நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

காப்பீடு, கடன், முதலீடு... மந்தை மனநிலை எப்படி பாதிக்கிறது?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

முதலீடு

எந்த விஷயமாக இருந்தாலும், அடுத்த வர்கள் என்ன செய்கிறார்களோ, அதைச் செய்துவிட்டுப் போவதையே நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம். பக்கத்து வீட்டுப் பெண், பாட்டுக் கற்றுக் கொள்ளப் போனால், நம் பெண்ணையும் பாட்டுக் கற்றுக்கொள்ள அனுப்புகிறோம். அவர்கள் கராத்தே கற்கப் போனால், நாமும் கராத்தே கற்றுக்கொள்ள அனுப்புகிறோம். நமது இந்தப் பழக்கம் முதலீட்டிலும் தொடர்கிறது.

கா.ராமலிங்கம்
நிதி ஆலோசகர், 
Holisticinvestment.in
கா.ராமலிங்கம் நிதி ஆலோசகர், Holisticinvestment.in

30 ஆண்டுகளுக்கு முன், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டிய நிதி நிறுவனங்களில், பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தைப் போட்டு இழந்தார்கள் மக்கள். 2010-11-ம் ஆண்டில் ஈமு பண்ணைகள் போன்ற கவர்ச்சி கரமான திட்டங்களில் பல நூறு கோடி பணத்தை இழந்தார்கள்.

இப்படி அடுத்தவர்களைப் பார்த்து, நாமும் அதே மாதிரி செயல்படுவதைதான் மந்தை மனப்பான்மை (Herd Mentality) என்கிறோம். பெரும்பாலானோர் காப்பீடு, கடன், முதலீடு ஆகிய விஷயங்களில் மற்றவர்களைப் பின்பற்றி கூட்டமாக, ஆட்டு மந்தை போல் செயல்பட்டு, முதலீடு செய்கின்றனர். காப்பீடு, கடன், முதலீடு ஆகியவற்றைப் பற்றி நாம் சரியாகச் சொல்லாததே இதற்கு முக்கியமான காரணம். எனவே, இவை பற்றி நாம் கொஞ்சம் தெளிவாகப் புரிந்துகொள்வோம்.

காப்பீடு...

ஆயுள் காப்பீடு என்கிறபோது, வருமானம் ஈட்டும் நபர் இந்த உலகில் இல்லாதபோது, இழப்பீட்டுத் தொகையானது குடும்பத்தைக் காக்கும் கவசமாக இருக்கும். ஆனால், பலரும் முதலீடு மற்றும் காப்பீடு கலந்த பாலிசிகளில் காப்பீட்டு வசதியும் இருக்கிறது; முதலீட்டு வருமானமும் கிடைக்கிறது, வருமான வரிச் சலுகையும் உண்டு என இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் சொல்வதைக் கேட்டு, பலரும் அதில் பணத்தைப் போட்டுவிடுகிறார்கள். அதனால்தான் யூலிப் பாலிசிகள் இன்னும்கூட அதிகமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக, அதிகபட்ச என்.ஏ.வி உத்தரவாத யூலிப் பாலிசிகளைக் (Highest NAV Guaranteed ULIPs) குறிப்பிடலாம். மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் முதலீடு செய்தால் போதும். பத்தாவது ஆண்டில் போட்ட பணத்தைப்போல் 10 முதல் 50 மடங்கு தொகை கிடைக்கும் எனத் தவறாக வாக்குறுதிக் கொடுக்கப்பட்ட, இந்த பாலிசி களில் சேர்ந்து பலரும் பணத்தை இழந்ததால், இப்போது அந்த பாலிசி தடை செய்யப் பட்டிருக்கிறது.

காப்பீடு, கடன், முதலீடு... மந்தை மனநிலை எப்படி பாதிக்கிறது?

முதலீடு...

