இந்தியப் பங்குச் சந்தை மீண்டும் ஒரு தடவை ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. ஹர்ஷத் மேத்தா எனும் தனிநபர் நடத்திய மோசடிகள், எஸ் பேங்க் நடத்திய மோசடிகள் என்று குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்திய பங்குச் சந்தை ஆட்டம் காண்பது தொடர்கதையாகவே இருக்கிறது.
இத்தகைய மோசடி பேர்வழிகளுக்கும் நிறுவனங்களுக்கும் அரசியல்வாதிகளும் அரசாங்கமும் முட்டுக்கொடுப்பதால், பொதுமக்களின் முதலீடு என்பது எப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்தத் தடவை அந்த புண்ணியத்தைக்கட்டிக் கொண்டிருப்பது, நம்முடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கெழுதகை நண்பரான கவுதம் அதானி!

அதானி குழும நிறுவனங்களை நோக்கி, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அடுத்தடுத்து வீசியிருக்கும் அதிர்ச்சிக் குண்டுகள், இந்தியாவைத் தாண்டி உலக அளவில் பங்குச் சந்தையையும் முதலீட்டாளர்களையும் கதிகலங்க அடித்துள்ளது!
பி.ஜே.பி-யின் கடந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் அதானியும் அவருடைய நிறுவனங்களும் அடைந்திருக்கும் வளர்ச்சி... உலகமகா வளர்ச்சி. ஆம், உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்கிற இடத்தையும் கூட ஓரிரு தடவை பிடித்துவிட்டார் அதானி.
இந்நிலையில், 'பங்குச் சந்தையில் பலவிதமான முறைகேடுகளை நடத்தியதன் மூலமாகவே அதானி குழுமம் இப்படி உச்சபட்ச வளர்ச்சியை அடைந்துள்ளது. அரசாங்கத்திலிருக்கும் செல்வாக்கு காரணமாக, பங்குச் சந்தைகளை கண்காணிக்கும் செபி அமைப்பும், அதானியின் முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது' என்று ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளால் அதானி குழும நிறுவனங்கள் நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான சரிவைச் சந்தித்துள்ளன. இதனால் அதானியின் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ.1.8 லட்சம் கோடி அளவுக்குச் சரிந்தது. இதையடுத்து உலகின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் 3 -ம் இடத்தில் இருந்தவர் 7-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டு இப்போது 11-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட பிரபல ஷார்ட் செல்லிங் நிறுவனம்தான் ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம், கடந்த 24-ம் தேதி வெளியிட்ட 106 பக்க அறிக்கைதான் பங்குச் சந்தைகளையே உலுக்கிக் கொண்டுள்ளது.
'அதானி குழும நிறுவனப் பங்குகளில் அதானி குடும்பத்தினர்தான் அதிகளவிலான பங்குகளை வைத்துள்ளனர். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பப்ளிக் நிறுவனத்தில் 75 சதவிகிதப் பங்குகள் மட்டுமே அந்நிறுவனத்தின் புரோமோட்டர்கள் வசம் இருக்கவேண்டும். 25 சதவிகிதம் பொது முதலீட்டாளர்களிடம் இருக்கவேண்டும்.
ஆனால், அதானி நிறுவனங்களில் எஃப்ஐஐ (வெளிநாட்டு முதலீடு) மூலமாக வெளியிலிருந்து செய்யப்பட்ட முதலீடும் அதானி குடும்பத்தினருக்குச் சொந்தமான மோசடி நிறுவனங்கள் மூலமாகவே செய்யப்பட்டிருக்கின்றன. இதன்காரணமாக 75 சதவிகிதம் என்கிற அளவுக்கும் கூடுதலாக அதானி குடும்பத்தினர் வசம் பங்குகள் இருக்கின்றன. இது, 13- முதல் 16 சதவிகிதம் வரை கூடுதலாக இருக்கலாம் என ஹிண்டன்பர்க் அறிக்கை சொல்கிறது.
நிறுவனத்தின் முதன்மை பதவிகளில் 17 பதவிகளில் அதானி குடும்பத்தினரே இருக்கின்றனர். ஒரு பப்ளிக் கம்பெனி மாதிரி இல்லாமல் குடும்ப கம்பெனி மாதிரிதான் அதானி நிறுவனங்கள் இருக்கின்றன. அதானி குழும நிறுவனங்கள் பெற்றிருக்கும் கடன், அவை சார்ந்த துறையின் சராசரி கடன் அளவையும் விட கூடுதலாகவே இருக்கின்றன. இந்தக் கடன்களைத் திரும்பச் செலுத்தும் திறன் அந்த நிறுவனங்களுக்கு இல்லை.
அதானி நிறுவனத்தின் பங்கு மதிப்பு, அந்நிறுவனங்களின் தொழிலுக்குத் தொடர்பே இல்லாத அளவில் இருக்கிறது. பங்குச் சந்தையைப் பொருத்தவரை ஒரு நிறுவனத்தின் தொழில் வளர்ச்சியைப் பொறுத்துதான் பங்கு மதிப்பு நிர்ணயிக்கப்படும். ஆனால், தொழில் வளர்ச்சி பெரிதாக இல்லாத சூழலிலும் பங்கு மதிப்பு மட்டும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஆக, இதில் ஏதோ மோசடி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்' இப்படி அடுக்கடுக்காக அந்த அமெரிக்க நிறுவனம் குற்றச்சாட்டுகளை வைக்கவே, அதானி நிறுவனப் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்துவருகின்றன.
அதானி குழுமம் மற்றும் அதற்காக அரசாங்கம் காட்டும் சலுகைகள் பற்றியெல்லாம் இந்திய ஊடகங்களில் எப்போதாவது செய்திகள் வருகின்றன.

