்பமிட்டு கூட்டாக மைனர் பெயரில் மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்கலாம்.
5. பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (PPF)
மைனர் பெயரில் பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் கணக்கைப் பெற்றோர் அல்லது காப்பாளர் தொடங்க முடியும். மைனர் பெயரில் செய்யப்படும் முதலீட்டையும் சேர்த்து நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம்தான் முதலீடு செய்ய முடியும். மைனருக்கு 18 வயதாகி, மைனர் கணக்கிலிருந்து காப்பாளர் பணத்தை எடுக்கும்போது, மைனருக்காகத்தான் அந்தப் பணம் எடுக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டால்தான் எடுக்க முடியும். மைனர் குழந்தை மேஜராகிவிட்டால், விண்ணப்பப்படிவம் ஒன்றைப் பூர்த்தி செய்து தர வேண்டிவரும்.
6. செல்வமகள் சேமிப்புத் திட்டம்
சுகன்யா சம்ருதி என்கிற செல்வமகள் சேமிப்புத் திட்டத் தில் 10 வயதுக்கு உட்பட்ட இரு மைனர் பெண் பிள்ளைகள் பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்படியான காப்பாளர் முதலீடு செய்துவரலாம். இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் தொகை பெண் பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணத்துக்குப் பயன்படும் என்பதற்காக அதிக வட்டி வழங்கப்படுகிறது.
மைனர் குழந்தைகள் பெயரில் பங்குகள், ஃபண்டுகள், தங்கம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு முதலீடு செய்யத் திட்டமிடலாம். இதன்மூலம் உங்கள் குழந்தைகளுக்கு நீங்களும் வளமான எதிர்காலத்தை உருவாக்கலாமே!

பிள்ளைகள் பெயரில் முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!
பிள்ளைகள் பெயரில் முதலீடு செய்யும்போது, பெற்றோர் அல்லது காப்பாளரின் ரிஸ்க் எடுக்கும் திறன், இலக்கை அடைய இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கிறது என்பதைப் பொறுத்து முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். பிள்ளைகளின் கல்வி, திருமணத்துக்கு இன்னும் 10, 15 வருடங்களுக்குமேல் இருக்கிற பட்சத்தில் மட்டுமே நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்ட் அதுவும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்கு மற்றும் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்தக் கால அளவு ரியல் எஸ்டேட் முதலீட்டுக்கும் பொருந்தும். முதலீட்டுக் காலம் சுமார் 5 முதல் 8 ஆண்டுகள் என்கிறபட்சத்தில், லார்ஜ் மற்றும் மல்ட்டிகேப் பங்குகள், லார்ஜ் மற்றும் மல்ட்டி கேப் ஃபண்டுகள், தங்கப் பத்திரம் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.
செல்வமகள் சேமிப்புத் திட்டம், பொன்மகன் சேமிப்புத் திட்டம் (பொது சேமநல நிதி) ஆகியவை 15 ஆண்டுகள் லாக்இன் பீரியட் கொண்டவை என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம். நிதி இலக்கை அடைய ஐந்தாண்டுகளுக்குள் இருக்கும்போது கடன் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.
- சி.சரவணன்