பல நிறுவனங்கள் மற்றும் ஏஜென்ட்டுகள் பங்குச் சந்தை இறக்கத்துக்குப் பிறகு, முதலீட் டாளர்களின் மனநிலையைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பணவீக்க விகிதத்தைவிட குறைவான வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்களை விற்றுவிடுகிறார்கள். இந்தத் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை எதுவும் இல்லை. முதலீட்டாளர்கள் நீண்ட காலத்தில் அந்தத் திட்டங்கள் பெரும் லாபத்தை ஈட்டும் என்று நம்புகிறார்கள்.

உண்மையில், இந்தத் திட்டங்கள் நிலையான வருவாயை வழங்குவதால், மிகவும் பழைமை யானதாக (Conservative) இருக்கும். வருமானம் நிலையானதாக இருந்தாலும், அது பொது சேம நல நிதிக்குக் (PPF) கிடைக்கும் வட்டியை விட குறைவாகத்தான் தருவதாக இருக்கும். தற்போதைய நிலையில், பி.பி.எஃப்-க்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. எந்தவொரு நீண்ட கால முதலீட்டைத் தேர்வு செய்வதாக இருந்தாலும், பி.பி.எஃப்-ஐவிட அதிக வருமானம் தருவதாக இருக்க வேண்டும். இல்லையெனில், நிலையான வருமானத்துக்கு பி.பி.எஃப் திட்டத்தையே தேர்வு செய்துகொள்ளலாம். பி.பி.எஃப் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு ஒரு நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரை 80சி பிரிவின்கீழ் வரிச் சலுகை இருக்கிறது. மேலும், வட்டி வருமானத்துக்கு வரி இல்லை; கடன் பெறும் வசதியும் இருக்கிறது.

இன்றைக்குப் பலரும், மற்றவர்கள் பணத்தைப் போடு கிறார்கள் என அதிக வருமான எதிர்பார்ப்பில் கிரிப்டோ கரன்சிகளில் பணத்தைப் போட்டு வருகிறார்கள். இப்படி முதலீடு செய்யும்போது தங்களின் இலக்கை நிறைவேற்ற இதன்மூலம் கிடைக்கும் தொகை உதவுமா, தங்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு, ஏற்ற திட்டம்தானா என்பதையெல்லாம் கவனிக்காமல், மந்தை மனநிலையில் பிறரைப் பார்த்து பணத்தைப் போடுவது கவலையளிப்பதாக இருக்கிறது.

முதலீட்டாளர்கள் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்?

முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டைத் தேடு கிறார்கள். அல்லது குறுகிய காலத்தில் அதிக வருமானத்தைப் பெற வேண்டும் என நினைக்கிறார்கள். ஒரு தரப்பு மக்கள் பாதுகாப்பான முதலீடுகளிலேயே பணவீக்க விகிதத்தைவிட குறைவான வருமானம் பெறும் நிலையில், மற்றொரு தரப்பினர் மிக அதிக ரிஸ்க் எடுத்து, குறுகிய காலத்தில் மூலதனத்தைக்கூட இழக்கிறார்கள். இந்த இரு தரப்பினருமே சுயமாக முதலீட்டு முடிவை எடுக்க இயலாமல் மந்தை மனநிலையில் இருப்பதே இதற்கு முக்கியமான காரணம்.

மந்தை மனநிலை ஏன் ஆபத்தானது?

புதிய பங்கு வெளியீடுகளில் (ஐ.பி.ஓ) பட்டியலிடப்படும் தேதி அன்று லாபம் பார்ப்பதற்காகப் பலரும் ஐ.பி.ஓ-களில் அதிக ஆர்வமாக ஏராளமானவர்கள் முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால், பல பங்குகள் பட்டியலிடப்படும் அன்று ஒதுக்கீட்டு விலையைவிட குறைவாக வர்த்தகம் ஆவதைக் காண முடிகிறது. ஆனாலும், முதலீட்டாளர்கள் மந்தை மனநிலையில் ஐ.பி.ஓ-களில் மேலும் மேலும் முதலீடு செய்கிறார்கள். இதுமாதிரி செயல்படுகிறவர்கள் முதலீட்டில் மற்றவர்களைப் பின்பற்றுவதை வசதியாகக் கருதுகிறார்கள். சில நேரங்களில் குறுகிய காலத்தில் இது பலன் தரக்கூடும். ஆனால், நீண்ட காலத்தில் நிச்சயம் பலன் கொடுக்காது.