அதேசமயம், எதிர்க்கட்சிகள் அவ்வப்போது அதானி மீதான குற்றச்சாட்டுகளை முன்னெடுத்து பேசிவருகின்றன. என்றபோதும், மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் இருக்கும் நெருக்கத்தின் காரணமாக அதானி நிறுவனத்துக்கு எதிரான செய்திகள் விரிவாக வெளியில் பேசப்படவில்லை என்பதுதான் உண்மை. ‘நாங்கள் இந்தியாவில் இல்லை. அதனால் எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை’ என்கிற அடிக்குறிப்புடனேயேதான் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது தன்னுடைய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத பங்குச் சந்தை நிபுணர் ஒருவரிடம் இந்த விவகாரம் பற்றி கேட்டபோது, “அதானி குழும நிறுவனங்களில் அதானி போர்ட் நிறுவனம் தவிர மற்ற எந்த நிறுவனத்தின் பிசினஸ் மாடலும் தற்போது மதிப்பிடப்பட்டுள்ள சந்தை மதிப்புக்குத் துளியும் ஒப்பிட முடியாத ஒன்றாகவே இருக்கிறது. அந்த அளவுக்கு மதிப்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக அதானி கிரீன் நிறுவனத்தின் உற்பத்தித்திறன் 2000 மெகாவாட் மட்டுமே இதன் சந்தை மதிப்பு ரூ.2.35 லட்சம் கோடி. ஆனால், என்.டி.பி.சி நிறுவனத்தின் உற்பத்தித் திறன் 60,000 மெகாவாட். அதன் சந்தை மதிப்பு ரூ.1.61 லட்சம் கோடி மட்டுமே.

ஷெல் கம்பெனிகளின் (லெட்டர் பேட் கம்பெனிகள் என்றும் சொல்லலாம்) சொர்க்கபுரி என்றழைக்கப்படும் மொரிஷியஸ், கரிபியன், சைப்ரஸ் தீவுகள் உள்ளிட்ட நாடுகளிலிருந்து செய்யப்பட்ட எஃப்ஐஐ முதலீடுகளால் (வெளிநாட்டு முதலீடு), அதானி குழும நிறுவனங்கள் பலவற்றின் பங்கு விலை செயற்கையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக அதானி தொடர்பான செய்திகளை ஊடகங்களில் வெளியிடச் செய்து மக்களையும் அதன் பங்குகளில் முதலீடு செய்யத் தூண்டியிருக்கின்றனர். அதானி குழும நிறுவனங்களில் ரூ.87 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்திருக்கிறது அரசாங்க நிறுவனமான எல்.ஐ.சி. அப்படியிருக்க மக்களும் பணம் பண்ணும் ஆசையில் முதலீடு செய்வார்கள்தானே!
இப்படி, அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை அனைத்தும் பல மடங்கு செயற்கையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதனால், தற்போதைய விலைவீழ்ச்சியில் பல மடங்கு அந்தப் பங்குகள் சரிந்தாலும் அவற்றில் முதலீடு செய்யாமல் இருப்பதுதான் மக்களுக்கு நல்லது” என்று எச்சரிக்கை கொடுத்தார்.
அதானி குடும்பத்துக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் சலுகைகள், செபி கண்டும் காணாது இருப்பது பற்றியெல்லாமும் அமெரிக்க நிறுவனம் கேள்விகளாக எழுப்பியுள்ளது. இந்நிலையில், 'அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள். அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்போம்' என்று அதானி குழுமம் அறிவித்திருக்கிறது. 'வா... வந்துபார்' என்று பதிலுக்குச் சவால் விட்டிருக்கிறது ஹிண்டன்பர்க் நிறுவனம்!

அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி, பிரதமர் நரேந்திர மோடியின் மிகமுக்கியமான நண்பர். அவருடைய தயவுடன்தான் கடந்த காலங்களில் குஜராத் மாநில தேர்தல் மற்றும் இந்திய பொதுத்தேர்தல்களை பி.ஜே.பி பிரமாதமாக சந்தித்து, தொடர் வெற்றிகளைக் கண்டுவந்தது.
இந்நிலையில், அதானி மீதான குற்றச்சாட்டுகள் தற்போது பூதாகரமாக வெடித்து வெளி வர ஆரம்பித்திருப்பதால், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் இந்திய பொதுத்தேர்தலில் பி.ஜே.பி-க்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்... நரேந்திர மோடி என்ன எதிர்வினையாற்றுவார் என்பதையெல்லாம் பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.