கட்டுரைகள்
Published:Updated:

வீட்டுக் கடன் முன்பணம்: சுலபமாக ரெடி செய்வது எப்படி?

வீட்டுக் கடன்  முன்பணம்: சுலபமாக ரெடி செய்வது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக் கடன் முன்பணம்: சுலபமாக ரெடி செய்வது எப்படி?

பழைய வீடுகளை வீட்டுக் கடன் மூலம் வாங்கும்போது, வீடு எத்தனை ஆண்டுகள் பழையதோ, அந்த அளவுக்கு டவுன் பேமென்ட் சதவிகிதம் அதிகமாக இருக்கும்

இன்று சொந்த வீடு வாங்குபவர்களில் சுமார் 85% பேர் வீட்டுக் கடன் (Home Loan) மூலம்தான் வாங்குவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மொத்தப் பணத்தையும் சேர்த்து வீடு வாங்க வேண்டும் என்றால் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். மேலும், நீண்ட காலத்தில் வீட்டின் விலை கணிசமாக உயர்ந்துவிடும். இந்த நிலையில், வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குவது பல வகையில் லாபகரமாக இருக்கும். பலர் வீட்டுக் கடன் வாங்கும்போது முழுத் தொகையையும் வங்கி, வீட்டு வசதி நிறுவனம், நிதி நிறுவனம் வழங்கும் எனத் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன்பணம் அவசியம்.

வீட்டுக் கடன் முன்பணம்

வீட்டின் மதிப்பில் சுமார் 80% தொகைதான் வீட்டுக் கடனாகக் கிடைக்கும். மீதி 20% தொகையை வீடு வாங்குபவர் தன் கையிலிருந்து போடவேண்டி வரும். இந்தத் தொகையை முன்பணம் (Down payment) என்பார்கள். ஆனால், இந்தத் தொகையையும் பலர் கடனாக வாங்கும் நிலை காணப்படுகிறது. அது தவறு. ஒருவர் ஒரே நேரத்தில் இரு கடன்களுக்குத் தவணை (EMI) கட்டுவது சிரமம். எனவே, டவுன் பேமென்ட்டை முன்கூட்டியே திரட்டி வைத்திருக்க வேண்டும்.

அதற்கு சேமிப்பு அல்லது முதலீடு செய்து வரலாம்.

வீட்டுக் கடன்  முன்பணம்: சுலபமாக ரெடி செய்வது எப்படி?

ரிசர்வ் வங்கி விதிமுறை

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதிச் சேவை நிறுவனங்கள் போன்றவற்றில் வீட்டுக் கடன் வாங்கும்போது வீட்டின் மதிப்பில் 20% தொகை டவுன் பேமென்ட்டாக இருக்க வேண்டும் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ) விதிமுறை. கடனுக்கும் வீட்டின் மதிப்புக்கும் உள்ள விகிதத்தை(LTV - Loan to Value Ratio) ஆர்.பி.ஐ அவ்வப்போது கடன் சந்தையின் சூழல்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கும். எனவே டவுன் பேமென்ட் தொகையானது வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம், கடன் தொகை, கடனைத் திரும்பச் செலுத்தும் தகுதியைப் பொறுத்து மாறுபடலாம்.

உதாரணமாக, கடன் தொகை ரூ. 30 லட்சத்துக்குக் கீழ் இருந்தால், வீட்டின்/அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பில் 90% வரைக்கும் வீட்டுக் கடன் கிடைக்கும். அதாவது, முன்பணமாகச் செலுத்தும் தொகை வீட்டின் மதிப்பில் 10% ஆக உள்ளது. வீட்டின் மதிப்பு ரூ.30 லட்சத்துக்கு மேல் ரூ.75 லட்சத்துக்குள் இருந்தால், வீட்டின் மதிப்பில் 80% வரை கடன் கிடைக்கும். அதாவது, முன்பணத் தொகை 20%. வீட்டின் மதிப்பு ரூ.75 லட்சத்துக்கு மேல் இருந்தால், வீட்டின் மதிப்பில் 75% வரை கடன் கிடைக்கும். அதாவது, முன்பணத் தொகை 25%. மேலும், எல்.டி.வி மதிப்பைக் கணக்கிட சொத்துப் பதிவுக்கான முத்திரைக் கட்டணம், பதிவுக் கட்டணம், ஆவணக் கட்டணங்கள், தரகர் கட்டணம் ஆகியவற்றைச் சேர்க்கக் கூடாது என்பதும் ரிசர்வ் வங்கியின் முக்கியமான விதிமுறை.

பழைய வீட்டை வாங்கும்போது

பழைய வீடுகளை வீட்டுக் கடன் மூலம் வாங்கும்போது, வீடு எத்தனை ஆண்டுகள் பழையதோ, அந்த அளவுக்கு டவுன் பேமென்ட் சதவிகிதம் அதிகமாக இருக்கும். வீட்டின் மதிப்பில் 35% - 50% வரை முன்பணமாகப் போட வேண்டியிருக்கும். 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வீடு எனில், 40% - 50% முன்பணம் வேண்டியிருக்கும்.

வீட்டுக் கடன்  முன்பணம்: சுலபமாக ரெடி செய்வது எப்படி?
வீட்டுக் கடன்  முன்பணம்: சுலபமாக ரெடி செய்வது எப்படி?

முன்பணத்துக்கு முதலீடு

முன்பணத்தை வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பே திரட்டி வைத்துக்கொள்வது அவசியம். அதிக சேமிப்பு இருப்பவர்கள், முன்பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் அதிகரித்துக்கொள்ளலாம். இதனால் வீட்டுக் கடனுக்கான மாதத் தவணை குறையும்; வட்டியாகக் கட்டும் தொகையும் குறையும். ஒருவருக்குத் தேவைப்படும் தொகைக்கு ஏற்ப 3 - 5 ஆண்டுகளில் இதனை முதலீட்டின் மூலமும் சேர்க்கலாம்.

முதலீட்டில் ரிஸ்க்கை விரும்பாதவர்கள் மற்றும் குறுகிய காலமே இருக்கிறது என்பவர்கள் லிக்விட் ஃபண்ட் அல்லது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்துவரலாம். நடுத்தர அளவு ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள் மற்றும் நடுத்தர கால அளவு இருப்பவர்கள் (சுமார் மூன்று ஆண்டுகள்) நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்யும் ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் அதிக ரிஸ்க் இருக்கிறது என்பதால், வீட்டுக் கடனுக்கு டவுன் பேமென்ட் திரட்ட அதில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

வீட்டுக் கடன் மாதத் தவணையில் அசல் தொகையில் நிதி ஆண்டில் ரூ. 1.5 லட்சம் வரைக்கும், வட்டியில் ரூ. 2 லட்சம் வரைக்கும் வருமான வரிச் சலுகை இருக்கிறது. இதர கடன்களுடன் ஒப்பிடும்போது டவுன் பேமென்ட் திரட்டி வீட்டுக் கடன் வாங்குவது லாபகரமாகவே இருக்கும்.