பெரும்பான்மையான மக்கள் நாளுக்கு நாள் விலை அதிகரித்து வருவதால், தங்கத்தில் முதலீடு செய்வதைப் பற்றியும் அந்தஸ்து, கௌரவம் என்பதால், ரியல் எஸ்டேட் பற்றியும் அதிகம் பேசுகிறார்கள். ஆனால், நாளுக்கு நாள் விலை அதிகரித்து வருவதால், இந்த அளவுக்கு அதிகமாகப் பங்கு களில் முதலீடு செய்வது பற்றிப் பேசுவதில்லை; அதிக ஆர்வம் காட்டுவதில்லை. பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தரும் மற்றும் குறைவான வருமான வரி கட்டும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 5 சதவிகிதத்துக்குள்தான் முதலீடு செய்திருக்கிறார்கள். முதலீட்டில் மக்கள் தவறான முடிவுகளை எடுப்பதற்கு இந்த மந்தை மனப்பான்மையே முக்கியக் காரணமாக இருக்கிறது.

சுருக்கமாக, முதலீட்டில் மந்தை மனநிலை நீண்ட கால இலக்குகளை அடைய உதவாது. இந்த மனநிலை முதலீட்டாளரை அவரின் நிதி இலக்குகளிலிருந்து விலகிச் செல்ல வைத்துவிடும். ஒவ்வொரு முதலீட்டாளரும் தனித்துவமானவர். அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர் களுக்கு ஏற்றது, அவரின் நிதித் தேவைகளுக்குப் பொருந்தாது.

மந்தை மனப்பான்மையை எவ்வாறு தவிர்க்கலாம்?

வாரன் பஃபெட், உலகின் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனமான மைக்ரோ சாஃப்ட்டின் நிறுவனர் பில் கேட்ஸின் நண்பர். மைக்ரோ சாஃப்ட் ஏற்கெனவே நன்கு வளர்ந்த, இன்னும் வளரும் நிறுவனம் ஆகும். இருந்தாலும், அந்த நிறுவனப் பங்கில் வாரன் பஃபெட் ஒருபோதும் முதலீடு செய்யவில்லை. காரணம், எந்தெந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என அவர் சொந்தமாகச் சில விதிமுறை களை வைத்திருக்கிறார். அதை எப்போதும் தொடர்ந்து கடைப்பிடித்தும் வருகிறார். அதில் ஒன்றுதான், தனக்கு புரியாத வணிகத்தைக் கொண்ட நிறுவனப் பங்கில் முதலீடு செய்யக் கூடாது என்பதாகும்.

மைக்ரோ சாஃப்ட் நிறுவனத் தின் வணிகம் வாரன் பஃபெட்க்கு புரியவில்லை என்பதால், அவர் அதில் முதலீடு செய்யவில்லை. தனக்கென ஒரு விதிமுறையை வகுத்துக்கொண்டு, அதன்படி முதலீடு செய்து வருவதால்தான், வாரன் பஃபெட் உலகின் மிகச் சிறந்த, பணக்கார முதலீட்டாளராக உள்ளார்.இதே போல், நீங்களும் உங்களுக் கென காப்பீடு, கடன், முதலீடு ஆகியவற்றில் சொந்தமாக விதி முறைகளை வகுத்துக் கொள் வது மூலம் மந்தை மனநிலை யிலிருந்து விலகி நிச்சயம் நீங்களும் பெரும் பணக்காரர் ஆக முடியும்.

