
நிர்வாகம்
ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரியாக இருந்த பிரசாந்த் ஜெயின், அந்தப் பதவியைத் திடீரென்று ராஜினாமா செய்திருப்பது முதலீட்டாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. என்ன ஆச்சு பிரசாந்த் ஜெயினுக்கு, ஏன் இந்தத் திடீர் ராஜினாமா?
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு உலகில் ஸ்டார் மேனேஜராக விளங்கி யவர் பிரசாந்த் ஜெயின். இவர் பின்பற்றி வந்த வேல்யூ இன்வெஸ்ட்டிங் முறை மிகப் பெரிய லாபத்தை முதலீட் டாளர்களுக்குத் தந்ததுடன், ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு மிகப் பெரிய அளவில் உயர்வதற்குக் காரணமாக இருந்தவர்.
பிரசாந்த் ஜெயின் கான்பூரில் இருக்கும் ஐ.ஐ.டி-யில் இன்ஜினீயரிங் படித்தார். அதன் பிறகு, பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ படித்தார்.

படித்து முடித்தவுடன் எஸ்.பி.ஐ கேப்பிடல் நிறுவனத் தில் வேலைக்குச் சேர்ந்தார் பிரசாந்த். அதன் பிறகு, ‘20th century’ என்கிற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் சேர்ந் தார். பிற்பாடு இந்த நிறுவ னத்தை ஜூரிச் நிறுவனம் வாங்கியது. சில ஆண்டு களுக்குப் பிறகு, இந்த நிறுவனத்தை ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வாங்கியது. நிறுவனங்கள் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குச் சென்றாலும் பிரசாந்த் ஜெயின் மட்டும் நிறுவனத்தை விட்டு மாறவே இல்லை.
ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத் தில் மொத்தம் 15 ஆண்டுகள் வேலை பார்த்திருக்கிறார் பிரசாந்த். இந்த ஃபண்ட் நிறுவனத்தில் அவர் மூன்று முக்கியமான ஃபண்டுகளை வெற்றிகரமாக நிர்வாகம் செய்தார்.
ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் ரூ.43,078 கோடியை நிர்வாகம் செய்தார். இந்த ஃபண்ட் ஆண்டுதோறும் 11.3% வருமானத்தைத் தந்துள்ளது. ஆனால், இந்த ஃபண்டை பிரசாந்த் ஜெயின் தலைமை ஏற்று நடத்தத் தொடங்கியபின், ஆண்டு தோறும் 17.88% வருமானம் தந்தது குறிப்பிடத்தக்கது.
அதாவது, இந்த ஃபண்டில் 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் அது இன்றைக்குரூ.4,98,227 ஆக அதிகரித்திருக்கும். இந்த அளவுக்கான அதிக லாபத்தை இந்தக் கேட்டகிரியில் உள்ளம் மற்ற ஃபண்டுகள் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 என்கிற லார்ஜ்கேப் ஃபண் டையும் பிரசாந்த் ஜெயின் நிர்வகித்து வந்தார். இந்த ஃபண்டில் மட்டும் ரூ.19,910 கோடியை அவர் நிர்வகித்து வந்தார். இந்த ஃபண்ட் கடந்த 15 ஆண்டு களாக ஆண்டுதோறும் 11.9% லாபம் தந்திருக்கிறது. இந்தக் கேட்டகிரியில் உள்ள மற்ற ஃபண்டுகள் வெறும் 9.5% லாபத்தையே தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவதாக, ஹெச்.டி.எஃப்.சி ஃபிளெக்ஸிகேப் என்கிற ஃபண்டில் ரூ.26,511 கோடியை அவர் நிர்வாகம் செய்துவந்தார். இந்த ஃபண்ட் கடந்த 15 ஆண்டுகளில் 12.6% லாபம் தந்துள்ளது. இந்த கேட்ட கிரியில் பிற ஃபண்டுகள் தந்த லாபம் வெறும் 11% மட்டுமே.
மியூச்சுவல் ஃபண்ட் துறையில் அதிக ஆண்டுகள் பணியாற்றியவர் என்பதுடன், ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் நிர்வாகம் செய்த ஃபண்ட் மேனேஜர் என்கிற பெருமையும் இவருக்கு இருக்கிறது.
‘‘கடந்த இரண்டு ஆண்டுக் காலமாகவே பங்குச் சந்தை பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்ததால், ராஜினாமா முடிவைத் தள்ளிவைத்தேன். ஆனால், சந்தையின் நிலை இப்போது நன்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. நல்ல டீமும் இருக்கிறது. எனவேதான், எந்த மனக்குறையும் இல்லாமல் பதவி விலகி இருக் கிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார் பிரசாந்த் ஜெயின்.
‘‘ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்தில் வேலை பார்த்த பின்பு வேறு எந்த நிறுவனத்திலும் பணிபுரிய எனக்கு விருப்பம் இல்லை. பணத்தைவிட உடல்நலமும் என் குடும்பத்தினரின் சந்தோஷமும்தான் எனக்கு முக்கியம். தவிர, எனக்கு கடவுள் பக்தி அதிகம். இதற்கெல்லாம் முக்கியத்துவம் தருகிற மாதிரி இனி என் வேலையை அமைத்துக்கொள்வேன்’’ என்றும் பிரசாந்த் ஜெயின் சொல்லியிருக்கிறார்.
ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்டிலிருந்து பிரசாந்த் ஜெயின் விலகியதால், முதலீட்டாளர்கள் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்டில் பிரசாந்த் ஜெயின் நிர்வாகம் செய்துவந்த மூன்று ஃபண்டு களுக்கும் வேறு மேனேஜர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் பிரசாந்த் ஜெயின் தந்த அளவுக்கு லாபத்தைத் தருவார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!