2022-ம் ஆண்டின் இறுதியில் இருக்கும் இச்சமயத்தில், சர்வதேச அளவில் இந்தியா மையப்புள்ளியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நகர்வில் முக்கியமாகக் கருதப்படுவது, G-20 என அழைக்கப்படும் 20 நாடுகள் அடங்கிய கூட்டமைப்புக்கு 2023-ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பு சுழற்சி முறையில் இந்தோனேசியாவிடமிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கிறது.

மேலும், அதிகாரம் நிறைந்த அமைப்பான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலின்கீழ் இயங்கும் உலக அளவில் பெரிய பிராந்திய அமைப்பான ஷாங்காய் கூட்டுறவு அமைப்புக்கானத் (Shanghal Cooperation Organization – SCO) தலைமைப் பொறுப்பும் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. இது 2023 செப்டம்பர் வரையிலான பதவியாகும். ஆக, உலக அளவில் ஊடகங்களின் பார்வை இந்தியா மீது கொஞ்சம் அதிகமாகவே பட ஆரம்பித்திருக்கிறது. இனிவரும் மாதங்களில் இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஜி-20-க்கான தலைமைப் பொறுப்பை இந்தியா பெற்ற தருணத்திலிருந்து கடந்த ஒரு மாத காலமாக பரவலாகப் பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும், புகழப்பட்டும் வருகிறது. இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்பதால் இந்தியாவுக்கு என்ன நன்மை கிடைக்கும்? என்கிற கேள்வி முன்வைக்கப் படுகிறது. அதற்கான பதிலைப் பார்ப்போம்.
G-20-ன் ஆரம்பம்...
உலகில் அவ்வப்போது ஏற்பட்டுவரும் பொருளாதார மந்தநிலை, தேக்கநிலையைக் கருத்தில் கொண்டு அதை எதிர்கொள்ளும் வகையில் உலகப் பொருளாதார நெருக்கடிகளை அலசி ஆராய்வதற்காக 1999-ம் ஆண்டு நிதி மந்திரிகள், மத்திய வங்கி கவர்னர்களை உறுப்பினர்களாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான் G-20.

அதன்பின் 2007/08-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி கடுமையாக இருந்ததைக் கருத்தில் கொண்டு நாட்டை ஆளும் பொறுப்பில் இருக்கக்கூடிய தலைவர்களும் பங்கேற்கும் வகையில் கூட்டமைப்பானது விரிவாக்கப்பட்டது.
உலக அளவில் 85% உள்நாட்டு உற்பத்தியையும், 75% சர்வதேச வர்த்தகத்தையும், மக்கள் தொகையில் 60 சதவிகிதத்தையும் (சுமார் 460 கோடி) இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் கொண்டிருக்கின்றன.
G-20-ன் நோக்கங்கள்...
ஆரம்பத்தில் பேரியல் பொருளாதாரம் (macro economics) பற்றிய விஷயங்கள் குறித்து மட்டுமே விவாதங்களும் கொள்கை முடிவுகளும் எடுக்கப்பட்டன. அதன்பின்னர், அவசியம் கருதி வர்த்தகம், காலநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி, சுகாதாரம், விவசாயம், எரிசக்தி, சுற்றுச்சூழல், ஊழல் எதிர்ப்பு எனப் பல துறைகள் சார்ந்த பிரச்னைகள், நெருக்கடிகள் சம்பந்தமாக விவாதம் செய்து கொள்கை முடிவை எடுக்கும் நிலைக்கு விரிவாக்கப்பட்டது.

வழிகாட்டும் `ஷெர்ப்பா ட்ராக்...’
இந்தக் கூட்டமைப்பு அதனுடைய செயல்பாடுகள் இரண்டு தளங்களில் நடத்தி வருகிறது. முதலாவதாக, நிதி சார்ந்த `ஃபைனான்ஸ் ட்ராக்’; இன்னொன்று, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் சார்பாக அவர்களது பிரதிநிதிகள்/தூதர்கள் இடம்பெறும் `ஷெர்ப்பாஸ் டிராக் (Sherpas Track)’. `ஷெர்ப்பா’ என்பது நேபாளத்தில் இருக்கும் ஒரு பிரிவினரைக் குறிக்கும். இவர்கள் இமாலய மலை ஏறுபவர்களுக்கு வழிகாட்டிகளாக சிறப்பாகச் செயல்படக்கூடியவர்கள். எனவே, நாடுகள் சிறந்தநிலை அடைவதற்கான விவாத அமர்வுகளுக்கு `ஷெர்ப்பா டிராக்’ எனப் பெயரிடப்பட்டது.
இந்தியா இந்தக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றிருப்பதால் இதன் தலைமை `ஷெர்ப்பா’வாக நிதி ஆயோக்கைச் சேர்ந்த அமிதாப் காந்த் செயல்படுவார். இதன் முதல் ஷெர்ப்பா கூட்டம் ஜெய்ப்பூரில் டிசம்பர் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது.
56 நகரங்களில் 200 கூட்டங்கள்...
2023-ம் ஆண்டில் மட்டும் ஜி20 தொடர்பாக இந்தியாவில் ஸ்ரீநகரிலிருந்து திருவனந்தபுரம் வரை, கட்ச்சிலிருந்து கோஹிமா வரை சுமார் 56 நகரங்களில் 200 கூட்டங்களுக்குத் திட்டமிடப் பட்டிருக்கிறது. இதில் வர்த்தகம், பொருளாதாரம், விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம், ஸ்டார்ட்-அப், சுற்றுலா, எரிசக்தி மற்றும் ஆற்றல், காலநிலை மாற்றம் எனப் பல துறைகள் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் விவாதங்களும் உரையாடல்களும், கொள்கை முடிவுகளும் எடுக்கப்படும்.