உதாரணமாக, ஆயுள் காப்பீடு என்கிறபோது முழுமையான ஆயுள் காப்பீட்டுத் திட்டமான டேர்ம் பிளானை எடுத்துக்கொள்ள லாம். இந்த பாலிசியில் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும் என்பதால், எண்டோவ் மென்ட், யூலிப் பாலிசிகளுடன் ஒப்பிடும்போது கணிசமான தொகை மிச்சமாகும். அதை இதர திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நிதி இலக்குகளைச் சுலபமாக நிறைவேற்ற முடியும்.

கடன்...

கடன் என்கிறபோது நல்ல கடனை மட்டுமே வாங்குங்கள். எந்தக் கடன் உங்களின் அவசியத் தேவையை நிறைவேற்றி, கூடவே செல்வத்தையும் சேர்க்கிறதோ, அது நல்ல கடன் ஆகும். அதை வாங்கத் தயக்கம் தேவையில்லை. உதாரணம், வீட்டுக் கடன் மற்றும் வணிகக் கடன் ஆகும். எந்தக் கடன் உங்களின் செல்வத்தைக் குறைக்கிறதோ, அது கெட்ட கடன் ஆகும். உதாரணம், கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன் போன்றவை.

இலக்குகளுக்கு ஏற்ப...

முதலீடு என்கிறபோது இலக்குகளைத் தெளிவாக நிர்ணயித்துக்கொள்ளுங்கள். குறுகிய கால இலக்கு (காப்பீட்டு பாலிசிக்கு ஆண்டு பிரீமியம், பள்ளி ஆண்டுக் கட்டணம்), நடுத்தரக் கால இலக்கு (வீட்டுக் கடன் வாங்க முன் பணம், சுற்றுலாச் செலவு), நீண்ட கால இலக்கு (பிள்ளைகளின் உயர்கல்வி / கல்யாணம், பணி ஓய்வுக் காலம்) ஆகியவற்றைத் தெளிவாக நிர்ணயித்துக்கொண்டு முதலீடு செய்து வாருங்கள்.

குறுகிய கால முதலீடு எனில், எஃப்.டி மற்றும் கடன் பத்திரங்கள் சரியாக இருக்கும். நடுத்தரக் கால முதலீடு எனில், ஹைபிரிட் ஃபண்டுகளும், நீண்ட கால முதலீடு எனில், பங்கு சார்ந்த முதலீடுகளும் (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள்) சரியாக இருக்கும். மேலும், உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறன், அஸெட் அலொகேஷன்படி முதலீடுகளை மேற்கொள்வது நல்ல தீர்வாக அமையும்.

காப்பீடு, கடன், முதலீடு தொடர்பாக யாரோ ஒருவர் சொல்வதை வைத்து முடிவெடுப்பதைவிட, ஒரு நல்ல நிதி ஆலோசகர் சொல்வதைக் கேட்டு முடிவெடுப்பது நல்லது!

கிரிப்டோகரன்சியில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

இண்டெக்ஸ் ஃபண்ட் முதலீட்டின் தந்தை எனப்படும் ஜான் சி.போக்ளி, முதலீட்டுத் தொகையை 95% சீரியஸ் மணி (serious money), 5% ஃபன்னி மணி (fun money) எனவும் இரு பிரிவாகப் பிரிக்கிறார். அதாவது, ஒருவர் தன் முதலீட்டுத் தொகையில் 5% அளவுக்கு மட்டுமே மிக அதிக ரிஸ்க் எடுக்கலாம் என்கிறார். இன்றைக்கு கிரிப்டோகரன்சி முதலீட்டுக்கு 5% ஃபன்னி மணியை மட்டும் ஒருவர் போடும்போது, அதில் அதிக சிக்கல் வர வாய்ப்பில்லை!