இதன் முத்தாய்ப்பாக 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் பிரகதி மைதானத்தில் உச்சி மாநாடு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக, இது நவம்பர் மாதம்தான் நடைபெறும். ஆனால், டெல்லியின் மாசு மற்றும் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் மாதமே இந்த மாநாட்டை நடத்த அரசு முடிவெடுத்திருக்கிறது. புதுப்பிக்கப்பட்டு வரும் பிரகதி மைதான அரங்குகளில் சுமார் 7,000 பிரதிநிதிகள் வரை கலந்துகொள்ள முடியும். இது மட்டுமல்லாமல், இந்தியாவின் கலாசாரம், பண்பாட்டை உலக அளவில் கொண்டு செல்லும் விதமாகப் பல கலாசார விழாக்களும் இதன் ஓர் அங்கமாகும்.
இந்தியத் தலைமைத்துவம்
Covid, Conflict and Climate Change என 3C-க்களுக்கு மத்தியில் இந்தியாவுக்கு இக்கூட்டமைப்பின் தலைமை வழங்கப்பட்டிருக் கிறது. பெருந்தொற்று, உக்ரைன் பிரச்னை போன்ற சில முக்கியமான பிரச்னைகளால் உலகெங்கிலும் 20 கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள், 10 கோடி பேர் கடுமையான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது ஒரு மிகவும் இக்கட்டான தருணம் என்று வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.

இதோடு உலகில் பலநாடுகள் 2023-ம் ஆண்டு பொருளாதார மந்தநிலை ஏற்படுமா, அப்படி ஏற்பட்டால் என்ன செய்வது என்பது பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறது. உலகெங்கும் சுமார் 70 நாடுகள் கடன் பிரச்னையில் சிக்கித் தவிக்கின்றன. இதில் நமது அண்டை நாடுகளான ஸ்ரீலங்காவும் பாகிஸ்தானும் அடங்கும்.
இந்த மாதிரி கருமேகங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில், 2023-ம் ஆண்டு இக்கூட்டமைப்பின் சார்பாக இந்தியத் தலைமை என்ன செய்யவிருக்கிறது என்பதையும், இதுவரை இந்தக் கூட்டமைப்பு சாதித்தது என்ன என்பதையும் பார்ப்போம்.
கடந்துவந்த பாதை...
இந்தக் கூட்டமைப்பு தனித்துவமான ஒன்று. இந்தக் கூட்டமைப்பால் ஐ.நா, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, உலக சுகாதார அமைப்பு போன்று முடிவுகள் எடுக்க முடியாது. ஆனால், இது வடிவமைக்கும் கொள்கைகள் சம்பந்தமாக உலக நாடுகள் மத்திய ஒருமித்தக் கருத்தை உருவாக்க உதவும்.
உதாரணமாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜி-20 அமைப்பும் ஓ.இ.சி.டி அமைப்பு (OECD - The Organization for Economic Co-operation and Development) இணைந்து பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்தபட்சம் 15% கார்ப்பரேட் வரி கட்ட வேண்டுமென்கிற ஒரு யோசனையை முன்வைத்தது. ஏனெனில், இந்த நிறுவனங்கள் வரி எதுவும் இல்லாத சொர்க்க பூமியில் (tax havens) இயங்கி வரும்பட்சத்தில் அதனுடைய லாபத்திலிருந்து வரி எதுவும் கட்டாமல் இருந்து வந்தன.

2018-ம் ஆண்டு அர்ஜெண்டினாவில் நடந்த இந்தக் கூட்டமைப்பு மாநாட்டில் உலகளாவிய நிதிப் பாதுகாப்பு வலையை உருவாக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துக்குத் தேவையான புதிய வளங்களை ஏற்படுத்திக்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
2019-ம் ஆண்டு ஜப்பானில் நடந்த மாநாட்டில் உலக வர்த்தக அமைப்பின் (WTO) செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட சீர்திருத்த முன்னெடுப்புகளுக்கு இதில் பங்கெடுத்துக்கொண்ட தலைவர்கள் ஆதரவு அளித்தனர்.
2020-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடந்த உச்சி மாநாட்டில் உலகின் ஏழ்மையான நாட்டு அரசாங்கங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்தி வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
2021-ம் ஆண்டு இத்தாலியில், பன்னாட்டு பெரிய நிறுவனங்கள் உலகளாவிய குறைந்தபட்ச வரிவிதிப்பு சம்பந்தமான உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
இந்த ஆண்டு இந்தோனேசியாவின் பாலி நகரில் நடந்த மாநாட்டில் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டுமென அறைகூவல் விடுத்தது. `இன்றையத் தேவை போர் அல்ல’ என இந்தியா உரத்துக் கூறியது.
இனி என்ன?
சரி, இனி இந்தியாவின் தலைமையில் இந்தக் கூட்டமைப்பு எதிர்கொள்ள இருக்கும் பிரச்னைகளும், எடுக்கவிருக்கும் முன்னெடுப்புகளும் என்ன?
1. ரஷ்ய - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ஒருமித்த கருத்தை இது சம்பந்தப்பட்ட அனைத்து நாட்டுத் தலைவர்களிடம் உருவாக்குவது. இந்தியா ஒருமித்த கருத்தை உருவாக்கும் நாடாக செயல்படும்.
2. உலகின் பெரும்பாலான நாடுகள் எதிர்கொண்டிருக்கும் கடன் பிரச்னை எனும் அணுகுண்டு. உலக வங்கியின் 2022-ம் ஆண்டு அறிக்கைப்படி, 70-க்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட நாடுகளும் ஒரு டஜனுக்கும் அதிகமான நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளும் மிகவும் கடினமான கடன் பிரச்னையில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இதற்குத் தீர்வு காணும் விதமாகக் கடன் கொடுக்கும் உலக நிதி நிறுவனங்களின் விதிமுறைகளை சீரமைக்க இக்கூட்டமைப்பு மூலம் முயற்சியெடுக்க நினைத்திருக்கிறார்கள்.

3. உலக அளவில் மக்களுக்கு நலன் அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய தனியார் துறை நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கேற்ப கொள்கைகளையும் அதற்கான அமைப்புகளையும் ஏற்படுத்துவது.
4. குறைவான வரி அல்லது வரியே இல்லாத சொர்க்க பூமிகளான அயர்லாந்து, சிங்கப்பூர், கேமன் தீவுகள் மற்றும் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நாடுகளில் மற்ற நாடுகளைவிட வரி விகிதம் குறைவாக இருக்கிறது. எனவே, ஓ.இ.சி.டி அமைப்பில் இருக்கும் நாடுகள் ஒப்புக்கொண்டது போல, 777 மில்லியன் டாலருக்குமேல் வருமானம் கொண்ட அனைத்துப் பன்னாட்டு நிறுவனங்களும் குறைந்தபட்ச வரியாக 15% செலுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் பல நாடுகளின் வருமானம் ஓரளவுக்கு அதிகரிக்கும் எனவும் கணக்கிடப்பட்டிருக்கிறது.
5. 2019-ம் ஆண்டு தரவின்படி, உலகில் விளையும் 89 மில்லியன் டன் சிறுதானியத்தில் இந்தியாவின் பங்கு சுமார் 25 சதவிகிதம் ஆகும். கோதுமை விளைச்சலுக்குத் தேவைப்படுவது போல, இதற்கு அதிகமான தண்ணீர் தேவையில்லை. 2023-ம் ஆண்டு சர்வதேசத் தினை ஆண்டாக (International Year of Millets) அறிவிக்க கடந்த ஆண்டு ஐ.நா-வில் தீர்மானத்தை இந்தியா முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு 72 நாடுகள் ஆதரவு அளிக்க, ஐ.நா-வும் 2023-யை சர்வதேசத் தினை/சிறுதானிய ஆண்டாக அறிவித்தது. பல நாடுகளில் சிறுதானிய விளைச்சலை ஊக்குவிப்பதற்கான முயற்சியை இக்கூட்டமைப்பு எடுக்கும் எனத் தெரிகிறது.
6. இதோடு, டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னெடுப்பதில் இந்தியாவின் பங்கு மிகப் பெரியதாக இருக்கும். உலகிலிருக்கும் 195 நாடுகளில், 130 நாடுகளில் டிஜிட்டல் வழி பணம் செலுத்தும் அமைப்பு இல்லை. இந்தியாவின் ஜன்-தன் திட்டம் மூலம் சுமார் 400 மில்லியன் பேர் வங்கியில் கணக்கு ஆரம்பித்தனர். அது போல, கடந்த ஆண்டு யு.பி.ஐ (UPI) மூலம் சுமார் 46.8 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்திருக்கின்றன. இதை உலக அளவில் எடுத்துச் செல்ல, குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளுக்கு, இக்கூட்டமைப்பின் தலைமை உதவும் என்று சொல்லி இருக்கிறார் அமிதாப் காந்த்.

வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் பா.ஜ.க
2023-ம் ஆண்டு இந்தியத் தலைமையின்கீழ் இந்தக் கூட்டமைப்பு எந்த அளவுக்கு தனது நோக்கங்களையும் இலக்குகளையும் அடையுமா? உலகத்துக்கே விஸ்வகுருவாக, ஷெர்ப்பாவாக இந்தியா உருவெடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆனால், இந்த வாய்ப்பை 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போது மத்தியில் ஆளும்கட்சி கண்டிப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும். அதற்கான வேலையை இப்போதே செய்யத் தொடங்கிவிட்டது என்பதில் சந்தேகமில்லை.